சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!
இராசையா ஞானம்
தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் காவலுக்கு வந்த நாள் தொடங்கி அவனும் இந்த வழியால் தினமும் போகின்றான். நீயும் அவனை ஏக்கத்தோடு பார்க்கின்றாய். ஒரு நாளாவது நின்று எங்களுடன் ஒரு வார்த்தையாவது பேசியிருப்பானா அவன். தோழி மீண்டும் சிரித்தாள்.
அப்படியில்லை. பேச வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் ஏதாவது பயமும் இருக்கலாம்.
என்ன பயம் பரணிலே இரண்டு பெண்கள் நாம். கீழே தினை வரம்பிலே கையில் வில்லுடன் அவன். வேறு யாரும் இல்லையே. பேசலாம். நிறைய ஆனால் எங்களைக் கண்டவுடன் தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு சென்றுவிடுகின்றானே ஏன். இது தோழி.
ஒரு வேளை எங்களை சாதி குறைந்தவர்கள் என்று நினைத்திருப்பானோ
அதிர்ந்து திரும்பினாள் தோழி. நீ என்ன சொல்கிறாய் என்றாள்.
நான் சொல்வது தான் உண்மை. மலைவாழ் குறவர்களாகிய எங்களுக்கும் காடுவாழ் வேடுவர்களுக்கும் சாதியிலே உயர்வு தாழ்வு இருந்தாலும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை அலங்காரத்தில் அதிக வேறுபாடு இல்லை அதனால் எங்களையும் தாழ்ந்த வேட்டுவ குடும்பம் என்று கருதி அவன் விலகிப் போயிருக்கலாம்.
சாதிப் பிரச்சனை எவ்வளவு பொல்லாதது பார்த்தாயா இப்போது அந்தப் பெண் கண்களிலே கண்ணீர்.
தோழி சொன்னாள் உச்சி வெய்யில் தணிந்து பொழுது இருட்டும் வேளையில் அதோ அவன் தாமதமாக வருகின்றான். இன்று நாங்களே அவனுடன் பேச்சுக் கொடுத்து நாங்கள் என்ன சாதி என்பதை அவனுக்குச் சொல்லி விடுவோம். நீ அழாதே.
அவன் அண்மையில் வந்ததும் பரணில் இருந்து இறங்கித் தோழியே முதலில் பேச்சுக் கொடுத்தாள். காட்டிலே கொம்பு எனப்படும் வாத்தியக் கருவியை ஒலித்து விலங்குகளைப் பயந்து கலைந்தோடச் செய்து கொடிய வாய்களை உடைய வேட்டை நாய்களை ஏவி அந்த மிருகங்களை வேட்டையாடும் இரக்கமற்ற வேட்டுவ குலத்துப் பெண்கள் அல்ல நாங்கள்.
மலைப்புறத்து வயல்களிலே தினையை விதைத்துப் பயிர் செய்து அறுவடை செய்து உண்டு உயிர்வாழும் குறவர் இனத்துப் பெண்கள் நாம். பொழுது சாய்ந்தால் காட்டு மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து எங்கள் பரண்களை தங்கள் வீடாக்கிக் கொண்டு தம் துணைகளுடன் இன்புறும். ஐந்து அறிவுச் சீவராசிகளான அவை எங்களைச் சாதி குறைந்தவர்களாக எண்ணிப் பரணைப் புறக்கணிப்பதில்லை. ஆனால் எல்லா அறிவும் நிரம்பப் பெற்ற மனிதர்கள் தான் தவறாக நடந்து கொள்கின்றார்கள் என்றாள் அவள்.
அங்கே மெதுவாக வந்த அந்தப் பெண் தோழிக்குச் சொன்னாள். நாங்கள் எது சொன்னாலும் அவர் நம்ப மாட்டாரடி. அவரை இன்று இப்படியே தனது சொந்த ஊருக்குப் போகாமல் எங்கள் மலைக் கிராமத்துக்கு வரச் சொல்லு. வளைந்த மூங்கில் குழாயில் அடைக்கப்பட்ட பழைய கள்ளை அங்கே வாங்கிக் குடித்துவிட்டு வேங்கை மரங்களின் கீழ் அமைந்த முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக் கூத்தையும் பார்த்துவிட்டு சொந்த ஊருக்குப் போகச் சொல்.
அப்போதாவது நாங்கள் என்ன சாதி என்பதைத் தெரிந்து கொண்டு எங்களுடன் பேசுகின்றாரா என்று பார்ர்போம் என்றாள் அந்தப் பெண்.
சங்கச் சமூகம் சாதி வரம்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த இனம் என்ற கோட்பாட்டைச் சற்று அசைத்துப் பார்க்கும் இந்தப் பாடலைக் கபிலன் என்ற புலவன் நற்றிணையிலே 276 வது பாட்டாகப் பாடி வைத்திருக்கின்றான்.
கோடு துவையா கோள்வாய் நாயொடு
காடு தேர்ந்து நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊNர் செல்லாது
சேந்தனை சென்மதி நீயே பெருமலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.
கோடு துவையாக் கோள் வாய் நாயொடு காடு தேர் நசை இய வயமான் வேட்டு வயவர் மகளிர் என்றி ஆயின் – தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் – வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில் – தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; கான மஞ்ஞை கட்சி சேக்கும் – காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம் ஊர் கல்லகத்தது – எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; நீ செல்லாது சேந்தனை பெருமலை வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை முன்றில் குரவையும் கண்டு செல் – வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக.
(கனடா தமிழர் தகவல் 5.6.2024 இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது)
Leave a Reply
You must be logged in to post a comment.