ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

ஜம்பை கல்வெட்டும் சாமானிய மக்களின் வாழ்வியலும்
ஜம்பை கோவிலில் மன்னர்கள் குறித்த கல்வெட்டுகள் அல்லாமல், சாமானிய மக்கள் குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

எழுதியவர்,மாயகிருஷ்ணன் க

பதவி,பிபிசி தமிழுக்காக

16 ஆகஸ்ட் 2023

தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் அமைந்திருந்தது. தமிழர்கள் வாழ்வில் கோவில்கள் முக்கியமான அம்சமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துக் கொள்ளும் ஆதாரமாக கோவில்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன.

அந்த கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பை கோவிலில் சாமானிய மக்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அக்கால மக்களின் வாழ்வியலை, குறிப்பாக அப்போது நிலவிய தண்டனை முறைகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

வாளையூர் நகரம் ஜம்பையாக மாறியது

ஜம்பை கோயில் பற்றி தெரிந்துக் கொள்ள, மணலூர்பேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நம்முடன் திருவண்ணாமலை வட்டாட்சியரும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளருமான பாலமுருகன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் வந்தனர்.

ஒன்பது மணி அளவில் பசுமை நிறைந்த ஜம்பை கிராமத்தில் உள்ள வீதிகள் வழியே சென்று ஜம்புக நாதேஸ்வரர் கோவிலை அடைந்தோம். புனரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ள ஜம்புகநாதேஸ்வரர் கோவிலில் திரும்பும் இடமெல்லாம் கல்வெட்டுகள், வித்தியாசமான கலைச் சிற்பங்கள், கலை நுணுக்கத்துடன் மெருகேற்றப்பட்ட சிங்கமுக தூண்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்தின.

“நாம் நிற்கும் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகப்பெரிய நகரமாக இருந்தது. தற்பொழுது இது ஜம்பை என்று அழைக்கப்பட்டு வந்தாலும் இதனுடைய மிகத் தொன்மையான பெயர் வாலையூர் நகரமாகும்” என்று திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவச் செயலாளர் பாலமுருகன் விளக்க ஆரம்பித்தார்.

அந்தப் பகுதியில் 132 கல்வெட்டுகள் உள்ளன. 60 சோழர்கள் கல்வெட்டுகள் , 12 கன்னரதேவன் கல்வெட்டுகள் , ஐந்து கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் , ஆறு பாண்டியர்கள் கல்வெட்டுக்கள் , 13 நாயக்கர் கால கல்வெட்டுகள் மற்றும் பெயர்கள் குறிப்பிடாத இதர கல்வெட்டுகள் 35 என 132 கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

  • இதில் மிகப் பழமையான கல்வெட்டு பராந்தகன் காலத்திய கல்வெட்டு என பாலமுருகன் தெரிவித்தார். “அந்த கல்வெட்டு கோபுரத்தின் வலது புறச் சுவரில் உள்ளது. அதில் விளக்கு தானம் குறித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது .அதேபோல் தேவதானமாக வழங்கப்பட்ட ஊர் தொடர்பான கல்வெட்டுகளும் உள்ளன” என அவர் கூறினார்.

இதே போல் முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய பல்வேறு கல்வெட்டுகளை இங்கு காண முடிகிறது.

ஜம்பை கல்வெட்டும் சாமானிய மக்களின் வாழ்வியலும்
அக்காலத்தில் நிலவிய தண்டனை முறை குறித்து ஜம்பை கோவில் கல்வெட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ள முட்கிறது.

திருமணம் செய்யாமலேயே பெண்ணுடன் வாழ்க்கை; அதனால் செய்த கொலை

ஜம்பை கல்வெட்டும் சாமானிய மக்களின் வாழ்வியலும்
படக்குறிப்பு,இந்த கோவிலில் உள்ள சிங்க முக தூண் பல்லவர் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

பல்லவர் கால சிங்கமுக தூண் பகுதியை தாண்டி நம்மை கருவறை மேற்குச் சுவர் பகுதிக்கு பாலமுருகன் அழைத்துச் சென்றார். அங்கு கீழ் அதிட்டான பகுதியில் உள்ள முதலாம் இராசராசன் காலத்திய கல்வெட்டை படித்து காண்பித்தார். “கிபி 985முதல் 1014 வரையிலான முதலாம் இராசராசன் காலத்திய ஐந்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன” என்று பாலமுருகன் தெ்ரிவித்தார்.

ஜம்பை கிராமத்தில் உள்ள வியாபாரி திருநாவலூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யாமலேயே வாழ்க்கைத் துணையாக கொண்டிருந்தான். ஒரு நாள் இரவில் அந்த பெண்ணிடம் அங்காடி பொற்றாமன் என்பவர் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அப்போது அந்த வியாபாரி கோபப்பட்டு வெகுண்டு எழுந்து அவனை குத்தி கொன்று விடுகிறான். வியாபாரி மீது எந்த தவறும் இல்லாத நிலையில் இது தொடர்பான வழக்கு நடைபெறவில்லை என்ற போதிலும் வியாபாரியானவர் தானாகவே கோவிலுக்கு சென்று வருந்தி அங்கு விளக்கு எரிக்க 20 மஞ்சாடி பொன் தானமாக வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது.

தவறு செய்தவர்கள் தானம் வழங்குவது ஒரு தண்டனை முறையாக இருந்ததை இதன் மூலம் நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதே போன்று வேறு சில சம்பவங்களும் கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன.

ஜம்பை கல்வெட்டும் சாமானிய மக்களின் வாழ்வியலும்
படக்குறிப்பு,கிபி 985முதல் 1014 வரையிலான முதலாம் இராசராசன் காலத்திய ஐந்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

வரி கட்டவில்லை என்றால் அரசரிடம் புகார் செய்வேன்; துன்பம் தாங்காமல் நஞ்சுண்டு இறந்த பெண்

அதேபோல் இரண்டாம் ராஜேந்திரன் காலத்திய வரி வசூல் கல்வெட்டும் இங்குள்ளது. அதில் இரண்டாம் ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் கிராம வரி வசூலிக்கும் அலுவலர் பழங்கூரன் குன்றன் என்பவன் இந்த ஊரைச் சேர்ந்த சேந்தன் உமையாள் என்பவரிடம் வரியை கட்டும்படி கண்டித்து கேட்டுள்ளான். அவரோ தன்னால் இப்பொழுது இயலாது என்று கூறியுள்ளார். கிராம அலுவலர் அரசனிடம் புகார் செய்வதாக கூறுகிறார்.

துன்பம் தாங்க முடியாமல் உமையாள் என்ற அந்தப் பெண் நஞ்சுண்டு இறந்து விடுகிறாள். இதனை அறிந்த ஊர் சபையோர் ஒன்று கூடி இந்த பெண் இறந்ததற்கு கிராம அலுவலனே பொறுப்பு என்று கூறுகின்றனர். அதற்காக அந்த கிராம அலுவலர் பாவம் தீர்க்க கோவிலுக்கு விளக்கு எரிக்க 32 காசுகள் கொடுத்ததையும் இந்த கல்வெட்டுச் செய்தி தெளிவாக கூறுகின்றது.

வரியாக செலுத்த வேண்டிய நெல்

ஜம்பை கல்வெட்டும் சாமானிய மக்களின் வாழ்வியலும்
படக்குறிப்பு,விளைவித்த பயிர்களுக்காக இப்பகுதி மக்கள் வரியாக நெல் வழங்கினார் என விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் கோவிலில் உள்ள பிற சுவராசியமான கல்வெட்டு தொடர்பாக பிபிசி தமிழிடம் விளக்கமளித்தார்.

“ கோபுரத்தின் வடக்கு பகுதியில் உள்ள கல்வெட்டில், இப்பகுதி நிலங்களில் பயிர் செய்த ஆமணக்கு, வெற்றிலை, பயிறு, கரும்பு, மஞ்சள், இஞ்சி கேழ்வரகு, திணை, கருணை, சிறுகிழங்கு ஆகிய பயிரினங்கள் பயிரிடப்பட்டிருந்ததையும் அதற்காக செலுத்த வேண்டிய வரிகள் நெல்லாக குறிக்கப்பட்டுள்ளதையும்” அவர் படித்து காட்டினார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இங்குள்ளது. ராஜ ராஜ வளநாட்டு பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கும் கொன்றைநாட்டு முடியனுரை சேர்ந்தவன் பள்ளிச்சேரி அடிய நம்பியான் கோவலரைய பேரையன் ஆவான். பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டு வாழைவெட்டியிலிருக்கும் வேளாளர் பொன் பற்றினஉடையான் குன்றன் சீருடையான் ஆவார்கள்.

“இந்த சீருடையான் மேல் கோவலரையன் விலங்கு வேட்டைக்கு சென்று கொண்டிருந்தபோது தவறுதலாக அம்பு எய்தி சாகடித்து விட்டார். எனவே வழக்கை ஆய்வு செய்து கோவலரையன் பேரரையன் மேல் தவறு நடந்ததை உறுதியாக்கி உள்ளனர். எதிர்பாராமல் நடைபெற்ற இந்த சம்பவம் தவறு என்பதினாலும் அந்த பழியை போக்குவதற்காக கோவலரையன் 64 சாவாமூவா போராடுகளை ஆலயத்திற்கு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது” என்று ரமேஷ் தெரிவித்தார்.

இதேபோல் விக்கிரமச் சோழனின் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியும் குறிப்பிட தகுந்ததாகும். மன்றாடி சோழன் பெரியான் என்பவன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வாக்குவாதம் முற்றி பிடித்து தள்ள நேரிட்டது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அவள் இறந்து விட்டாள். அதையும் ஊர் சபை கூடி தவறு என்று சுட்டிக் காட்டியது. இதையடுத்து அவனும் கோவிலுக்கு தானம் கொடுத்த செய்தியையும் இங்கு நாம் காண முடியும்.

அளவுகளும், வரிகளும்

மிகப் பெரிய நகரமாக இருந்த ஜம்பையில் அளவுகள், வரிகள் குறித்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இதன் மூலம் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்த நீட்டல், நிறுத்தல், முகத்தல் அளவுகளை பற்றியும் தெளிவாக நாம் அறிய முடியும்.

அதேபோல் மா, கோல், வேலி,பூமி, குழி, கழனி, முதலிய நீட்டல் அளவுகளும் பலம், செம்பலம், கழஞ்சு முதலிய நிறுத்தல் அளவுகளும் உழக்கு, நாழி, மரக்கால், கலம், குருணி,பதக்கு, தூணி முதலிய முகத்தல் அளவுகளும் அப்பொழுது பயன்படுத்தப்பட்டது உறுதியாகின்றது.

அதேபோல் வரிகளைப் பற்றிய செய்திகளும் இந்த கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இப்பகுதியில் புரவு வரி, உள்வரி, இறை,பெரும்பாடி காவல், சிறுபாடி காவல் ,காசாயம், பொன்வரி, ஆளமஞ்சி, அன்தராயம் போன்ற வரிகள் பற்றிய குறிப்புகளும் இங்கு காணப்படுகிறது.

ஜம்பை என்பது தாள வகைகளில் ஒன்றாகும். கல்வெட்டுகளில் பல்வேறு பெயரில் வழங்கப்பட்டு தற்போது ஜம்பை என வழங்கும் இந்தப் பெயர் சண்பை என்பதன் திரிபு அல்லது இவ் ஊரில் பல்வகையான புற்கள் அதிகம் வளர்ந்ததால் இப்பெயர் பெற்று இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்‌.

மிகப்பெரிய நகரமாக அக்காலத்தில் இருந்த ஜம்பையில் 20 ஏக்கர் பரப்பளவில் கோட்டை கரை எனும் மேட்டு கொள்ளை அமைந்துள்ளது. தற்பொழுது சிதைந்து வயல்களாக காணப்பட்டாலும் இப்பகுதியில் கூடுதலாக தொல்லியல் துறை வல்லுநர் மூலம் ஆய்வு செய்தால் கூடுதல் தகவல்களும் தடயங்களும் கிடைக்கும் என்று உறுதியாக கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/crg75jzzzgno

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply