சந்திரயான்-3: நிலாவைத் தொட்டது விக்ரம் லேண்டர் – அடுத்து என்ன செய்யும்?
விக்ரம் லேண்டர்
23 ஆகஸ்ட் 2023
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது.”
“140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
விக்ரம் லேண்டர் பத்திரமாகத் தரையைத் தொட்டதும் விஞ்ஞானிகள் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.
சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் “எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்” என்று கூறினார்.
விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார்.
இனி என்ன நடக்கும்?
நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கும்.
10 மீட்டர் உயரத்தில் இருந்து தொப்பென கல் விழுவதைப் போல் தரைப்பரப்பில் விழுந்திருப்பதால் எழும் புழுதிகள் அடங்கும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதுவும் செய்யாமல் அமைதியாக ஓய்வெடுக்கும்.
அந்தப் புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, மென்மையாக அந்த தரையிறங்கி கலன் தனது வயிற்றுக்குள் வைத்து ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து நிலா வரைக்கும் கொண்டு வந்த ரோவர் எனப்படும் ஊர்திக்கலனை வெளியே அனுப்பும்.
லேண்டரில் ஒரு சாய்வுக்கதவு திறந்து, அதன் வழியே ஊர்திக்கலன் சறுக்கிக்கொண்டு வெளியே வரும்.
இங்கே இந்த தரையிறங்கிக் கலன், ஊர்திக்கலன் இரண்டையும் தாய் கலன், சேய் கலன் என விவரிக்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன்.
“விக்ரம் தரையிறங்கிக் கலன் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சில மணிநேரங்கள் கழித்து அதன் சேய் கலமான ரோவர் வெளியே வரும். இதுவும் வெற்றிகரமாக நடந்து முடியும்போதுதான் இந்த முயற்சியில் இஸ்ரோ முழு வெற்றி பெற்றதாக அர்த்தம்.”
Leave a Reply
You must be logged in to post a comment.