வாக்குகளை வீணடிக்க நினைக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் முயற்சி தற்கொலைக்கு ஒப்பானது!

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைத் தனது வாளால் வெட்டிக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற அய்யமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.

இன்று நிலாந்தன் நவீன விக்கிரமாதித்தனாக உருவெடுத்திருக்கிறார். தமிழ் மக்கள் பொதுச் சபை என்ற ஒரு மாயமானை உருவாக்க குத்தி முறிகிறார். இவர்தான்,  தான் ஏறிவந்த தமிழரசுக் கட்சி என்ற ஏணியை எட்டி உதைத்துவிட்டு – உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த – விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியபோது அதனை விழுந்து விழுந்து இரவு பகல் உழைத்தவர். விக்னேஸ்வரன் தனது அரசியல் இலாபத்துக்குத் தமிழ் மக்கள் பேரவையை தமிழ் மக்கள் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிட்டு நா.உறுப்பினராகவும் ஆகிவிட்டார். அதிபர் அருந்தவபாலன் போன்றவர்கள்தான் பாவம். அணிலை ஏறவிட்ட குக்கலைப் போல தனித்து விடப்பட்டார்கள். தமிழரசுக் கட்சிக்கு இரண்டகம் செய்த விக்னேஸ்வரனை எடைபோட அவர் தவறிவிட்டார். கண் இழந்த பின்னர் சூரியநமஸ்காரம் செய்ய நினைத்தவன் போல இப்போதுதான் “விக்னேஸ்வரன் தான் விரும்பியபடி கட்சி முடிவுகளை எடுக்கிறார். மற்றவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை” என்கிறார்! காலம் கடந்த ஞானம்!

விக்னேஸ்வரனது  தமிழ் மக்கள் கூட்டணி ஒரு தனிமனிதருடைய அமைப்பு. அதற்குச்  செயலாளர், பொருளாளர் கிடையாது. செயல்குழு,  பொதுக்குழு கிடையாது. ஆதிமுதல் அந்தம்வரை ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற தோரணையில்  ‘கட்சியும் நானே கட்சித் தலைவரும் நானே’ என்று பாடிக் கொண்டிருக்கிறார்.

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மூன்று லெட்டர்பாட் கட்சிகளோடு சேர்ந்து (பிறேமச்சந்திரன், அனந்தி, ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கம் சோடி) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற இன்னொரு லெட்டர்பாட் கூட்டணியை உருவாக்கியது. ஆனால் உருவாக்கிய வேகத்தில் அது உடைந்து இன்று காணாமல் போய்விட்டது. போக்கிடம் இல்லாத மணிவண்ணன் அதோடு ஒட்டிக் கொண்டார்.

இப்படியான மண்குதிரைகளை நம்பித்தான் நிலாந்தன் தமிழ் மக்கள் பொதுச் சபையை உருவாக்கத் தலையாலே உழுது வருகிறார். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் நிலாந்தன் எதைச் சாதிக்கலாம் என்கிறார்?

“ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்களின் ஆகக்கூடிய வாக்குகளைத் திரட்டிக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை கேட்டிருக்கின்றது. அவ்வாறு பொது வேட்பாளருக்கு கிடைக்கக்கூடிய அதிக வாக்குகளானவை தமிழ்மக்கள் மீண்டும் ஒரு அணியில் திரண்டு விட்டார்கள் என்று வலிமையான செய்தியை வெளி உலகத்துக்கு கொடுக்கும். அதைவிட முக்கியமாக தென்னிலங்கைக்கு கொடுக்கும். அதைவிட முக்கியமாக தமிழ் கட்சிகளுக்குக் கொடுக்கும்.”

சரி பொது வேட்பாளருக்கு அதிகளவு வாக்குகள் (50+%) கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? தமிழ்மக்கள் பொது வேட்பாளரை நிராகரித்து விட்டார்கள் என்ற செய்தி தென்னிலங்கைக்கு போகுமா? போகாதா? அனைத்துலகுக்கும் போகுமா? போகாதா? இந்த விஷப் பரீட்சை தேவையா?

சனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரித்துடையவர்களின் எண்ணிக்கை 17.1 மில்லியன். இதில் 80வாக்களித்தால் (14 மில்லியன்) தேர்தலில் வெற்றிபெறுபவர் 7 மில்லியன் வாக்குகளைப் பெறவேண்டும். கருத்துக் கணிப்பு  (மே 2024) என்ன சொல்கிறது? 


1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உச்சகட்ட செல்வாக்கோடு இருந்த காலத்தில் அதற்குக் கிடைத்த வாக்குகள் 50+% மட்டுமே. அதுவும் புத்தளம் மாவட்டத்தில் தவிகூ க்கு கிடைத்த வாக்குகளைக் கூட்டித்தான் 50+ %  கிடைத்தது.

இன்று தமிழ்மக்கள் தேசிய மக்கள் முன்னணி சனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கிறது. அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுணிக்கட்சிகள் பொது வேட்பாளரை முப்போதும் ஆதரிக்காது. அந்தக் கட்சிகள் சனாதிபதி தேர்தலில் இரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன. தமிழரசுக் கட்சி ஆதரிக்காது. எனவே பொதுவேட்பாளருக்கு15 %  வாக்குகள் கிடைப்பதே குதிரைக் கொம்பு!

2020 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு  38.74%. தேசியத்துக்கு எதிரான கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு  61.26%!

தமிழ் பொது வாக்காளருக்கு ஒரு முஸ்லிம் கூட வாக்களிக்கப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழர்கள் சிறுபான்மை. அவர்களது விழுக்காடு (2012) 39.79%  மட்டுமே. மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மை. திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாம் (32.39%) இடம். அம்பாரை மாவட்டத்தில் மூன்றாவது (17.5%) இடம்.

நாடாளுமன்றத்துக்கு 2020 இல் நடந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட முடிவுகளைப் பார்ப்போம்.

யாழ்ப்பாண மாவட்ட குடிப்பரம்பலில் 96 %  தமிழர்கள். தேசியக் கட்சிகளுக்கு 60 %  வாக்குகளே கிடைத்துள்ளன. அரசு சார்பு கட்சிகளுக்கு  40 %  வாக்குகள் கிடைத்துள்ளன. கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 75 % . முஸ்லிம்கள் 25 % . தேர்தல் முடிவுகள் பின்வருமாறு காணப்பட்டன.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு 29 % ம் அரசு சார்பு கட்சிகளுக்கு  71 %  வாக்குகளும் விழுந்துள்ளன. இந்த இலட்சணத்தில் யாழ்ப்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பொது வேட்பாளருக்கு எத்தனை விழுக்காடு  வாக்குகள் கிடைக்கும்?  கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டாமா?

இம்முறை சனாதிபதித் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நடக்கப் போகிறது. எனவே முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50+%  வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை. விருப்பு வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். தமிழ் மக்கள் ஆதரிக்கும் வேட்பாளரே வெல்ல வாய்ப்புண்டு. இந்த நல்ல வாய்ப்பை தமிழ்ப் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி எமது தலையில் மண் அள்ளிப் போட நிலாந்தன் போன்றவர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்? நிற்கலாமா?  நிற்கலாம் என்கிறார் நிலாந்தன். ஆமாம் நிற்கலாம் என்கிறது சனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி. இந்தக் கொடுமையை யாருக்குச் சொல்லி அழுவது? எந்தச் சுவரோடு மோதிக் கொள்வது?

மாவை சேனாதிராசாவும்  தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாம். அவர் இப்போது தனி மரம். அவருக்கு வாக்கு மாறிவிட்டது. சம்பந்தன் ஐயாவின் இடத்துக்கு தமிழரசுக் கட்சியின் செயல்குழு கூடி ஒருவரைத் தெரிவு செய்யும் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாக்கு மாறிவிட்டது.

ஒரு சனநாயக தேர்தல் முறைமை உள்ள நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வாக்குச் சீட்டுத்தான். தேர்தல் நாளன்று வாக்காளன்தான் மன்னர்களை படைக்கும் ஆற்றல் (King-maker) உடையவன். மன்னர் ஆட்சிக்குச்  சொன்னது மக்கள் ஆட்சிக்கும் பொருந்தும்.

வாக்குரிமை பிரதிநிதித்துவ மக்களாட்சியின் அடிப்படையாகவும் சாராம்சமாகவும் விளங்குவதால், இது ஒரு சனநாயக அரசில் குடிமக்களின் மிக முக்கியமான அரசியல் உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும்.

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக தென்னிலங்கையில் வழக்கமாக எழுப்பப்படும் சிங்கள – பவுத்த சிங்கள பேரினவாதம் இதுவரை தலைதூக்கவில்லை. இனவாதம் பேசினால்  தேர்தலில் வெல்லலாம்,  ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ண எண்ணம் இன்று தென்னிலங்கையில் காணப்படவில்லை. மாறாக காணி உரிமை உட்பட 13 ஏ சட்ட திருத்தம் முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச பகிரங்கமாக மேடைகளில் சொல்கிறார். அவரைப் போலவே தேசிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்காவும் தெரிவிக்கிறார்.

எனவே தமிழ் மக்கள் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தங்கள் வாக்குகளைப் போட்டு அவற்றை வீணடிக்காமல் இலங்கையின் அடுத்த சனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்கியாக மாறவேண்டும். நல்ல தருணம் இது.  அதனை நழுவ விடக் கூடாது.

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply