தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் 10 – 18

இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் பாராளுமன்றம் வரமாட்டோம் என சபதம் எடுத்த சம்பந்தன் – 10

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிக்கள் மட்டத்திலும் வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழர் ஒரு தேசிய இனம், அவர்களின் தாயக பிராந்திய ஒருமைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, ஏனைய இனங்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்ற நான்கு விடயங்களை வலியுறுத்தியிருந்த இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தடை நீக்கப்பட வேண்டும் என்றும் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விடுதலைப்புலிகளுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிந்தது.
விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் வலியுறுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பின்னர் ஏனைய கட்சிகளோடு இணங்கி தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருந்தது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 2001 நவம்பர் 12ஆம் திகதி தமிழ்நெற் இணையத்தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டது. அதனை இப்போதும் பார்வையிடலாம். நவம்பர் 13ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையிலும் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக வெளியிடப்பட்டது.

நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் இந்த கூட்டணிக்கான மக்கள் அங்கீகாரத்திற்கான தேர்தலாகவும் இதை தாம் பார்ப்பதாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த கூட்டணி பற்றி தமிழ் ஆங்கில பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. வடக்கு கிழக்கில் வாக்காளர் மத்தியில் இக்கூட்டணி பாரிய தாக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பும் வலுவடைய ஆரம்பித்தது.

எதிரும் புதிருமான செயற்பட்டு வந்த தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்திருந்தது.

வேட்புமனு தாக்கல் செய்த பின் நவம்பர் 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் சமூகமளித்திருந்தனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட தலைமை வேட்பாளர் ஆர்.சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் சில வாக்குறுதிகளை வழங்கினார்.

விடுதலைப்புலிகள் மீது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என்றும் தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய இலட்சியத்தை அடைவதற்காக தொடர்ந்து போராடும் என்றும் உறுதியளித்தார்.

திருகோணமலை சிவன் கோவிலடியில் நடந்த இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரெலோ தலைவர் என்.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
அதேபோன்று நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூதூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சம்பந்தன் உரையாற்றும் போது இத்தேர்தல் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

நான்கு தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது ஈ.பி.டி.பிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான ஈ.பி.டி.பியினரின் முதலாவது தாக்குதல் பொத்துவில் பகுதியில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்றது. நவம்பர் 22ஆம் திகதி கல்முனையில் ஈ.பி.டி.பியினர் நடத்திய தாக்குதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 ஆதரவாளர்கள் காயமடைந்தனர்.

அதேபோன்று நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் தீவுப்பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பியினர் பாரிய தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் யாழ். மாவட்டத்தில் தனிகாட்டு ராஜாக்களாக அராஜகம் புரிந்த ஈ.பி.டி.பிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரவு பெரும் அச்சத்தை கொடுத்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் ஈ.பி.டி.பி நடத்தி வந்தது. சந்திரிக்கா அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்ததால் அரச பலத்தையும் இராணுவ ஆதரவு பலத்தையும் வைத்து கொண்டு ஈ.பி.டி.பி எப்படியாவது யாழ்ப்பாணத்தில் தாம் வெற்றி பெற வேண்டும் என செயற்பட்டு கொண்டிருந்தனர்.

நவம்பர் 19ஆம் திகதி மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான செல்வேந்திரன் ( தமிழர் விடுதலைக் கூட்டணி ) இந்திரகுமார் பிரசன்னா ( ரெலோ) ஆகிய இருவரும் சென்று சிறிய பிரசார கூட்டங்களை நடத்தினர்.  நீண்டகாலத்திற்கு ( 1977க்கு) பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடந்த முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும்.tna_candidates_011201

இதன் பின்னர் டிசம்பர் முதலாம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் ஜோசப் பரராசசிங்கம் தலைமையில் கொக்கட்டிச்சோலைக்கு சென்று ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் பொது கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜோசப் பரராசசிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலை பெறுவார்கள் என்றும் இல்லையேல் விடுதலை என்பது எட்டாக்கனிதான் என தெரிவித்தார்.

இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் டிசம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலடியிலும் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்திலும் நடைபெற்றது.

ஈ.பி.டி.பியினரின் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாவை சேனாதிராசா கட்டுக்களுடன் சக்கரநாற்காலியில் யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்;. ஈ.பி.டி.பியினரின் அராஜகத்தை அடக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் வேட்பாளராக அறிமுகமான கஜேந்திரகுமார், ரவிராஜ் ஆகியோரும் இந்த இறுதி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த மக்கள் சோதனை சாவடிகளில் வைத்து திருப்பி அனுப்பபட்டனர். அதுபோன்று மன்னாரிலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த மக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆறு ஆசனங்களை கைப்பற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்திருந்தார். அதனை தொடர்ந்து மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.ரவிராஜ், அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோர் விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றி பெற்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் அரசியலுக்கு வந்து மிகக்குறுகிய காலத்தில் விருப்பு வாக்கில் மூன்றாம் இடத்திற்கு வந்து வெற்றி பெற்றார்.  வன்னியில் செல்வம் அடைக்கலநாதனும், ராஜகுகனேஸ்வரனும், சிவசக்தி ஆனந்தனும் வெற்றி பெற்றனர். திருகோணமலையில் ஆர்.சம்பந்தன் வெற்றி பெற்றார்.  மட்டக்களப்பில் மூவர் வெற்றி பெற்றனர். தங்கவடிவேல் விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்திருந்தார். இரண்டாம் இடத்தில் ஞா.கிருஷ்ணபிள்ளையும், மூன்றாம் இடத்தில் ஜோசப் பரராசசிங்கமும் வந்திருந்தனர்.  அம்பாறை மாவட்டத்தில் சந்திரநேரு அரியநாயகம் வெற்றி பெற்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் மொத்தமாக 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தம் 15 ஆசனங்களை பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி 6 உறுப்பினர்களையும், ரெலோ 4 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 3 உறுப்பினர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு உறுப்பினரையும் பெற்றுக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்பாளர் வன்னி மாவட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெற வில்லை.

1977ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக ஆசனங்களை பெற்றது 2001 டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆகும். 1989ஆம் ஆண்டு ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட போது வடக்கு கிழக்கில் மொத்தம் 9 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ உறுப்பினர்கள் தான். தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஒருவர் கூட வெற்றிபெற வில்லை. 1989ஆம் ஆண்டிலும் தமிழ் கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டாலும் இதனை பலமான கூட்டாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இந்தியாவினால் சேர்த்து வைக்கப்பட்ட செயற்கையான ஒரு கூட்டாகவே மக்கள் அதனை பார்த்தனர். தேர்தல் முடிந்த கையோடு இந்த கூட்டில் இருந்த நான்கு கட்சிகளும் பிரிந்து விட்டன.

1977ஆம் ஆண்டு தமிழீழ கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட போது வடக்கு கிழக்கில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அது எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தலாகும்.

அதன் பின்னர் 1989, 1994, 2000 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கவில்லை, 1977ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கொள்கை ஒன்றை முன்வைத்து நடந்த தேர்தலாக 2001ஆம் ஆண்டு தேர்தலை பார்க்க முடியும்.

கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் இத்தேர்தல் முடிவுகள் கவனத்தை ஈர்த்திருந்தன. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து டிசம்பர் 12ஆம் திகதி ( 12.12.2001) அன்று கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.ஆனந்தசங்கரியும் ஆர்.சம்பந்தனும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபாலகிருணஷ்ண காந்தியை சந்தித்து பேசினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் முதலாவது கூட்டம் டிசம்பர் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக்காரியாலயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற குழுத்தலைவராக ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்தல் முடிந்த பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டு வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் இந்த நான்கு கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவர்களால் ஒற்றுமையாக இயங்க முடியாது என்றும் விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டு தனித்தனியாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சில ஆங்கில பத்திரிகைகள் உட்பட கொழும்பு பத்திரிகைகள் விசமத்தனமாக பிரசாரங்களை செய்து வந்தன.

இந்த பிரசாரங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களில் உறுதியோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்றும் தமக்குள் எந்த பிளவும் கிடையாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

12ஆவது பாராளுமன்றம் 2001.டிசம்பர் 19ஆம் திகதி கூடிய போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் முக்கிய சபதம் ஒன்றை எடுத்தார். இந்த பாராளுமன்ற தொடர் முடிவடைவதற்குள் தமிழ் மக்கள் மரியாதையுடன் வாழக்கூடிய நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்த பாராளுமன்றத்திற்கு வரமாட்டோம் என தெரிவித்தார்.

சம்பந்தனின் பாராளுமன்ற உரையை ஆங்கில ஊடகம் ஒன்று இவ்வாறு வெளியிட்டது.

No self-respecting Tamil would enter the next parliament if a just and permanent solution is not found to the Tamil national question by this parliament,” declared Mr R. Sampanthan, MP, the parliamentary group leader of the Tamil National Alliance (TNA), speaking at the inaugural ceremony of the 12th parliament ( Wednesday. 19.12.2001)

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தனின் இந்த உரை மறுநாள் அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. ( தொடரும் )

https://thinakkathir.com


 

விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தால் தமது கட்சியின் தனித்துவம் கெட்டுவிடும் என அஞ்சிய ஆனந்தசங்கரி– 11

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி ஜனாதிபதியாக இருந்த வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்று பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கினார்.

ஜனாதிபதி ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் பிரதமர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கும் சூழல் இதற்கு முதல் 1994ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது அப்போது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்த வேளையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராக பதவி ஏற்றார்.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இறுதி பிரசார கூட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க மீது விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை அவர் தீவிரப்படுத்தியிருந்தார்.

2001 டிசம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தை காட்டும் வகையில் விடுதலைப்புலிகள் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாள் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

கிறிஸ்மஸ், மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் நாள் தொடக்கம் ஜனவரி 24ஆம் நாள் வரையான ஒரு மாத கால போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். இதனை ஏற்று ரணில் தலைமையிலான அரசாங்கமும் டிசம்பர் 21ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப்புலிகள் வெளியிட்ட ஒரு மாதகால போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்கமும் ஒரு மாதகாலத்திற்கு யுத்த நிறுத்தத்தை செய்வதாக அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 2001 டிசம்பர் 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் என்.குமரகுருபரன், ரெலோவின் தலைவர் என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்தனர்.

இந்த கோரிக்கையை ஆதரித்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

நோர்வே தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த சமாதான முயற்சி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பதவி ஏற்றுக்கொண்டதும் முன்னேற்றம் அடைந்திருந்தது. 2002 ஜனவரி 10ஆம் திகதி நோர்வே அரசாங்க பிரதிநிதிகளான பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹைம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சமாதான முயற்சிகள் பற்றி பேசினர்.

அன்றைய தினம் மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நோர்வே உயர்மட்ட குழு சந்தித்தது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், ஏ.விநாயகமூர்த்தி, கஜேந்;திரகுமார் பொன்னம்பலம், சிவசக்தி ஆனந்தன், தங்கவடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.  தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக சர்வதேச நாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர்.

போர் நிறுத்தம் ஏற்பட்டது வடக்கு கிழக்கு மக்களிடையே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. கூடவே பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்ச்சிகளும் வடக்கு கிழக்கில் ஆரம்பமாகியது.

பொங்குதமிழ் என்ற எழுச்சி பேரணி யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் 2002 ஜனவரி 17ஆம் நாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக இருந்த செல்வராசா கஜேந்திரன் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார். இது யாழ்ப்பாணத்தில் பெரும் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இந்த பொங்குதமிழ் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ஆனந்தசங்கரி, யாழ். மாநகர முதல்வர் செல்லன் கந்தையன் ஆகியோரும் கலந்து கொண்டனர். pongutamil_trinco_6_190202

தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழலில் நிரந்தர போர் நிறுத்ததிற்கான ஏற்பாடுகளும், சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளையும் நோர்வே தரப்பு மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை அலுவலகத்தில் எம்.சிவசிதம்பரம் தலைமையில் 2002 ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழு கூட்டத்;தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி சமாதான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்றைய தினம் விடுதலைப்புலிகள் மேலும் ஒரு மாதகாலத்திற்கு போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

போர் நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுக்களுக்கான முயற்சிகளின் ஒரு கட்டமாக 2002.பெப்ரவரி 15ஆம் திகதி ஏ9 பாதை திறக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை அடுத்து இப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது. இப்பாதை திறந்தது வன்னியிலிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

போர் இல்லாத சூழல் வடகிழக்கில் மக்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தை தொடர்ந்து மட்டக்களப்பிலும் பெப்ரவரி 20ஆம் திகதி பொங்குதமிழ் நடத்தப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் பொது அமைப்புக்களும் இணைந்து இந்த பொங்குதமிழ் எழுச்சியை மட்டக்களப்பு இந்துகல்லூரி மைதானத்தில் நடத்தினர்.

நிரந்தர போர் நிறுத்தம் விடுதலைப்புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை, தமிழ் மக்களின் அபிலாஜைகளை நிறைவேற்றுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த பொங்குதமிழ் நிகழ்வில் முதல் தடவையாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், தங்கவடிவேல், கிருஷ்ணபிள்ளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் என பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.

நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த சமாதான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. பெப்ரவரி 21ஆம் திகதி நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் கிளிநொச்சியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பம் இட்டார்.

பெப்ரவரி 22ஆம் திகதி வவுனியாவுக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். நிரந்தர போர் நிறுத்தத்தை நோர்வே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

நிரந்தர போர் நிறுத்தம், மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை அடுத்து வடக்கு கிழக்கில் எழுச்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2002 மார்ச் முதலாம் திகதி வவுனியாவில் பிரமாண்டமான முறையில் பொங்குதமிழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை தாக்கியவாறு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.

வவுனியாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஆர்.யோகராஜன், வன்னி புனர்வாழ்வு அமைச்சர் நூர்டீன் மன்சூர் உட்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மார்ச் 19ஆம் திகதி திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் மாபெரும் பொங்குதமிழ் எழுச்சி பேரணியும் கூட்டமும் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு பொங்குதமிழ் பிரகடனத்தை ஏற்று சத்திய பிரமாணமும் செய்து கொண்டனர். பொங்கு தமிழ் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட முக்கிய விடயம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்பதாகும்.

நான்கு கட்சிகளும்; சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒப்பந்தம் செய்த போதும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என சேர்ப்பதற்கு மறுத்த தமிழ் கட்சிகள் பொங்குதமிழ் பிரகடனத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

திருகோணமலையில் பொங்குதமிழ் பேரணிக்காக வீதி எங்கும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. திருகோணமலை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கொடிகளையும் புத்த பிக்கு ஒருவர் தலைமையிலான சிங்கள குழு அறுத்து எறிந்திருந்தது. இதனால் திருகோணமலையில் பதற்றம் உருவாகியிருந்தது.

தமிழ் இளைஞர்கள் கோபம் அடைந்தவர்களாக கொந்தளித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் அவர்கள் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். திருகோணமலையில் தனியே தமிழர்கள் மட்டும் வாழவில்லை, ஏனைய இனத்தவர்களும் வாழ்கிறார்கள். அவர்களுடன் மோதல்களை ஏற்படுத்தாது சமாதானமாகவும் நிதானமாகவும் செயல்படுவதே திருகோணமலையில் அனைத்து இனங்களுக்கும் பாதுகாப்பு என தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது செயல்பட்ட பிக்கு தலைமையிலான சிங்கள குழுவின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுமைக்குள் செல்ல ஆரம்பித்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்து தமது அரசியல் பிரிவு அலுவலகங்களையும் அமைத்து கொண்டனர்.

ஏப்ரல் 4ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்கள் கையொப்பம் இட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

வன்னிக்கு வந்து தம்மை சந்திக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலையக மக்கள் முன்னணித்தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று 2002 ஏப்ரல் 8ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோன்று சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழைப்பு கிடைத்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆனந்தசங்கரி சில அச்சங்களை வெளியிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துவமான ஒரு கட்சி. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இக்கட்சியில் அதிகரித்து வருவதால் கட்சியின் தனித்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என தான் அஞ்சுவதாக தெரிவித்தார்.

வன்னிக்கு செல்வதற்கும் ஆனந்தசங்கரி தயக்கம் காட்டியிருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராசசிங்கம் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் வன்னிக்கு செல்ல சம்மதித்தார்.

( தொடரும் )


Posted January 2, 2018

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து சபதம் எடுத்த தலைவர் சிவசிதம்பரம். – த.தே. கூட்டமைப்பின் தோற்றம் – 12

நான்கு தமிழ் கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓரு குடையின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் முதல் தடவையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்தை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2002 ஏப்ரல் 11ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியை சென்றடைந்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமையே சந்திப்பு என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் இந்த சந்திப்பிற்கு செல்லவில்லை.

2002 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்செல்வன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான், மட்டக்களப்பு அம்பாறை இராணுவ பொறுப்பாளர் கருணா, மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, என்.ரவிராஜ், அ.சந்திரநேரு, அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ராஜ குகனேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டார். TNA and Ltte 01

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாம் பிரவேசித்திருப்பது பற்றியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, மற்றும் முன்மொழியப்பட்ட இடைக்கால நிர்வாகம் மற்றும் அதன் இறுதி வடிவம் பற்றியும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விளக்கி கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்ட வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் முஸ்லீம்களையும் இணைத்துக்கொண்டு தீர்வு திட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்றிரவு இரவு விருந்தளித்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலை கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்தடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் பின் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்து கிளிநொச்சி சந்திப்பு எப்படி இருந்தது என கேட்டேன். அவர் சுருக்கமாக சொன்னார். அவர்கள் சில விடயங்களை சொன்னார்கள், நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம், சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகளுக்கான உத்தரவுகள் கிளிநொச்சியிலிருந்துதான் வரும் என சொல்லி சிரித்தார்.

எங்களை கேட்காமல் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அடுத்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம் கொழும்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சில உத்தரவுகள் குறித்து ஆனந்தசங்கரி அக் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நடவடிக்கைகளுக்கான முடிவுகளை தானே எடுக்க வேண்டும், கட்சியின் தனித்துவத்தையும் சுயாதிபத்தியத்தையும் இழக்க முடியாது என ஆனந்தசங்கரி கூறினார். ஆனந்தசங்கரியின் இக்கருத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அதனை வெளிப்படையாக கூற தயக்கம் காட்டினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை சந்தித்தனர்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் தரப்பில் தலைவர் வே.பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், மற்றும் கருணா, பதுமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்;.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான நூர்டீன் மன்சூர், ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதியமைச்சர்களான பசீர் சேகு தாவுத், முகமட் அப்துல் காதர், சிரேஷ்ட உறுப்பினர் மசூர் மௌலானா, உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

1990ல் வடபகுதியிலிருந்து முஸ்லீம்களின் வெளியேற்றம், கிழக்கில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், தமிழ் மக்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படையினரின் தாக்குதல்கள் என தமிழ் முஸ்லீம் உறவு சீர்குலைந்திருந்த சூழலில் 12 வருடங்களுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.

முஸ்லீம் பிரதிநிதிகள் கிளிநொச்சியில் தங்கியிருந்த நாட்களில் அவர்களுக்கு சமய மார்க்கப்படி உணவு சமைப்பதற்கு என முஸ்லீம் சமயற்காரரர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

வடகிழக்கில் முஸ்லீம் சமூகத்தின் நலன்களை பேணுவது, தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையில் இனநல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய தினம் மாலை கொழும்பு திரும்பிய ரவூப் ஹக்கீம் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு இது வழிசமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்வதற்கு இந்த ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டிருப்பது முன்னேற்றகரமான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுக்களின் விளைவாக, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறியப்பட்டுள்ளது, ஹக்கீம் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் குழுவில் சென்ற பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவுத் தனது முன்னைய தலைவர் ஈரோஸ் பாலகுமார், நீதித்துறை பொறுப்பாளர் பரா ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்தார்.

இதன் பின்னர் பஷீர் சேகு தாவுத் அவர்களை மட்டக்களப்பில் ஒரு முறை சந்தித்த போது கிளிநொச்சி பயணம் எப்படி என கேட்டேன். விடுதலைப்புலிகளின் தலைமையை சந்தித்ததற்கு அப்பால் நான் தனிப்பட்ட ரீதியில் பாலகுமார் அண்ணனை சந்தித்தேன். அது எனக்கு மிகுந்த சந்தோசம் என்றார்.

ஈரோஸ் இயக்கத்தில் சேர்ந்து தமிழீழ விடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்ட பஷீர் சேகுதாவுத் ஈரோஸ் இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியில் இணைந்து கொண்டார். நான் நேசிக்கும் தலைவர்கள் பாலகுமாரன், அஷ்ரப், இருவரும்தான். அவர்கள் எனது இரு கண்கள் என பஷீர் சேகு தாவுத் சொல்லிக்கொள்வார். அதே நிலைப்பாட்டில் தான் பஷீர் சேகு தாவுத் இப்போதும் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு 2002 மே 11ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஆனந்தசங்கரி செல்லவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆர்.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

போர் நிறுத்த உடன்படிக்கையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் தமிழ்செல்வன் வலியுறுத்தினார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால் தான் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் தமிழ்செல்வம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மே 24ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து சாதகமாக தாம் பரீசீலிப்பதாகவும், விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமான பின் அதில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார்.

2002 யூன் 5ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு துக்க தினமாக அமைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் அவர்கள் கொழும்பில் காலமானார்.

இலங்கையில் ஆளுமைமிக்க தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சிவசிதம்பரம் அவர்கள் 1989ஆம் ஆண்டு யூலை 13ஆம் திகதி கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பின்னர் மிகவும் நொந்த நிலையிலேயே காணப்பட்டார்.

1956ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டதன் மூலம் அவர் அரசியலுக்கு பிரவேசித்தார். அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் இணைந்து கொண்டார். 1960ஆம் ஆண்டு உடுப்பிட்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பாராளுமன்றம் சென்றார். அவர் 1968ஆம் ஆண்டு தொடக்கம் 1970ஆம் ஆண்டுவரை பிரதி சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார்.

1977ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் என்ற வரலாற்று பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். 1978ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூடடணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

1989 யூலை 13ஆம் திகதி கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அவர்களுடன் பேசச்சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். சிவசிதம்பரம் அவர்கள் நெஞ்சில் குண்டுபாய்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது அதனை கண்டித்த சிவசிதம்பரம் அவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வரை தான் யாழ்ப்பாணம் செல்லப் போவதில்லை என சபதம் எடுத்தார்.

அந்த சபதத்தை தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட பெருந்தலைவர்களில் ஒருவரான சிவசிதம்பரம் அவர்கள் தான் இறக்கும் வரை கடைப்பிடித்தார்.
( தொடரும் )

https://thinakkathir.com


Posted January 14, 2018

தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதலை உருவாக்கிய புலனாய்வு பிரிவினரும், முஸ்லீம் தீவிரவாதிகளும் –  13 

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் மீளக்குடியேறாதவரை தான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் சபதம் எடுத்திருந்த நிலையில் கொழும்பில் யூன் 5ஆம் திகதி காலமானார்.

இறுதிக்கிரியைகளை அவரின் சொந்த ஊரான கரவெட்டியில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யூன் 7ஆம் திகதி கொழும்பிலிருந்து அவரின் சடலம் வவுனியாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது வவுனி;யா அரசாங்க அதிபர் கே.கணேஸ், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமச்சந்திரன், மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஓமந்தையில் வைத்து விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பூதவுடல் விடுதலைப்புலிகளின் முழுமையான பாதுகாப்பு மரியாதைகளுடன் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு தூயவன் அரச அறிவியல்துறை கல்லூரி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரின் சடலத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கொழும்பிலிருந்து பூதவுடல் கொண்டுவரப்பட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் கொடி போர்த்தப்பட்டிருந்தது. கிளிநொச்சி அரசஅறிவியல் துறை கல்லூரி மண்டபத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடி போர்த்தப்பட்டது.
வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் என வடபகுதி முழுவதும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

அவரின் பூதவுடல் பின்னர் கரவெட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

1989ஆம் ஆண்டு யூலை 13ஆம் திகதி கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகள் சுட்ட போது அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோருடன் சிவசிதம்பரம் அவர்களும் இறந்திருந்தால் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் பட்டியலிலேயே அவரும் இருந்திருப்பார். அவர் அன்று துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்ததால் அவர் இறந்த போதும் அதன் பின்னரும் அவருக்கான அஞ்சலிகளும் கௌரவங்களும் நினைவு கூரல்களும் இடம்பெற்றன. அவருக்கான சிலை கூட கரவெட்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோருக்கு அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தில் ஒரு அஞ்சலிக் கூட்டமோ நினைவு சிலைகளோ இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் இடையில் கிளிநொச்சியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டதையும் அதனை அடுத்து தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஒற்றுமையும் இனநல்லிணக்கமும் ஏற்படுவதை சிறிலங்கா அரசாங்கமும் படைகளும், படைகளுடன் இணைந்து செயல்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்களும் விரும்பவில்லை. அதனை குழப்புவதற்கான சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்தனர்.

சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயல்பட்ட ஒசாமா முன்னணி என்ற முஸ்லீம் ஆயுதக்குழு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதல்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ் மக்கள் மீதும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

யூன் 3ஆம் திகதி வாழைச்சேனையில் இருந்த ஊடகவியலாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். அதனை தொடர்ந்து மூதூரில் இருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தை ஆயுதங்களுடன் சென்ற முஸ்லீம் குழு உடைத்து சேதமாக்கியது.

இதனை தொடர்ந்து யூன் 24ஆம் திகதி மூதூரில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய முஸ்லீம் ஆயுதக்குழுவே தூண்டி விட்டது. இதில் தமிழ் முஸ்லீம் இரு தரப்பையும் சேர்ந்த மக்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லீம் ஆயுதக்குழுவான ஒசாமா முன்னணியே இருந்தது என்ற செய்தியை வெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் பி.சற்சிவானந்தம் அவர்களின் வீட்டின் மீது யூன் 26ஆம் திகதி முஸ்லீம் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியது. அவரின் வீடும் உடமைகளும் பலந்த சேதமடைந்தது. சற்சிவானந்தமும் அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி சென்று தேவாலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். மூதூர் தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர் சற்சிவானந்தம் பிபிசி தமிழ் ஓசைக்கு வழங்கிய செவ்வியை தொடர்ந்து அவரை பழிவாங்கும் முகமாக முஸ்லீம் ஆயுதக்குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

மூதூரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து யூன் 27ஆம் திகதி ( 27.06.2002) அன்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் மக்கள் மீது அரச படைகளின் துணையுடன் முஸ்லீம் தீவிரவாத ஆயுதக்குழு தாக்குதல்களை நடத்தியது.

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் மீது முஸ்லீம் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் பெண்கள் வயோதிபர்கள் உட்பட 13பேர் படுகாயமடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர். ஒருவர் கொல்லப்பட்டார். கிரனட் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினர்.
ஓட்டமாவடி அண்டிய பகுதியில் வைத்து 10 தமிழ் பெண்களை முஸ்லீம் ஆயுதக்குழு கடத்தி சென்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

கறுவாக்கேணி கிராமத்திற்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் 10வயது தமிழ் சிறுவன் உட்பட பலர் காயடைந்தனர்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு படையினர் நகரில் நிலைகொண்டிருந்த போது முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் தமிழர்களுக்கு சொந்தமான உடமைகளுக்கு தீவைத்தனர்.

வாழைச்சேனை நகரில் தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்து கொழுத்தப்பட்டது. ஆறு கடைகள் முழுமையாக சேதமடைந்தது. ஏனைய கடைகள் பகுதி அளவில் சேதமடைந்தது.

வாழைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான கட்டிடத்தையும் முஸ்லீம் தீவிரவாத ஆயுதக்குழு தீவைத்து எரித்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னிலையிலேயே நடைபெற்றதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறினர். இதனை பயன்படுத்திக்கொண்ட முஸ்லீம்கள் தமிழர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் படையினரின் முன்னிலையில் இந்த வன்முறைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் காணப்பட்டது. முஸ்லீம் பிரதேசங்கள் ஊடாக பயணம் செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சினர். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இச்சம்பவங்களை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், தங்கவடிவேல், ஞா.கிருஷ்ணபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் ஆகியோர் வாழைச்சேனைக்கு சென்றனர். அவர்களுடன் ஊடகவியலாளர்களான உதயகுமார், நிராஜ் டேவிட் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபரும் வந்திருந்தார். கொழும்பிலிருந்து பதில் பொலிஸ் மா அதிபர் ரி.ஆனந்தராசா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழுவும் வாழைச்சேனைக்கு வந்திருந்தது.

சேதங்களை பார்வையிட்ட பின்னர் அரசாங்க அதிபர் சண்முகம் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கூட்டம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் கண்ட சம்பவங்களை தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்த போது அத்தாக்குதல்களை தடுக்க வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்டீன், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பியசேனா ஆகியோர் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவர்கள் அதனை பார்த்துக்கொண்டிருந்தனர் என பாதிக்கப்பட்ட மக்கள் இக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

பொலிஸ் சி.ஜ.டியினராக இருந்த மன்சூர், ரமீஸ், உவைஸ், பயிஸ் ஆகியோரே தமிழ் கடைகளுக்கு தீவைப்பதிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும் முன்னின்றனர் என்றும் பயிஸ் என்பவரின் துப்பாக்கி சூட்டிலேயே காண்டீபன் என்ற தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கோரியிருந்தார். ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை. சம்பவம் இடம்பெற்ற போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அனைத்து பொலிஸாரையும் இடமாற்றம் செய்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

வாழைச்சேனையில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை பார்வையிட்ட பின் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து மாலை 5மணியளவில் திரும்பிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிரானில் அதிர்ச்சி காத்திருந்தது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரி.தங்கவடிவேல், ஞா.கிருஷ்ணபிள்ளை, ரெலோ மாவட்ட பொறுப்பாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம், மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் ஊடகவியலாளர்களும் ஐந்து வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தோம். மட்டக்களப்பு நகரில் இருந்த விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இரு வாகனங்களில் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர். ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர்.

கிரான் சந்தியில் வீதிக்கு குறுக்கே நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தடிகள் பொல்லுகள் கற்களுடன் நின்றனர். எங்கள் வாகன தொடரணி செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அவ்வீதியால் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் சென்ற வாகனங்களை செல்ல விட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்ற வாகனங்களை மறித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு நகருக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், திரும்பி செல்லுங்கள் என அவர்கள் எச்சரித்தனர்.

முஸ்லீம் பிரதேசத்திற்கு ஊடாக செல்வதுதான் அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணிய எமக்கு தமிழ் கிராமம் ஒன்றின் ஊடாக தமிழ்மக்களின் பிரதிநிதிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இந்த பகுதியில் வைத்து தான் ஒரு வருடத்திற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். எம்.பிமாரை வாகனத்துடன் வைத்து எரியுங்கடா என சிலர் சத்தம் இட்டனர். பின்னர் தான் அறிந்து கொண்டோம், இந்த சம்பவத்திற்கு கிரான் பொதுமக்கள் காரணமல்ல என்றும் அவர்களை தூண்டி விட்டவர்கள் வேறு நபர்கள் என்றும் அறிந்து கொண்டோம்.


Posted January 29, 2018

கோணேஸ்வரி படுகொலையை ஞாபகப்படுத்திய விசேட அதிரடிப்படை அதிகாரி – 14

வாழைச்சேனையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை ஏற்பாடு செய்து விட்டு திரும்பிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் மாவட்ட அரசாங்க அதிபரையும் மட்டக்களப்பு நகருக்கு திரும்பி செல்ல விடாது கிரானில் தடுத்தது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார? என தெரிந்த போதிலும் அதை வெளியில் சொல்ல யாரும் தயாராக இருக்கவில்லை.

வீதியை தடைசெய்து நின்ற மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட அரசாங்க அதிபர் சண்முகம் அமைதியாக தனது வாகனத்தில் இருந்தார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முதல் தான் அரசாங்க அதிபர் சண்முகத்தை தமது முகாமுக்கு அழைத்த விடுதலைப்புலிகள் அவரை கட்டி வைத்து அடித்து வீடியோவும் எடுத்திருந்தனர். இதனால் அவர் சில காலமாக உளவியல் ரீதியில் மிக நொந்த நிலையிலேயே காணப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் சண்முகமும் ஒருவர்.

இதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச்சிறந்த நிர்வாக அதிகாரியாகவும் எந்தவித ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒரு உத்தமமனிதராக திகழ்ந்த மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த எம்.அந்தோனிமுத்து 08ஆம் திகதி ஒக்டோபர் 1987 அன்று வந்தாறுமூலையில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டார். கல்குடாவில் அகதிகளை பார்வையிட்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.அந்தோனிமுத்து, உட்பட வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் கொல்லப்பட்டனர். அவ்வழியால் சென்ற பொதுமக்கள் 5 பேரும் கொல்லப்பட்டதுடன் 12பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் மாவட்ட அரசாங்க அதிபருடன் சென்றிருந்த உணவுகட்டுப்பாட்டாளராக அப்போது பணியாற்றிய செல்வின் ( தற்போது நோர்வேயில் இருக்கிறார் ) படுகாயமடைந்திருந்தார். இவரின் வலது கை விரல்கள் துண்டாடப்பட்டன.

இந்த தாக்குதலில் மாவட்ட அரசாங்க அதிபரின் வாகனத்தை தொடர்ந்து வந்த மட்டக்களப்பு இராணுவ கட்டளை அதிகாரி நிமால் சில்வாவும் கொல்லப்பட்டார். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சண்டை தொடங்கி மூன்றாவது நாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பில் பணியாற்றிய அரசாங்க அதிபர்களில் ஊழலற்ற மிக நேர்மையான அதிகாரியாக அந்தோனிமுத்து திகழ்ந்தார். 1981.09.16 தொடக்கம் அவர் கொல்லப்பட்ட 1987.10.08 ஆம் திகதிவரை சுமார் 6 வருடங்கள் அரசாங்க அதிபராக பணியாற்றினார். இதற்கு முதல் உதவி அரசாங்க அதிபராக மேலதிக அரசாங்க அதிபராக சுமார் 15வருடங்கள் மட்டக்களப்பில் பணியாற்றினார். ஊர்காவற்துறையை பிறப்பிடமாக கொண்ட அவருக்கு இலங்கையில் எந்த பாகத்திலும் ஒரு துண்டு காணி நிலம் கூட இருந்ததில்லை. அரச ஊழியருக்கான சம்பளத்தில் எப்படி ஒரு காணியை வாங்கி வீடு கட்;ட முடியும் என அவர் தன் நண்பர்களிடம் சலித்து கொள்வார். அவர் இறந்த பின் அவரின் மனைவியும் மகளும் நல்லூரில் வாடகை வீடு ஒன்றிலேயே தங்கியிருந்தனர்.

அப்படி பட்ட நேர்மையான தமிழ் அதிகாரியை மட்டக்களப்பு மாவட்டம் இழந்திருந்தது. அவருக்கு பின்னர் வந்த அரசாங்க அதிபர்களில் சண்முகம் நேர்மையான அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
கிரானில் வீதியை மறித்திருந்த மக்களை அகற்றி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்க அதிபரையும் மட்டக்களப்புக்கு அழைத்து செல்ல விசேட அதிரடிப்படையினர் தயாராக இருந்தனர். ஆனால் படையினரின் பலத்தை வைத்து மக்களை அங்கிருந்து அகற்றுவதை பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க அதிபர் சண்முகமும் விரும்பவில்லை.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அங்கு தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒரு ஆலோசனையை வழங்கினார். திரும்பி ஓட்டமாவடி ஊடாக மன்னம்பிட்டி சென்று அங்கிருந்து மகா ஓயா வழியாக அம்பாறை சென்று மட்டக்களப்பு நகருக்கு வரலாம் என அவர் ஆலோசனை கூறினார். சரி என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துக்கொண்டனர்.

அரசாங்க அதிபரின் வாகனத்தில் ஜோசப் பரராசசிங்கமும் ஊடகவியலாளர்களான நிராஜ் டேவிட், வேதநாயகம் ஆகியோர் பயணம் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவடிவேலுவின் வாகனத்தில் நானும் ஊடகவியலாளர் உதயகுமாரும் பிரசன்னாவும் பயணம் செய்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை தனியான வாகனத்தில் வந்திருந்தார். இந்த மூன்று வாகனங்களுக்கும் பாதுகாப்பாக விசேட அதிரடிப்படையினரின் வாகனம் வந்திருந்தது.

மாலை ஆறரை மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மன்னம்பிட்டியை நோக்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் புறப்பட்டன. ஓட்டமாவடி மன்னம்பிட்டியை கடந்து அங்கிருந்து மகாஓயா வீதிக்கு செல்ல இரவு 10மணிக்கு மேலாகி விட்டது.

அன்று காலை உணவிற்கு பின்னர் நண்பகல் யாரும் உணவு உண்ணவில்லை, எல்லோருக்கும் கடும் பசி மகாஓயா வீதியில் சிங்கள கிராமம் ஒன்றில் சிறிய கடை ஒன்றில் ஏதாவது சிற்றுண்டி உண்ணலாம் என வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

எல்லோரும் இறங்கி அந்த கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த வாங்கில் உட்கார்ந்திருந்தோம். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த விசேட அதிரடிப்படை அதிகாரி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்து என்னை தெரியுமா சேர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை பார்த்து கேட்டார். தெரியவில்லையே என ஜோசப் பதிலளித்தார்.  சேர் நீங்கள் தான் எனக்கு எதிராக சாட்சி சொன்னீர்கள், ஞாபகமில்லையா என அந்த விசேட அதிரடிப்படை அதிகாரி கேட்ட போது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது.

இவ்வளவு நேரமும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தவன் இந்த நடுக் காட்;டு வழியில் சிங்கள கிராமத்தில் வைத்து இதை கேட்கிறானே என அச்சமாக இருந்தது.

1997 மே 17ஆம் திகதி தனது வீட்டில் இருந்த கோணேஸ்வரி என்ற இளம்பெண்ணை விசேட அதிரடிப்படையினர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர் என்றும் பாலியல் பலாத்காரக்குற்றத்தை மறைப்பதற்காக அவர் மீது குண்டை வீசி அவரின் உடலை சிதைத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்திடம் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் ஜனாதிபதி சந்திரிக்காவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

சர்வதேச மன்னிப்பச்சபை உட்பட மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு வந்ததுடன் விசேட அதிரடிப்படையினரே இக்கொலையை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன என்றும் இது தொடர்பான குற்றவாளிகளை கண்டு பிடிக்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியை கோரியிருந்ததுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த செய்தி சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

இதன் பின்னர் கல்முனை நீதிமன்றில் விசேட அதிரடிப்படையினர் மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரரராசசிங்கம், கோணேஸ்வரி; படுகொலை சம்பவ செய்தியை வெளியிட்ட சண்டே ரைம்ஸ் பத்திரிகையாளர் செல்வநாயகம் ஆகியோர் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த பகுதி முகாமில் இருந்த விசேட அதிரடிப்படையினரே இக்கொலையை செய்ததாக அப்பிரதேச மக்கள் தமக்கு வழங்கிய முறைப்பாடு தெரிவித்திருந்தனர் என ஜோசப் பரரராசசிங்கம் நீதிமன்றில் சாட்சியமளித்தார். இந்த வழக்கில் பிரதான சந்தேக நபராக இருந்தவரே மட்டக்களப்பு விசேட அதிரடிப்படை முகாமுக்கு பொறுப்பாதிகாரியாக இருக்கிறார் என்ற விடயமும் அவர் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார் என்பதும் அப்போதுதான் எமக்கு தெரிந்தது.

என்னைத்தெரியுமா என கேட்டு நீதிமன்றில் ஜோசப் பரராசசிங்கம் சாட்சி சொன்ன விடயத்தை ஞாபகப்படுத்திய அந்த விசேட அதிரடிப்படை அதிகாரி சற்றுநேரம் நின்று பேசி விட்டு விசேட அதிரடிப்படை முகாம் உள்ள பகுதிகள் ஊடாகவே நாம் செல்ல வேண்டும், இந்த பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு நான் அறிவித்திருக்கிறேன். அவர்கள் நாங்கள் செல்லும் போது வீதியை திறந்து விடுவார்கள் என கூறிவிட்டு புறப்படுவோம் சேர் என கூறிவிட்டு வாகனத்தில் ஏறிக்கொண்டார்.

இந்த நேரத்திலா இவன் இதனை ஞாபகப்படுத்த வேண்டும் என தனது வாகனத்தில் ஏறிய ஜோசப் பரராசசிங்கம் சலித்தவாறு கூறினார்.

காலை தொடக்கம் மட்டக்களப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய இவரா கோணஸ்வரி படுகொலையின் பிரதான சந்தேக நபர் என அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.

மகாஓயாவிலிருந்து புறப்பட்டு அம்பாறை சென்று அங்கிருந்து ஒலுவில் அக்கரைப்பற்று காரைதீவு, கல்முனை களுவாஞ்சிக்குடி ஆரையம்பதி வழியாக மட்டக்களப்பு நகரை சென்றடைய அதிகாலை 4மணி ஆகிவிட்டது. இந்த வீதிகள் இரவு வேளையில் மூடப்படுவது வழக்கமாகும்.

ஓவ்வொரு முகாமிலிருந்தவர்களும் வாகன தொடரணி சென்ற வேளையில் வீதித்தடைகளை அகற்றி வீதி ஓரத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள்.

களுவாஞ்சிக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளையையும் ஆரையம்பதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவடிவேலுவையும் விட்;ட பின்னர் மட்டக்களப்பு நகரில் உள்ள ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இல்லத்தில் அவரை பாதுகாப்பாக சேர்த்த பின்னர் அந்த விசேட அதிரடிப்படை அதிகாரி தனது முகாமுக்கு சென்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற தனது பொறுப்பை அந்த அதிகாரி மிக நேர்த்தியாக செய்திருந்தார்.

நாம் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததில் திருப்தியடைந்தாலும் இன்னொரு பக்கம் அன்றைய பயணம் மனதிற்கு வேதனையாகவே இருந்தது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் மக்களை தூண்டிவிட்டு அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சம்பவம் எவ்வளவு துர்ப்பாக்கியமானது என வேதனைப்படத்தான் முடிந்தது.

கிரானில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்பது வீதியை மறித்து நின்ற அப்பாவி கிரான் மக்களுக்கு தெரியாது. அவர்கள் வெறும் அம்புகளாகத்தான் அங்கு காட்சி அளித்தார்கள்.

இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்புக்கு செல்ல விடாது திருப்பி அனுப்பியதன் மூலம் எதனை சாதித்தார்கள்?

சில மாதங்களுக்கு முதல்தான் கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இணைந்து செயல்படுவோம் என உறுதி எடுத்து கொண்டனர்.

ஆனால் மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

யாராலும் புரிந்து கொள்ள முடியாத சம்பவங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றன. தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயல்பட்ட சிலர் விடுதலைப்புலிகளுக்கு மிக நெருக்கம் அடைந்தனர். அவர்களில் முக்கியமானவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மோனகுருசாமி. இவரை விடுதலைப்புலிகள் எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கொண்டுவந்தனர் என்ற விடயங்களை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.

( தொடரும்)

https://thinakkathir.com


 மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பிளவிற்கு வித்திட்ட சம்பவங்கள்-  15

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சமாதானம் நிலவிய காலத்தில் மக்களால் புரிந்து கொள்ளமுடியாத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக மட்டக்களப்பில் தான் அதிக சம்பவங்கள் நடைபெற்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தலைமையுடன் நெருக்கம் அடையும் காட்சிகள் இடம்பெற்றன. ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களான ராசன் சத்தியமூர்த்தி, ஆர்.மோனகுருசாமி, மற்றும் அலிசாகிர் மௌலானா ஆகியோர் இதில் முக்கியமானவர்களாகும்.

இந்த மூவரும் ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கிற்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் ஆகும்.

ஆர்.மோனகுருசாமி ஏறாவூரைச்சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்து பின்னர் செங்கலடி உதவி அரசாங்க அதிபராக பணியாற்றினார். அமைச்சர் தேவநாயகத்தின் நிழலாக செயற்பட்ட ஒருவர். அரச அதிகாரியாக இருந்த போதிலும் தான் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர் என வெளிப்படையாக செயற்படுபவர். 1977ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமிழீழத்திற்காக ஒருமித்த ஆதரவை வழங்கிய காலம். கல்குடா தொகுதி தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய அனைத்து தொகுதிகளிலும் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை வெற்றிபெறச்செய்தனர். ஆனால் கல்குடா தொகுதியில் மட்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட கே.டபிள்யூ.தேவநாயகம் வெற்றி பெற்றார். தேவநாயகத்தை வெற்றி பெற செய்வதற்காக தீவிரமாக செயல்பட்டவர்களில் மோனகுருசாமி முக்கியமானவராகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் 1992ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் இளம் அதிகாரிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அவர்கள் மத்தியில் பேசிய அரசாங்க அதிபர் மோனகுருசாமி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது கிழக்கு மக்களுக்கு ஒரு சாபக்கேடு என்றும் அதன் பாதிப்புக்கள் பற்றி நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள் என்றும் கூறினார். வடக்கு கிழக்கு இணைந்து இருக்கும் வரை உங்களில் ஒருவரால் வடக்கு கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளராகவோ அல்லது மாகாண அமைச்சு செயலாளராகவோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களாகவோ வரமுடியாது. அந்த பதவிகளுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள். வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபை தனியாக இயங்கினால் மட்டும் தான் உங்களில் ஒருவர் அம்மாகாணத்தின் பிரதம செயலாளராக வரமுடியும் என இளம் அதிகாரிகள் மத்தியில் பிரதேசவாத நச்சுவிதையை விதைத்தார்.

வெளிப்படையாகவே பிரதேசவாதத்தை பேசி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் தன்னை முதன்மை படுத்த முற்படுபவர். 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை வேட்பாளர் யோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்டது. அந்த துண்டுபிரசுரம் மட்டக்களப்பு மாவட்ட செயலக போட்டோ பிரதி இயந்திரத்திலிருந்தே பிரதி எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கம் பதவிக்கு வந்த உடன் இவர் கொழும்புக்கு இடமாற்றப்பட்டார்.

பின்னர் ஆளும் கட்சியினரை பிடித்து மீண்டும் 2000ஆம் ஆண்டு அரசாங்க அதிபராக பதவி ஏற்ற போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தலையீட்டால் ஒரு வருடத்தில் மீண்டும் கொழும்புக்கு இடமாற்றப்பட்டார்.

எப்படியாவது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் வரவேண்டும் என விடாது முயற்சி செய்த மோனகுருசாமி சமாதான ஒப்பந்த காலத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை தளபதி கருணாவுடனும் ஏனைய அரசியல் பிரிவு தலைவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

அரசாங்க அதிபராக இருந்த சண்முகத்தை விடுதலைப்புலிகள் தங்கள் முகாமுக்கு அழைத்து அவரை கட்டி வைத்து அடித்த சம்பவம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அந்த வேளையில் மட்டக்களப்பை விட்டு இடமாற்றம் பெற்று செல்லுமாறு விடுதலைப்புலிகள் சண்முகத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனாலும் அரசாங்கம் சண்முகத்தை மட்டக்களப்பிலிருந்து இடமாற்றவில்லை.

மீண்டும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மோனகுருசாமியை கொண்டுவருவதாக இருந்தால் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு சம்மத கடிதம் கொடுத்தால் காரியத்தை சாதிக்கலாம் என்பதை மோனகுருசாமி விடுதலைப்புலிகளிடம் கூறியதை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், தங்கவடிவேல், கிருஷ்ணபிள்ளை ஆகியோரை அழைத்து மோனகுருசாமியை அரசாங்க அதிபராக நியமிப்பதற்கான சம்மத கடிதத்தை வழங்குமாறு விடுதலைப்புலிகள் பணித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர் என அனைவராலும் அறியப்பட்ட மோனகுருசாமியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே சிபார்சு செய்யும் அவலம் மட்டக்களப்பில் நடந்தேறியது. மோனகுருசாமியை அரசாங்க அதிபராக நியமிக்குமாறு கடிதம் எழுதி கையொப்பம் இட்ட மூவரும் கொழும்புக்கு சென்று உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சரை நேரடியாக சந்தித்து கையளித்தனர்.  இதனையடுத்து 19.09.2002 அன்று மீண்டும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மோனகுருசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் கருணா புலிகள் பிளவைத் தொடர்ந்து 27.03.2004 அன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி உத்தியோகபூர்வ காரில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது பிள்ளையாரடியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. அதில் காயமடைந்த அவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பதவியிலிருந்து விலகி கொழும்பில் தங்கியிருந்த பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் பிள்ளையானின் கட்சியில் இணைந்து தேர்தல்களிலும் போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை.

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி கருணாவுடன் நெருக்கமடைந்த இவர் போன்றவர்களே கருணா விடுதலைப்புலிகள் பிளவிற்கு வித்திட்டனர்.

அதேபோன்று ராசன் சத்தியமூர்த்தி 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர். மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தி 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்குதமிழ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவராக விடுதலைப்புலிகளுடன் நெருக்கமடைந்தார்.

பின்னர் விடுதலைப்புலிகளால் மட்டக்களப்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் நபராக காட்சி அளித்தார். கொழும்புக்கு விடுதலைப்புலிகளை அழைத்து செல்வது தொடக்கம் விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டால் அவர்களை பிணை எடுப்பது வரை ராசன் சத்தியமூர்த்தியே முன்னிட்டு செய்தார். விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை செய்யும் சமகாலத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ தளபதியுடன் மிக நெருக்கமான நண்பராகவும் திகழ்ந்தார். மட்டக்களப்பில் வெசாக் கொண்டாட்டம் மற்றும் இராணுவ கொண்டாட்டங்களுக்கான நிதி உதவி வழங்குவது தொடக்கம் அனைத்து உதவிகளையும் அவர் செய்து வந்தார். இராணவத்தினருடன் மிக நெருக்கமாக செயற்பட்ட சமகாலத்தில் விடுதலைப்புலிகளுடனும் நெருக்கமாக இருந்த ஒருவராக ராசன் சத்தியமூர்த்தி காணப்பட்டார்.

சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு தடவை மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு மீனகம் அல்லது தேனகத்தில் நடைபெறுவது வழமை. மோனகுருசாமி, ராசன் சத்தியமூர்த்தி ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் நெருக்கம் அடைந்திருப்பது பற்றி பத்திரிகையாளர்கள் கருணாவிடம் கேள்வி எழுப்பினர்.

விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக காலம் காலமாக செயற்பட்டவர்களை இப்போது உங்களுக்கு அருகில் வைத்திருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அவர்களை வைத்து தான் சில விடயங்களை செய்யக் கூடியதாக இருக்கிறது. கொழும்புக்கு எங்கள் பெடியளை அழைத்து செல்ல வேண்டும் என்றால் யார் வருகிறார்கள். ராசன் சத்தியமூர்த்திதான் வானுடன் வருகிறார். போராளிகள் கைது செய்யப்படுகின்ற போது நீதிமன்றில் பிணை எடுப்பதற்கு யாரும் முன்வருவதில்லை, ராசன் சத்தியமூர்த்தியே உடனடியாக அந்த இடத்தில் நிற்கிறார். நாங்கள் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறோம் என மிக சாதாரணமாக கருணாவின் பதில் வந்தது.

ராசன் சத்தியமூர்த்தி போன்றவர்களை மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகள் பயன்படுத்திக் கொண்டனரா அல்லது கருணா போன்ற தளபதிகளை ராசன் சத்தியமூர்த்தி போன்றவர்கள் பயன்படுத்திக்கொண்டனரா என்பது 2004 பிளவின் போது தெரியவந்தது.

ராசன் சத்தியமூர்த்தி 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராக கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தல் நடைபெறவதற்கு முதல் 2004 மார்ச் 30ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். என்னதான் அரசியல் கொள்கை வேறுபாடு இருந்தாலும் ராசன் சத்தியமூர்த்தி செயல்திறன் மிக்க ஒருவர். எந்த பணியை கொடுத்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பவர். மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவராக அவர் இருந்த காலத்தில் விபுலானந்த மணிவிழா நடைபெற்ற போதும் பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெற்ற போதும் அனைத்தையும் திறம்பட ஏற்பாடு செய்த பெரும்பங்கு ராசன் சத்தியமூர்த்திக்கே உண்டு.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் அலிசாகிர் மௌலானாவும் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை தளபதி கருணாவுடன் மிக நெருங்கிய நண்பரானார்.

2003ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி தரவையில் நடைபெற்ற மாவீர்நாள் நிகழ்வுக்கு ஆர்.மோனகுருசாமி, ராசன் சத்தியமூர்த்தி, அலிசாகிர் மௌலானா ஆகிய மூவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்தது. ன்

2003 டிசம்பர் 9ஆம் திகதி கிளிநொச்சியில் நடந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைக்கு எதிரான சக்திகள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமடைவது பற்றி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தமிழ்செல்வன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். முக்கியமாக மோனகுருசாமி மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது பற்றியும் அந்நியமனத்திற்கான சிபார்சு கடிதத்தை தாமே வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது பற்றியும் அவர் நாசுக்காக அங்கு தெரிவித்தார்.

தமிழ்செல்வன் சிரித்தவாறு பார்ப்போம் என பதிலளித்தார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவடிவேல் ஆகியோரை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடனான முதலாவது சந்திப்பிற்கு பின்னர் ஆனந்தசங்கரி கிளிநொச்சிக்கு செல்வதை தவிர்த்து வந்தார். முதலாவது சந்திப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையிலான மனக்கசப்புக்களும் இடைவெளிகளும் அதிகரித்து வந்தன.

இந்த வேளையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வகிபாகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்த போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எவ்வாறு தமிழீழ விடுதலைக்கு உந்து சக்தியாகவும் எழுச்சியை உருவாக்குவதற்கு களமாக இருந்ததோ அதே போன்று கிழக்கு பல்கலைக்கழகமும் தன் பங்களிப்பை செய்ய தவறவில்லை.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களையும் மக்களையும் அணிதிரட்டி பொங்கு தமிழ் நிகழ்ச்சியை நடத்துவதற்கு களம் அமைத்து கொடுத்தது யாழ். பல்கலைக்கழக சமூகமாகும். அதேபோன்று கிழக்கில் இராணுவ மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகள் நிறைந்திருந்த போதிலும் மட்டக்களப்பு நகரிலும் வந்தாறுமூலையிலும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்ச்சியை நடத்துவதற்கு களம் அமைத்து கொடுத்தவர்கள் கிழக்கு பல்கலைக்கழக சமூகமாகும்.

அதே கிழக்கு பல்கலைக்கழகமே தமிழீழ விடுதலைப்புலிகளின் பிளவுக்கும் பிரதேசவாதத்திற்கும் வித்திட்டது என்ற கசப்பான உண்மைகளையும் மறக்க முடியாது. அந்த சம்பவங்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்

( தொடரும் )

https://thinakkathir.com


 

தமிழீழம் கிடைத்தால் கிழக்கை சேர்ந்தவர் ஜனாதிபதியாக முடியுமா? கிழக்கு மாணவனின் கேள்வி – 16

கிழக்கு பல்கலைக்கழகம் பொங்கு தமிழ் போன்ற எழுச்சிகளுக்கு களம் அமைத்து கொடுத்தது மட்டுமன்றி மட்டக்களப்பின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் கலைவடிவங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் களமாகவும் விளங்கி வருகிறது.   மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலுடன் அது துன்பமோ மகிழ்ச்சியோ இரண்டற கலந்த வரலாறு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் மட்டக்களப்பு தொடக்கம் வாழைச்சேனை வரையான சுமார் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அடைக்கலம் புகுந்த இடமும் இந்த கிழக்கு பல்கலைக்கழகம் தான்.

கிழக்கு பல்கலைக்கழகம் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை கொண்ட அகதிமுகாமாக மாறியது. அந்த மக்களுக்கு உணவு தொடக்கம் அனைத்து வசதிகளையும் வழங்குவதில் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரி.ஜெயசிங்கம், ( தற்போது உபவேந்தராக இருப்பவர்) வைத்தியகலாநிதி சிவலிங்கம், ஆகியோர் இரவு பகலாக உழைத்தனர்.

இராணுவம் அந்த முகாமை சுற்றிவளைத்த போது அந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றவர்கள் இந்த மூவரும் தான். 05.09.1990 அன்று கொம்மாதுறை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரும், மட்டக்களப்பு நகரில் இருந்த முனாஸ் தலைமையிலான இராணுவ புலனாய்வு பிரிவினரும், மோகன் தலைமையிலான புளொட் இயக்கத்தினரும், மஜீத் தலைமையிலான முஸ்லீம் ஊர்காவல் படையினரும் அகதி முகாமை சுற்றிவளைத்தனர்.

அங்கிருந்த 60ஆயிரம் மக்களில் 15க்கும் 45வயதிற்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள் 158பேரை தேர்ந்தெடுத்து பஸ்களில் ஏற்றிச் சென்று நாவலடி இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் மறுத்திருந்தனர். ஆனால் அகதி முகாமிற்கு வந்து அப்பாவி பொதுமக்களை கைது செய்து சென்றது யார் என்ற விபரங்களை ஆதாரங்களுடன் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி த.ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் 1994ல் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.   கல்வி நடவடிக்கைகளில் மட்டுமன்றி மட்டக்களப்பின் சமூக நலனிலும் கிழக்கு பல்கலைக்கழகம் அக்கறையுடன் செயற்பட்டது.

1981ஆம் ஆண்டு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய கட்டிடத்தில் மிகக்குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை கிழக்கு பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்திற்கு உயர்த்துவதற்கு உழைத்தவர்களில் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், கலாநிதி ஜெயசிங்கம், முக்கியமானவர்களாகும்.

ஓற்றுமையாக இருந்த கிழக்கு பல்கலைக்கழகம் என்ற தேன் கூட்டில் 1995ஆம் ஆண்டு நடந்த உபவேந்தர் தெரிவுடன் பிரதேசவாதம் என்ற முதலாவது கல் வீசப்பட்டது. ஆரம்பத்தில் சிறிது சிறிதாக புகைந்து கொண்டிருந்த பிரதேசவாத தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

பேராசிரியர் சந்தானம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு பல்கலைக்கழக பேரவை மூவரின் பெயர்களை சிபார்சு செய்திருந்தது. பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், கலாநிதி ரகுராகவன் ஆகியோரின் பெயர்களை கிழக்கு பல்கலைக்கழக பேரவை சிபார்சு செய்திருந்தது.

மட்டக்களப்பை சேர்ந்த பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களை உபவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மட்டக்களப்பை சேர்ந்த கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, கலாநிதி யுவி தங்கராசா, கலாநிதி திருச்செல்வம் உட்பட சிலர் இருந்தனர்.

ஆனால் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முடிவு இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பல்கலைக்கழக பேரவையால் சிபார்சு செய்யப்பட்டவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள், மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என இவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

பல்கலைக்கழக பேரவையின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவை பெரிய அளவில் வெகுஜன போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்த பிரச்சினை கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் மட்டுமல்லாது மட்டக்களப்பு எங்கும் பரவியது.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களை பகிஷ்கரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு எங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டுபிரசுரங்கள் சிலவற்றில் படுமோசமான பிரதேசவாதமும் காணப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் இந்த பிரச்சினையால் இரண்டாக பிளவு பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் செந்தில்மோகன் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். ஆனால் செயலாளர் கெனடி விஜயரத்தினம் பேரவை தனது முடிவை மீளப்பெற்று தகுதியானவர்களை உள்வாங்க வேண்டும் என கோரியிருந்தார்.
மாணவர்களின் போராட்டங்களால் கிழக்கு பல்கலைக்கழகம் இயங்கமுடியாத நிலைக்கு சென்றிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்ற பிரதேசவாதம் தலைதூக்கி இருந்தது.

மட்டக்களப்பு பொது அமைப்புக்களும் உபவேந்தர் தெரிவில் மட்டக்களப்பை சேர்ந்த பேராசிரியர் இராசேந்திரம் சேர்க்கப்படாமை குறித்து கண்டங்களை தெரிவித்திருந்தன.
கிழக்கு பல்கலைக்கழக பிரச்சினையாக அன்றி மட்டக்களப்பின் முக்கிய பிரச்சினை ஒன்றாக இது மாறியிருந்தது.

இந்நிலையில் யுவி தங்கராசா, திருச்செல்வம், மகேஸ்வரன் போன்ற விரிவுரையாளர்கள் நேரடியாக விடுதலைப்புலிகளிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்து கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்களை கடும் தொனியில் எச்சரித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு நீங்கள் தான் காரணம் என அறிகிறோம். இனிமேலும் அவ்வாறு நடந்தால் நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்திருந்தார்.  கிழக்கு பல்கலைக்கழக விடயங்களில் விடுதலைப்புலிகள் நேரடியாக தலையிடும் சம்பவங்கள் தீவிரமடைந்தன.

கிழக்கு பல்கலைக்கழக பேரவை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை இரத்து செய்து மீண்டும் மூவரின் பெயரை அறிவித்திருந்தது. பேராசிரியர் இராசேந்திரம், பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உபவேந்தராக பேராசிரியர் இராசேந்திரம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் முதல் தடவையாக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வருகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பேராசிரியர் இராசேந்திரம் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் மட்டக்களப்பு மக்களும், கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் எதிர்பார்த்தது போல அவரின் சேவை அமைந்ததா என்பது விமர்சனத்திற்கு உரியது.  ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரதேசவாதம் என்ற நச்சுவிதை தாராளமாக வளர்ந்தது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்த மோதல், யாழ்ப்பாண மட்டக்களப்பு பிரதேச மோதல் அல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மேட்டுக்குடிகளுக்கும், மட்டக்களப்பில் உள்ள தமிழ் மேட்டுக்குடிகளுக்கும் இடையில் பதவி மற்றும் சுகபோகங்களுக்கான மோதலே யாழ்ப்பாண மட்டக்களப்பு பிரதேச மோதலாக சித்தரிக்கப்பட்டது

உண்மையில் மட்டக்களப்பில் உள்ள பாமரமக்கள் இராசேந்திரத்திற்கு உபவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்றோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பாமர மக்கள் மனோ சபாரத்தினத்திற்கு உபவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்றோ போராடவில்லை. இரு தரப்பிலும் உள்ள மேட்டுக்குடிகளே தங்கள் பதவி சுகபோகங்களுக்காக பிரதேசவாத நச்சுவிதையை பல்கலைக்கழகத்தில் விதைத்தனர்.

பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல அதுவரை காலமும் பிரதேசவாத சிந்தனைகள் எதுவும் இன்றி தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள்ளும் பிளவுகளையும் பிரதேசவாதத்தையும் இந்த மேட்டுக்குடி சிந்தனை வாதிகளும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்களை புத்திஜீவிகளென அறிவித்து கொண்டவர்களுமே வளர்த்தனர்.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவையும் பிரதேசவாதத்தையும் உருவாக்குவதற்கு கிழக்கு பல்கலைக்கழகமும் பிரதான காரணியாக இருந்தது

வழமையாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஓரு ஆசிரியர் சங்கம் தான் இருக்கும். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இருந்த ஆசிரியர் சங்கத்திலிருந்து சிலர் பிரிந்து ஐக்கிய ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பை யுவி தங்கராசா, திருச்செல்வம், வர்ணகுலசிங்கம் போன்றவர்களே உருவாக்கினர்.  இந்த இருதரப்பும் விடுதலைப்புலிகளிடம் சென்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே ஈடுபட்டிருந்தனர்.

வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைமையின்  நேரடி கண்காணிப்பில் இயங்கிய மனோ மாஸ்ரர் அற்புதன் மாஸ்ரர் ஆகியோரிடம் மனோ சபாரத்தினம், ரவீந்திரநாத் போன்றவர்கள் சென்று முறைப்பாடு செய்வதும், கரிகாலன் விசு போன்றவர்களிடம் யுவி தங்கராசா, திருச்செல்வம், வர்ணகுலசிங்கம் போன்றவர்கள் சென்று முறைப்பாடு செய்வதும் வழக்கமான செயல்களாகின.
கிழக்கில் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்ற பிரசாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலமட்டங்களிலும் வளர்ந்து வந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் பொங்குதமிழ் நிகழ்ச்சியை நடத்தியதை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் பொங்குதமிழ் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது

இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது பொங்குதமிழ் நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் பொங்குதமிழ் என்ற பெயரில் தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுப்பபட்டது

பொங்குதமிழ் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் வைத்த பெயர். அதேபெயரில் ஏன் கிழக்கில் நடத்த வேண்டும், கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் தனித்துவமாக நாம் நடத்தலாமே என கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, பாலசுகுமார் போன்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து தனித்துவமாக நிற்கவேண்டும் என்ற போக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த சிலரிடம் மேலோங்கி காணப்பட்டது.

இந்நேரத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்ற போது கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் சில விரிவுரையாளர்களும் தனியாக பேருந்து ஒழுங்கு செய்து அங்கு சென்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பொங்குதமிழ் நிகழ்ச்சி முடிந்த பின் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றவர்கள் உடனான ஓரு சந்திப்பை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சியில் உள்ள தூயவன் அரசஅறிவியல் கல்லூரி மண்டபத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வுpடுதலைப்புலிகளின் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் உட்பட விடுதலைப்புலிகளின் துறைசார் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த சந்திப்பில் மாணவர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர். விருத்தாசலம் என்ற மாணவன் கேள்வி ஒன்றை எழுப்பினான்.  தமிழீழம் கிடைத்தால் கிழக்கை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வீர்களா? அல்லது தலைமை என்பது வடக்கின் கையில் தான் இருக்குமா? தமிழீழத்திலும் கிழக்கை புறக்கணிக்கும் செயல்கள் தொடருமா?

இந்த கேள்வி தனி ஒரு விருத்தாசலம் என்ற மாணவனிடமிருந்து வந்த கேள்வியாக பார்க்க முடியாது. கிழக்கில் உள்ள பெரும்பாலானவர்களின் அடிமனங்களில் எழுந்து கொண்டிருக்கும் கேள்விதான் அது.

இந்த சந்தேகங்களை காலம் காலமாக இருந்து வரும் தமிழ் தலைமைகள் தீர்க்க தவறியதே யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ற பிரதேசவாதத்தை வைத்து சிலர் பிழைப்பு நடத்த முற்படுகின்றனர்.

இந்த துயரத்தின் உச்ச கட்டத்தை 2004ல் கருணா பிளவின் போது மட்டக்களப்பில் காணமுடிந்தது.

( தொடரும் )

https://thinakkathir.com


 ஆனந்தசங்கரி மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு – 17

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாக விளங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரிக்கும் செயலாளர் ஆர்.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசிங்கம், ஆகியோருக்கும் இடையில் கொள்கை ரீதியாக மோதல்கள் அதிகரித்து வந்தன.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை முதல் தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அதில் ஆனந்தசங்கரி கலந்து கொண்டார். அதன் பின் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கள் எதிலும் ஆனந்தசங்கரி கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக அறிக்கைகளை விட்டு வருகிறார் என்றும் அந்த அறிக்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவருகிறார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும் கொள்கைக்கும் எதிராக செயற்படும் வி.ஆனந்தசங்கரியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினருக்கும் இடையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்புக்களிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனந்தசங்கரியின் நிலைப்பாடு தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கிளைகள் வி.ஆனந்தசங்கரியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.

வி.ஆனந்தசங்கரி மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அவரை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானங்களை மாவட்ட கிளைகள் எடுத்திருந்தன.
2003 நவம்பர் 30ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ஆனந்தசங்கரிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படலாம் என கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.

பரபரப்பான சூழலில் நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மத்திய செயற்குழுவை சேர்ந்த சுமார் 36 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பமான நேரம் தொடக்கம் அங்கு பத்திரிகையாளர்கள் பலரும் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர். கட்சி ஆதரவாளர்களும் வெளியில் காத்திருந்தனர்.  காலை அமர்வில் மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்டதால் சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் இந்த சூழலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

முதல் அமர்வு முடிந்து மதிய உணவுக்காக இடைவேளை விட்ட போது கூட்டத்திலிருந்து வெளியில் வந்த ஆனந்தசங்கரியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டதா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். என்ன என்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தார்களா என்றுதானே கேள்கிறீர்கள்? என்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது. அப்படி கொண்டுவந்தாலும் சட்டப்படி அது செல்லுபடியற்றதாகும். என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது என சொல்லி விட்டு ஆனந்தசங்கரி சென்று விட்டார்.

வெளியில் வந்த சம்பந்தனை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களை பார்த்து இன்னும் கூட்டம் முடியவில்லை, மாலையும் கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூறிவிட்டு சம்பந்தனும் சென்று விட்டார்.
இரண்டாவது அமர்வு மாலை 5மணிக்கு ஆரம்பமானது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி மீது நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார், 2001ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக செயற்படுகிறார். தமிழர்களின் அபிலாசைகளுக்கு முரணாக செயற்படுகிறார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. தமிழ் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளை கண்டித்தும் விமர்சனம் செய்தும் தொடர்ச்சியாக அறிக்கை விட்டு வருகிறார் என்றும் ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என்றும் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது கலந்து கொண்ட 36 உறுப்பினர்களில் 25பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை பதவியிலிருந்து ஆனந்தசங்கரியை நீக்க வேண்டும் என 25 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 11 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பின் 11.6பிரிவின் கீழ் செல்லுபடி அற்றதென ஆனந்தசங்கரி வாதிட்டார்.

ஆனால் கட்சியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், சிரேஷ்;ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம், நிர்வாக செயலாளர் என்.ரவிராஜ் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கட்சியின் யாப்பிற்கு அமைவாகவே நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. நாடாளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் மற்றும் யாழ். மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பாளர் ரி.குலசிங்கம் உட்பட சிலர் மீது ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

கலவரங்களுடன் கூட்டம் முடிவடைந்தது. வெளியில் நின்ற பத்திரிகையாளர்களுக்கு ஆனந்தசங்கரி தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணை செல்லுபடியற்றது என செவ்வி வழங்கினர். சம்பந்தன் தலைமையிலான தரப்பினர் ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாகவும், எனவே ஆனந்தசங்கரி தலைவர் பதவியை இழக்கிறார் என்றும் கூறினர்.

அன்று தொலைக்காட்சி வானொலி இரவு பிரதான செய்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு பற்றிய செய்தியே முக்கியத்துவம் பெற்றிருந்தது. மறுநாள் அனைத்து தமிழ் பத்திரிகைகளும் இதனை தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தன.

தமிழ் மக்களின் தனிப்பெரும் கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பாரிய பிளவாக இது கருதப்பட்டது. 1972ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் கட்சி தலைவர் எஸ்.தொண்டமான் உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் தனிப்பெரும் கட்சியாக மக்கள் அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.

அதன் பின்னர் பல இயக்கங்கள் உருவாகி அவை அரசியல் கட்சிகளாக பதிவு செய்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழ் மக்களால் அங்கீகாரம் பெற்ற கட்சியாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக திகழ்ந்தது.

ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து பின்னர் அரசியல் கட்சியாக மாறிய தமிழ் கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகவில்லை.

இதனால் தான் 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு தலைமை தாங்கும் தகுதியையும் பெற்றிருந்தது.

எம்.சிவசிதம்பரம் தலைவராக இருக்கும் வரை இத்தகைய குழப்பங்கள் ஏற்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் அவர்களை விடுதலைப்புலிகள் கொழும்பில் வைத்து சுட்டு படுகாயம் அடைந்த போதிலும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ விமர்சனம் செய்து பேசியதும் கிடையாது. அறிக்கை விட்டதும் கிடையாது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் கூட தமிழீழ விடுதலைப்புலிகளை விமர்சித்தது கிடையாது.

ஆனால் எம்.சிவசிதம்பரம் அவர்கள் காலமானதை தொடர்ந்து தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆனந்தசங்கரியின் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்களே அதிருப்தி அடைந்திருந்தனர்.  இதன் விளைவாகவே நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டம் முடிந்த பின் ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியை சிலர் விடுதலைப்புலிகளிடம் அடகு வைக்க நினைக்கின்றனர் என்றும் அதற்கு தான் ஓரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியே தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முடியும் என்றும் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மறைமுகமாக ஆனந்தசங்கரி சாடியிருந்தார்.

இதனையடுத்து புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான மத்திய செயற்குழு கூட்டம் டிசம்பர் 21ஆம் திகதி அம்பாறை திருக்கோவிலில் நடைபெறும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் மத்தியகுழு உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

இதனை அறிந்த வி.ஆனந்தசங்கரி கொழும்பு நீதிமன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆர்.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசிங்கம் ஆகியோர் கட்சியை தவறாக வழிநடத்துவதாகவும் தலைவரான தனது அனுமதி இல்லாமல் மத்திய செயற்குழு கூட்டத்தை பொத்துவிலில் நடத்துவதென அறிவித்திருக்;கிறார்கள் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய செயற்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடைவிதிப்பதாக டிசம்பர் 17ஆம் திகதி அறிவித்திருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பின் படி மத்திய செயற்குழு கூட்டத்தை தலைவரான எனது அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது என அந்த மனுவில் ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார். தன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது என்றும் நவம்பர் 30ஆம் திகதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தான் நிராகரிப்பதாகவும் அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை நான் நிராகரிக்கிறேன். தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் ஆர்.சம்பந்தனுக்கும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசிங்கத்திற்கும் உத்தரவிட்டிருந்தனர் என்றும் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே இவர்கள் இருவரும் செயற்படுகின்றனர் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இந்த மனுமீதான விசாரணையை மீண்டும் டிசம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரியின் அனுமதி இன்றி மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் அம்பாறை பொத்துவிலிலோ அல்லது வேறு இடத்திலோ கூட்டத்தை நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழ் பத்திரிகையான தினகரன், ஆங்கிலப்பத்திரிகையான டெயிலி நியூஸ் சிங்கள பத்திரிகையான தினமின ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

( தொடரும் )

https://thinakkathir.com


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட முதலாவது பிளவு- தமிழரசுக்கட்சிக்கு தடை போட்ட ஆவரங்கால் சின்னத்துரை -18

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியின் அனுமதி இன்றி கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் அவருக்கு தெரியாமல் தீர்மானங்களை எடுக்க கூடாது என்றும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது.

இந்நீதிமன்ற உத்தரவு ஆனந்தசங்கரிக்கு பெரும் சாதகமாகவே இருந்தது. நெருக்கடியான சூழலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முதல்நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை ஜனவரி 31ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் வி.ஆனந்தசங்கரி தனியாக சந்தித்தார். மாலை 6.30மணி தொடக்கம் இரவு 8மணிவரை சுமார் ஒன்றரை மணிநேரமாக இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது. பாராளுமன்றம் எந்த வேளையிலும் கலைக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மறுநாள் பெப்ரவரி முதலாம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தை முன்னிட்டு பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலை 10மணிக்கு ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2மணிவரை நடைபெற்றது. பாராளுமன்றம் கலைக்கப்படலாம் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 7பேர் கொண்ட குழு இக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

இக்குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, செயலாளர் ஆர்.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம், உட்பட பொருளாளர் மற்றும் அம்பாறை வவுனியா மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இதில் உள்ளடக்கப்பட்டனர். ஆனந்தசங்கரி வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்பார்க்கப்பட்டது போல ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 12ஆவது பாராளுமன்றத்தை பெப்ரவரி 07ஆம் திகதி நள்ளிரவு கலைத்தார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அன்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

ஜே.வி.பியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்காவிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பியுடன் சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என பரவலாக அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி சந்திரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்திருந்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுத்தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக கூட்டம் ஒன்றை பெப்ரவரி 9ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு அலுவலகத்தில் நடத்தினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் அனுமதி இன்றி அவருக்கு தெரியாமல் கட்சி எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் எழுந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலாக தமது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசாவும் ரெலோவின் செயலாளர் இந்தியகுமார் பிரசன்னாவும் முன்வைத்தனர். தமது கட்சி எதிர்வரும் தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் என இக்கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டியிட முடியாவிட்டால் தமது கட்சியின் சின்னமான வெளிச்சவீட்டு சின்னத்தில் போட்டியிடலாம் என ரெலோவின் செயலாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டு சுயேட்சைக்குழுவாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பு வெளிச்சவீட்டு சின்னத்தையே பயன்படுத்தியது. யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளையும் மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தையும் அச்சுயேச்சைக்குழு பெற்றிருந்தது. இதனால் இச்சின்னமும் மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தது. இதன் பின்னர் ரெலோ இயக்கம் தமது அரசியல் கட்சியின் சின்னமாக வெளிச்சவீட்டை தேர்தல் ஆணையாளரிடம் கோரி பெற்றுக்கொண்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவது என்ற பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

ஆனந்தசங்கரிக்கு சாதகமாக கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கட்சி இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செயதனர்.

இக்கட்டான இச்சூழ்நிலை பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆர்.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களை சந்தித்து பேசினர். இச்சந்திப்பு பெப்ரவரி 16ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை ஆனந்தசங்கரி தடுத்து வைத்திருப்பதால் அதற்கு பதிலாக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றியும் வேட்பாளர் தெரிவு பற்றியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளருடன் கலந்துரையாடல்களை நடத்தினர்.

கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் சம்பந்தன் மற்றும் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவுக்கு ஆனந்தசங்கரி பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களை சந்தித்து விட்டு வந்த பின்னர் பெப்ரவரி 18ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஆனந்தசங்கரி தலைமை தாங்கினார்.

நீதிமன்றில் எதிரும் புதிருமான மனுக்களை தாக்கல் செய்திருந்த ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஆகியோர் பரபரப்பான சூழலில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாக ஆனந்தசங்கரி ஏனையவர்களுடன் முரண்பட்டு கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் தத்தமது கட்சிகளிலிருந்து வேட்பாளர்களை தெரிவு செய்யலாமே ஒழிய இந்த நான்கு கட்சிகளுக்கு வெளியில் இருப்பவர்கள் வேட்பாளர் தெரிவில் தலையிட முடியாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கட்சிகளின் வேட்பாளர்களுடன் பொதுப்பட்டியல் ஒன்றை விடுதலைப்புலிகள் சமர்ப்பிப்பார்கள் அதனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என இணக்கம் காணப்பட்டது. கிளிநொச்சியில் தமிழ்செல்வனுடன் நடந்த கூட்டத்தில் ஆனந்தசங்கரி கலந்து கொள்ளவில்லை. கிளிநொச்சியில் எடுத்த முடிவை ஆட்சேபித்த ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலையிடுவதை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு முதல் தடவையாக தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட போது வேட்பாளர்களை நான்கு கட்சிகளும் தான் தெரிவு செய்தன. விடுதலைப்புலிகளின் தலையீடு இருக்கவில்லை, இப்போது விடுதலைப்புலிகளின் தலையீடு அதிகரித்திருப்பதாக ஆனந்தசங்கரி காட்டமாக தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தெரிவான பொதுப்பட்டியலை ஏற்றுக்கொண்டால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இதனால் அக்கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஆனந்தசங்கரி அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பும் ஆனந்தசங்கரிக்கு சாதகமாகவே அமைந்தது. கொழும்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பை வழங்கியிருந்தது. இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் உதயசூரியன் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

2001ஆம் ஆண்டு நான்கு கட்சிகள் சேர்ந்து ஒப்பந்தம் செய்து உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் விழுந்த முதலாவது உடைவு இதுவாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சின்னமாக திகழ்ந்த உதயசூரியன் சின்னத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த பிளவும் விரிசலும் சந்திரிக்கா போன்ற சிங்கள தலைவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பல கட்சிகளாக பிளவு பட்டிருந்த தமிழ் கட்சிகள் 2001ஆம் ஆண்டு ஒரு அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் தேர்தல் போட்டியிட்டு கிடைத்த வெற்றி சந்திரிக்கா போன்ற சிங்கள தலைவர்களுக்கு உவப்பாக இருக்கவில்லை.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுதியான அரசியல் தலைமை ஒன்று இருப்பதை சிங்கள தலைமைகள் ஒருபோதும் விரும்பியது கிடையாது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. ரெலோவின் வெளிச்சவீட்டு சின்னம், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சைக்கிள் சின்னம் ஆகியவற்றில் போட்டியிடலாம் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினரும் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தையே விரும்பினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அக்கட்சியை பிரித்தெடுத்து சென்றதன் விளைவு தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1970ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடு இல்லாமல் இருந்த போதிலும் அக்கட்சி தொடர்ந்து தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1977ஆம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியில் மட்டும் இக்கட்சியில் காசி ஆனந்தன் போட்டியிட்டிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்திற்கும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செ.இராசதுரைக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் முரண்பாடுகள் காரணமாக இராசதுரையை வீழ்த்துவதற்காக அமிர்தலிங்கம் அமைத்த வியூகத்தில் காசி ஆனந்தன் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு தோல்விடைந்தார்.

1977ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தது. ஆனால் மட்டக்களப்பு தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம், வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பிரசாரம் செய்தனர்.

யோசப் பரராசசிங்கம் போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரான இராசதுரைக்காக பிரசாரம் செய்த அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த மாவை சேனாதிராசா உட்பட தமிழ் இளைஞர் பேரவையினர் காசி ஆனந்தனுக்காக பிரசாரம் செய்தனர்.

இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரையை மட்டக்களப்பு மக்கள் தெரிவு செய்தனர்.

ஆனந்தசங்கரியின் முட்டுக்கட்டையை அடுத்து 2004ல்   தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்த போது லண்டனில் இருந்த ஆவரங்கால் சின்னத்துரை மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார்.

நானே தமிழரசுக்கட்சியின் தலைவர், எனவே எனது அனுமதியில்லாமல் தமிழரசுக்கட்சி போட்டியிட முடியாது, அக்கட்சி சின்னத்தை பயன்படுத்த முடியாது என அறிவித்தார். தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா சமர்ப்பிக்கும் வேட்புமனுக்களை நிராகரிக்கும் படியும், தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யுமாறும் தேர்தல் ஆணையாளருக்கு ஆவரங்கால் கே.சின்னத்துரை கடிதம் எழுதினார்.

லண்டனில் இருந்த ஆவரங்கால் சின்னத்துரையின் கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் மேலும் சிக்கலை தோற்றுவித்திருந்தது

( தொடரும் )

https://thinakkathir.com/

 https://yarl.com/forum3/topic/199383-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply