வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள்

வித்தியா படுகொலை வழக்கு: மாப்பிள்ளையால் சிக்கிய சந்தேகநபர்கள்

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்று யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான விசாரணை அதிகாரியான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியம் அளித்தார்.

அவரது சாட்சியத்தில்,

தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளி சென்ற அழைப்புக்கள் ஆராயப்பட்டன. குற்றச்செயல் நடந்த நேரத்தில், அந்த சூழலில் இருந்தவர்கள் தொடர்பில் அறிந்து கொண்டேன் என அவர் சாட்சியமளித்துளார்.

குற்றச் செயல் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தாலும், எதேச்சையான மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதனை எனது தனிப்பட்ட உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டேன். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.

அதன்போது கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டேன். சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டேன்.

அத்துடன் குற்ற சம்பவம் நடைபெற்ற காலப் பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை முதல் 14ஆம் திகதி மதியம் வரையிலான கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஊடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.

அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு சொந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில் 10 பேர் தொடர்பில் விசாரணை செய்ய தீர்மானித்தோம்.

அதன் பிரகாரம் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு அழைத்தோம்.

அதில் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தோம். அதன் போது அவருக்கு இந்த வழக்கின் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் ஆகிய இருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாப்பிள்ளை என்பவருக்கு குற்றச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாளான 12ஆம் திகதி மற்றும் குற்றச் சம்பவம் நடைபெற்ற தினமான 13ஆம் திகதி அழைப்புக்கள் சென்றுள்ளன.

அது தொடர்பில் மாப்பிள்ளையிடம் கேட்ட போது , தான் கள்ளு விற்பனை செய்வதனால் தன்னிடம், கள்ளு வேண்டும் எனக் கோரி அவர்கள் அழைப்பு எடுத்து இருந்தனர் என கூறினார்.

குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் 12ஆம் திகதி மதியம் 12.25 மணிக்கும் இரவு 21.56 மணிக்கும் இடையில் சந்திரஹாசன் மற்றும் துஷாந்த் ஆகிய இருவரது தொலைபேசியில் இருந்து அழைப்புக்கள் சென்றுள்ளன.

குற்றச் சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதி மாலை 15.50 மணிக்கு பிறகு மாப்பிள்ளையின் தொலைபேசிக்கு எந்த அழைப்புக்களும் வரவில்லை. இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த போது , அன்றைய தினம் (13ஆம் திகதி) தனது தொலைபேசியை நிறுத்த சொல்லி சந்திரஹாசன் கூறியதனால் தான் அதனை நிறுத்தி வைத்ததாக கூறினார்.

அதில் இருந்து இந்த குற்றச் சம்பவத்திற்கும் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.

அதன் பின்னர் தான் நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க விரும்புவதாக நடராஜா புவனேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் மற்றும் உதயசூரியன் சுரேஷ்கரன் ஆகியோர் குற்றச் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மாணவி பாடசாலை செல்லும் பாதையில் காலை 7 மணியளவில் சின்ன ஆலடி எனும் இடத்தில் நின்று இருந்தார்கள். அவர்கள் எதோ காதல் விடயம் பேச போவதாகவே நான் எண்ணி இருந்தேன். ஆனால் திடீரென அவ்வாறு செயற்பட்டார்கள் என என்னிடம் விசாரணையின் போது மாப்பிள்ளை கூறினார்.

அதனால் அவர் அந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று இருந்தார் என்பதனை அறிந்து கொண்டேன். அதனால் அவரை கைது செய்யவில்லை. அவர் கேட்டதற்கு இணங்க ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் அவர் வாக்கு மூலம் அளிக்க நீதவானிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்தேன்.

அதேவேளை மாப்பிள்ளையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபராக உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் உள்ளார் எனும் தகவலை அறிந்தேன். அதன் பிரகாரம் சுரேஷ்கரனை அரியாலையில் வைத்து கைது செய்தேன்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்கரனிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரமே மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றினுள் வைத்தே மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என அறிந்து கொண்டோம்.

அதன் பிரகாரம் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுரேஷ்கரன் கூறிய இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். அதன் போது எம்மால் மேலதிக தடயப் பொருட்கள் சான்றுகளை பெற முடியவில்லை.

அதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிசாரால் பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை குற்ற புலனாய்வு திணைக்களத்தால் உதயசூரியன் சுரேஷ்கரன் 11ஆவது சந்தேக நபராகவும் தர்மலிங்கம் ரவீந்திரன் 12ஆவது சந்தேக நபராகவும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்வதனை காணொளியாக (வீடியோவாக) பதிவு செய்திருந்தனர் என்பதனை அறிந்து கொண்டு ஆறாவது சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் என்பவரின் மடிக்கணணி மற்றும் ரப் ஆகியவற்றை கைப்பற்றினோம்.

அவற்றை ஆய்வுக்காக ஊர்காவற்துறை நீதவானின் உத்தரவுக்கு அமைய மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் சேர்ட் எனும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்தோம். அதன் அறிக்கைகள் எமக்கு கிடைக்க பெறவில்லை.

அதேவேளை எமது விசாரணைகளின் போது குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள் என அறிந்து கொண்டேன். அது தொடர்பில் அவர்கள் தங்கி இருந்த தங்குமிட உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.

இந்த வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஒன்றரை வருடங்கள் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. விசாரணைகள் முடிவடைந்ததும் விசாரணை கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கின் 10ஆவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மற்றும் 12ஆம் எதிரியான தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார் என பிரதான விசாரணையின் போது 35ஆவது சாட்சியமான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்தார்.

 

http://www.tamilwin.com/statements/01/153984?ref=home-imp-parsely

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply