“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”
-ஆசான் அகத்தியர்-
ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் காத்தலே சிறந்த வாழ்வயில். அதுவே, சிறந்த ஆன்மீகமும் சிறப்பறிவுமாகும்.
கோவில் என்பது அறங்காக்கும் புனிதத்தலமேயன்றி, கடவுளின் பெயரில் அலங்காரக்கூத்துச் செய்யுமிடமல்ல. கோவில் இல்லாவிடத்தில் குடியிருக்க வேண்டாமென்பர். அப்படியானால், கோவில் இல்லாதவிடத்தில் இறையில்லையா? அருட்பெருஞ்சோதி வடிவான இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தூணிலும் துரும்பிலும் கடவுள் இருந்தால், கடவுளை வழிபடக் கோவில் எதற்கு? நமது கண்ணுக்குப் புலப்படாத அணுவிக்குள்ளே, அதை ஆயிரம் கூறுகளாக்கினால், ஆயிரம் சூரியர்களை விடப் பிரகாசமான சோதி வடிவிலேயே பரஞ்சோதியாக இறை இருக்கின்றது என்பர் சித்தர்.
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
-ஆசான் திருமூலர்-
அப்படி அணுவுள் அணுத்துகளாக ‘பரமாணு’ வடிவிலுள்ள கடவுளை வழிபடக் கோவில் தேவையா? நிச்சயமாக இல்லை. எங்கும் நீக்கமறவுள்ள இறையை எங்கிருந்தும் வழிபடலாம்.
அப்படியானால் இத்தனை கோவில்கள் எதற்கு?
அறங்காக்கக் கட்டப்பட்டவையே கோவில்கள். கோவில் அறம் காக்கும் இடமாக இருத்தல் வேண்டும். அதனாலேயே கோவில்களில் அறங்காவலர் என்று ஒரு குழுமம் உண்டு. இவர்களின் முதன்மையான பணி முதலில் பசித்தவர்க்குப் பசியாற்றுவது. பின் பிணியுடன் வருபவர்க்கு பிணி நீக்குவது. அந்தக் காலத்தில் அறங்காவலர்கள் தயையுள்ளவர்களாகவும், சிறந்த மருத்துவர்களாகவும் இருந்தனர். இன்று இந்த ‘அறங்காவலர்’ எனும் கூட்டம் பணம் பறிக்கும் கூட்டமாகவுள்ளது என்பது வருந்தத்தக்கது. மருத்துவமென்ன மருந்துக்குக்கூட இவர்களிடம் கருணையில்லை. இன்று கோவில்கள் அறங்காப்பதை விடுத்து பணமுதலைகளின் கூடாரமாகவும், சாதிமத வெறியரின் இருப்பிடமாகவும் மாறி இறைத்தன்மையை இழந்துள்ளன. இதனையே சித்தபெருமக்கள் வேதனையுடன் எடுத்தியம்பியுள்ளனர்.
“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே;
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே;
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.”
–ஆசான் சிவவாக்கியர்-
மேலும் கோவில்கள் பல ஆன்மாக்கள் சேர்ந்து ஒருமுகமாக வழிபடும்போது ஆலயமாகின்றன. பல ஆன்மாக்கள் சேர்ந்து ஒருமுகமாக வழிபடும்போது அங்கே ஆன்மபலம் அதிகரிக்கும். கடவுள் (பரமாத்மா) என்பதே பல மாசற்ற ஆன்மாக்களின் குவியம். அதாவது பல சோதி வடிவான ஆன்மாக்களின் குவியம். அதுவே அருட்பெருஞ்சோதியாகும். மும்மலங்களால் கட்டுண்ட எமது ஆன்மாவை, பற்றற்ற அருட்பெருஞ்சோதியில் இரண்டறக் கலக்க அமைதியாக வழிபாடு மற்றும் தவம் செய்யுமிடமாக ஆலயங்கள் இருந்தன. இறுதியாக சோதிவடிவான எமது ஆன்மாவும், மும்மலங்கள் நீங்கிய பரமாத்மாவான அருட்பெருஞ்சோதியில் இரண்டறக் கலந்து, பிறவிப்பிணி நீக்கி இறைநிலை அடையும் இடமாகவும் முன்னொரு காலத்தில் ஆலயங்கள் இருந்தன.
சித்தர்பாடல்கள் மூலம் சில எடுத்துக்காட்டுகள்:
“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்;
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”
-ஆசான் அகத்தியர்-
“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.”
-ஆசான் சிவவாக்கியர்-
“சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு”
–ஆசான் கொங்கணச்சித்தர்-
“பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே!”
– ஆசான் பாம்பாட்டிச்சித்தர்-
”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”
–ஆசான் வள்ளலார்-
“தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.”
–ஆசான் சிவவாக்கியார்-
“கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.”
-ஆசான் வள்ளலார்-
“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”
–ஆசான் சிவவாக்கியர்-
நன்றி.
Leave a Reply
You must be logged in to post a comment.