சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த சிறப்பு சட்டப்பிரிவை மாற்றுவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும் முயற்சித்த வரலாறு உண்டு.
இந்தச் சட்டப் பிரிவு ஏன் கொண்டுவரப் பட்டது, ஏன் இது சர்ச்சைக்குள்ளானது?
இந்தியா சுதந்திரம் பெற்றது மற்றும் இரண்டாகப் பிரிந்து போனது – என்ற கடந்த காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் டோக்ரா ஆட்சி
மகாராஜா ரஞ்சித் சிங்கின் ராணுவத்தில் 1809-ல் சேர்ந்தார் குலாப் சிங். அவருடைய சேவையைப் பாராட்டும் வகையில் 1822ல் ஜம்மு பகுதி ராஜாவாக அவர் நியமிக்கப்பட்டார்.
அவர் 1846 மார்ச் மாதத்தில் பிரிட்டிஷ் அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை ரூ. 75 லட்சத்துக்கு வாங்கினார்.
அது அமிர்தசரஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் டோக்ரா ஆட்சியின் தொடக்கமாக அது இருந்தது.
“அனைத்து மலைகள் மற்றும் சிகரங்களை மகாராஜா குலாப் சிங் மற்றும் அவருடைய வாரிசுகளுக்கு சுதந்திரமான அனுபவ உரிமையை பிரிட்டிஷ் அரசு ஒப்படைக்கிறது” என்று அந்த ஒப்பத்தில் ஒரு விதி கூறுகிறது.
1925ல் ஜம்மு காஷ்மீரில் ஹரி சிங் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் சவால்களும் தொடர்ந்தன.
ஹரி சிங் ஓர் இந்து. அவருடைய ஆளுகைக்கு உள்பட்ட பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.
பாரபட்சம் காட்டப்படுவதாக காஷ்மீர் முஸ்லிம்கள் கருதினர்.
“அரசின் செயல்பாட்டில் ஒவ்வோர் அம்சத்திலும், பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்துக்களுக்குச் சாதகமாக சட்டங்கள் வெளிப்படையாக வடிவமைக்கப் படுகின்றன” என்று வரலாற்றாளர் அலெய்ஸ்டெயிர் லாம்ப் எழுதிய “காஷ்மீர் – சர்ச்சையான சட்டமரபு 1846-1990” புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
“உதாரணமாக, 1934 வரையில், பசுக்களைக் கொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம்; அதன்பிறகு குறைந்த அபராதத்துக்கு உரிய தண்டனையாக அது இருந்தது. ஆட்சி நிர்வாகத்தில் பண்டிட்கள், காஷ்மீர் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் சர்ச்சைக்குரிய அளவுக்கு ஊழல்வாதிகளாகவும், கருமிகளாகவும் இருந்தனர்.”
“20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் வளர்க்கப்பட்ட கல்வி முறை நடைமுறையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இல்லாமல் போனது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள இந்துக்களுக்கு மட்டும் உரிமங்கள் வழங்கப்பட்டன. அரசின் ஆயுதப் படைகளில் கவனமாக முஸ்லிம்கள் தவிர்க்கப்பட்டனர். உயர் அதிகாரப் பதவிகள் டோக்ரா ராஜ்புத் மக்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தன.”
அந்த காலக்கட்டத்தில் தான் ஜம்மு காஷ்மீரின் முதலாவது பெரிய அரசியல் கட்சி, முஸ்லிம் மாநாட்டுக் கட்சி (பின்னாளில் தேசிய மாநாட்டுக் கட்சி) உருவானது. அதன் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லா போராட்டங்களை முன்னெடுத்தார். காஷ்மீரை விட்டு வெளியேறு என்ற போராட்டம் தொடங்கப்பட்டதில் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
அது 1946 ஆம் ஆண்டு. அமிர்தசரஸ் ஒப்பந்தம் 100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருந்தது.
1846 ஆம் ஆண்டில் குலாப் சிங்கிங்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு விற்கப்பட்டது செல்லத்தக்க சட்டம் அல்ல என்று ஷேக் அப்துல்லா அறிவித்தார்.
இந்திய சுதந்திரச் சட்டம் 1947-ன் படி 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது.
“அந்தச் சட்டத்தின் பிரிவு 6 (a) வின்படி, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்பது இணக்க ஒப்பந்தம் மூலமானதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய நாடுகளுடன் சேரும் மாநிலங்கள், தங்களுக்கான விதிமுறைகளை குறிப்பிடலாம் என்று அந்த விதி கூறுகிறது” என்று நல்சர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் பைஜான் முஸ்தபா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
“எனவே, நுட்பமாகப் பார்த்தால், இணைப்புக்கான ஒப்பந்தம் என்பது இறையாண்மை கொண்ட இரண்டு நாடுகள், ஒன்றாக செயல்படுவதற்கான ஓர் ஒப்பந்தத்தைப் போன்றது தான்.”
மன்னராட்சி மாநிலங்களுக்கு மூன்று தெரிவு வாய்ப்புகள் தரப்பட்டன – சுதந்திர நாடாக இருப்பது, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்பவையாக அவை இருந்தன.
“ஆகஸ்ட் 1947ல் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் நிலப்பரப்பில் ஐந்தில் இரண்டு பங்கு அளவுக்கு வைத்திருந்த, 99 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்த 565 மன்னராட்சி மாகாணங்களின் ஆட்சியாளர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்ற புதிய நாடுகளில் எந்த நாட்டுடன் சேருவது என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தது” என்று சர்ச்சையில் காஷ்மீர் என்ற புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா ஸ்ச்சோபீல்டு எழுதியுள்ளார்.
ஹைதராபாத் ஜுன்னாஹத் மற்றும் ஜம்மு காஷ்மீரை தவிர மற்ற மன்னராட்சி மாகாணங்கள் அனைத்தும் இதுகுறித்து முடிவு எடுத்துவிட்டன.
எந்த நாட்டுடன் சேருவது என்பதை ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர் மகாராஜா ஹரி சிங்கால் முடிவு செய்ய முடியவில்லை. ஜம்மு காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
உறுதியான முடிவு எடுக்கப்படாத அந்தச் சூழ்நிலையில் “வர்த்தகம், பயணம், தகவல் தொடர்பு சேவைகளை தடையின்றி தொடர்வதற்கு” பாகிஸ்தானுடன் அவர் “நிகழ்நிலை” ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
அதுபோன்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.
காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், ‘இந்தியாவே திரும்பிப் போ’ முழக்கம் – களத்தில் இருந்து
காஷ்மீரில் ஒரு தமிழர் பிரதமரானது எப்படி?
`இணைப்புக்கான சட்டபூர்வ ஆவணம்’
1947 அக்டோபரில், பாகிஸ்தானின் வட கிழக்கு மாகாணத்தில் இருந்து பஷ்டூன் மலைவாழ் மக்கள் காஷ்மீரில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர்.
மகராஜா ஹரி சிங் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அவருக்கு எதிராக போராடுவார்கள் என்று பாகிஸ்தானில் ஒரு தரப்பினர் நம்பினர்.
அது மகாராஜாவுக்கு சவாலான காலக்கட்டம். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மலைவாழ் மக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அவர் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் குறைந்து கொண்டே போனது.
அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுன்ட்பேட்டனை மகாராஜா அணுகி, இந்தியாவின் உதவியைக் கோரினார்.
இணைப்புக்கான ஆவணம் கையெழுத்திடப்பட்டு, பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டன.
“இணைப்புக்கான எனது ஒப்பந்தத்தின் விதிகள் இந்தச் சட்டம் அல்லது இந்திய சுதந்திர சட்டம் 1947-ல் எந்தத் திருத்தங்கள் செய்தவன் மூலமாகவும் மாற்றப்பட மாட்டாது. இந்த ஆவணத்தின் துணை ஆவணமாக என்னால் ஏற்கப்படாத வகையில் அவ்வாறு மாற்ற முடியாது” என்று அந்த ஆவணத்தின் 5வது பிரிவு கூறுகிறது.
“இந்த இணக்க ஒப்பந்த ஆவணத்தின் எந்த அம்சமும், எதிர்கால இந்திய அரசியல்சாசனத்தை ஏற்பதற்கான உத்தரவாதத்தை அளிப்பதாகவோ அல்லது அதுபோன்ற எந்த எதிர்கால அரசியல் சாசனத்தின் கீழ் இந்திய அரசுடன் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்வதைத் தடுப்பதாகவோ இருக்காது” என்கிறது 7வது பிரிவு.
அரசியல் சட்டம் 370 என்பது ஜம்மு காஷ்மீருடன் இந்தியா செய்து கொண்ட அரசியல்சாசன உடன்படிக்கை.
“இந்திய அரசியல்சாசனத்தின் 370வது சட்டப்பிரிவில் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீர் மக்கள் பலருக்கு, 1947க்குப் பிறகு இந்தியாவின் அங்கமாக மாறிவிட்ட மன்னராட்சி மாகாணத்தின் அடிப்படையில், வேறுபட்ட அம்சமாக இருந்தது. நேரு மற்றும் அவருடைய அரசுக்கும் காஷ்மீரின் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் அவ்வளவு காலத்துக்கு முன்பு ஏற்பட்ட இணக்கத்தின் விளைவாக அது இருந்தது.”
இணைப்புக்கான ஒப்பந்தத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டதில் இருந்து இதுவரையில் சூடான விவாதத்துக்குரிய பொருளாக இது இருந்து வருகிறது.
மகாராஜா கட்டாயத்தின் பேரில் செயல்பட்டிருக்கிறார் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. பாகிஸ்தானுடன் நிகழ்நிலை ஒப்பந்தம் அமலில் உள்ள சூழ்நிலையில் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை அவருக்குக் கிடையாது என்று பாகிஸ்தான் கூறுகிறது.
”இந்தியா நிதானத்துடன் செயல்பட வேண்டும்” – சீனா கருத்து
காஷ்மீர் வரலாற்றுக் குறிப்புகள்: தேசப் பிரிவினை முதல் இப்போது வரை
பொது வாக்கெடுப்பு
1948ல் இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கொண்டு சென்றது. பிறகு போர்நிறுத்தம் ஏற்படும் வகையில் ஐ.நா. சமரசம் செய்தது. தங்கள் வசம் இருக்கும் பகுதிகளில் இரு தரப்பினரும் அவரவர் கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளலாம் என்று அப்போது அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தந்தை ஹரி சிங்கிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை கரண் சிங் ஏற்றுக் கொண்டார். அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை விவாதிக்க இந்திய அரசியல்சாசன அமர்வில் ஷேக் அப்துல்லாவும் அவருடைய சகாக்களும் இணைந்தனர்.
1950ல் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இந்த விஷயமும் அரசியல்சாசன அமர்வின் முன்பு விவாதிக்கப்பட்டது.
“சில விஷயங்களில் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இந்தியக் குடியரசுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது இதில் இருந்து வெளியேறுவதா என்ற நிலைப்பாட்டை முடிவு செய்வதற்கு அந்த மக்களுக்கு வாய்ப்பு அளிப்பது என்று உறுதிமொழி அளிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அமைதியும், இயல்புநிலையும் திரும்பிய பிறகு, பாரபட்சமற்ற நிலையில் பொது வாக்கெடுப்பு நடப்பதற்கான உத்தரவாதம் ஏற்பட்ட பிறகு, இதுகுறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜம்மு காஷ்மீர் பற்றி கேட்டபோது, அரசியல்சாசன அமர்வின் உறுப்பினர் கோபாலசுவாமி அய்யங்கார் கூறியுள்ளார்.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் உறுதி அளித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் பல்வேறு காரணங்களால், ஜம்மு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போய்விட்டது.
“சிறப்பு ஏற்பாட்டை இந்தியாவின் பாஜக தலைமையிலான அரசு இப்போது ஒருதலைபட்சமாக கிழித்தெறிந்துவிட்டது. 1950களுக்குப் பிறகு காஷ்மீரின் அரசியல்சாசன அந்தஸ்தில் இது மிகப் பெறிய மாற்றம்” என்று ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் கூறியுள்ளார்.
370வது சட்டப் பிரிவில் திருத்தங்கள்
“நடைமுறை சாத்தியப்படி பார்த்தால், இதற்கு பெரிய அர்த்தம் எதுவும்கிடையாது. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு கடந்த காலங்களில் பெருமளவு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு அதற்கான அரசியல் சட்டமும், கொடியும் இருந்தன. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலங்களையும் விட பெரிய அளவில் தன்னாட்சி அதிகாரம் எதுவும் கிடையாது” என்று ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் கூறியுள்ளார்.
அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டிருப்பதால் “காஷ்மீர் பள்ளத்தாக்கில் புவியியல் அமைப்பு ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று பலரும் அச்சம் தெரிவிக்கி்றனர் – உடனடியாக பெரிய தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று அவர் குறிப்பிடுகிறார்.
அரசியல் சட்டப் பிரிவு 370-ல் முந்தைய காங்கிரஸ் அரசுகள் பல மாற்றங்களைச் செய்துள்ளது என்றும், அதில் மிகப் பெரிய நடவடிக்கை 1954ல் வெளியான குடியரசுத் தலைவரின் உத்தரவுதான் என்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், அரசியல்சாசன விவகாரங்களில் நிபுணருமான ராகேஷ் திவிவேதி கூறுகிறார்.
ஜம்மு காஷ்மீர் அரசின் வசமிருந்த ஏறத்தாழ எல்லா விஷயங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் 1954 குடியரசுத் தலைவர் உத்தரவு அமைந்திருந்தது என்கிறார் அவர்.
இந்திய கூட்டாட்சி அமைப்பில், அரசியல் சாசனம் மூன்று வகையான பட்டியல்களைக் குறிப்பிடுகிறது – மத்திய அரசின் பட்டியல், மாநில அரசின் பட்டியல், மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவாக இருக்கும் பட்டியல். மத்திய அரசின் பட்டியல் என்பது, அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்து சட்டங்கள் இயற்றும் தனிப்பட்ட அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. மாநில அரசின் பட்டியல் என்பது, மாநிலங்களே சட்டம் இயற்றிக் கொள்ளும் விஷயங்கள் பற்றியது. மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பட்டியல் என்பது மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து சட்டம் இயற்றும் விஷயங்கள் சம்பந்தப்பட்டது.
மத்திய அரசின் பட்டியலில் 97 விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. 1954 குடியரசுத் தலைவரின் உத்தரவு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
1954 குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் கொண்டு வரப்பட்ட சட்டப் பிரிவு 35 ஏ – பரவலான விவாதத்துக்கு உள்ளானது. மாநிலத்தின் “நிரந்தரக் குடிமக்களை” வரையறுத்தல் மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை சலுகைகள் அளிப்பதை முடிவு செய்வதற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இதன் மூலம் அனுமதி அளிக்கப் படுகிறது.
“இந்திய அரசியல்சாசனத்தில் 395 பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் 260 பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். முன்பு ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மற்றும் சடார்-இ-ரியாசட் பதவிகள் இருந்தன. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், அது முதல்வர் மற்றும் ஆளுநர் என மாற்றப்பட்டன. சடர்-இ-ரியாசட் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப் படுபவராகவும், ஆளுநர்கள் நியமனம் செய்யப் படுபவர்களாகவும் இருந்தனர். இப்போது ஜம்மு காஷ்மீரின் ஆளுநர்கள் நியமனம் செய்யப் படுகின்றனர்” என்று ராகேஷ் திவிவேதி தெரிவித்தார்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பற்றி ராகேஷ் திவிவேதி குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மன்றம் நினைவில் வைத்திருக்கும் என நினைக்கிறேன். அரசியல் சட்டப் பிரிவு 370 என்பது சில அதிகாரம் மாற்றும் விதிமுறை ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகும். அது அரசியல் சாசனத்தின் நிரந்தரமான பகுதி அல்ல. அது அங்கமாக இருக்கும் வரையில் அந்த நிலை நீடிக்கும். உண்மையில் சொல்லப் போனால், அது மறைந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியதைப் போல, அது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்று நான் மீண்டும் கூறிக் கொள்கிறேன். எனவே சட்டப்பிரிவு 370 படிப்படியாக மாற்றப்படுவது நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் கருதுகிறோம். அது நடப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கான நடைமுறை தொடர்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
https://www.bbc.com/tamil/india-49277569
Leave a Reply
You must be logged in to post a comment.