இலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம்! அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது!
நக்கீரன்
கனடிய அரசு இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தி விட்டதாம். காரணம் இலங்கை இப்போது ஒரு உயர் நடுத்தர வருவாய் (Upper Middle Income) உள்ள நாடாம். ஒரு நாட்டின் தனிமனித வருமானம் 4,036 – 12,475 அமெரிக்க டொலராக இருந்தால் அந்த நாடு உயர் நடுத்தர நடாகக் கருதப்படும். சிறிலங்காவின் சராசரி தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,924 (2015) அமெரிக்க டொலர்கள் ஆகும்.
கனடா நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு நிதியுதவி கொடுக்கப்பட மாட்டாதாம். கனடா முட்டுப்பட்ட நாடுகளுக்கு 2016 ஆம் ஆண்டு 5.4 பில்லியன் டொலர்களைச் செலவழித்துள்ளது. 2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் பொழுது இந்த உதவி நிதி குறைந்துள்ளது. 2015 இல் 5.8 பில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டது. வேறு விதத்தில் சொல்வதாயிருந்தால் 2015 இல் ஒரு கனடியன் 163 டொலரை செலவழித்திருக்கிறான். 2016 ஆம் ஆண்டு இந்தத் தொகை 150 டொலராக இருந்தது. 2016 ஆம் ஆண்டு வரவு – செலவு நிதி அறிக்கையில் 1.7% வெளிநாடுகளுக்கு உதவி நிதியாக ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு 2015 இல் 2 % ஆக இருந்தது.
உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக வறுமை நிலவுவதாக உலக வங்கியின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் வறுமையால் பாதிக்கப்படும் மாவட்டமாக மொனறாகல மட்டும் அடையாளங் காணப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தேசிய வறுமைக் கோடு நாளொன்றுக்கு 1.50 டொலர் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் ஒப்பீடு செய்யும் போது முல்லைத்தீவு(28%), மொனராகலை(21%), மன்னார்(20%), மட்டக்களப்பு(19%), கிளிநொச்சி(13%) ஆகிய மாவட்டங்களே அதிகம் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை கொண்ட மாவட்டங்களாக பதிவாகி உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள போருக்கு பின்னரான தமிழர் பிரதேசங்களிலேயே வறுமை அதிகமாக உள்ளது. அதிலும் இலங்கை தொடர்பில் ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அனைத்துலக வறுமைக் கோடானது நாளொன்றுக்கு 2.5 டொலர் வருமானத்தை வரையறையாகக் கொண்டுள்ளது. இதனுடன் ஒப்பீடு செய்து நோக்கில், மேற்கூறப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களின் விழுக்காடானது முறையே 74.4%, 60.9% மற்றும் 57.2 % காணப்படுகின்றன.
மலைநாட்டின் வறுமை நிலையானது சிறிலங்காவின் தேசிய வறுமை நிலையின் பிரகாரம் 10.9 விழுக்காடும் அனைத்துலக வறுமைக் கோட்டின் பிரகாரம் 50.6 விழுக்காடும் காணப்படுகிறது.
உலக வங்கியால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை வரையறுக்கப்படாவிட்டாலும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2014 அறிவித்தலின் பிரகாரம் 19.4 விழுக்காடாகும்.
வடக்கு மற்றும் கிழக்கின் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்களின் வயதெல்லையை நோக்குமிடத்து, உலக வங்கியின் ஆய்வின்படி, 25 வயதிற்கு உட்பட்டவர்களில் 47% வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். வடக்கு கிழக்கில் இந்த விழுக்காடானது 47% ஆகும். ஏனைய மாகாணங்களில் இந்த விழுக்காடானது 40% காணப்படுகிறது.
குறிப்பாக இளையோர் மற்றும் கல்வியறிவுள்ள பெண்கள் போன்றோர் தொழில் வாய்ப்பின்மை, தொழிலாளர் சந்தைக்கான தொடர்பாடலை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றன வறுமை நிலை அதிகரிப்பிற்கான காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளன.
மலைநாட்டைப் பொறுத்தளவில், பாதகமான அதிர்வுகளின் பாதிப்பே இவர்களது வறுமை நிலைக்குக் காரணமாகும் என உலக வங்கியின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மலையகப் பகுதியில் மகப்பேற்று இறப்பு மிகவும் அதிகம் இடம்பெறுகின்றதாகவும் இந்த அறிக்கை சுட்டிநிற்கிறது. ‘ஐந்து வயதிற்குக் குறைந்த 30 விழுக்காடு சிறுவர்கள் நிறைகுறைந்தவர்களாக உள்ளனர். பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைகள் பிறப்பின் போது நிறைகுறைந்தவர்களாகப் பிறக்கின்றனர். பிரசவத்திற்குத் தயாரான நிலையிலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கற்றவர்களாக உள்ளனர்’ என உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சந்தைகளை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அதிகரித்தல், கல்விகற்ற இளையோர் மத்தியில் தொழில் முயற்சிகளை அதிகரிப்பதுடன் இதன் மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரம் சிறக்க வழிவகுத்தல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மலையக மக்களின் சத்துணவை அதிகரிப்பதற்கு பல்தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்கவேண்டும். இளையோர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போது இவ்வாறான வறுமை நிலையை ஒழிக்க முடியும் என உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(https://www.facebook.com/permalink.php?story_fbid=922970511153840&id=775601359224090&substory_index=0)
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் 1914 உள்ளதாக பிரதேச செயலகப் புள்ளி விபரத்தில் (2016) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தாய்தந்தையரை இழந்த 83 சிறார்களும் 2055 முதியோரும் 574 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வசித்து வருவதாக பிரதேச செயலகப்புள்ளி விபரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை 574 மாற்றுத்திறனாளிகளில் 211 பேருக்கு மட்டுமே சிறுதொகை மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது..
2015 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்களிப்பில் மேற்கு மாகாணம் முதலிடத்திலும் (41.75%) வட மாகாணம் கடைசி இடத்திலும் (3.3%) காணப்படுகின்றன. கிழக்கு மாகாணம் ஆறாவது இடத்தில் (5.8% ) இருக்கிறது.
தனிமனித வருமானத்தில் முதலிடத்தில் மேற்கு மாகாணமும் ஆறாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் எட்டாவது இடத்தில் வடக்கு மாகாணமும்
இருக்கின்றன.
கனடா இந்த பிரதேச ஏற்றத் தாழ்வை அல்லது உயர்வு தாழ்வை கணக்கில் எடுக்க மறுக்கிறது. இதனால் போர் அழிவுக்கு உள்ளான வட – கிழக்கு மாகாணங்கள் தண்டிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு உதவி என்று வரும்போது தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கொன்சவேட்டிக் கட்சியின் நிதி ஒதுக்கீட்டைவிட லிபரல் அரசாங்கம் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. லி்பரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெள்ளி துலாவிலே வியாழன் பட்டையிலே நிற்கும் என்று என்னைப் போல் பலர் கனவு கண்டார்கள்.
இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் லிபரல் கட்சிக்கு வாக்களித்திருக்க மாட்டேன். என்ன செய்வது கொக்கு குளத்தில் நிற்கும் போது அதற்கு ஒரு கால்தான் இருக்கி்றது என நினைப்போம். பறக்கும் போதுதான் அதற்கு இரண்டு கால் இருக்கிறது என்பது புரிகிறது!
தமிழ்மக்களைப் பொறுத்தளவில் பாவியார் போற இடம் பள்ளமும் பிட்டியும்தான்!
இலங்கை உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடாம்! அதனால் கனடா நிதியுதவியை நிறுத்திவிட்டது!
Leave a Reply
You must be logged in to post a comment.