திராவிடம் என்றால் என்ன?

திராவிடம் என்றால் என்ன?

திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? 

திராவிடம் என்றால் என்ன? என்பதனை விளக்கி திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன்.

’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது.  `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச்சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

`திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும். `தமிழ்`என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே (Exonym) `திராவிடம்` என்பதுமாகும். 

இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்: 

இக்கால மொழியியலும்அரசியலும் பற்றி தமிழும்அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல்பக்கம் 15].

திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்து கொள்ள நாம் அதற்கு எதிரான `ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு / துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள். 

ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய (arya) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது [ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்]. ஆரியர் (Arya) என்ற சொல் ரிக் வேதத்தில் 36 தடவைகள் இடம் பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப் பிடிப்போர் / உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ரிக் வேத காலத்தில் சைவ-வைணவ மதங்களோ / இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே  [இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரை கூறியுள்ளார்கள். எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என ரிக் வேதம் கூறுகின்றது. நமது பழந்தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

“ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப்பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.

மாரி அம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே.

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்து கிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல் காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது. இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப் படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன. [நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398,…]. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப் படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் நோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் கார்ல்டுவெல் (Robert Caldwell) அடிகள் ஆவார். அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ / தொல்காப்பியமோ கண்டுபிடிக்கப் பட்டிருக் காமையால், அவர் தவறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார். அதனைக் கால்டுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல் திரிந்தது என நிறுவியவர் பாவாணரே ஆவார். பாவாணர் `திரவிடத் தாய்` எனும் நூலில் எட்டாம் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருப்பார்.

தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்.

பவளம்” என்பது “ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம் (தமிழ்) என்னுஞ்சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்றாகி, பின் தமிழில் வந்து வழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே “திராவிடம்” எனுஞ் சொல் தோன்றிற்று“.  (சான்று- திராவிடத்தாய், பக்கம் 8).

பாவாணர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறிய முதல் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதற்கு முன்னரே சில கருத்துகள் தமிழும் திராவிடமும் ஒன்றே எனக் காட்டும்.

தமிழ் குறித்த திசைச் சொல்லே `திராவிடம்` என்றோம். தமிழ் குறித்த திரிபுச் சொல் முதன்முதலில் கிடைப்பது `அத்திக்கும்பா` கல்வெட்டில் (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) ஆகும். அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் [BCE 2nd cent] பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply