மாநில அந்தஸ்தை இழந்தது ஜம்மு – காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிவதாக அறிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார் அமித்ஷா. ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் தனி யூனியன்பிரதேசமாக இருக்கும். அதற்கு சட்டமன்றம் இருக்காது.

சட்டப்பிரிவு 370 எப்படி அமுலுக்கு வந்தது?

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமுலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 – இதன் அர்த்தம் என்ன?

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370இன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிர, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.

இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் ‘நிரந்தர குடியாளர்கள்’ யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அரசமைப்பில் இருந்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது சாத்தியமா?

சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்றினை 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பில் இருந்து அதனை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறியது.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து கூறுகையில், “இது நீதிமன்றத்தின் வேலையா? சட்டப்பிரிவு 370-ஐ வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்திடம் கேட்க முடியுமா? இது நீதிமன்றத்தில் வேலை இல்லை” என்று கூறினார்.

அதே 2015ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியது. “இடைக்கால ஏற்பாடு” என்று அரசமைப்பின் சட்டப்பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நிரந்தரமானது என்று தெரிவித்திருந்தது.

சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது பிரிவு 35A- வை பாதுகாக்கிறது. மற்ற மாநிலங்களை மாதிரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ஓரளவுக்கு அதன் இறையாண்மையை பராமரித்து வந்ததாக கூறியது.

அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?

2014 மக்களவை தேர்தலின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நீண்ட காலமாக இந்த சட்டப்பிரிவை எதிர்த்து வந்த பாஜக, பின்னர் இது குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது. ஆனால் தற்போது இந்த மசோதாவை கொண்டுவந்திருக்கிறது.

சட்டப்பிரிவு 370 என்பது அரசமைப்பை உருவாக்கியவர்களால் செய்யப்பட்ட பிழை என்றே பாஜக கருதுகிறது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை பாஜகவின் நிலைக்கு எதிராக உள்ளன.

“இந்தியாவையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 370 சட்டப்பிரிவு இணைக்கிறது. 370 தொடர வேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது” என்று 2014ஆம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருந்தார்.

http://www.thinakaran.lk/2019/08/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/38226/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply