இந்தியா தனது பூகோள நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்தப் பேயோடும்  சேர  அணியமாக இருக்கிறது! நக்கீரன்

எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மற்றும் மேற்கு  அய்ரோப்பாவின் எதிரிகளாக  இருந்த ஜெர்மனியும் யப்பானும் இப்போது  அந்த நாடுகளின் கூட்டாளி  நாடுகள் ஆக மாறிவிட்டன.  அப்போது அமெரிகாவின்  நட்பு நாடாக இருந்த உருசியா இன்று எதிரி நாடாக மாறிவிட்டது.

JVP visit to In dia-க்கான படிம முடிவு
 

இந்த நடைமுறைவாதம் அரசியல், வகுப்புவாத, திருமண மற்றும் தனிப்பட்ட உறவுகளில் பரவியுள்ளது. நம் நாட்டில், ஒவ்வொரு சனாதிபதித் தேர்தலுக்குப் பிறகும் அரசியல்வாதிகள் அரசியல் விசுவாசத்தை மாற்றி, முன்னாள் எதிரிகளை வசதியாக அரவணைத்து, முன்னாள் நண்பர்களை பலவீனப்படுத்துகிறார்கள்.

 இந்தப் பின்னணியில் இந்தியா கடந்த வாரம் மேற்கொண்ட இராசதந்திர நகர்வுகள் அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. உலகில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்ற கோட்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கிறது.

கண்களையும் காதுகளையும் தரையில் நெருக்கமாக வைத்து எந்த நாட்டையும் விட இலங்கையின் சமூக – அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிகம்  புரிந்து கொண்ட ஒரு நாடு இருந்தால், அது அண்டை நாடான இந்தியாதான்.

இலங்கையில் வெளிவருகிற  கருத்துக் கணிப்புகள் மக்கள் செல்வாக்கில் மவிக இன் தலைவர் அனுரகுமார திஸ்சநாயக்க முன்னணியில் இருக்கிறார்.  சனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களில் அவருக்கு 50 %  ஆதரவு காணப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு 32 %  ஆதரவு மட்டுமே காணப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகள்  ஏனைய கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி,   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றம்  ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைவிட முன்னணியில் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் தற்போதைய சனாதிபதியுமான இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு 9 % வாக்காளர்களது ஆதரவு மட்டுமே காணப்படுகிறது.

டிசெம்பரில் 2023 இல் IHP  என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பு பின்வருமாறு  அமைந்திருந்தது.

சனாதிபதி தேர்தல் செப்தெம்பர் 17 – ஒக்தோபர் 17 இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் நடைபெற வேண்டும். அதற்கான நிதி தேர்தல் திணைக்களத்துக்கு இந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போலவே  2025 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேண்டிய நிதி அடுத்த ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் என சனாதிபதி இரணில் விக்கிரமசிங்காவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. இந்த இடைக்காலத்தில் வாக்காளர்களது மனம் மாறக் கூடும். நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து கணிசமான அளவு மீண்டால் மக்களது மனம் மாறக் கூடும். எது எப்படி இருப்பினும் இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்திய வெளித்துறை அமைச்சு நேரகாலத்தோடு  விழித்துக் கொண்டு விட்டது. 

 குறிப்பாகச் சொன்னால்  இந்திய உளவுத் துறையான றோ விழித்துக் கொண்டுவிட்டது.

ஜேவிபி இந்திய விசயம் -க்கான படிம முடிவு

மக்கள் விடுதலைக் கழகம் இடதுசாரி போக்குடைய கட்சி.  தன்னை மார்க்சிஸ்ட் – லெனிஸ்ட் கட்சி என சொல்லிக் கொள்கிறது.  அதன் நிறுவனர் ரோகண விஜயவீரா உருசியநாட்டில் மருத்துவம் படித்தவர்.  1962 -63  காலப் பகுதியில் உருசியாவுக்கும் – சீனாவுக்கும்  இடையில் கருத்தியல் மோதல் காலத்தில் விஜயவீர சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இதனால் உருசியா அவரை நாடு கடத்தியது. நாடு திரும்பிய அவர் சண்முகதாசனின் சீன சார்ப்புக்  கட்சியில் சேர்ந்தார். ஆனால் மிகவிரைவில் அந்தக் கட்சியில் இருந்து  வெளியேறி 1965  மக்கள் விடுதலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.  இலங்கையை ஒரு சோசலீச குடியரசாக மாற்றி அமைத்தல் விஜயவீராவின்  அரசியல் இலட்சியமாக இருந்தது.

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த அவர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தீவிரமாக  எதிர்த்தார்.  அவர்  இலங்கையின் ஆட்சியை ஆயுதமுனையில்  பிடிக்க இரண்டு முறை முயற்சித்தார்.   1971  இல் அவரது இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியில் முடிந்தது.  மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக 1987-1989 காலப் பகுதியில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டமும் முறியடிக்கப்பட்டது.  இந்த இரண்டு ஆயுதப் புரட்சியின் போது 65,000 மேலான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.  உலப்பன என்ற தேயிலைத் தோட்டத்தில்  ஒளிந்திருந்த  விஜயவீராவை  இராணுவம் ஒக்தோபர் 3, 1989 இல் கைது செய்தது. பின்னர் 13 நொவெம்பர், 1989 இல் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

விஜயவீரா  இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு மக்கள் விடுதலை கழகத்தை உருவாக்கிய பின்னர், அவர் மார்க்சிய-லெனினிய கோட்பாட்டினை  இளைஞர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்திற்காக  தொடர்ச்சியான அரசியல் சொற்பொழிவுகளை நடத்தினார். மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக  ஐந்து வகுப்புகள் என்று பிரபலமாக அறியப்பட்ட விரிவுரைகளை நிகழ்த்தினார்.  இது இறுதியில் அவர்களின் அரசியல் சித்தாந்தத்தின் முக்கிய அறிக்கையாக மாறியது.

(1) இலங்கையில் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி
(2) இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாறு
(3) சோஷலிசப் புரட்சிகளின் வரலாறு
(4) இந்திய விரிவாக்க வாதம்
(5) இலங்கையில் புரட்சிக்கான பாதை

நேற்றுவரை மக்கள் விடுதலைக கழகத்தின் கோட்பாடுகளில் ஒன்றான இந்திய விரிவாக்க வாதம் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேதான் இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ்  கொண்டுவரப்பட்ட  13 ஏ சட்ட திருத்தச் சட்டத்தை அது மூர்க்கத்தனமாக எதிர்த்தது.  அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்தர் ஹந்துன்நெத்தி அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்.

முன்னதாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க 2023 இல் தெரிவித்த போது அது பற்றிக் கருத்துத் தெரிவித்த   அனுரகுமார திசாநாயக்க, 13ஆவது திருத்தத்தைத் தமது கட்சி ஆதரிக்கும்  என்றார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நோர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

“மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கமான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை எதிர்க்கப் போவதில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால்  ஹந்துன் நெத்தி 13 ஏ திருத்தத்தை  மக்கள் விடுதலைக் கழகம்  முற்றாக எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்திய – இலங்கை உடன்பாட்டை எதிர்த்தே மக்கள் விடுதலைக் கழகம் 4987 -89 ஆயுதப் புரட்சியை முன்எடுத்தது. 2004 இல் நடந்த சுனாமிப் பேரிடருக்கு கிடைத்த உதவி நிதியில்  ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு கொடுப்பதை அந்தக் கட்சி கடுமையாக எதிர்த்தது. 

இந்தியா மீது காட்டப்பட்ட கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டு காரணமாக மக்கள் விடுதலைக் கழகம் தமிழர்களின்  விடுதலைப் போராட்டத்தை தொடக்க முதல்  இறுதிவரை எதிர்த்தே வந்தது. சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் அது முக்கிய பங்கு வகித்து வந்தது.

இந்திய-இலங்கை உடன்பாட்டின் கீழ் 1987  முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக்கள் விடுதலைக் கழகம் வழக்குத் தொடர்ந்தது.  அது  தொடர்பாக 10 ஒக்தோபர், 2006 இல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அந்த இணைப்பு “செல்லாது மற்றும் சட்டவிரோதமானது” என்று அறிவித்தது.

இனச் சிக்கல் ஒன்று இருப்பதை மக்கள் விடுதலைக் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. தாங்கள் ஆட்சிக்க வந்தால் எல்லோரும் சமத்துவமாக நடத்தப்படுவர் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. அதிகாரப் பரவலாக்குதலுக்கு மாகாணத்தை அலகாகக் கொள்வதை அந்தக் கட்சி எதிர்க்கிறது. கூடிய பட்சம் மாட்வட்ட மட்டத்தில் அதிகாரம் பகிரப்படுவதையே மக்கள் விடுதலைக் கழகம் ஆதரிக்கிறது.

இந்தியா தனது பூகோள நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்தப் பேயோடும்  சேர  அணியமாக இருக்கிறது. இலங்கையில் பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளையான அதானி போன்ற கோடீசுவரர்களது இலங்கை முதலீடுகளைப் பாதுகாக்க இந்தியா முயற்சி செய்கிறது. அதைத்தான் மக்கள் விடுதைலைக் கழகத் தலைவர்களை அழைத்து ஒரு நாட்டின் பிரதிநிகளுக்கு நிகரான வரவேற்பை இந்தியப் பிரதமர் மோடி,  வெளிநாட்டு அமைச்சர் ஜெயசங்கர் கொடுத்துள்ளார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது.

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply