தமிழர் வரலாறு: தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு, தனியரசு, சம்புவராய அரசு

தமிழர் வரலாறு: தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு, தனியரசு, சம்புவராய அரசு – வியப்பூட்டும் தகவல்கள் #தமிழர்_பெருமை

  • தமிழ்மகன்
  • எழுத்தாளர்

9 செப்டெம்பர் 2020

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 15வது கட்டுரை.)

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும் முன்னரே அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள்.

பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அவர்களுடைய ஆட்சி பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரை நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

படைவீட்டின் புவியியல் அமைப்பு

சம்புவராயர்கள் ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டு தொண்ட மண்டலத்தை ஆண்டனர். அவர்களின் ஆட்சி எல்லை பரப்பு வடபெண்ணை முதல் காவிரி வரை பரந்து விரிந்திருந்தது. அவர்கள் வீரசம்புவர் குளிகை என்ற நாணயத்தைப் வெளியிட்டு பயன்படுத்தினர். அவர்கள் கொடியில் காளை இடம்பெற்றிருந்தது. படைவீடு, விரிஞ்சிபுரம் என இரண்டு இடங்களில் அவர்களின் தலை நகரங்கள் செயல்பட்டன. படைவீடு நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை அரண்களால் ஆனது. விரிஞ்சிபுரம் கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்திருந்தது.

சம்புவராய அரசு
படக்குறிப்பு,25 படைவீட்டில் கிடக்கும் சம்புவராயர் காலத்து தூண்கள்

படைவீட்டுக்கு செல்ல இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சந்தவாசல். இன்னொன்று வழியூர் வாசல். இரண்டும் அந்த மலை சூழ் பகுதிக்குள் செல்வதற்கான கணவாய் போன்றவை. இவற்றைக் கடந்துதான் படைவீடு கோட்டையை அடைய முடியும். படைவீட்டின் வீரர்களைக் கடந்து கோட்டையை அடைவது அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது என்பதை இப்போதும் உணர முடிகிறது.

படைவீட்டில் இரண்டு கோட்டை அடித்தளங்கள் இப்போதும் காண முடிகிறது. ஒன்று சுமார் ஆயிரம் மீட்டர் நீள அகலம் உடையது. மற்றது அதில் பாதி அளவு. பெரிய கோட்டையில் மன்னரும் சிறிய கோட்டையில் அமைச்சர், தளபதி, அகம்படையார்கள், நிர்வாகிகள் இருந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. படைவீட்டுப் பகுதியில் பல இடங்களில் இப்போது பெரிய பெரிய தூண்களும் சிற்பங்களும் உத்தரங்களும் சாலை ஓரங்களிலும் விவசாய நிலங்களின் நடுவேயும் கிடப்பதைப் பார்க்க முடிகிறது. இது தவிர ராஜகம்பீரன் மலையின் மீதும் ஒரு கோட்டை இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன.

அதை எளிதில் அடைய முடியாது. இப்போதும் அதுதான் நிலை. நெட்டுக்குத்தான மலை. மலையின் உச்சியில் சுரங்கம் வழியாகவே சென்றுதான் கோட்டையை அடைய முடியும்படி அந்தக் கோட்டை அரண் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையின் உச்சியில் பெரிய சுனையும் தானியங்கள் கொட்டி வைப்பதற்கான கலயம் ஒன்றின் சிதலமும் மலையில் இருந்து கண்காணிக்க காவல் கோட்டங்களும் இருக்கின்றன. எட்டு நூறு ஆண்டுகளின் மிச்சமாக அவை இப்போதும் கம்பீரமாக விளங்குகின்றன.

பதினான்காம் நூற்றாண்டு ஒரு பார்வை

சம்புவராயர்கள் ஆட்சிக்கு வந்த நேரம் மாலிக் காபூர் தலைமையில் சுல்தானியர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளைச் சூறையாடிவிட்டு, மதுரைக்கு வந்தனர். மதுரை, ராமநாதபுரம், திருவரங்கம் கோயில்களில் கொள்ளையடித்த நேரம். சம்புவராயரின் படைவீட்டு ஆட்சியினர் சுல்தானியர்கள் நுழைந்துவிடாமல் இருப்பதற்கான பெரும் முன் தயாரிப்பிலும் கடுமையான அரண் அமைப்பதிலும் தீவிரமாக செயல்பட்டனர். அது மட்டுமல்ல… மதுரை பகுதிகளில் கில்ஜி கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக சம்புவராயர் ஆட்சிப் பகுதிக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பளித்தனர். வாலாஜா பேட்டையில் உள்ள கீழ்மின்னல், குடியாத்தம், செங்கல்பட்டு பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்கள் பற்றிய கல்வெட்டுகள் அவற்றுக்குச் சான்று. அப்படி அகதிகளாக வந்த மக்களுக்கு இருப்பிடம், உணவு, பணியாற்றும் வாய்ப்பு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன.

மதுரையைப் பிடித்த சுல்தானியர்கள் அதன்பிறகு தமிழகத்தில் தங்கள் ஆட்சியை ஏன் வளர்த்தெடுக்கவில்லை என்பது வரலாற்றின் புதிராகவே இருக்கிறது. வரலாற்றுக் குறிப்புகளில் சுல்தானியர்களுக்கு அடங்கியவர்களாக சம்புவராயர்கள் ஆட்சியை நடத்தியிருக்கலாம் என்று பொறுப்பில்லாத பதிலையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.

சுல்தானியர்கள் தங்களுக்கு அடங்கிப் போனவர்கள் சாம்ராஜ்ஜியங்களுக்குள் நுழையாமல் இருந்தார்கள் என்பதாக எந்த ஆதாரமும் இல்லை. இவர்கள்மீது படையெடுக்க சுல்தானியர்கள் முனையவில்லை என்பதே உண்மை. சம்புவராயர்கள் மிகச் சிறந்த வில்லாளிகள். சோழர்களின் ஆட்சி நடைபெற்றபோது பெரும் போர்களில் பங்கெடுத்தவர்கள். அம்மையப்ப எதிரிலி சோழ சம்புவராயர், சோழர்கள் நடத்திய போர்களில் பெரும் பங்கு ஆற்றியவர். சிங்களவர்களிடம் ஆட்சியை இழந்து நின்ற பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியருக்கு மீண்டும் ஆட்சியை மீட்டுத் தந்தவர் பல்லவராயர் என்ற சம்புவராய தளபதியே. வரலாற்றில் சோழர்களின் பல கல்வெட்டுகளில் சம்புவராயர்களின் பெருமை பொறிக்கப்பட்டுள்ளன. போர்க்குடிகள் என்று போற்றப்படுகிறவர்கள். அதனால் அவர்களை எதிர்கொள்வது அசாதாரணமானதாக இருந்திருக்க வேண்டும்.

அதனாலேயே தொண்டமண்டலம் வழியாக தமிழகத்தில் நுழைவதையோ, சம்புவராயர்கள் மீது படையெடுப்பதையோ சுல்தானியர்கள் தவிர்த்தனர். 1310-ல் மதுரையைக் கைப்பற்றி சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை சுல்தானியர்கள் சம்புவராயர்கள் மீது போர்த்தொடுத்ததற்கான சான்றுகள் இல்லை.

போர்க்குடிகளாக இருந்தும் ஆட்சி அமைத்த பிறகு அவர்கள் பிற தேசத்தின்மீது போர்த் தொடுக்கேவ இல்லை. நிலையான ஆட்சியை அமைக்கவும் நில சீர்திருத்தங்கள் செய்யவும், நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை நாட்டவுமே அவர்கள் பெரு முயற்சி எடுத்தனர். புலவர்களைப் போற்றியிருக்கிறார்கள். காளமேகம், இரட்டைபுலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர் ஆகியோர் இவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

ஒரே ஒரு எதிரி!

சம்புவராயர்கள் நிகழ்த்திய மகத்தான போர் என்றால் அது விஜயநகர பேரரசன் குமார கம்பண்ணனை எதிர்கொண்ட போர்தான். பலமுறை விஜயநகர மன்னன் முயற்சி செய்து வென்ற போர் அது. பல மாதங்கள் போராடித்தான் குமார கம்பண்ணனால் சம்புவராய மன்னனான ராஜநாராயணரை வெல்ல முடிந்தது.

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு, தனியரசு, சம்புவராய அரசு - ஆச்சர்யமூட்டும் வரலாற்று தகவல்கள்
படக்குறிப்பு,29 படைவீட்டில் சம்புவராயர் காலத்து ஈசன் கோயில்

இந்தப் போருக்கு இருக்கிற ஆதார நூல் மதுரா விஜயம். அதை எழுதியது குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி. காவிய நடையில் கவித்துவமாக எழுதப்பட்ட அந்த நூல், விஜயநகர அரசன் மதுரையை கைப்பற்றியது பற்றி பேசுகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட முக்கிய பகுதியாக அமைந்திருக்கிறது சம்புவராயரை வென்றது பற்றிய குறிப்புகள்.

சம்புவராய அரசர்கள்

சம்பு என்ற பெயர் சிவனைக் குறிக்கும். ராயர் என்பது சோழர் காலத்தில் படைநடத்திச் சென்ற தளபதிகளுக்கு வழங்கப்பட்ட பட்டம். டாக்டர் கோ. தங்கவேலு, இல. தியாகராசன் என்ற இரண்டு வரலாற்று ஆய்வாளர்கள் பல்லாண்டுகள் சம்புவராயர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுநாள் வரை அவர்களின் ஆய்வு நூலே இன்றும் சம்புவராயர்கள் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது. அந்த அரசர்கள் நாட்டிய 196 கல்வெட்டுகளில் 186 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டதாகவும் அவற்றில் 33 கல்வெட்டுகளே இதுவரை அச்சில் வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சம்புவராயர்களின் பல கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

”சோழப் பேரரசு எனும் பெரும் மாளிகையைத் தாங்கும் வைரமணி தூண்களாக விளங்கியவர்கள் சம்புவராயர்கள்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்புவராயர்களின் கல்வெட்டுகள் திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, பழவேற்காடு, காளத்தி, திருவானைக்கா பகுதிகளில் அதிகம் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் ஆட்சி எல்லை வடபெண்ணை முதல் காவிரி வரை பரவியிருந்தது தெரிய வருகிறது.

24 படைவீட்டில் கிடக்கும் சம்புவராயர் காலத்து தூண்கள்
படக்குறிப்பு,24 படைவீட்டில் கிடக்கும் சம்புவராயர் காலத்து தூண்கள்

ராசகம்பீர சம்புவராயர், குலசேகரர், வீரசம்புவர், ஏகாம்பரநாதர், மல்லிநாத ராசநாராயணர், பொன்னன் தம்பிரான் ராசநாராயணர் உள்ளிட்ட அரசர்கள் அந்த ஒரு நூற்றாண்டில் படைவீட்டை ஆண்டனர். கோபால கண்ட சோடரிடமிருந்து காஞ்சியை மீட்டதால் ஏகாம்பரநாதருக்கு வென்று மண்கொண்டார் என்ற பட்டப்பெயரும் சகலலோக சக்ரவர்த்தி என்ற பெயரும் இருந்ததை அறிய முடிகிறது.

சோழப் பேரரசு முடிவுக்கு வந்த 1273-ம் ஆண்டிலேயே சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு காடவராயரும் படைவீட்டை தலைநகராகக் கொண்டு சம்புவராயரும் தனியரசு நிறுவினர். இந்த இருவரின் ஆட்சியும் விரைவிலேயே பாண்டியர் வசமானது. பாண்டியரின் ஆட்சி நெடு நாட்கள் நீடிக்கவில்லை. சுமார் பத்தாண்டுகளில் மீண்டும் சம்புவராயர்கள் கை ஓங்க ஆரம்பித்தது.

1280 களில் ராசகம்பீர சம்புவராயர் தனியரசை நிறுவுகிறார். தனிக்கொடி, தனி இலச்சனை, நாணயம் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் அன்று இருந்த ஒரே பேரரசு சம்புவராயர்களின் பேரரசு.

சுல்தானியர்கள் படையெடுப்பால் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்குலைவுகள் சம்புவராயர்கள் ஆட்சி செய்த பகுதியில் ஏற்படவில்லை. சமய நல்லிணக்கம் போற்றுதல், நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், கலை இலக்கியங்களைப் பாதுகாத்தல், வணிகம், பொருளாதாரம், வேளாண்மை சிறந்துவிளங்கியது. நாட்டில் வறுமையில்லை, போர்க் கொடுமைகள் இல்லை. போர் இல்லாத சூழலும் சுற்றியுள்ள நாடுகளில் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதும் இவர்களின் ஆட்சியின் உன்னத நிலைக்குச் சான்று.

விஜயநகரப் படையெடுப்பு

1350 களில் விஜயநகரப் பேர்ரசின் முதல் படையெடுப்பு இவர்கள் மீது தொடுக்கப்பட்டது. விஜயநகரத்தை நிறுவியவர்களான ஹரிகரர் – புக்கர் தலைமையிலான போர் அது. தொடக்கத்திலேயே ஏனோ அவர்கள் பின் வாங்கிவிட்டனர். மீண்டும் 1363-ல் புக்கரின் புதல்வர் குமார கம்பண்ணர் தலைமையில் போர் தொடுக்கப்பட்டது. விட்டு விட்டு நடந்த இந்த போர் ஓராண்டுக்கும் மேலாக நடந்ததாகத் தெரிகிறது.

சம்புவராயர்களுக்கும் விஜயநகரத்தை ஆட்சி செய்தவர்களுக்கும் பொது எதிரியாக சுல்தானியர்கள் இருந்தபோதும் இருவரும் இணைந்து சுல்தானியர்கள் மீது போர்த் தொடுத்திருக்கலாமே என்ற கேள்விக்கும் வரலாற்றில் பதில் இல்லாமல் உள்ளது.

அதற்கான பதில் கல்வெட்டுகளில் இல்லையென்றாலும் கலாசாரத்திலே கண்டெடுக்க முடிகிறது. விஜயநகரப் பேரரசு சிருங்கேரி சங்கராச்சாரியார் வித்யாரண்யர் ஆசியுடன் உருவாக்கப்பட்டது. அவர்களின் போற்றிய நெறி வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட்து. அவர்கள் ஆட்சியில் வர்ணாசிரமம் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். சம்புவராயர்கள் சிவமதத்தைத் தழுவியவர்கள். அதே சமயம் திருமால், சமணம், பௌத்தம் போன்ற சமயநெறிகளைத் தழுவியவர்களை அரவணைத்துச் சென்றவர்கள். இடங்கை, வலங்கை என் மக்கள் தொழில்சார்ந்து பிரிந்திருந்த போதிலும் அவர்களிடம் சாதி அடுக்குகளில் ஏற்றத் தாழ்வு போற்றவில்லை. இதுவே அவர்களை விஜயநகர அரசர்களிடம் இருந்து வேறுபடுத்தியது. சுல்தானியர்களின் சமயநெறியைப் போலவே விஜயநகர பேரரசர்களின் சமயநெறியையும் அவர்கள் வேறாகவே கருதினர். அவர்களோடு இணைந்து சுல்தானியர்களை எதிர்க்க விரும்பாததுடன் அவர்களையே எதிர்க்கவும் தலைப்பட்டனர்.

விஜயநகர அரசின் படையெடுப்பை நாடுபிடிக்கும் அரசப் படையெடுப்பாக மட்டுமின்றி பண்பாட்டுப் படையெடுப்பாகவும் நினைத்தனர். மொழி கலப்பு, பண்பாட்டுத் திணிப்பு போன்றவை விஜயநகர அரசு தமிழகத்தில் காலூன்றிய பின்னரே நிகழ்ந்தது. தமிழ் மொழி தெலுங்கும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடைக்குத் தள்ளப்பட்டது. எல்லா சாதிகளுக்கும் புராணங்கள் உருவாக்கப்பட்டன. தாசிகள் அதிகரித்தனர். தமிழ் வேளாண் நிலங்கள் தெலுங்கு பேசுபவர்களின் கைக்கு மாறின. பாளைய பட்டுகள் பலவும் தெலுங்கு சிற்றரசர்கள் வசமாகின. குடவாசல் கும்பகோணம் ஆனது. பெருவுடையார் கோயில் பிரகதீஷ்வரர் கோயில் ஆனது. வழித்துணை நாதர் கோயில் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் ஆனது. பொன்முகி ஆறு சொர்ணமுகி ஆறு ஆனது. அனைத்திலும் சமஸ்கிருதமயம் அதிகரித்த்து.

இவற்றை உத்தேசித்தே லட்சம் வீர்ர்களைக் கொண்ட பெரும்படை எனத் தெரிந்தும் சம்புவராயர்கள் தங்கள் இறுதி மூச்சுவரை விஜயநகரப் பேரரசர்களை எதிர்த்தது தெரிகிறது.

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசான சம்புவராயர் ஆட்சியின் வீழ்ச்சியில் வர்ணாசிரம பேதத்தை விரும்பிய சனாதனிகளின் நோக்கமும் தாக்கமும் அடங்கியிருந்தது என்பதே என் கணிப்பு. துரோகத்தாலும் சதியாலும் அந்தத் தமிழ்ப் பேரரசு வீழ்த்தப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்.

(எழுத்தாளர் தமிழ்மகன் தமிழ் சம்புவராயர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து `படைவீடு’ என்ற புதினத்தை எழுதி உள்ளார். தமிழ்மகன் வெட்டுபுலி, மானுடப் பண்ணை, சொல்லித் தந்த பூமி, ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம், வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள், நான் ரம்யாவாக போகிறேன்படைவீடு உள்ளிட்ட நாவல்களை எழுதி உள்ளார்.)

தமிழர் வரலாறு: தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழரசு, தனியரசு, சம்புவராய அரசு – வியப்பூட்டும் தகவல்கள் #தமிழர்_பெருமை – BBC News தமிழ்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply