தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக அமைந்த கருணாவின் பிளவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – 20
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நான்கு கட்சிகளும் 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் விஞ்ஞாபனத்தை நான்கு கட்சிகளும் இணைந்தே கொழும்பில் வைத்து தயாரித்து அதனை வெளியிட்டிருந்தன.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி கோரிய போது அதற்கு ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த வசனம் சேர்க்கப்படாமலே 2001ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதிலும், வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் நான்கு கட்சிகளுமே முடிவுகளை எடுத்தன.
ஆனால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் இந்த நிலைமை முற்றாக மாற்றப்பட்டிருந்தது. வேட்பாளர் தெரிவில் விடுதலைப்புலிகளே அதிக ஈடுபாடு காட்டியிருந்தனர். தேர்தல் விஞ்ஞானமும் கிளிநொச்சியிலேயே தயாரிக்கப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 2004 பெப்ரவரி 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன், நீதித்துறை பொறுப்பாளர் ஈ.பரராசசிங்கம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.திலக், யாழ். மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா ( தமிழரசுக்கட்சி ) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ) சுரேஷ் பிரேமச்சந்திரன் ( ஈ.பி.ஆர்.எல்.எவ் ) என்.சிறிகாந்தா ( ரெலோ) எஸ்.கஜேந்திரன் ( பொதுப்பட்டியல் ) கலந்து கொண்டனர்.
தேர்தல் விஞ்ஞானபத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் பற்றி அங்கு ஆராயப்பட்டது. இந்த கூட்டம் அடுத்த நாளும் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்.சம்பந்தன் இந்த தேர்தல் தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுப்பங்களிப்புடன் நடைபெறும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்;ப்பாணத்தில் 2004 மார்ச் முதலாம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதனை வெளியிட்டு வைத்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாக அது அமைந்திருந்தது. தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியனவற்றை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்தது. 10 கோரிக்கைகள் இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்வருமாறு அந்த வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
Accepting LTTE’s leadership as the national leadership of the Tamil Eelam Tamils and the Liberation Tigers as the sole and authentic representatives of the Tamil people, let us devote our full cooperation for the ideals of the Liberation Tigers’ struggle with honesty and steadfastness.Let us endeavour determinedly.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தான் மட்டக்களப்பில் பேரடியாக அமைந்தது கருணாவின் பிளவு.
கருணாவின் பிளவு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சும் வகையில் இந்த பிளவு அமைந்திருந்தது.
2004 மார்ச் 03ஆம் திகதி புதன்கிழமை. அன்றுதான் அந்த பூகம்பம் வெடித்த நாள்.
மட்டக்களப்பு நகரில் இருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகை நின்று போனபின் கொக்கட்டிச்சோலையில் இருந்து தமிழ்அலை என்ற பத்திரிகை வெளிவந்தது. விடுதலைப்புலிகளே அதனை வெளியிட்டனர். ஊடகவியலாளராக இருந்து பின்னர் விடுதலைப்புலிகள் இயக்க போராளியான நித்தியானந்தனின் பெயரில் நித்தி பதிப்பகம் என்ற பெயரில் கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட அச்சகத்தில் தமிழ்அலை பத்திரிகை தினசரியாக வெளிவந்து கொண்டிருந்தது.
பா.அரியநேத்திரன் தமிழ்அலை பத்திரிகை மற்றும் நித்தி பதிப்பகம் ஆகியவற்றின் பொதுமுகாமையாளராக பணியாற்றினார். தமிழ்அலை பத்திரிகையின் பிரதம ஆசிரியராக வேணுகோபால் பணியாற்றினார். நான் விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அரியநேத்திரனும், வேணுகோபாலும் விடிவானம் பத்திரிகையில் இணைந்து கொண்டனர். அவர்களின் முதலாவது பத்திரிகை பிரவேசம் அதுதான். தினக்கதிரிலும் இருவரும் பணியாற்றினர். பின்னர் விடுதலைப்புலிகள் தமிழ்அலை பத்திரிகையை ஆரம்பித்த போது இருவரும் பொதுமுகாமையாளர் மற்றும் பிரதம ஆசிரியர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
பிரதம ஆசிரியராக பணியாற்றிய வேணுகோபாலுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்பதற்காக அந்த நாளில் என்னை பணியாற்றுமாறு அரியநேத்திரனும் வேணுகோபாலும் வேண்டுகோள் விடுத்தனர். மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைக்கு எனது பங்களிப்பாக இருக்கட்டுமே என்பதற்காக புதன்கிழமையில் பணியாற்றுவதற்கு சம்மதித்திருந்தேன். ஊதிபம் எதுவும் அற்ற வகையில் ஒரு சேவையாக அதனை செய்ய சம்மதித்திருந்தேன்.
மார்ச் 03ஆம் திகதி புதன்கிழமை வழமைபோல மட்டக்களப்பு நகரிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு போனபோது மண்முனைத்துறையடியில் மக்கள் கூடி கூடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன பிரச்சினை என ஒருவரிடம் கேட்டேன். இயக்கத்திற்குள் ஏதோ பிரச்சினையாம் என ஒருவர் சொன்னார்.
தமிழ்அலை பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்ததும் இன்றைக்கு பேப்பர் அடிக்கலாமோ தெரியாது என கணணி பகுதியில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் வந்து சொன்னார். அதெல்லாம் பிரச்சினையும் இல்லை. நீங்கள் வழமையான வேலைகளை செய்யுங்கள் என சொல்லி விட்டு எனது வேலைகளை ஆரம்பித்தேன்.
சற்றுநேரத்தில் அங்கு வேலை செய்யும் இன்னுமொருவர் வந்து இங்க பெரிய பிரச்சினை போல கேள்ளிப்பட்டனீங்களா என கேட்டார். என்ன பிரச்சினை என கேட்டேன்.
கௌசல்யனின் கல்யாணம் நின்று போச்சு, கல்யாண ஏற்பாடுகள், சமையல்கள் எல்லாம் இடைநடுவில் எல்லாம் குழம்பி போய் கிடக்குது என்றார். முதலில் இயக்கத்திற்குள் பிரச்சினை என்றார்கள், இப்போது கௌசல்யனின் கல்யாணம் நின்று போய்விட்டது என்கிறார்கள் என எனக்கு குழப்பமாக இருந்தது
மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் கல்யாணம் மார்ச் 03ஆம் திகதி நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது திருமண சாப்பாட்டிற்காக இறால் வாங்கி வருவதாக வாகரைக்கு சென்ற கௌசல்யனும் மட்டக்களப்பு நகர அரசியல் பொறுப்பாளர் சேனாதிராசாவும் வன்னிக்கு சென்று விட்டார்கள், இதனால் இன்று நடைபெற இருந்த கௌல்யனின் கல்யாணம் நின்று போய்விட்டது அவரின் வீட்டாரும் பெண்வீட்டாரும் பெரும் கவலையில் உள்ளனர். இயக்கத்திற்குள் ஏதோ பிரச்சினையாம், அதனால் தான் கௌசல்யன் திருமணத்தையும் பார்க்காமல் வன்னிக்கு சென்றுவிட்டார் என அவர் சொன்னார்.
இயக்கத்திற்குள் பிரச்சினை என காலையில் அறிந்த போது அது ஏதோ சின்னப்பிரச்சினையாக இருக்கும், அதை தீர்த்துவிடுவார்கள் என நம்பிய எனக்கு கௌசல்யன் தன் திருமணத்தையும் நிறுத்தி விட்டு வன்னிக்கு சென்று விட்டார் என்பதை அறிந்த போது பிரச்சினை பாரதூரமாக இருக்கும் என ஊகித்துக்கொண்டேன்.
வன்னித்தலைமைக்கும் மட்டக்களப்பு தலைமைக்கும் இடையில் பூசல் ஒன்று இருப்பதை ஏற்கனவே எம்மில் பலரும் அறிந்திருந்தோம். ஆனால் அதனை விடுதலைப்புலிகளின் தலைமை தீர்த்து வைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை தளபதியாக இருந்த கருணா தலைமையிலான அணி ஒன்று பிரிந்து விட்டது என ஏபி செய்தி சேவை முதலாவதாக செய்தியை வெளியிட்டது நண்பகல் அளவில் அந்த செய்தி வெளியானதும் இந்த பரபரப்பு மேலும் அதிகரித்தது
தமிழ்அலை தொலைபேசிக்கும் எனது தொலைபேசிக்கும் அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. மட்டக்களப்பு நகரில் இருந்த நடேசன் தொடர்பு கொண்டு பிரச்சினை என்ன மாதிரி என்று கேட்டான். எப்படியும் சமாளித்து விடுவார்கள் என சொன்னேன். இல்லை பிரச்சினை பெரியளவில் போகுது என்றான்.
கொழும்பில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்அலை அலுவலகத்திற்கே தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு பதிலளிப்பதிலேயே எனது நேரம் செலவழிந்தது. கிளிநொச்சியிலிருந்து தயா மாஸ்ரரின் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு நிலமையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களும் பிற்பகல் 2மணியளவில் தொடர்பு கொண்டு முயற்சிகள் நடைபெறுகிறது எப்படியும் சுமூகமாக தீர்ந்து விடும் என நம்பிக்கை தெரிவித்தார். கௌசல்யன் அங்கு வந்து விட்டராமே என கேட்டேன். கௌசல்யன் மட்டுமல்ல இன்னும் பலர் வந்துவிட்டார்கள் என சொல்லி சிரித்தார்.
சிவராம் கொழும்பில் இருந்து தொடர்பு கொண்டான். தொலைபேசியை நான் எடுத்த போது சொல்லிவிடு வெண்ணிலவே என்றான். நான் தமிழ்அலையில் நின்பேன் என அவன் எதிர்பார்க்கவில்லை. யாரடா வெண்ணிலவு என்றேன். சமாளித்து கொண்டு நான் கொழும்பில் நிற்கிறேன். இரவு வெளிக்கிட்டு நாளை காலை அம்மானை சந்திக்க வருகிறேன் என்றான்.
மாலை மற்றுமொரு செய்தி வந்தது. முனைக்காடு பாடசாலையில் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு அதில் கலந்து கொள்ளாது தளபதி ரமேஷ் வன்னிக்கு சென்று விட்டார் என்ற தகவலும் வந்தது. மக்கள் சந்திப்பை நடத்தி மக்களுக்கு இதுபற்றி விளக்கமளிக்குமாறு கருணா ரமேஷிற்கு உத்தரவிட்டிருந்தார். கருணாவிற்கு நம்பகமானவர்களையே ரமேஷிற்கு பாதுகாப்பிற்கும் விட்டிருந்தார். பாடசாலைக்கு மக்கள் சந்திப்புக்கு வருகிறேன் அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள் என கருணா அனுப்பிய மெய்பாதுகாப்பாளர்களை திசை திருப்பி விட்டு ரமேஷ் வன்னி சென்று விட்டதாக தகவல் வந்தது.
தளபதி ரமேஷ் தன்னை விட்டு வன்னிக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி கருணாவுக்கு பேரிடியாகவே இருந்திருக்கும். தளபதி ரமேஷ் போன்றவர்கள் தன்னுடன் இருப்பார்கள் என கருணா நம்பியிருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் வன்னிக்கு சென்றதை அடுத்து மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக கரிகாலன் கருணாவினால் நியமிக்கப்பட்டார்.
இரவு எட்டுமணியளவில் மட்டக்களப்பு அம்பாறை துணை அரசியல் பொறுப்பாளராக இருந்த கிருசன் அறிக்கை ஒன்றை கொண்டு வந்தான்.
அண்ணை இந்த அறிக்கையை தான் தலைப்பு செய்தியாக போடுங்கோ, இனி நாங்கள் தனியாகத்தான் இயங்கபோறம். வன்னியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என வீராவேசமாக பேசினான். இந்த அறிக்கையை நாளை காலையில தமிழ்அலையிலை வந்த பிறகு மற்ற ஊடகங்களுக்கு அனுப்ப சொல்லி அம்மான் சொல்லியிருக்கிறார் என கிரிசன் சொன்னான். அறிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் என ஒப்பமிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அம்பாறையில் உள்ள விடுதலைப்புலிகள் கருணா தலைமையில் பிரிந்து தனியாக செயற்பட போவதாகவும், பிரிந்து செல்வதற்கான காரணங்களும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமூகமாக பேசித்தீர்த்து விடலாம் என தமிழ்செல்வன் அவர்கள் சொல்கிறார். ஆனால் இந்த அறிக்கையை பார்த்தால் பிளவு நிரந்தரமாகிவிடும் போல தெரிகிறது. சற்று நேரத்தில் கிரிசன் சென்று விட்டான். கிளிநொச்சியிலிருந்து தயா மாஸ்ரர் தொடர்பு கொண்டார். அறிக்கை ஒன்று தந்திருக்கிறார்கள் என சொன்னேன். என்ன செய்யப்போறீங்கள்? அறிக்கையை போடப்போறீங்களா என கேட்டார். எதற்கும் யோசித்து முடிவெடுங்கோ என சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
அறிக்கையை போடுவதில்லை என்ற முடிவோடு இரவு இரண்டு மணியளவில் இறுதியாக தலைப்பு செய்தியை எழுதிக்கொடுத்தேன். விடுதலைப்புலிகளுக்குள் பிளவு இல்லை, தலைமையுடன் ஒற்றுமையாக செயற்பட மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகள் முடிவு என்ற தலைப்புடன் தமிழ்அலை பத்திரிகை வியாழக்கிழமை காலை வெளிவந்தது. அதை மேற்கோள் காட்டி தமிழ்நெற் உட்பட பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஆனால் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை தமிழ்அலை பத்திரிகையின் தலைப்பு முற்றாக மாறியிருந்தது. தமிழ்அலை பத்திரிகை கருணாவிற்கு ஆதரவானவர்களின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கருணாவை புகழ்ந்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் இகழ்ந்தும் செய்திகள் வெளிவந்தன.
( தொடரும் )
உண்மைகளை மறைப்பதற்காக பத்திரிகைகளை தடை செய்த கருணா தரப்பினர் – – ம் 21
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட வேளையில் விடுதலைப்புலிகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டிருந்தது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த பிளவு தேர்தலை பாதித்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினர். இந்த நேரத்தில் இவர்கள் பிளவு பட்டு நிற்கிறார்களே என சில வேட்பாளர்கள் ஆதங்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு கருணா தரப்பால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. கருணா தலைமையில் தான் இனி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கிழக்கில் விடுதலைப்புலிகளிடம் ஏற்பட்ட பிளவினால் போர் நிறுத்த உடன்படிக்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளில் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் 2004 மார்ச் 4ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளை சந்தித்து பேசினர். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தான் பிரிந்து தனியாக இயங்கப்போவதாக அறிவித்த கருணா வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ்அலை பத்திரிகையில் முழுமையாக வெளிவந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு கருணா எழுதிய கடிதமும் அப்பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
உங்களின் நேரடி தலைமையின் கீழ் நாங்கள் கிழக்கில் சுதந்திரமாக இயங்கப்போகிறோம், நாங்கள் உங்களை விட்டு பிரியவில்லை, உங்களுக்கு எதிராக இயங்கவும் இல்லை, வரலாற்று ரீதியாக ஓரம்கட்டப்படும் உணர்வு போராளிகள் மற்றும் மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதால் எங்களை சுதந்திரமாக செயற்பட நீங்கள் அனுமதிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தமிழ்அலை செய்தி வெளியிட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்பின் உயர்பீடங்களில் மட்டக்களப்பை சேர்ந்த யாரும் இல்லை என்பதையும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வியாழக்கிழமை காலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்த சிவராம் கருணாவை சந்திப்பதற்காக நேரடியாக கொக்கட்டிச்சோலைக்கு சென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வைத்து சிவராமை நான் சந்தித்தேன். கொக்கட்டிச்சோலைக்கு போன விடயம் என்ன மாதிரி என கேட்ட போது கருணாவை தான் சந்திக்கவில்லை என சிவராம் தெரிவித்தார்.
ஆனால் சிவராம் கருணாவை சந்தித்து பேசியதாக சில தினங்களின் பின் சிவராமிற்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் தெரிவித்தார். சிவராம் என்னிடம் சொன்னது உண்மையா அல்லது சிவராமிற்கு நெருக்கமானவர் சொன்னது உண்மையா என்பது இன்றுவரை எனக்கு தெரியாது. அது பற்றி சிவராம் இறக்கும் வரை அவரிடம் நான் கேட்கவே இல்லை.
மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜோசப் பரராசசிங்கம் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் கருணாவின் வழிநடத்தலில் நாம் செயற்படுவோம் என தெரிவித்தார்.
ஏனைய 7 வேட்பாளர்களும் கருணா அம்மானின் தலைமையில் நாம் செயற்படுவோம் என தெரிவித்தனர். இனிமேல் அவ்வாறுதான் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு கருணா தரப்பால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஜோசப் பரராசசிங்கம் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஏனைய 7 வேட்பாளர்களும் புதியவர்கள், அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, அப்போது மட்டக்களப்பில் அதிகாரத்தில் இருந்த கருணா தரப்பின் சொற்படிதான் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருந்தனர்.
கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் இராஜன் சத்தியமூர்த்தி, இராசநாயகம் ஆகியோர் வெளிப்படையாக கருணாவை ஆதரித்தனர். இவர்களில் இராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் பிரிவை ஆதரித்து பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஏனைய வேட்பாளர்கள் மௌனமாக தர்மசங்கடமான நிலையில் தமது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் வந்தது. சனிக்கிழமை முக்கியமான பத்திரிகையாளர் மகாநாடு கிளிநொச்சியில் இருப்பதாகவும் மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர்கள் கட்டாயம் வரவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தயா மாஸ்ரர் அறிவித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு வான் ஒன்றில் நானும், தவராசா, நடேசன், சிவராம், ஆகியோர் கிளிநொச்சிக்கு புறப்பட்டு சென்றோம்.
சனிக்கிழமை காலையில் கிளிநொச்சி சமாதான செயலகத்தில் பத்திரிகையாளர் மகாநாடு நடைபெற்றது. கொழும்பிலிருந்தும் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மட்டக்களப்ப அம்பாறை விசேட தளபதியாக ரி.ரமேஸ், ராம் தளபதியாகவும், பிரபா துணைதளபதியாகவும் கௌசல்யன் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராகவும் தமிழீழ தேசியத்தலைவர் நியமித்துள்ளார் என தமிழ்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவித்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நாம் மட்டக்களப்புக்கு புறப்படுவதற்கு தயாரான போது முக்கியமான ஒருவர் மட்டக்களப்பிலிருந்து வருகிறார், அவரை சந்தித்து விட்டு செல்லுங்கள் என தமிழ்செல்வன் அவர்கள் ஊடகப்பிரிவு அலுவலத்தில் வைத்து எம்மிடம் தெரிவித்தார். யாராக இருக்கும் என நாம் யோசித்து கொண்டிருந்த போது முற்பகல் 11மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கரிகாலன் அங்கு வந்து சேர்ந்தார்.
கருணா பிரிந்த போது மட்டக்களப்பு அம்பாறை அரசியல்பொறுப்பாளராக கரிகாலனையே நியமித்திருந்தார். சுமார் நான்கு தினங்கள் கருணா தரப்புடன் இருந்த கரிகாலன் எப்படியோ அங்கிருந்து வெளியேறி கிளிநொச்சியை வந்தடைந்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் கருணா தற்போது எடுத்திருக்கும் முடிவு தவறானதாகும். இந்த பிளவினால் தமிழ் மக்களுக்கு அவர் மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளார். வரலாற்றில் அவர் ஒரு பொல்பொட்டாகவே பார்க்கப்படுவார் என கரிகாலன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு வவுனியா நகருக்கு வந்து பிற்பகல் ஊடகவியலாளர் விவேகராசா வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்த போது தான் அங்கிருந்து கொழும்புக்கு செல்லப் போவதாக சிவராம் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு செல்வது பாதுகாப்பில்லை என்றே தான் கருதுவதாக கூறிய சிவராம் மட்டக்களப்புக்கு செல்வதை தவிர்க்குமாறு எமக்கு ஆலோசனை கூறினார்.
பழைய சம்பவம் ஒன்றையும் எமக்கு சிவராம் ஞாபகப்படுத்தினார். 1987ஆம் ஆண்டு புளொட் இயக்க அரசியல்துறை செயலாளர் வாசுதேவா உட்பட புளொட் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிவராம் ஞாபகப்படுத்தினார்.
அன்று மட்டக்களப்பு நகரிலிருந்து வாசுதேவா தலைமையிலானவர்கள் கல்குடாவுக்கு புறப்பட்ட போது அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற உணர்வு தனக்கு வந்ததாகவும், அப்படியான உணர்வே இப்போது தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் சிவராம் எங்களிடம் கூறினான்.
13.09.1987 அன்று மட்டக்களப்பு நகரிலிருந்து கல்குடாவுக்கு சென்று கொண்டிருந்த புளொட் இயக்கத்தினர் மீது கிரானில் வைத்து விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் புளொட் இயக்க அரசியல்துறை செயலாளர் வாசுதேவா, இராணுவதுறை செயலாளர் கண்ணன், மட்டக்களப்பு பொறுப்பாளர் சுபாஸ், உட்பட பலர் கொல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்டே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்திய படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற முதலாவது தாக்குதல் இது என அக்காலப்பகுதியில் கூறப்பட்டது.
வாழைச்சேனை, கிரான் போன்ற பகுதிகளை கடந்து செல்வது பாதுகாப்பானது அல்ல, கிளிநொச்சிக்கு நீங்கள் வந்த விடயம் கருணா தரப்பிற்கு தெரியும் என கூறிவிட்டு சிவராம் கொழும்புக்கு சென்று விட்டார்.
எனினும் நாம் அன்று இரவு வணபிதா ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பிற்கு திரும்பினோம்.
மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரங்கள் ஒரு புறம் நடந்தாலும் பதட்டமான சூழலே நிலவியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு எதிராக கருணாவிற்கு ஆதரவான தரப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தது.
வாழைச்சேனை, உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கிழக்கு பல்கலைக்கழகம் கொதிநிலையில் இருந்தது. அங்கும் கருணாவுக்கு ஆதரவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் உருவப்பொம்மையை கட்டி இழுத்து வந்து மைதானத்தில் வைத்து எரித்தனர்.
அம்பாறை திருக்கோவில் போன்ற இடங்களிலும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு கருணா தரப்பினர் அழுத்தம் கொடுத்தனர்.
மட்டக்களப்பில் பதற்றமும் அச்சமான சூழலும் அதிகரித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் மட்டக்களப்பு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை களையும் நோக்கில் மட்டக்களப்பு நகரில் மார்ச் 7ஆம் திகதி மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மற்றும் சமயத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையுடனும், கருணாவுடனும் பேசி சமாதானத்தை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மார்ச் 8ஆம் திகதி மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.ரவீந்திரநாத் ஆகியோர் தலைமையிலான குழு கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களை சந்தித்தனர். எனினும் இந்த சமாதான முயற்சி வெற்றிபெறவில்லை.
கொக்கட்டிச்சோலையில் இருந்து வெளிவந்த தமிழ்அலை பத்திரிகை முற்றுமுழுதாக கருணா தரப்பின் பிரசாரப்பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கொடும்பாவி எரிப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் கொழும்பிலிருந்து வெளிவந்த தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகள் கிளிநொச்சியிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருணா தரப்புக்கு எதிரான மன உணர்வு மட்டக்களப்பு மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதையும் வெளிப்படுத்தி வந்தன. கருணாவின் பிளவை கண்டித்து மட்டக்களப்பில் உள்ள சில பொது அமைப்புக்களின் பெயர்களில் வெளிவந்த அறிக்கைகளையும் இப்பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. தமக்கு எதிரான பிரசாரம் இப்பத்திரிகைகளில் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டி மார்ச் 9ஆம் திகதி வந்தாறுமூலையில் வைத்து தினக்குரல் பத்திரிகை பார்சல்களை பறித்து கருணா குழுவினர் தீயிட்டு கொழுத்தினர். அதன் பின்னர் வீரகேசரி, மற்றும் தினக்குரல் பத்திரிகைகளை கருணாகுழு மட்டக்களப்பு நகரில் வைத்து மார்ச் 11ஆம் திகதி தீயிட்டு கொழுத்தினர்.
இதன் பின்னர் மட்டக்களப்பு நகரில் உள்ள தினக்குரல் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திற்கு சென்ற கருணாகுழுவினர் அங்கு முகாமையாளராக இருந்த எஸ்.சந்திரப்பிரகாஷிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் தினக்குரல் பத்திரிகையை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் விநியோகிக்க கூடாது என்றும் அப்பத்திரிகைக்கு தாம் தடை விதிப்பதாகவும் எச்சரித்தனர்.
இதனால் மட்டக்களப்பில் தினக்குரல் பத்திரிகையின் விநியோகம் நிறுத்தப்பட்டது. கருணாகுழுவினரால் மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறை மேலோங்கியிருந்தது.
இதை விட 1956, 1977 1983களில் சிங்களவர்கள் செய்ததை விட மிக மோசமான செயல் ஒன்றையும் கருணா குழுவினர் செய்தனர்.
( தொடரும் )
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு – 22
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தனியாக இயங்க எடுத்த முடிவினால் மட்டக்களப்பில் அச்சமும் பதட்டமும் நிறைந்திருந்த அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின் தெரிவு செய்யப்படுபவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தொடர்ந்து இருப்பார்களா அல்லது கருணாவின் கீழ் அரசுடன் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின் தாங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என கருணாவுக்கு மிக நெருக்கமான ராசன் சத்தியமூர்த்தி தனது தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை கருணா தரப்பினர் கொக்கட்டிச்சோலைக்கு அழைத்து தேர்தல் பிரசாரங்கள் பற்றி விளக்கம் அளித்தனர். ஜோசப் பரராசசிங்கம் தவிர்ந்த ஏனைய 7பேரும் சமூகமளித்திருந்தனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களை பேச வேண்டாம் என்றும் மட்டக்களப்பின் அபிவிருத்தி பற்றியே பேசுமாறும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிமேல் கிழக்கு தனியாகத்தான் இயங்கும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் கருணா தரப்பினர் அறிவித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரசாரங்களின் போது முதன்மை படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மறுநாள் ஜோசப் பரராசசிங்கம் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வதாகவும், வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கொள்கையிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை ஒரு போதும் தான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதனையே தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தப்போவதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
கருணா தரப்பினரின் அறிவித்தலை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தந்தை செல்வா காலத்திலிருந்து கொள்கையின் அடிப்படையிலேயே கட்சியில் செயல்பட்டு வருவதாகவும் எந்த காரணத்திற்காகவும் கொள்கையை விலகி செல்ல முடியாது என்றும் அறிவித்தார்.
ஜோசப் பரராசசிங்கத்தின் அறிவிப்பு கருணா தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 8பேரும் தமது உத்தரவுக்கு கீழ் படிந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஜோசப் பரராசிங்கம் அவர்களின் அறிவிப்பால் தவிடுபொடியானது.
கருணா தரப்பின் கட்டளைகளை ஏற்க மறுத்தால் மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என தெரிந்திருந்த போதிலும் ஜோசப் பரராசசிங்கம் துணிச்சலோடு அந்த முடிவை எடுத்தார்.
ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் அரசியல் வரலாற்றில் உறுதியான துணிச்சலான முடிவுகளை எடுத்தது இது முதல் தடவையல்ல. பல சம்பவங்கள் இருந்தாலும் இரு சம்பவங்களை முக்கியமாக சொல்ல முடியும்.
1970ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பில் சுயேச்சையாக களமிறங்கினார் ராசன் செல்வநாயகம். பணபலம், ஆட்பலம், என மட்டக்களப்பை ராசன் செல்வநாயகம் ஆட்டிப்படைத்த காலம். திருமதி சுகுணம் ஜோசப் அவர்களின் மைத்துனர் தான் ராசன் செல்வநாயகம். திருமதி சுகுணம் ஜோசப் அவர்களின் உறவினர்கள் அனைவரும் ராசன் செல்வநாயகத்திற்கு ஆதரவாகவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் ஜோசப் அவர்களும் அவரின் மனைவி சுகுணம் அவர்களும் தமிழரசுக்கட்சியின் பக்கமே நின்றனர். உறவினராக இருந்தாலும் தந்தை செல்வாவின் வழியில் தொடர்ந்து தமிழ் தேசியக் கொள்கையின் கீழ் தான் தன்னால் செயல்பட முடியும் என ஜோசப் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட செல்லையா இராசதுரைக்காகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பு தொகுதியில் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக செல்லையாக இராசதுரையும், இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராக ராசன் செல்வநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். சுயேச்சைக்குழுவில் வெற்றி பெற்ற ராசன் செல்வநாயகம் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் ஆளும் கட்சியில் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரி என்ற பதவியையும் பெற்றுக்கொண்டார்.
இந்த பதவியை வைத்துக்கொண்டு ராசன் செல்வநாயகம் மட்டக்களப்பில் சில அபிவிருத்திகளை செய்தாலும் தனக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் பழிவாங்கினார். ராசன் செல்வநாயகம் அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஒரு குறுநில மன்னம் போலவும், அடியாட்களை கொண்ட தாதா போன்றும் செயல்பட்டார். அவரின் கீழ் குண்டர் குழு ஒன்றும் இயங்கியது. அதில் ஜோசப் அவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளானார். ஜோசப் பரராசசிங்கம் அவர்களும் சுகுணம் ஜோசப் அவர்களும் தனது காலடிக்கு வர வேண்டும் என்பதற்காக பல வழிகளிலும் அவர்களுக்கு தொல்லை கொடுத்தார். மட்டக்களப்பு கச்சேரியில் வேலை செய்த ஜோசப் அவர்களை பதுளை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தார். பல வழிகளிலும் பழிவாங்கலுக்கு உள்ளாகி துன்பபட்ட போதிலும் ஜோசப் அவர்கள் தனது அரசியல் கொள்கைகளை கைவிட்டு ராசன் செல்வநாயகத்தின் காலடிக்கு செல்லவில்லை. பின்னர் அவர் தனது வேலையையும் இராசினாமா செய்து விட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தினார்.
தமிழ் மக்களின் விடுதலை என்ற தந்தை செல்வாவின் கொள்கையிலிருந்து தான் விலகப்போவதில்லை என அன்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட முடியும்.
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டக்களப்பு தொகுதியில் இருவரை நிறுத்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் செல்லையா இராசதுரையையும், தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் காசி ஆனந்தனையும் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்தியது. இது மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டாக பிளவு பட்டு மோதிக்கொண்ட சம்பங்களும் நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இராசதுரையின் வெற்றிக்காகவே ஜோசப் பரராசசிங்கம் பிரசாரம் செய்தார். இராசதுரை வெற்றி பெற்ற பின் 1978ஆம் ஆண்டு சூறாவளியை அடுத்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாறிய போது இராசதுரையின் ஆதரவாளர்கள் சிலரும் ஐக்கிய தேசியக்கட்சிக்கே மாறினர். அந்த நேரத்தில் ஜோசப் பரராசசிங்கம் மிகத்தெளிவாக தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்தே தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அந்த கொள்கைக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அவர் அக்கொள்கையை கைவிட்டு ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்கிறார் என்பதற்காக அவரின் பின்னால் நாம் செல்ல முடியாது. தந்தை செல்வாவின் வழியில் கட்சி கொள்கையில் நான் என்றும் உறுதியோடு நிற்பேன் என தெரிவித்தார்.
எத்தகைய அச்சுறுத்தல்கள் எதிர்ப்புக்கள் நெருக்கடிகள் வந்த போதிலும் தனது கொள்கையில் உறுதியாக செயற்பட்ட ஜோசப் பரராசசிங்கம் கருணா தரப்பின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது துணிச்சலுடன் தனது முடிவை அறிவித்தார்.
தமது உத்தரவுக்கு பணிய மறுத்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களை தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது என கருணா தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்தனர். இதனால் ஜோசப் பரராசசிங்கம் அவர்களால் வீட்டை விட்டு வெளியில் வந்து பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.
ஏனைய 7வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கருணா தரப்புக்கு மிக நெருக்கமாக செயற்பட்ட ராசன் சத்தியமூர்த்தி உத்வேகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த வேளையில் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தகவர்கள் அரச ஊழியர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவினர் அறிவித்தனர். வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தியிடம் வர்த்தகவர்கள் சென்று முறையிட்டனர். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறத்தான் வேண்டும் என பதிலளித்தார்.
ராசன் சத்தியமூர்த்தி வீட்டில் தேர்தல் பிரசார வேலைகளை ஒருங்கிணைத்து கொண்டிருந்த போது பிரசாரத்திற்கு உதவும் தொண்டர்கள் போல சென்ற இருவர் மார்ச் 30ஆம் திகதி காலையில் இராசன் சத்தியமூர்த்தி மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இது மட்டக்களப்பு நகரில் மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்தது. உடனடியாக கருணா தரப்பினர் யாழ்ப்பாண மக்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர். அன்று நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு யாழ்ப்பாண வர்த்தகவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர்.
1956, 1983 காலங்களில் தென்னிலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது போல மட்டக்களப்பிலிருந்து வடபகுதி தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.
1980களில் மட்டக்களப்பின் பிரதான நகரங்களின் வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் கைகளிலேயே இருந்தது. வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு நகரம், களுவாஞ்சிக்குடி போன்ற நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் குறிப்பாக பலசரங்கு கடைகளும், யாழ்ப்பாணத்தவர்களின் கைகளிலேயே இருந்தது. விநியோகஸ்தர்களாகவும் அவர்களே இருந்தனர்.
பின்னர் தமிழ் இயக்கங்கள் தொல்லைகளால் சிலர் தமது கடைகளை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு சென்றனர். 2004ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி கருணா தரப்பின் அறிவிப்பால் வடபகுதி வர்த்தகர்கள் அனைவரும் வெளியேறவேண்டிய அவலம் ஏற்பட்டது.
மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்ட பலர் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அவர்களின் பெற்றோர் அல்லது பாட்டன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவராக இருந்த போதிலும் அவர்கள் காலம் காலமாக மட்டக்களப்பையே தமது சொந்த மண் என எண்ணி வாழ்ந்தவர்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் மரக்காலை, இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ், பரமேஸ்வரி ஸ்ரோர்ஸ், உட்பட பல கடைகளின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரையும் உடனடியாக மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல மட்டக்களப்பு மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மட்டக்களப்பு நகரில் மட்டும் 15ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பல வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். மாவட்ட செயலகத்திலும் பலர் பணியாற்றினர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் உட்பட பெரும்பாலான விரிவுரையாளர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும்.
வடபகுதியை சேர்ந்த அனைவரும் நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இவர்கள் 500ரூபாவுக்கு உட்பட்ட பணத்தை மட்டுமே எடுத்து செல்லலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் என பலரும் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் வெளியேறினர். காலம் காலமாக மட்டக்களப்பையே தமது பூர்வீகமாக எண்ணி வாழ்ந்த வர்த்தகர்களும் வெறும் கையுடன் 500ரூபா பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். இவர்களை பிள்ளையாரடி போன்ற இடங்களில் நின்ற கருணா குழுவினர் மேலதிகமாக பணத்தையோ அல்லது சொத்துக்களையோ எடுத்து செல்கிறார்களாக என சோதனை செய்தனர்.
மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய யாழ்ப்பாண வர்த்தகர்கள் பலர் தமது வர்த்தக நிலையங்களை கொழும்பில் வைத்து முஸ்லீம் வர்த்தகர்களுக்கு விற்றனர். கருணா குழுவினரின் இச்செயலால் மட்டக்களப்பு நகரில் இருந்த வர்த்தகம் முழுமையாக முஸ்லீம் வர்த்தகர்களின் கைகளுக்கு சென்றது. ( தொடரும் )
கருணாகுழுவின் முடிவால் மட்டக்களப்பு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்- த.தே. கூட்டமைப்பின் தோற்றம் – 23
வடமாகாணத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் கருணா குழுவினர் அறிவித்தனர். இரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வெளியேறாதவர்கள் சட்டவிரோதமாக மட்டக்களப்பில் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த ஒலிபெருக்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு செங்கலடி வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி நகரங்களில் கருணா குழுவினர் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
மட்டக்களப்பு நகரில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. வர்த்தகர்கள் அனைவரும் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். சிலர் கொழும்புக்கு சென்றனர். சிலர் வவுனியாவுக்கு சென்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர்களும் தமது குடும்பங்கள் சகிதம் வெளியேறினர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றிய இடமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்ந்தது. அங்கு ஏற்கனவே யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான ஒரு தரப்பு தீவிரமாக செயற்பட்டு கொண்டிருந்தது. கருணா குழுவின் அறிவிப்பு அவர்களுக்கு இரட்டி மகிழ்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். கருணா குழு வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர். கருணா குழுவின் அறிவிப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெளியேறினர்.
சில வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், அரச ஊழியர்கள், வர்த்தகர்கள் வடபகுதியை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் அவர்களில் சிலர் மட்டக்களப்பில் திருமணம் முடித்திருந்தனர். உதாரணமாக கிழக்கு பல்கலைக்கழக பொருளியியல்துறை தலைவராக இருந்த தம்பையா வவுனியாவை சேர்ந்தவர். ஆனால் அவர் திருமணம் முடித்திருந்தது மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணையாகும். இவ்வாறு மட்டக்களப்பில் திருமணம் முடித்திருந்தவர்களும் தமது குடும்பங்கள் சகிதம் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். தம்பையா மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருந்த பின் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறிய பின் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். ( மட்டக்களப்பு நகரில் இருந்த அவரின் வீட்டில் வைத்தே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இது பற்றிய பின்னர் எழுத இருக்கிறேன். )
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என கருணா குழு எடுத்த முடிவு மிக மோசமான தவறான முடிவாகும். இதனால் மட்டக்களப்பு தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை, ஆகிய நகரங்களில் இருந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முஸ்லீம் வர்த்தகர்கள் தமிழ் வர்த்தகர்களை தொடர்பு கொண்டு பெரும்பாலான வர்த்தக நிலையங்களை அவர்கள் வாங்கி கொண்டனர். மார்ச் 30ஆம் திகதி இரவு யாழ்ப்பாண தமிழர்களின் சில கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை கருணா குழுவே செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நகரில் இருந்த ஒரே ஒரு ஆடைத்தொழிற்சாலை யாழ்ப்பாண தமிழருக்கு சொந்தமானதாகும். கல்வியங்காட்டில் இருந்த ஆஞ்சநேயர் ஆடைத்தொழிற்சாலையும் மூடப்பட்டது. இதில் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த இளம் பெண்கள், மற்றும் இளைஞர்கள் வேலை செய்தனர். இந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டதால் இவர்கள் அனைவரும் வேலை இழந்து நிர்க்கதியாக நின்றனர்.
கருணா குழுவினர் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த மக்கள் எந்த காரணம் கொண்டும் வடபகுதியை சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்களுடனோ அல்லது வன்னியில் இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைகளுடனோ தொடர்புகளை வைத்திருக்க கூடாது என்றும் அவ்வாறு வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
வடபகுதியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் எந்த தொடர்பையும் வைத்திருக்க கூடாது என கருணா குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் நெருக்கடியாக அமைந்தது.
இந்த அறிவிப்பு மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்களுக்கு கருணா குழு மீது வெறுப்பை ஏற்படுத்திருந்தது. அதுவரை அமைதியாக இருந்த மட்டக்களப்பு தமிழ் மக்கள் கருணா குழுவுக்கு எதிரான கண்டனங்களை வெளியிட ஆரம்பித்தனர்.
அதேவேளை கருணா குழுவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றன. கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருச்செல்வம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மோனகுருசாமி ஆகியோர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கருணா குழு ஆதரவாளரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ராசன் சத்தியமூர்த்தியின் சடலம் மட்டக்களப்பு நகரில் மட்டுமன்றி கொக்கட்டிச்சோலைக்கும் எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண தமிழ் மக்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறு கருணா குழு அறிவித்த அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிவிப்பில் மட்டக்களப்பை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என தெரிவித்தனர். கருணா குழுவின் அறிவிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் பெருந்தொகையான மக்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியநிபுணர்கள், மற்றும் வைத்தியர்கள் வெளியேறியதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவசர சத்திரசிகிச்சை உட்பட வைத்தியசேவைகள் நிறுத்தப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மட்டுமன்றி கல்முனை அக்கரைப்பற்று வரையான மக்களும் பாதிக்கப்பட்டனர்.
கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 6 வைத்திய நிபுணர்கள் உட்பட 11 வைத்தியர்கள் வெளியேறினர்.
கருணா குழுவின் இச்செயலை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள் ஏப்ரல் முதலாம் திகதி வைத்தியசாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். வைத்தியநிபுணர்களின் வெளியேற்றத்தால் பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சில உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம், யுனிசேவ், உலக உணவுத்திட்டம், ஆகிய அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தன.
காலம் காலமாக ஒரு இடத்தில் வாழும் மக்களை வன்முறைகளின் மூலம் அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை சட்டங்களை மீறும் செயலாகும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கருணா குழுவின் இத்தகைய மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களும் கண்டிக்க ஆரம்பித்தனர். படிப்படியாக கருணா குழு மீது மட்டக்களப்பு மக்களுக்கு வெறுப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த குழப்பங்களின் மத்தியில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. மட்டக்களப்பில் கருணா குழுவினர் ஜோசப் பரராசசிங்கம் தவிர்ந்த ஏனையவர்களுக்கு வாக்களிக்குமாறு ஊக்குவித்தனர்.
அதேபோன்று வன்னி, யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் விடுதலைப்புலிகள் சிபார்சு செய்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்குமாறு தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட கனகரத்தினம், கிசோர் சிவநாதன், ஆகியோரின் இலக்கங்களுக்கே வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேச மக்களுக்கு ஓமந்தையில் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
அதேபோல யாழ். மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் இலக்கங்களே கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மக்களிடம் வழக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு முகமாலை சோதனை சாவடியில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இரவே கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களுக்கு கஜேந்திரன், மற்றும் பத்மினி ஆகியோரின் இலக்கங்களை வழங்கி வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டிருந்தனர். அவை எந்த வேட்பாளர்களின் இலக்கங்கள் என்பதோ, தாம் வாக்களிக்க இருப்பவர்களின் முகங்களையோ அறியாத நிலையில் வீட்டு சின்னமும் விடுதலைப்புலிகள் கொடுத்த இலக்கங்களும் மட்டுமே அந்த மக்களின் கைகளில் இருந்தன.
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் 2004ஆம் ஆண்டில் தான் வடக்கு கிழக்கில் வாக்களிப்பு வீதம் அதிகரித்து காணப்பட்டது. 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி மற்றும் படுவான்கரைப்பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டுக்கு பின்னர் நான்கு தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டது 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
வன்னி மாவட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், வி.நோகராதலிங்கம், எஸ்.கனகரத்தினம், சிவநாதன் கிசோர் ஆகிய ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டனர். வன்னி மாவட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டது அதுவே முதல் தடவையாகும்.
யாழ். மாவட்டத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஈ.பி.டி.பிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழரசுக்கட்சியின் செயலாளராக அப்போது இருந்த மாவை சேனாதிராசா விருப்பு வாக்கில் எட்டாவது இடத்திலேயே தெரிவு செய்யப்பட்டார். தீவுப்பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்ற வேளையில் ஈ.பி.டி.பியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்திருந்ததால் மாவை சேனாதிராசா பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் இருந்தார்.
செல்வராசா கஜேந்திரன் 112077 வாக்குகளை பெற்று முதலாவது இடத்திற்கு வந்திருந்தார். பத்மினி சிதம்பரநாதன் 68,239 வாக்குகளையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 60,768 வாக்குகளையும், சுரேஷ் பிரேமச்சந்திரன் 45,783 வாக்குகளையும், கிட்டிணன் சிவநேசன் 43,730 வாக்குகளையும் நடராசா ரவிராஜ் 42,963 வாக்குகளையும், க.சிவாஜிலிங்கம் 42,191 வாக்குகளையும் மாவை சேனாதிராசா 38,779 வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆர்.சம்பந்தனும் அம்பாறை மாவட்டத்தில் எஸ்.பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது. ஜோசப் பரராசசிங்கமும், ஈழவேந்தனும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இத்தேசியப்பட்டியல் தெரிவும் விடுதலைப்புலிகளின் சிபார்சிலேயே நியமிக்கப்பட்டனர். ( தொடரும் )
https://yarl.com/forum3/topic/199383-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-
உதயசூரியன் சின்னம் தமிழ் மக்களின் கைநழுவி போனதற்கு யார் காரணம்? – 19
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின் தமிழரசுக்கட்சி இயங்கு நிலையில் இல்லாத போதிலும் அக்கட்சியை தொடர்ந்து தேர்தல் திணைக்களத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலானவர்கள் பதிவு செய்திருந்தனர்.
1972ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போதிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும், இலங்கை தமிழரசுக்கட்சியும் கலைக்கப்படவில்லை. அவையும் இயங்கு நிலை கட்சிகளான தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்டிருந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் 1977ஆம் ஆண்டிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றுவிட்டது.
1977க்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் தலைவராக கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை நியமிக்கப்பட்டிருந்தார். கதிரவேற்பிள்ளை 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அப்போது தமிழரசுக்கட்சியின் உபதலைவராக ஆவரங்கால் கே.சின்னத்துரை பெயரிடப்பட்டிருந்தார். தமிழரசுக்கட்சியின் செயலாளராக இருந்த ஆலாலசுந்தரத்தை 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி ரெலோ இயக்கத்தினர் கடத்தி சென்று சுட்டுக்கொன்றனர்.
1983 யூலை கரவரத்தை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர். ஆனால் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் தனது உடுவில் இல்லத்திலும், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தனது நல்லூர் இல்லத்திலும், பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்தினம் தனது தொண்டமானாறு இல்லத்திலும் தங்கிருந்தனர்.
இந்த மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு இந்திய றோ அமைப்பு ரெலோ இயக்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய றோவின் வழிநடத்தலில் ரெலோ இயக்கம் பல படுகொலைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி கொண்டிருந்தது.
இந்திய றோ அமைப்பின் உத்தரவை அடுத்து ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் தனது பொறுப்பாளர்களான பொபி, தாஸ் ஆகியோருக்கு தமிழ் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு தகவல் அனுப்பினார். உடுவிலிருந்த தர்மலிங்கத்தையும் நல்லூரில் இருந்த ஆலாலசுந்தரத்தையும் சுட்டுக்கொல்லுமாறு பொபிக்கு தகவல் அனுப்பினார். தொண்டமானாறில் இருந்த கே.துரைரத்தினத்தை சுட்டுக்கொல்லுமாறு வடமராட்சி பொறுப்பாளர் தாஸிற்கு உத்தரவிட்டார். ஆனால் துரைரத்தினத்தை சுட்டுக்கொல்வதற்கு தாஸ் இணங்கவில்லை. வடமராட்சியில் மக்கள் செல்வாக்குள்ள ஒரு மனிதரை எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றி எப்படி கொல்வது என அதற்கு அவர் இணங்கவில்லை. ஆனால் பொபி உடனடியாக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் வீட்டிலிருந்து கடத்தி சென்று சித்திரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சடலத்தை வீசியிருந்தனர்.
ஆலாசுந்தரம் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் சில காலம் தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும் பின்னர் மாவை சேனாதிராசாவின் பெயர் செயலாளராக பெயரிடப்பட்டு தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பபட்டிருந்தது.
தேர்தல் திணைக்கள சட்டத்தின் படி கட்சியின் செயலாளரே முடிவுகளை எடுக்கும் பொறுப்பு வாய்ந்தவராகும். வேட்பாளர் பட்டியலை சமர்ப்பிப்பது, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பது உட்பட சகல அதிகாரங்களும் செயலாளருக்கே உண்டு.
தானே தமிழரசுக்கட்சியின் தலைவர் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்காவுக்கு லண்டனிலிருந்து ஆவரங்கால் சின்னத்துரை கடிதம் அனுப்பியதை தொடர்ந்து ஆவரங்கால் சின்னத்துரையையும், மாவை சேனாதிராசாவையும் தேர்தல் ஆணையாளர் நேரடியாக சமூகமளித்து விளக்கமளிக்குமாறு அறிவித்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதை தடுத்திருந்த ஆனந்தசங்கரி தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதையும் தடுக்கும் முகமாகவே ஆவரங்கால் சின்னத்துரை ஊடாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பபட்டதாக ஆனந்தசங்கரிக்கு எதிரான தரப்பு குற்றம் சாட்டியது.
இதற்கு இடையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடி புதிய தலைவராக ஆர்.சம்பந்தன் அவர்களை தெரிவு செய்தது. இந்த விடயம் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.
மாவை சேனாதிராசா தேர்தல் திணைக்களத்திற்கு சென்று தானே செயலாளர் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் லண்டனில் இருந்த ஆவரங்கால் சின்னத்துரை கொழும்பு தேர்தல் திணைக்களத்திற்கு நேரடியாக வரவில்லை. இலங்கைக்கு வருவது தனக்கு உயிர் ஆபத்து என்றும் எனவே தனது சத்தியக்கடதாசியை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பினார். விடுதலைப்புலிகளால் தனக்கு உயிராபத்து என தேர்தல் ஆணையாளருக்கு ஆவரங்கால் கே.சின்னத்துரை அறிவித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தேர்தல் ஆணையாளர் 2004 பெப்ரவரி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஆவரங்கால் சின்னத்துரையின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், தமிழரசுக்கட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அதற்கான உரிமை செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கு உண்டு என்றும் அறிவித்தார்.
1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற அந்தஸ்த்தையும் பெற்றுக்கொண்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி விடயத்தில் கொழும்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆனந்தசங்கரிக்கு சாதகமாக இருந்த போதிலும் தமிழரசுக்கட்சி விடயத்தில் தேர்தல் ஆணையாளரின் தீர்ப்பு ஆனந்தசங்கரிக்கு சாதகமாக இருக்கவில்லை, தானே தலைவர் என உரிமை கோரிய ஆவரங்கால் சின்னத்துரையும் அதன் பின் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி செயலாளர் சம்பந்தன் தலைமையிலானவர்கள் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதது போல கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றில் இருந்ததாலும், கட்சியின் செயலாளரே வேட்புமனுவில் கையொப்பம் இடவேண்டும் என்பதாலும் ஆனந்தசங்கரியாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாமல் போய்விட்டது.
ஆனந்தசங்கரி தான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக முன்னாள் மேயர் செல்லன் கந்தையன், பி.முத்துலிங்கம் போன்றவர்கள் இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண அலுவலகத்தையும் ஆனந்தசங்கரி தரப்பினரே பயன்படுத்தினர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஆனந்தசங்கரி சுயேச்சை குழுவாக போட்டியிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இன்னொரு நெருக்கடியும் ஏற்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தாம் தெரிவு செய்பவர்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்றை தருவோம் என்றும் மிகுதியான இடங்களுக்கு நான்கு கட்சிகளும் வேட்பாளர்களை நியமிக்கலாம் என விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.
ஏனைய மாவட்டங்களில் கட்சிகளும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலும் மட்டக்களப்பில் கட்சிகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்ட ஜோசப் பரராசசிங்கத்தை தவிர ஏனைய ஏழு பேரும் தமிழீழ விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட பொதுப்பட்டியல் ஊடாகவே வந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை தளபதியாக இருந்த கருணா, மற்றும் கரிகாலன், விசு, போன்றவர்களே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை தயாரித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக ஜோசப் பரராசசிங்கம் நியமிக்கப்பட்டார். ஏனைய அனைவரும் புதியவர்கள். இது தமிழரசுகட்சி மற்றும் ரெலோ, போன்ற கட்சிகளுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது. 2001ஆம் ஆண்டு தேர்தலில் ரெலோவின் ஊடாக தங்கவடிவேலுவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி ஊடாக ஞா.கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 2004ஆம் ஆண்டு தேர்தலில் தங்கவடிவேல் ஒதுங்கி கொண்டாலும் கிருஷ்ணபிள்ளை தன்னையும் வேட்பாளர் பட்டியிலில் இணைத்து கொள்ளுமாறு கொக்கட்டிச்சோலையில் உள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகம் இருந்தார். ஆனால் கிருஷ்ணபிள்ளையை விடுதலைப்புலிகள் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை தவிர ஏனைய 7பேரும் விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட பொதுப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டனர். ராசன் சத்தியமூர்த்தி, ரி.கனகசபை, கிங்ஸ்லி இராசநாயகம், பி.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி, செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன், எஸ்.கனகரத்தினம் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளுக்கு அதிருப்தியாக இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் தலையிட்டதால் அவை எதையும் பேசமுடியாத நிலையில் இருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இந்த நிலை அதிகமாக காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் அரியநாயகம் சந்திரநேரு தலைமையில் 11வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சந்திரநேரு, மற்றும் பத்மநாதன் ஆகியோரை தவிர ஏனையவர்கள் விடுதலைப்புலிகளின் பொதுப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டனர். இங்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சிகள் ஊடாக வேட்பாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் பொதுப்பட்டியல் ஊடாக எவரும் நியமிக்கப்படவில்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் 7பேர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆர்.சம்பந்தன், கே.துரைராசசிங்கம், கௌரி முகுந்தன், சாகுல் ஹமீட், ஆகியோர் தமிழரசுக்கட்சியின் சார்பிலும், சதாசிவம் சண்முகநாதன் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பிலும், கே.ரகுநாதன் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பிலும் வி.விக்னேஸ்வரன் ரெலோவின் சார்பிலும் நியமிக்கப்பட்டனர்.
யாழ். மாவட்டத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் எட்டுப்பேர் கட்சிகளின் ஊடாகவும், நான்கு பேர் பொதுப்பட்டியல் ஊடாகவும் நியமிக்கப்பட்டனர். மாவை சேனாதிராசா, நடராசா ரவிராஜ், எஸ்.சிவமகராசா, ஆகியோர் தமிழரசுக்கட்சியின் சார்பிலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி சார்பிலும் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா ரெலோ சார்பிலும், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பிலும் நியமிக்கப்பட்டனர். சொலமன் சிறில், எஸ்.சிவநேசன், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் விடுதலைப்புலிகளின் பொதுப்பட்டியல் ஊடாகவும் நியமிக்கப்பட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் அப்பாதுரை விநாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் இடம் கொடுக்கப்படவில்லை. அவர் வவுனியாவில் போட்டியிடுமாறு விடுதலைப்புலிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் அங்கு போட்டியிட்டார்.
வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் 9பேர் போட்டியிட்டனர். செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் ரெலோவின் சார்பிலும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பிலும், சிவசக்தி ஆனந்தன் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பிலும், அ.ஜே.மரியநாயகம் சூசை தமிழரசுக்கட்சியின் சார்பிலும், நியமிக்கப்பட்டனர்.
சிவநாதன் கிசோர், ஜோன் பெனட் கிறிஸ்றோபர், நூர் முகமட் சயானி, எஸ்.கனகரத்தினம், ஆகியோர் விடுதலைப்புலிகளின் பொதுப்பட்டியலில் நியமிக்கப்பட்டனர்.
2004. பெப்ரவரி 23ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்தது. 1970ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழரசுக்கட்சியின் சின்னம் களமிறக்கப்பட்டிருந்தது.
1977ல் எழுச்சியுடன் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வரலாற்று சாதனையை படைத்திருந்தது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சின்னமாகவும் உதயசூரியன் சின்னம் பார்க்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சின்னமாக பார்க்கப்பட்டது. ஆனால் 2004ல் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சின்னம் தமிழ் மக்களை விட்டு கைநழுவி போனதற்கு யார் காரணம்?
( தொடரும் )
https://thinakkathir.com