வலி.வடக்கில் 1,600 குடும்பங்கள் மீள்குடியமர்வதற்கு நிதி தேவை
விசேடமாக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை
அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலைமை உள்ளது. ஆகவே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றத்துக்காக விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நாடாளுமன்ற நிதிக் குழுவின் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மேற்படி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கையை மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் முன்வைத்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும், நிதிக் குழு உறுப்பினருமான மாவை சேனாதிராசா கருத்து தெரிவிக்கையில் –
யாழ்.மாவட்டத்தில் விசேடமாக வலி.வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. வலி,வடக்கில் 1600 குடும்பங்களுக்குச் சொந்தமான 823 ஏக்கர் நிலம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் மீள்குடியேற வுள்ள மக்களுக்காக 164 கோடி ரூபா நிதி தேவை எனக் கணிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசு வெறும் 70 கோடி ரூபா நிதியையே வழங்கியுள்ளது.
இதற்கு முன்னரும் அரசு 22 கோடி ரூபா நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. எனவே மீள்குடியேற்றத் தேவைகளுக்காக 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். என்பதை நாடாளுமன்ற நிதிக்குழு பரிந்துரை செய்யவேண்டும் – என்றார்.
நிதிக்குழுவின் தலைவர் எம். ஏ.சுமந்திரன் கூறுகையில் –
நல்லிணக்க அமைச்சின் கீழ் ஒரு தொகை நிதி உள்ளது. ஆனாலும் அது நல்லிணக்க அமைச்சு என்பதால் அந்த நிதியை மீள்குடியேற்றத்துக்கு மட்டும் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. அதன் தேவைகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. எனவே அதனை மீள்குடியேற்றத்துக்கும் பயன்படுத்தவேண்டும் என நிதிக்குழு பரிந்துரை செய்யும் என்றார்.
தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவசிறி கருத்து தெரிவிக்கையில் – 1600 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலம் விடுவிக்கப் பட்டு 6 மாதங்கள் கடக்கும் நிலையில் மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதி கிடைக்கப் பெறவில்லை. 2011ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகள் 30 வருடங்களாக மக்கள் வாழாத அல்லது பயன் படுத்தாத நிலையில் காடுகளாக மாறி உள்ளன. இங்கு மீள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகள் மற்றும் அடிப்படைவசதிகளை வழங்கியாக வேண்டிய தேவை உள்ளது.
இந்த வருடம் வலி, வடக்கில் 750 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக எமக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் மீள்குடியேற்றத்துக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. எனவே மீள்குடியேற்றத்துக்கென விசேடமான நிதி ஒதுக்கீடு தேவையாக உள்ளது என்றார்.
யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் கருத்து தெரிவிக்கையில் –
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விடயம் மிகவும் பாரிய சவாலாக உள்ளது. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வலி.வடக்கில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு 2016 ஆம், 2017ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 600 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2018ஆம் ஆண்டு 25 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 5 வீதம் கூட இல்லை.
மேலும் 2016ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கணிப்பீட்டின்படி 33 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளன. அதில் 6,500 குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 26,500 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இந்த வீடுகள் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வழங்கப்படவேண்டும். 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்களின் நிலங்கள் 30 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமையால் காடுகளாக மாறியுள்ளன. அந்த நிலங்களில் ஒன்றுமே இல்லாமல் வெறுமையாகக் காணப்படுகின்றன. ஆகவே அங்கு மீள்குடியேறும் மக்களுக்கு எல்லாவற்றையும் வழங்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தவகையில் மீ ள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஒன்றாகச் சேர்த்தே செய்யவேண்டியுள்ளது. இதேபோல் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் மீள வழங்க வேண்டிய தேவை உள்ளது என்றார்.
இதனடிப்படையில் மீள்குடியேற்றத்துக்கான விசேட நிதி தேவை என்பதை குழு ஏற்றதுடன் அதனை உரியவர்களுக்கு ஆற்றுப்படுத்துவதற்கும் நிதிக்குழு இணங்கியுள்ளது. (காலைக்கதிர் – செப் 04,2018)
அடுத்த பட்ஜெட்டின் உள்ளடக்கம் யாழில் முன்மொழிகள் முன்வைப்பு
(எஸ்.நிதர்சன்)
யாழ்ப்பாணம் செப் 04,2018
வரவு – செலவுத்திட்டங்களில் அரசினால் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படாத விடயங்கள் தொடர்பிலும் அடுத்த ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் நாடாளுமன்ற நிதிக் குழுவிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
நாடாளுமன்ற நிதிக் குழுவின் கூட்டம் யாழ். மாவட் டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மேற்படி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் குழுவின் செயற்பாடு கள், கூட்டத்தை நடத்துவதன் நோக்கம் என்பன தொடர்பில் குழுவின் தலைவர் எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினர்.
இதில் மிக முக்கியமாக மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அரசினால் ஒதுக்கப்படும் நிதி கடந்த வருடத்தை விட இந்த வருடம் பல மடங்கு குறைவாக உள்ளமையால் ஏற்பட்ட பிரச்சினைகள், பாதிப்புக்கள் என்பன தொடர்பில் விவரிக்கப்பட்டது. ஆகவே அடுத்த வருட ஒதுக்கீட்டில் இதனை அதிகரிக்கவேண்டு மென முன்வைத்த கோரிக்கையைச் சாதகமாகப் பரீசீலித்த நாடாளுமன்ற நிதிக் குழு, இந்த விடயங்களை ஜனாதிபதி,பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருந்தது.
முன்னாள் போராளிகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராயப்பட்டு அதற்குரிய மாற்றுவழிகள் தொடர்பிலும் பரீசீலிக்கப்பட்டது.
பெண்கள் தொடர்பில் பிரத்தியேக திட்டங்கள் வரையப்பட வேண்டுமென்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. அதே போன்று புகையிலை தடை செய்யப்படுவதால் அதனை நம்பி யிருக்கும் 36 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கை தொடர்பிலும் பேசப்பட்டது. வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டிருந்தது.
வரவு – செலவுத் திட்டங்களில் முன்மொழியப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்படாமல் உள்ள விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டன.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மத்திய அரசு தீர்மானித்ததையே செய்யுமாறு கூறுவதால் மாகாண சபையினால் எதனையும் செய்ய முடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் பகிரப்பட்டிருக்கும் மாகாணத்தின் அதிகாரங்களில் மாகாண சபைக்கான நிதி அதிகாரங்களை அரசின் இத்தகைய செயற்பாடுகள் பறிப்பதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காத வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்படவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு இந்தக் குழு சிபார்சுகளைச் செய்யுமென குழுவின் தலைவர் சுமந்திரன் தெரிவித்தார். (காலைக்கதிர 04 -9- 2018)
Leave a Reply
You must be logged in to post a comment.