மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா?
இலங்கையின் யாழ் மாவட்ட கவணாவத்தை வைரவர் (பைரவர் என்றும் கூறுவார்கள்) கோயிலில் ஆடு,கோழிகளை வெட்டி உயிர்ப்பலி கொடுப்பதற்கான தடையினை மேன்முறையீட்டு நீதிமன்றம் விலக்கியதனையடுத்து பலரும் அந்த வேள்வி முறையினை மனிதநேயத்திற்கு முரணானதாகக் காட்டிப் பல கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார்கள். அவர்களிடம் சில கேள்விகள்.
1. கன்றுக்காக மாட்டில் சுரக்கின்ற பாலினை எடுத்து பசியாறுவதனைக் கூடப் புரிந்துகொள்ளலாம். அதனையே குடம் குடமாக வழிபாட்டுருக்களில் (விக்கிரங்களில்) ஊற்றி வீணாக்குகின்றமைக்கு எதிராக என்றாவது குரல் எழுப்பியுள்ளீர்களா?
2. நெல் போன்ற தானியங்களையும், நெய்,தேன் முதலிய பொருட்களையும் வீணாக எரியும் நெருப்பில் (யாக குண்டத்தில்) போட்டு வீணாக்குகின்றார்களே. இன்னொரு புறத்தில் பசியால் பலர் வாடுகின்றபோது, இத்தகைய வீணாக்கல்களை என்றாவது கண்டித்துள்ளீர்களா?
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”. (குறள் 1062)
என்ற குறளில் வள்ளுவன் இரந்து உணவு பெறும் நிலையிருந்தால், உலகைப் படைத்தவனாகக் கூறப்படும் #கடவுளும்_கெட்டுப் போகட்டும் என்று கூறுகின்றாரே. இங்கு இரந்தும் உணவு இல்லாமல் ஒரு கூட்டமிருக்க, நீங்களோ இவ்வாறு உணவாகக் கொள்ளத்தக்கவற்றை நெருப்பிலும், நிலத்திலும் கொட்டுவது சரியா? இதற்கு எதிரான உங்களது கருத்துகள் எங்கே?
3. `சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்` என்று பகவத்கீதையும், ரிக்வேத புருச சூத்திரம் 10 வது இயலும், மனு தர்மமும் வெளிப்படையாகவே சாதிப் பாகுபாட்டினை வலியுறுத்தி மனிதர்களில் ஒரு பிரிவினரை மிருகங்களை விடத் தாழ்வாக நடத்தச் சொல்கின்றன. அவைதான் உங்களது புனித நூல்களா? இத்தகைய நூல்களை என்றாவது கண்டித்தது உண்டா?
4. பெண்களையும், சூத்திரர்களையும் இழிவுபடுத்து முகமாகப் பல சமற்கிரத மந்திரங்கள் உங்களது கோயில்களில் ஓதப்படுவதனை என்றாவது எதிர்த்ததுண்டா? ஆகக்குறைந்தது எல்லோரிற்கும் விளங்கும் தமிழ்மொழியினை வழிபாட்டு மொழியாக்க குரல் கொடுத்ததுணடா?
5. பார்ப்பனரல்லாத ஆண்களிற்கும், எல்லாப் பெண்களிற்கும் எதிரான கருவறைத் தீண்டாமைக்கு எதிராகக் குரல்கொடுத்ததுண்டா?
இவையெல்லாம் எமது நம்பிக்கைகள் என்று நீங்கள் கருதினால், வேள்வியும் அவ்வாறே இன்னொரு பிரிவினரின் நம்பிக்கை. அதுவும் உங்களது நம்பிக்கைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வருகின்ற நம்பிக்கை. உங்களது இந்து மதமும் சரி (கருத்து 1) , சைவ சமயமும் சரி, உயிர்ப்பலியினைக் கடைப்பிடித்து வந்தவையே {சைவத்திற்கான எடுத்துக்காட்டு – கண்ணப்ப நாயனார்,இன்றும் நந்திக்கு பின்னேயிருக்கும் பலிபீடம்}. படையல் என்பதே பழங் காலத்தில் பலி மட்டுமே.
சரி, அது எல்லாம் நாகரிகம் வளர்ச்சியடையாத காலம், இப்போது மாறக்கூடாதா என்ற கேள்வி எழலாம். அதே கேள்வியினை நானும் உங்களிடம் கேட்கின்றேன். நீங்களும் மேற்கூறியவற்றில் மாறக்கூடாதா?
குறிப்பு – `கொல்லாமை` பேசுவதாயின் வள்ளலாரைப் போன்று, மறைமலை அடிகளாரைப் போன்று முதலில் மனிதருடைய உரிமைகளிற்காகப் போராடுங்கள். பின்னர் பிற விலங்குகளினைப் பார்ப்போம். வள்ளலார் போன்று `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்` என்று கூறினால், அதுவே மனிதநேயம். மற்றையது எல்லாம் வெளி வேடம்.
All reactions:
53Kanthal Selvanathan and 52 others
Leave a Reply
You must be logged in to post a comment.