முன்னாள் முதல்வர் அண்ணாதுரை “பேரறிஞர்” என்று சுட்டப்படுவதன் காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை “பேரறிஞர்” என்று சுட்டப்படுவதன் காரணம் என்ன?

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் · 

நிறைவான வாழ்வை வாழ்ந்தும், வாழ்ந்துகொண்டும் இருப்பவன்!

பேரறிஞர் அண்ணாவின் காலத்துக்கு முன்னும், பின்னும் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தலைசிறந்த அறிஞர்கள் பலருண்டு.

அண்ணாவை மட்டும் நாம் ஏன் பேரறிஞர் என்று அழைக்கிறோம் என்ற இந்தக் கேள்வி, எனக்குள்ளும் பல்லாண்டுகளாகச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது.

காரணம் தெளிவாகத் தெரியாத போதும், “பேரறிஞர் அண்ணா” என்றே அவரை அழைக்கச் சொல்லியது என் உள்ளுணர்வு.

எனது நண்பர்கள் பலரும், அண்ணாவின் தமிழ்-ஆங்கில-பொருளாதார அறிவாண்மை, சான்றாண்மை, ஆங்கில அறிவு, மனித நேயம் என்று பட்டியலிடுவார்கள்.

அவை அனைத்தையும் கடந்து, நம் அனைவரிடமும் இல்லாது, அண்ணாவிடம் குடிகொண்டிருந்த ஓர் மாபெரும் தகுதியே அவரைப் பேரறிஞர் என்று அழைக்கச் சொல்கிறது.

அந்தத் தகுதி என்ன என்று அண்மையில் கண்டுகொண்டேன்; என் Quora தமிழ்ச் சொந்தங்களுடன் பகிர்கிறேன்.

‘அறிதலினால் கிட்டுவது அறிவு’ என்று கொண்டால், இவ்வுலகில், பல்வேறு துறைகள் சார்ந்து, அறிவு பெற்ற அறிவாளிகள் பலருண்டு.

ஆனால், இவை எவற்றையுமே மனிதனின் ‘அறிவு’ என்று திருக்குறள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதை ‘அறிவு’ என்று வரையறுக்கிறது என்று பாருங்கள்:

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.
(அதிகாரம்: இன்னாசெய்யாமை; குறள் எண்:315)

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?

இந்தக் குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா.

உரோம் மாநகர்க்குச் சென்ற பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

“மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்”, என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி, சரியாக ஐந்தே நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார் அண்ணா.

போப்பாண்டவரைக் கவர்ந்த அண்ணாவின் பேச்சு – என்ன வேண்டும் என்று கேட்ட போப்பாண்டவர்

அண்ணாவின் பேச்சில் மிகவும் கவரப்பட்ட போப்பாண்டவர் சொன்னார், “அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!” என்று. தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர், அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து, “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? கேளுங்கள்” என்றார்.

போப்பாண்டவரிடம் கோவா விடுதலைப் போராளியின் விடுதலையை யாசித்த அண்ணா!

“என்ன கேட்டாலும் தருவீர்களா?”, என்று கேட்டார் அண்ணா. “கேளுங்கள் தருகிறேன்”, என்றார் போப்பாண்டவர்.

“போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, கோவாவின் விடுதலைக்குப் போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலகக் கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்”, என்று போர்ச்சுக்கல் சிறையில் வாடிக்கொண்டிருந்த மோகன் ரானடேயின் விடுதலைக்காக யாசித்தார் அண்ணா.

“சரி”, என்று தயங்காமல் சொன்னார் போப்பாண்டவர்.

அண்ணாவின் கரங்களை முத்தமிட்ட போப்பாண்டவர்

ஒரு மானுடப் பற்றாளரின் இந்த விடுதலை குறித்தான யாசகத்தைக் கண்டு கருணையும், காருண்யமும் கொண்ட அண்ணாவின் கரங்களை முத்தமிட்டு உருகிப் போனார் போப் ஆண்டவர்.

“நம்பிக்கையோடு செல்லுங்கள்; நீங்கள் மகிழ்ச்சியோடு இந்தியா விரும்பிய மோகன் ரானடேயின் விடுதலை விரைவில் கிடைக்கும்” என்று பேரறிஞர் அண்ணாவை வாழ்த்தி வழியனுப்பினார் போப்பாண்டவர் பெருமகனார்.

மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினார் அண்ணா.

யார் அந்த மோகன் ரானடே?

திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரான RSS வலதுசாரி மோகன் ரானடேயின் விடுதலைக்கு ம் துணை நின்ற கருணைப் பேராண்மை அன்புள்ளம் கொண்ட அண்ணா.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து இருந்தாலும் கோவா பகுதியானது போர்ச்சுகல் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கோவா பகுதியை சுதந்திரமடையச் செய்ய போராடியவர்களுக்குள் ஒருவர் மோகன் ரானடே.

1929-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்லி என்ற இடத்தில் பிறந்த மோகன் ரானடே வலது சாரி சித்தாந்தம் கொண்ட விநாயக் தாமோதர் சாவர்க்கர் கொள்கையின் மூலம் ஈர்க்கப்பட்டவர். போர்ச்சுகீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து கோவாவை மீட்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட துவங்கினார் மோகன் ரானடே.

1950-ல் அசாத் கோமண்டக் தள் என்ற அமைப்பை உருவாக்கிய மோகன் ரானடே போர்ச்சுகீசிய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை துவங்கினார். 1955-ம் ஆண்டில் Beti என்ற இடத்தில் இருந்த காவல் நிலையத்தை ஆயுதம் ஏந்தி தாக்கிய பொழுது காயமடைந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மோகன் ரானடேவிற்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு போர்ச்சுகலின் லிஸ்பன் பகுதியில் உள்ள Fort of Caxias எனும் சிறையில் அடைக்கப்பட்டார். மோகன் ரானடே 6 ஆண்டுகள் தனி சிறைவாசத்தை அனுபவித்தார். பின்னர் 6 ஆண்டுகளுக்கு பிறகு 1961-ல் கோவா பகுதி போர்ச்சுகீசிய கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முயன்றும் பெற்றுத்தர இயலாத விடுதலையை, தம் சான்றாண்மையால் பெற்றுத் தந்தவர் பேரறிஞர் அண்ணா.

கோவா சுதந்திரம் அடைந்த பிறகும் போர்ச்சுகீசிய அரசு மோகன் ரானடேவை விடுதலை செய்யவில்லை. அதன் பிறகு எதிர்க் கட்சியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் மோகன் ரானடே விடுதலை குறித்து குரல் எழுப்பினார். மோகன் ரானடே விடுதலைக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், தமிழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாதுரைக்கு வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் Paul VI அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த சந்திப்பில், போப் ஆண்டவரிடம், போர்ச்சுகல் சிறையில் இருக்கும் கோவா சுந்திரப் போராட்ட வீரர் மோகன் ரானடேவை விடுதலை செய்ய போர்ச்சுகல் அரசிற்கு அழுத்தம் தருமாறு அண்ணா கோரிக்கை விடுத்தார்.

பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையின் பலனாக 14 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் சிறையில் இருந்து ரானடே 1969-ம் ஆண்டு ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். கொள்கை ரீதியில் எதிராக இருக்கும் மோகன் ரானடேவின் விடுதலைக்கு முயற்சித்தது பேரறிஞர் அண்ணாவின் மனிதநேய மாண்புக்குச் சான்றாகும்.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.

ரானடே, தம்மை வரவேற்ற அன்னை இந்திரா காந்தியிடம், “யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு.அண்ணாதுரை எங்கே?” என்று கேட்டார்.

“அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்”, என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரிடம் பேசிவிட்டு, தன்னிலைக்கு வந்த ராணடேயிடம், “நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொன்னார் அன்னை இந்திரா.

“நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதிதான்”, என்றார் ரானடே. அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அடக்கவியலாமல் கண்ணீர் விட்டு, அழுதார் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

“எதுவேண்டுமென்றாலும் கேளுங்கள்” என்ற போப்பாண்டவரிடம்,

  • தனக்கென எதுவும் கேட்காமல்,
  • கோவாவின் விடுதலைக்காகச சிறைப்பட்ட ஓர் போராளியின் விடுதலை வேண்டிய
  • மனிதநேய மாமனிதர்தான் நமது பேரறிஞர் அண்ணா.
  • அதானால்தான் அவர் பேரறிஞர் அண்ணா.

இந்த மூலம் அண்ணா என்கிற பேரறிஞர் இந்தச் சமுதாயத்துக்கு சொல்லிய செய்தி இதுவே: “பேரறிஞர் அண்ணாவின் எழுத்தும், பேச்சும் மட்டும் அல்ல, உலகம் தழுவிய அண்ணாவின் அன்பு கொண்ட பார்வையும் இவற்றோடு பிணைந்திருக்கிறது.”

இதனால்தான் எல்லோரும் அண்ணா என்று அவரை அழைத்தார்களோ நானறியேன்!

எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் தமிழர்களின் இதயத்தில் பேரறிஞர் அண்ணா இடம்பிடிக்கவில்லை ; தனது பாசத்தால் தமிழ் இதயகளைக் கவர்ந்த பண்பு நலன் கொண்ட தமிழர். தமிழர்களின் அடையாளம் தொலைந்து விடாமல் இருப்பதற்கு அண்ணா ஒரு முக்கிய காரணம்.

தமிழர்களுக்கு மொழி உணர்வு ஊட்டி, தமிழினத்திற்கு முகவரி தந்து, முத்தமிழால் புதிய சாலையை அமைத்துக் கொடுத்தவர். தமிழினத்தின் தன்மானத்திற்கு ஆடை தைத்துக் கொடுத்தவர்.

அண்ணாவின் மறைவுக்குக் கூடிய கூட்டம் இன்றுவரை உலகின் வேறெந்தத் தலைவருக்கும் கிடைக்காத கின்னஸ் சாதனை.

அண்ணாவை அறிஞர் என்று சொல்லக் காரணம், அவரது அறிவின் மேதைமைதான். அவற்றோடு அவர்தம் ஆட்சிக் காலகட்டத்தில் தமிழர்களின் இனமானத்தைக் கட்டிக்காத்து, அதன் உரிமையைத் தட்டி எழுப்பிவர்; மானுடப்பற்றாளர்;

மானுடப்பற்றை மறக்காமல் விதைத்த மனிதநேயப் பண்பாளர் அண்ணா என்ற ஒற்றைத் தகுதியே அண்ணாவைப் “பேரறிஞர்” என்று நமக்கு அடையாளம் காட்டியது.

ஒரு தலைவர் எல்லைகளைக் கடந்து அவரை எல்லோரும் நேசிக்கத் தொடங்கி விட்டால், மாபெரும் தலைவராகப் பரிணமிக்கிறார். எந்த வகையில் ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறதோ, அந்த வகையில் பரந்துபட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார். ஆமாம், அதனால்தான் பேரறிஞர் அண்ணா எல்லோராலும் நேசிக்கப்பட்ட தலைவராகத் திகழுகிறார்.

மனிதன் என்பவன் தெய்வம்ஆகலாம்!

வாரி வாரிவழங்கும் போது வள்ளல் ஆகலாம்!

வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியைவீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்
ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் (2)

யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் ! மனம் மனம்
அது கோவில் ஆகலாம் !

https://ta.quora.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-9

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply