2024 சனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வட கிழக்கில் ஆக மிஞ்சினால் 15 % வாக்குகளே கிடைக்கும்!
நக்கீரன்
எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முடிவு எடுத்துவிட்டதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். தனது கட்சி மட்டுமல்ல பல்கலைக் கழக மாணவர்கள், சனநாயக ததேகூ மற்றும் பல சிவில் சமூகங்கள் சனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சனாதிபதி தேர்தல்களில் தென்னிலங்கை சிங்களக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து எந்தப் பலனும் இல்லை என்பது தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை சனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பவர்களது வாதம். அப்படி ஒருவரை நிறுத்தினால் பன்னாட்டு சமூகம் ஈழத் தமிழர்கள் இலங்கையில் எப்படி இன, மொழி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமயம் போன்ற துறைகளில் ஒதுக்கப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிக் கொணரலாம் என்கிறார்கள் நினைக்கிறார்கள். இதில் உண்மை இல்லை என்பதல்ல. உண்மை இருக்கிறது.
ஆனால் யதார்த்தம் என்ன? வட கிழக்கில் உள்ள 6 தேர்தல் மாவட்டங்களில் திருகோணமலை, அம்பாரை இரண்டிலும் தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். திருகோணமலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தமிழர்கள் இரண்டாம் இடத்தில். அம்பாறையில் முஸ்லிம்கள் முதல் இடம், சிங்களவர் இரண்டாம் இடம், தமிழர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளார்கள்.
கீழ்க்கண்ட அட்டவணை 1 கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலைக் காட்டுகிறது. இது 2012 இல் எடுக்கப்பட்ட குடித்தொகை கணக்கு. இப்போது தமிழர் இருப்பு மேலும் மோசம் அடைந்திருக்கும் என நம்பலாம்.
2020 நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 தேர்தல் மாவட்டங்களிலும் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகள் பின்வருமாறு. தமிழ்க் காங்கிரஸ் 2020 தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளது.
அட்டவணை 1
அட்டவணை 2
2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வடக்கு + கிழக்கு
கட்சி | வாக்குகள் | % | மொத்தம் | % | ||||
அரச ஆதரவு | EPDP | 61,464 | 4.19 | |||||
SLFP | 206,439 | 14.09 | ||||||
SLPP | 144,629 | 9.87 | ||||||
TMTK | 51,301 | 3.50 | ||||||
SJB | 268,427 | 18.32 | ||||||
TMVP | 67,692 | 4.62 | ||||||
SLMC | 34,428 | 2.35 | ||||||
UNP | 16,881 | 1.15 | ||||||
மொத்தம் | 732,260 | 100 | 732,260 | 61.26 | ||||
தமிழ்த் தேசியம் | TNA | 327168 | 22.33 | |||||
TULF | 16881 | 1.15 | ||||||
TMTK | 51301 | 3.50 | ||||||
ACTC | 67766 | 4.63 | ||||||
மொத்தம் | 463116 | 463,116 | 38.74 | |||||
முழுத்தொகை | 1,195,376 | 100.00 |
வட கிழக்கில் அரச ஆதரவு வாக்குகளின் எண்ணிக்கை 732,260 (61.26%) ஆகும். தமிழ்த் தேசியத்துக்குஆதரவான வாக்குகள் 463,116 (38.74%) ஆகும். . 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தது போல 2024 சனாதிபதி தேர்தலில் இதே விழுக்காட்டில் மக்கள் வாக்களித்தால் விளைவு இதைவிட மோசமாக இருக்கும். காரணம் அஇதகா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதால் அந்தக் கட்சிக்கு விழுந்த வாக்குகள் கணக்கில் வராது போய்விடும். மேலும் இதஅக பொது வேட்பாளரை ஆதரிக்காது என்றே கூறவேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு 11.78 % வாக்குகளே விழும்.
இதைத்தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிறுத்த நினைப்பவர்கள் விரும்புகிறார்களா? தேர்தல் முடிவை வைத்து தமிழ்த் தேசியத்தரப்புக்கு தமிழ்மக்களிடையே ஆதரவு இல்லை என்பதை பன்னாட்டு சமூகத்துக்கு தண்டோரா போட்டு பறையறையப் போகிறார்களா? எப்படியும் ஒரு சிங்களவர்தான் அடுத்த சனாதிபதியாக தெரிவு செய்யப்படப் போகிறார். தமிழர்களது ஆதரவின்றி வெற்றி பெறும் தென்னிலங்கை சிங்கள சனாதிபதிக்குத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, காணி விடுவிப்பு போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கடப்பாடு அவருக்கு இருக்குமா?
கடந்த காலங்களில் தென்னிலங்கை சிங்களவர் ஒருவரை ஆதரித்து என்ன பலனைக் கண்டோம் என்ற வாதத்தை தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியே தீரவேண்டும் என்பவர்கள் முன்வைக்கிறார்கள். 2015 இல் நடந்த தேர்தலில் தமிழ்மக்கள் மயித்திரிபால சிறிசேனாவை ஆதரித்த காரணத்தால் அவர் வெற்றி பெற்றார். சிங்கள – பவுத்த பேரினவாதி மகிந்த இராசபக்ச ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பெறுபேறாக வட கிழக்கில் சனவரி 2015 தொடக்கத்தில் இராணுவம் பிடித்து வைத்திருந்த 76,594 ஏக்கர் காணியில் 47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. எஞ்சியிருப்பது 28,990 ஏக்கர் காணி மட்டுமே. 2019 கடைசியில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக 1,000 ஏக்கருக்குக் குறைவான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. இதனை அட்டவணை 4 காட்டுகிறது.
அட்டவணை 4
மே 2009 – சனவரி 2020 விடுவிக்கப்பட்ட காணி விபரம் | |||
ஆண்டு | அரச காணி | தனியார் காணி | மொத்தம் |
மே 2009 இல் முப்டைகள் பிடியில் | 88,722 | 29,531 | 118253 |
இருந்த காணி | |||
மே 2009 – சனவரி 2015 விடுவிக்கப்ப | 21,581 | 20,078 | 41,659 |
பட்ட காணி | |||
எஞ்சிய காணி ( A) | 67,141 | 9,453 | 76,594 |
சனவரி 2015 – சனவரி 2019 விடுவிக்கப் பட்ட காணி (B) | 41,677 | 5,927 | 47,604 |
விடுவிக்கப் படாத காணி (சனவரி 2019) | 25,464 | 3,526 | 28,990 |
%( B/A) | 62 | 37.30 | 37.85 |
காணி விடுவிப்பு நீங்கலாக மயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்த செய்ய ரூபா 400 மில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டது. காங்கேசன்துறை துறைமுக மேம்பாட்டுக்கு அ.டொலர் 45 மில்லியன் செலவழிக்கப்பட்டது. ஒல்லாந்து நாட்டின் யூறோ 65 மில்லியன் நிதிக் கொடுப்பனவில் வடக்கில் 5 மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அவற்றை அண்மையில் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
அரச சார்பு கட்சிகளில் இபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டன. மலையகத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளில் இலங்கை இந்திய காங்கிரஸ் தனது ஆதரவு இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு என அறிவித்துவிட்டது. தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது கட்சி பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்காது என கிளிநொச்சியில் வைத்துப் பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி அனேகமாக பொது வேட்பாளரை ஆதரிக்காது என நம்பலாம். தென்னிலங்கைக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கட்சி 13 ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக – காணி, காவல்துறை உட்பட – நடைமுறைப்படுத்தப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஜேவிபி நாட்டு மக்கள் எல்லோரும் ஒத்த உரிமையுடன் வாழ ஒரு புதிய யாப்பு இயற்றப்படும் என்று மட்டும் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. இரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார்.
எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் 50 % வாக்குகளைப் பெறுவது அசாத்தியம். குதிரைக் கொம்பு என்று சொல்லிவிடலாம். இலங்கையின் 2012 ஆம் ஆண்டு குடித்தொகை கணக்கின்படி தமிழர்களது மொத்த எண்ணிக்கை 22 இலட்சமாகும். மாகாண வாரியாக அந்த எண்ணிக்கை பின்வருமாறு.
அட்டவணை 3
இனவாரி குடித்தொகை
மாகாணம் | தமிழர் | % | முஸ்லிம் | % | சிங்களவர் | % | மற்றவர்கள் | % | மொத்தம் |
வடக்கு | 993,741 | 93.86 | 32,364 | 3.06 | 32,331 | 3.05 | 326 | 0.03 | 1,058,762 |
கிழக்கு | 617,295 | 39.79 | 569,738 | 37.64 | 359,136 | 23.15 | 5,212 | 0.34 | 1,551,381 |
மொத்தம் | 1611036 | 602,102 | 391,467 | 5538 | 2,610,143 | ||||
பிற மாகாணங்கள் | 666,048 | ||||||||
கூட்டுத்தொகை | 2,271,084 |
ஆக மொத்தம் 2,272,084 இலட்சம் தமிழ் மக்களில் 43.75 % வடக்கிலும் 27.18 % கிழக்கிலும் எஞ்சிய 29.07 % வட – கிழக்குத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களில் வாழ்கிறார்கள்.
2020 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த விழுக்காட்டில் வட கிழக்குத் தமிழ் வாக்காளர்கள் வாக்களித்தால் (அட்டவணை 2) தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆக மிஞ்சினால் 15 % வாக்குகளே விழும் சாத்தியம் இருக்கிறது. இதற்குத்தான் ஆசைப்படுகிறாயா பாலகுமாரா?
சனாதிபதி தேர்தல் தொடர்பான அண்மைய கருத்துக்கணிப்பில் அனுர குமார திசநாயக்க மற்றும் சதிஸ் பிரேமதாச இருவருக்கும் தலா 39 % ஆதரவும் இரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 % ஆதரவும் மொட்டுக் கட்சிக்கு 9 % ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. (https://groundviews.org/2024/05/30/sajith-premadasa-and-a-k-dissanayake-tied-in-voter-poll/). அதாவது முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50+ விழுக்காடு வாக்குகளைப் பெறமுடியாது.
கடந்த காலங்கள் போல் தமிழ்மக்கள் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் தந்திரோபாயமாக வாக்களித்தால் அவர்களது வாக்குகள் பெரும்பாலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.