பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் யார்? சோழ வரலாற்றில் அவரின் பங்களிப்பு என்ன?

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 30 ஏப்ரல் 2023

பிற்காலச் சோழர் சரித்திரத்தை விஜயாலயச் சோழன் நிறுவினார் என்றாலும் அதன் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர். சோழ வரலாற்றில் அவருடைய பங்களிப்பு என்ன?

தமிழ்நாட்டை ஆட்சிசெய்த சோழர்களின் வரலாறு மூன்று காலகட்டங்களில் சொல்லப்படுகிறது. நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கரிகால சோழன் உள்ளிட்டரை உள்ளடக்கிய முற்காலச் சோழர்களின் காலகட்டம். சங்கப் பாடல்களில் உள்ள பெயர்களை வைத்து இவர்களது வரலாறு கூறப்படுகிறது. அடுத்ததாக, 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கும் இடைக்காலச் சோழர்களின் காலகட்டம். இவர்கள் பிற்காலச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

விஜயாலயச் சோழனில் துவங்கி, 11ஆம் நூற்றாண்டில் அதிராசேந்திரச் சோழனின் காலம் வரை நீள்கிறது இந்த காலகட்டம். அதற்குப் பிறகு, இதற்குப் பிறகு சாளுக்கியச் சோழர்கள் எனப்படும் சோழர்களின் காலகட்டம். இது 11ஆம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனுடன் துவங்கி, 13ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசேந்திரச் சோழன் காலம்வரை நீள்கிறது. இத்தோடு சோழ மன்னர்களின் காலம் முடிவுக்கு வந்து பாண்டிய ராஜ்ஜியம் பரவ ஆரம்பித்துவிட்டது.

ஆதித்த கரிகாலன் மரணம்

இதில், பிற்காலச் சோழர்களில் பல சோழ மன்னர்கள் மிகுந்த புகழ்பெற்றவர்களாக இருந்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திரச் சோழனும். கடல் கடந்து பெற்ற வெற்றிகளுக்காக ராஜேந்திரச் சோழன் வெகுவாகப் புகழப்பட்டாலும், அந்த வெற்றிகளின் பின்னணியில் இருந்தது ராஜராஜ சோழன் உருவாக்கிக் கொடுத்த பரந்து விரிந்த சாம்ராஜ்யமும் கப்பற்படையும்தான்.

சோழ நாடு மிக அமைதியான, வளமான, வலிமையான நாடாக உருவெடுத்ததில் ராஜராஜசோழனின் பங்கு மிக முக்கியமானது.

சோழ மன்னனான சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் வழிவந்த வானவன் மகாதேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் அருண்மொழி என்ற ராஜராஜசோழன். அருண்மொழியின் அண்ணனான ஆதித்த கரிகாலனுக்கே பட்டத்து இளவரசனாக முடிசூடப்பட்டது. ஆனால், ஆதித்த கரிகாலன் சதிசெய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, அருண்மொழியே சுந்தர சோழனுக்குப் பிறகு அரசனாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி நடக்கவில்லை. அவருடைய சித்தப்பனான மதுராந்தக உத்தம சோழனுக்கு நாட்டை ஆளும் விருப்பம் இருந்தது தெரிய வந்ததால், சுந்தர சோழன் மறைவுக்குப் பிறகு மதுராந்தக உத்தம சோழனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. கி.பி. 970 முதல் கி.பி. 985வரை மதுராந்தக உத்தம சோழன் ஆட்சி செய்ய, அருண் மொழி பட்டத்து இளவரசனாக இருந்தார்.

கி.பி. 985ல் மதுராந்தக உத்தம சோழன் மறைந்துவிட, அருண்மொழி சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டார். முடிசூட்டு விழாவின்போது ராஜராஜன் என்ற சிறப்புப் பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

தந்தை சுந்தர சோழன், தாயார் வானவன் மாதேவி ஆகியோரைவிட, அவரை வளர்த்தது அவருடைய பெரிய பாட்டியாரான செம்பியன் மாதேவியும் அக்கா குந்தவை தேவியும் தான். ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியின் பெயர் லோகமாதேவி. ஆனால், வானவன் மாதேவி என்ற மனைவியின் மூலம் மூன்று குழந்தைகள் அவருக்குப் பிறந்தனர். முதலாவது மகன் மதுராந்தகன். இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு மாதேவ அடிகள் என்றும் மூன்றாவது பெண் குழந்தைக்கு குந்தவை என்றும் பெயர் சூட்டப்பட்டது. ராஜராஜ சோழனுக்கு மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்தனர்.

ராஜராஜ சோழனின் காலத்தைப் பொறுத்தவரை, சோழ நாடு அமைதியாக இருக்க வேண்டுமென்றே விரும்பினார். இருந்தபோதும், ராஜராஜசோழன் காலத்தில் பல போர்களில் அந்நாடு ஈடுபட்டது. இதில் மிக முக்கியமான வெற்றி காந்தளூரில் கிடைத்த வெற்றிதான். காந்தளூர் தற்போதைய திருவனந்த புரத்திற்கு அருகில் உள்ளது. ராஜராஜசோழன் அனுப்பிய தூதனை சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் சிறையிடவே, அவன் மீது படையெடுத்தார் ராஜராஜசோழன்.

காந்தளூரில் நடந்த போரில் பாஸ்கர வர்மனின் படை தோற்கடிக்கப்பட்டதோடு, அவனுடைய கடற்படையும் கைப்பற்றப்பட்டது. சேர நாட்டு மன்னனை வெல்வதற்காக இந்தப் போரில் ராஜராஜசோழனே தலைமை ஏற்றுச் சென்றான். செல்லும் வழியில் பாண்டிய மன்னனான அமரபுஜங்கனையும் சிறைபிடித்தான். (சில கல்வெட்டுகள் முதலில் காந்தளரைப் பிடித்துவிட்டு பிறகு மதுரையைத் தாக்கியதாகவும் குறிப்பிடு கின்றன.) இந்த வெற்றிக்குப் பிறகு ‘கேரளாந்தகன்’ என்ற பட்டப் பெயரைச் சுட்டிக்கொண்டான் ராஜராஜசோழன்.

ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்

வேங்கிநாடு, ராஷ்ட்ரகூடர்கள் ஆண்டுவந்த கங்க நாடு, நுளம்பர்கள் ஆண்டுவந்த நுளம்பாடி, குடகு நாடு, கொல்லம், கலிங்கம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி, லட்சத் தீவு, மாலத் தீவு, பாண்டியநாடு ஆகியவை ராஜராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இருந்தன.

ராஜராஜசோழன் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து அடுத்த நூறு ஆண்டுகள் சோழர் ஆட்சியின் பொற்காலமாக அமைந்தன. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில்தான் சோழ நாடு கடல் கடந்து தனது வெற்றியைப் பரப்பியது என்றாலும், அதற்கு அடிகோலியது ராஜராஜசோழனே என்கிறார் என்கிறார் சோழர்கள் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி.

ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்தபோது, ராஷ்டிரகூடர்களின் படையெடுப்பினால் சிறிய அளவில் இருந்த சோழநாடு, இவனுடைய ஆட்சிக்காலத்தின் முடிவில் மிகப் பரந்த நாடாக, மிகப் பெரிய படைகளை உடைய நாடாக விளங்கியது.

ராஜராஜ சோழன் ஈழத்தையும் போரிட்டு வென்றான். “திருமகள் போலே” என்று துவங்கும் கி.பி. 993ஆம் ஆண்டு மெய்க்கீர்த்தி, ‘கொடுமை மிக்க சிங்களவர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பற்றியதன் மூலம் இவனது புகழ் எண்திசையிலும் பரவியது.’ என்று குறிப்பிடுகிறது. இராஜராஜ சோழன் படையெடுப்பின் போது, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தவன் ஐந்தாம் மகிந்தன். ஆனால், இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், இந்தப் படையெடுப்பைப் பற்றி ஏதும் கூறவில்லை. ஈழத்தில் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு “மும்முடிச் சோழ மண்டலம்” எனப் பெயரிட்டான் இராஜராஜன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இந்தப் போரில் அழிக்கப்பட்டது. இராணுவக் காவல் நிலையமாக விளங்கிய பொலனறுவை, சோழ ஈழத்தின் தலைநகராக்கப்பட்டது. பொலனறுவையில் சிவனுக்கு ஒரு கற்கோவிலும் கட்டப்பட்டது.

முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் சோழநாடு நெல்லூர் வரை பரவியிருந்தது. பிறகு ராஷ்டிரகூடர்களின் படையெடுப்பில் சில பகுதிகளை இழக்க வேண்டியிருந்தது. அந்தப் பகுதிகளை மீட்க வடக்கு நோக்கியும் படைநடத்தினான் ராஜராஜன். அவனது கடைசிப் போராக அமைந்தது, “முன்னீர்பழந்தீவு பன்னீராயிரம்” என்று அழைக்கப்பட்ட மாலத் தீவைக் கைப்பற்றுவதற்காக நடந்தது.

கி.பி. 985ல் முடிசூடிக் கொண்ட ராஜராஜசோழன், கி.பி. 1012ல் தன் மகன் மதுராந்தகன் என்ற ராஜேந்திரச் சோழனுக்கு பட்டம் கட்டினார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 1014ல் அவர் மறைந்ததாகக் கருதப்படுகிறது.படக்குறிப்பு,

தஞ்சை பெரிய கோவில்

ராஜராஜசோழனின் முக்கியத்துவம்

தன் ஆட்சிக் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை பாடல்களின் வடிவில் தன் கல்வெட்டுகளின் துவக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திய முதல் மன்னன் இராஜராஜசோழன்தான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ராஜராஜசோழனுக்குப் பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் இந்த பாணியைப் பிறகு பின்பற்றினர்.

இராஜராஜ சோழனின் ஆட்சியில் மிக குறிப்பிடத்தக்கதாக அமைவது, தஞ்சைப் பெரிய கோவில். தஞ்சாவூரைப் பொறுத்தவரை, அது அப்பர், சுந்தரர் போன்ற சைவக் குரவர்களால் பாடப்பட்ட சைவத் தலமல்ல. இருந்தாலும், இராஜராஜனின் முயற்சியால், இது குறிப்பிடத்தக்க சைவத் தலமாக உருவானது. இரண்டாவதாக, இவனது ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் நிலங்கள் அளக்கப்பட்டு, வரி விதிக்கப்பட்டது. இவன் உருவாக்கிய நிலையான படைகளும் கடற்படையுமே இராஜேந்திரச் சோழனின் காலத்தில் அவனது வெற்றிக்கு வெகுவாக உதவின.

இராஜராஜன் சைவ மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் பிற மதங்களையும் ஆதரித்தான் என்பதற்கு நாகப்பட்டனத்தில் ஸ்ரீ விஜயம், கடாரத்தின் மன்னனாக இருந்த திருமாற விஜயோதுங்க வர்மனால் கட்டப்பட்ட பௌத்த விஹாரமான சூடாமணி விகாரம் ஒரு நல்ல உதாரணம். இதனை லெய்டன் செப்பேடு உறுதிப்படுத்துகிறது. இந்த விகாரத்திற்கு நிவந்தமாக ஆனை மங்கலம் எனும் ஊரையும் ராஜராஜ சோழன் எழுதிவைத்தான்.

இராஜராஜன் உயிரிழக்கும்போது தற்போதைய சென்னை, ஆந்திரப் பகுதிகள், மைசூர் நாட்டின் ஒரு பகுதி, ஈழம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப் பரந்த நாட்டைத் தன் மகன் ராஜேந்திரச் சோழனுக்கு விட்டுச்சென்றான். மிகச் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட படையும் இருந்தது.

சுந்தரசோழனுக்குப் பிறகு ராஜராஜ சோழன் பதவியேற்காதது ஏன்?

ராஜராஜசோழனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான கேள்வி, தந்தை சுந்தர சோழனின் மறைவுக்குப் பிறகு தான் பட்டத்திற்கு வராமல் தன் சித்தப்பனான மதுராந்தக உத்தமசோழனுக்கு ஆட்சியை விட்டுக்கொடுத்தது ஏன் என்பதுதான். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள பாடல்களை மேற்கோள்காட்டி, இதற்கு இரு விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் சோழர்கள் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி. முதலாவது காரணம், தன்னை ஆட்சியில் அமர்த்தாவிட்டால் உள்நாட்டுப் போர் மூளும் என மதுராந்தகன் அச்சுறுத்தியிருக்கலாம். அல்லது, ராஜராஜன் தானே முன்வந்து தன் சித்தப்பனுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்.

மேலும், ஆதித்த கரிகாலனின் கொலையில் உத்தம சோழனுக்கு தொடர்பில்லை என்றும் கூற முடியாது என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. “தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தரசோழனை இவன் வலியுறுத்தினான். வேறு வழியில்லாத சுந்தர சோழனும் இதற்கு இசைந்தான்” என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த மர்மத்தை மையமாக வைத்தே கல்கியின் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டது. அது தவிர, அரு. ராமநாதனால் ராஜராஜ சோழன் நாடகம் எழுதப்பட்டு, பிறகு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது. காந்தளூர்ச் சாலை போரை பின்னணியாகக் கொண்டு ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ என்ற நாவலை எழுதினார் சுஜாதா. இதே போரைப் பற்றி கோகுல் சேஷாத்ரி சேரர் கோட்டை என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

இராஜராஜசோழன் அரசனான பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து பாலகுமாரன் உடையார் என்ற நாவலையும் கோகுல் சேஷாத்ரி ராஜகேசரி நாவலையும் எழுதியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/crgln5g54evo

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply