இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று – அமைச்சர் தகவல்

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று – அமைச்சர் தகவல்

6 ஆகஸ்ட் 2019

பௌத்தம்

இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார்.

தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை இரண்டு சிறுபராய பௌத்த பிக்குகள் தன்னிடம் வழங்கியதாகவும், அது குறித்து தான் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் மாத்திரமின்றி, பல சமயங்களை சேர்ந்த மதத் தலைவர்களும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

மதத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற ஆதாரங்கள் தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

வெளிப்படையாக காண்பிக்க முடியாத ஆதாரங்களே தன்வசம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

அமைச்சர் தகவல்

தன்னிடம் இருக்கும் ஆதாரங்களின் ஊடாக, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற பௌத்த பிக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு முடியும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பல்வேறு தரப்பிற்கு தெரிவித்திருந்த போதிலும், தமக்கான நியாயம் கிடைக்கவில்லை என சிறுவயது பௌத்த பிக்குகள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் குரல் எழுப்பும் பட்சத்தில்;, அரசியல்வாதிகளின் வாக்குவங்கி குறையும் சாத்தியம் இருப்பதால், எந்தவொரு அரசியல்வாதியும் இது குறித்து கருத்து வெளியிடமாட்டார்கள் எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கிறார்.

எனினும், தான் வாக்கு வங்கியை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய அவர், அரசியலிலிருந்து வெளியேற்றினாலும் தான் நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாகவும் அவர் கூறுகிறார்.

தானமாக வழங்கப்படும் உணவை உட்கொள்ளும் பிக்குகள், அந்த அன்னதானத்தை வழங்குவோரின் பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.

அமைச்சர் தகவல்

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்த சமயத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கிறார்.

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் தன்வசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சமயத் தலைவர்கள் செய்த பாலியல் துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க கூறுகிறார்.

இதுவரை தான் அமைதியாக இருந்ததாகக் கூறிய ராமநாயக்க, இனியும் அமைதிகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49246409


 

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply