மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி?

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி?

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,நிதின் ஸ்ரீவத்சவா
  • பதவி,பிபிசி செய்தியாளர்

வசனம்: “சபாநாயகர் ஐயா, நான் புள்ளிவிவரங்களுக்குள் வரவில்லை. நாட்டின் மனநிலையைப் பார்க்கிறேன். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும். பாஜக மட்டும் 370 இடங்களைப் பெறும்.”

தேதி: ஜூன் 4, 2024

காட்சி: லோக்சபா தேர்தல் முடிவுகள் –

பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கு 20-க்கும் அதிகமான இடங்கள் பின்தங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில், கடந்த பத்து ஆண்டுகளில், காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி, “ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க முடியாது,” என்று கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜவஹர்லால் நேரு, 52 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1962-இல், தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

2024 பொதுத்தேர்தல் முடிவுகள், நரேந்திர மோதி மூன்றாவது முறையாகப் பிரதமராக முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களைப் போல, இந்த முறை அவரால் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தொட முடியவில்லை.

இந்தத் தேர்தலில் ‘400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது.

பா.ஜ.க-வோ தேசிய ஜனநாயகக் கூட்டணியோ எதிர்பார்த்தபடி எண்ணிக்கைகள் கிடைக்கவில்லை என்பதால், பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்புகள் தவறாகிப் போயிருக்கின்றன.

இந்தப் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்து, பல அரசியல் கட்சிகள், ‘இந்தியா கூட்டணி’ அமைத்து ஆளும் பா.ஜ.க-வுக்கு சவால் விடுத்தன. கருத்துக்கணிப்புகளை விட இந்தக் கூட்டணி தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “இறுதியில் பிரதமர் மோதியே போட்டியின் மையப்புள்ளியாக மாறினார்.”

அதாவது, ‘மோதிக்கு வாக்களியுங்கள், அல்லது மோதிக்கு எதிராக வாக்களியுங்கள்’ என்பதே தேர்தலின் முக்கியப் பிரச்னையாக மாறியிருந்த நிலையில், ‘மோதிக்கு வாக்களியுங்கள்’ என்ற முழக்கம் பா.ஜ.க எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பதையே முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மையைக் கடக்க உதவிய பிரச்னைகள் என்னென்ன?

1. மோதியின் உத்தரவாதம்

நாட்டின் மிகப்பெரிய ஆளும் அரசியல் கட்சி தனது பிரதமர் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான ‘சங்கல்ப் பத்ரா’ என்ற தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வாக்குறுதியிலும் ‘மோதி உத்தரவாதம்’ என்ற முத்திரை இருந்தது. அவரை ‘தேர்தல் முகமாக’ வைத்து கட்சி தனது மிகப்பெரிய தலைவரை முன்னிறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

அதாவது, 2013-இல் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை எதுவும் மாறவில்லை.

இந்தக் காலகட்டத்தில், பா.ஜ.க மையத்தில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் தனது பிடியை வலுப்படுத்தியது. ஆனாலும், ‘மோதியின் உத்தரவாதம்’ எதிர்பார்த்த பலனை இந்தத் தேர்தலில் ஏற்படுத்தவில்லை.

மூத்த பத்திரிகையாளரும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் தலையங்க இயக்குநருமான வீர் சங்வி, “பா.ஜ.க-வின் உத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் பிரதமரை வைத்தே இயங்கியது,” என்றார்.

“தற்போது இந்தியாவின் மிகப் பிரபலமான தலைவர் மோதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை பா.ஜ.க தனது துருப்புச் சீட்டாக மாற்றியுள்ளது. எந்தத் தேர்தலிலும், ஒரு நபரைச் சுற்றி இவ்வளவு பெரிய பிரசாரத்தை உருவாக்க முடியும் என்பது இந்தக் கட்சியின் வரலாற்றில் இல்லை. உண்மையில், 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் பரப்புரையை விட நரேந்திர மோதியின் பரப்புரை பெரிதாக இருந்தது,” என்கிறார்.

உண்மையில், பா.ஜ.க-வின் மதிப்பீடு சில முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது.

2014 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி அரசாங்கங்களின் எண்ணிக்கை 7-ஆக இருந்தது. 2024 தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க நாட்டின் 16 மாநிலங்களில் அதன் சொந்த அரசாங்கத்தையும், நான்கு மாநிலங்களில் கூட்டணி அரசாங்கங்களையும் கொண்டிருந்தது. அதாவது மொத்த எண்ணிக்கை 20.

பா.ஜ.க-வை ஆட்சியில் வைத்திருப்பதில் மோதியின் பிம்பம் ஒரு பெரிய காரணியாக இருந்தது.

ஆனால், ‘மோதியின் உத்தரவாதத்தில்’ அனைவருக்கும் முழு நம்பிக்கை இல்லை என்றும், இல்லையெனில் 2014 தேர்தலில் 282 இடங்களிலும், 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களிலும் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தலைமையிலான பா.ஜ.க-வுக்கு மேலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கும் என்பதையும் சமீபத்திய முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடக் குறைவாகக் கிடைத்திருக்காது.

டெலிகிராஃப் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்களின் ஆசிரியராக இருந்த மூத்த பத்திரிகையாளர் பாரத் பூஷண் கூறுகையில், “பிரதமரின் தேர்தல் உரைகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிவைத்து பேசியது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ராமர் கோவில் போன்ற பிரச்னைகள் வாக்காளர்களின் நினைவில் நிற்கவில்லை. இல்லையேல் பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்திருக்கும். இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவில் இருக்கவேண்டும்,” என்கிறார்.

2. நலத்திட்ட அரசியல்

பா.ஜ.க ‘மோதியின் உத்தரவாதம்’ என்ற அறிக்கையில் கவனம் செலுத்திய நான்கு வகுப்புகள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள். இவைதான் இந்தியாவில் உள்ள நான்கு சாதிகள் என்று பிரதமர் மோதி கூறியிருந்தார்.

‘இலவச அரசியலில்’, அதாவது இலவசப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான திட்டங்களில் பா.ஜ.க முழு கவனம் செலுத்தியது.

‘பி.எம். கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்குவது, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது ‘பி.எம். ஆவாஸ் யோஜனா’ போன்ற திட்டங்கள் மூலம் இலவச சிகிச்சை வசதிகள் மற்றும் எல்.பி.ஜி வழங்கும் ‘பி.எம். உஜ்வாலா யோஜனா’ – அனைத்தும் அரசாங்கத்தின் புகழைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டவை.

மோதி அரசு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 22 கோடி குடும்பங்களை இதுபோன்ற பல திட்டங்களின் வரம்புபுக்குள் கொண்டுவருவதாக கூறியது. அதன் காரணமாக பல தேர்தல் வெற்றிகளையும் பெற்றது.

கடந்த மே 30 அன்று, தனது தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளன்று, பிரதமர் நரேந்திர மோதி, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், “நாங்கள் ஏழைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கியுள்ளோம், மக்களிடம் இப்போது ரேஷன் கார்டுகள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் உள்ளன,” என்று கூறினார்.

இந்தத் தேர்தலுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் நீண்ட சுற்றுப்பயணத்திற்கு பிறகு, பிரவுன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் அசுதோஷ் வர்ஷ்னி, “புந்தேல்கண்ட் மற்றும் அவாத்தில் உள்ள மக்கள் பலர், மின்சாரம் உள்ளது, தண்ணீர் உள்ளது, ஆனால் வேலைவாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ‘பயனாளிகள்’ திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை வேலைவாய்ப்பு வழங்கக்கூடியது போல எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்காது,” என்றார்.

மறுபுறம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் ‘நீதி உத்தரவாதத்தை’ வலியுறுத்தியது. இதற்குக் காரணம் கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்களில் அவரது ‘நலத்திட்டங்கள்’ வெற்றி பெற்றது.

ஜூன் 4-ஆம் தேதி வெளியான முடிவுகள், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பற்றிப் பேசிய உத்தி பயனளித்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதன் விளைவு பா.ஜ.க-வின் குறைக்கப்பட்ட புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது.

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்

3. ‘விஸ்வகுரு’ பிம்பம்

வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ‘மூலோபாய சுயாட்சியை’ பேணுவதை வலியுறுத்துகின்றன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு தீவிரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது.

பா.ஜ.க-வின் தேர்தல் பரப்புரையில், ‘உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை அதிகரித்து வருகிறது’ என்பதற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் இணைப் பேராசிரியை ஸ்வேதா சிங் கூறுகையில், “ஜி-20 தலைவர் பதவி, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான மூலோபாய உறவுகள், புல்வாமாவைப் போல தேசியப் பாதுகாப்புப் பிரச்னை, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் முடிவின் மீதான நீதிமன்றத்தின் ஒப்புதல் போன்ற சிக்கல்களும் வாக்காளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான அணுகுமுறை எப்போதும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தலில் அது குறைவாகவே விவாதிக்கப்பட்டது,” என்கிறார்.

இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து புகழ்பெற்ற பிரிட்டிஷ் சிந்தனைக் குழுவான சாடம் ஹவுஸின் மூத்த உறுப்பினரான சட்டிக் பாஜ்பாய், “பா.ஜ.க இந்து தேசியவாத கொள்கையைப் பின்பற்றினாலும், அமெரிக்கா-சீனா போட்டி மற்றும் பரஸ்பர வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு மேற்கத்திய நாடுகள் இந்தியாவுடனான உறவைத் தொடரும். இப்போது இந்தியா உள்நாட்டு அரசியலில் எவ்வளவு வேலை செய்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார்.

‘எதிரிகளை அவர்களது நாட்டுக்குள் புகுந்து கொல்வது’ என்ற இந்த அரசின் கொள்கையின் கேள்விக்கு, தெற்காசியா அல்லது சீனாவுக்கு எதிரான ‘சொல்லாடலில்’ இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உலகளவில் இது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.

‘ஃபாரின் பாலிசி’ சஞ்சிகையில் சர்வதேச உறவுகள் நிபுணர் மைக்கேல் குகல்மேன் இவ்வாறு எழுதுகிறார்: “கனடாவின் உலகளாவிய பிம்பம் ஆக்ரோஷமானது அல்ல. கனடா தனது குடிமக்களைக் கொலை செய்ய முயற்சிப்பது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இந்தியா மீது சுமத்தியுள்ளது. அதை இந்தியா மறுத்துள்ளது. இது ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கிறது.”

இருப்பினும், தேர்தல்களின் போது, ​​தெற்காசியாவில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன.

இது அரசாங்கத்தின் ‘பாசாங்குத்தனம்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர் எம்.கே.ஜாவின் கூற்றுப்படி, “எந்தவொரு நாட்டின் அரசியல் மாற்றங்களிலும் உள்ளூர், உலகளாவிய காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதற்கு வரலாறு சாட்சி. புவிசார் அரசியல் மட்டத்தில் ஒரு சிறிய நிச்சயமற்ற நிலையோ சந்தேகமோ இருந்தால், ஜனநாயக நாடுகளில் கூட, அதன் விளைவு ஓரளவு தெரியும்.”

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்

4. மத அரசியல்

2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டத்திற்கும் 2019 பொதுத்தேர்தலின் முதல் கட்டத்திற்கும் இடையே இருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் – வாக்கு சதவீதத்தில் சரிவு.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோதி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்,” என்று இஸ்லாமியர்களைக் குறிவைத்துக் கூறினார்.

இந்த அறிக்கையை ‘மதங்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்தும் முயற்சி’ மற்றும் ‘சிறுபான்மையினருக்குக் குழி பறிக்கும் முயற்சி’ என, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

சில ஆய்வாளர்கள் மோதியின் இந்தப் பேச்சு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். இது ‘அவரது வாக்காளர்களை ஒன்றிணைக்கும் முயற்சி’ என்று கூறினர்.

“பிரதமர் மோதி தேர்தல் பிரசாரத்தில் இந்து-முஸ்லிம் அரசியலை இவ்வளவு வெளிப்படையாகப் பேசியது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஏனெனில், பொதுவாக அவர் முந்தைய தேர்தல்களில் இதுபோன்ற நேரடி அறிக்கைகளை தவிர்த்தார்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீர் சங்வி.

2019-இன் குடியுரிமை (திருத்தம்) சட்டத்துக்கு எதிரான பல மனுக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் கூட, தேர்தலுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென இந்தச் சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்த) விதிகளின் அறிவிப்பை வெளியிட்டது.

ஒருவேளை வாக்காளர்கள் இந்த நடவடிக்கையை ‘மதவாத அரசியலுடன்’ இணைத்துப் பார்த்திருக்கலாம்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் துறையின் முன்னாள் பேராசிரியரான புஷ்பேஷ் பந்த், “தற்போது, ​​இந்தியாவில் மதவாத அரசியல் அதன் உச்சத்தில் உள்ளது,” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த இந்த நீண்ட தேர்தலில், கோவில்கள், மசூதிகள் போன்ற பிரச்னைகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை அனைவரும் பார்த்தனர். இவை அனைத்தும் உணர்ச்சியால் நடக்கவில்லை. இது நன்கு திட்டமிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்,” என்கிறார்.

இறுதியாக, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை முதல் ஒவ்வொரு பா.ஜ.க பிரசாரகரின் பேச்சிலும் ஒரு பகுதியாக இருந்த ‘அந்தப் பிரச்னை’.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரப் பிரதேச அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

அயோத்தியில் ரூ.10,000 கோடி செலவில் நகரை புதுப்பித்து ‘உலகளாவிய நகரமாக’ மாற்றுவோம் என்ற பா.ஜ.க-வின் கூற்றை அந்தப் பகுதி வாக்காளர்கள் ஏற்கவில்லை.

அயோத்தியின் ஐந்து தொகுதிகளிலும் – ஃபைசாபாத், பாரபங்கி, அமேதி, அம்பேத்கர் நகர், மற்றும் சுல்தான்பூர் – பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது.

அயோத்தியில் வசிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் அப்சல் கான் கூறுகையில், “ராமர் கோயில் திறப்பு விழாவுடன் பா.ஜ.க ஒரு ஓட்டப் பந்தயத்தைத் துவங்கியது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் மிகவும் பின்தங்கியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் மக்களின் மனநிலை வேறுபட்டது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/c288jd1lkgro

1 Comment

  1. மோடியின் தோல்விக்கு அவரது மதவாதம், ஆணவப் போக்கு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புச் பேச்சு, நான் கடவுளின் குழந்தை என்ற பேய்த்தனமான பேச்சுக்களே காரணம்.

Leave a Reply