இலங்கைக்குத் தகுதி இல்லை – சுமந்திரன் நா.உ
இலங்கையின் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மிக மோசமாக இடம் பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேசப் பொறிமுறை அவசியம் என்பதை மீண்டும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
தமிழினத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இலங்கை அரசும் அதன் நீதித்துறை அலகுகளும் பாரபட்சமாக நடக்கின்றன என்பதைத் திரும்பவும் வலியுறுத்திய சுமந்திரன், அதற்கு மிகத் தெளிவான – துல் லியமான – ஆதாரம் ஒன்றையும் முன்வைத்தார். அதுவும் தற்போது நடைமுறையில் வெளிப்படுத்தப்படும் மிக மோசமான பாரபட்சம் ஒன்றையே அவர் வெளிப்படையாக அம்பலப்படுத்தினார்.
இலங்கையின் இன மோதலின் உச்சத்தில் கொடூரப்போர் கோர வடிவமாக வெளிப்பட்டது. அந்த மோசமான வன்முறையில் முதலில் களப்பலியாகியது “உண்மை’தான்.உண்மைகளை – நிஜத்தை – உலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களும் இந்தப் போரின் கொடூரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியவில்லை.
உண்மைகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஊடகவியலாளர்கள் – அவர்கள் தமிழர், சிங்களவர்கள் என்ற வேறுபாடின்றி – படுகொலை செய்ப்பட்டார்கள். ஆனால் இப்படிப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விடயம் தொடர்பான அம்சத்தில் கொழும்பு அரசின் புலன்விசாரணைப் பிரிவுகளும், நீதித்துறைகளும் எவ்வாறு பாரபட்சமாகவும் பக்கச் சார்பாகவும் நடந்து கொள்கின்றன என்பதைத் தென்னிலங்கைத் தலைவர்களை முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்வி எழுப்பினார் சுமந்திரன்.
“லஸந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்துகின்றீர்கள். பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து இராணுவத் தரப்புக்குள்ளே ஊடுருவிப் புலனாய்வு செய்கின்றீர்கள். ஆள்களைக் கைது செய்கின்றீர்கள். நீதிமன்றத்தின் முன் நிறுத்துகின்றீர்கள். குறைந்த பட்சம் கண்துடைப்புக்காகவும் ஒரு விசாரணை நடைபெறுவதாகக் காட்டுகின்றீர்கள்.
“தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்? யுத்த காலத்தில் பதினைந்து தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை ஒன்று, இரண்டு கூடிக் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் யார் தொடர்பிலும் முறையான புலன் விசாரணையோ, நீதித்துறை நடவடிக்கைகளோ எடுக்கப்படவேயில்லை.” – என்று சுட்டிக் காட்டிய சுமந்திரன், நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பிலும்,
எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்த தென்னிலங்கை எம்.பிக்களை நோக்கி ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.
“ஊடகவியலாளர்களுக்கான அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து அதிகம் பேசுகின்றீர்கள். லஸந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட பற்றி எல்லாம் அதிகம் கூறுகின்றீர்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் விவகாரத்தைப் பொறுத்த வரை கொல்லப்பட்ட டசினுக்கும் அதிகமான தமிழ் ஊடகவிலாளர்களில் ஒருவரின் பெயரை உங்களால் கூறமுடியுமா?” – என்று சுமந்திரன் கேள்வி எழுப்பிய போது இலங்கை நாடாளுமன்றம் பதிலளிக்க வழியின்றி வாய்மூடி
மெளனம் பேணியது.
உண்மையை உரைத்த குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்திலேயே நீதி செய்ய முடியாது இன ரீதியில் பாரபட்சம் காட்டுகின்றன இலங்கையின் சட்ட, ஒழுங்கு மற்றும் நீதித்துறைகள். இருண்ட யுக காலத்தின் போது படுகொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் புலனாய்வு மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் இலங்கையின் சட்டப் பிரிவுகள் அக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் ஏதும் செய்யாமல் ஓரவஞ்சனை காட்டுகின்றன. தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகளையும் “பயங்கரவாதிகளின் அழிப்பு’ ஆக அது கருதிச் செயற்படுகின்றது.
இத்தகைய புலனாய்வு மற்றும் விசாரணைத் துறையையும் நீதித்துறையும் வைத்திருக்கும் இலங்கை அரசு, யுத்தக் குற்றங்கள் விடயத்தை விசாரிக்கும் தகுதியும் ஒழுங்கும் தனது புலனாய்வுப் பிரிவுக்கும், நீதி விசாரணைப் பிரிவுக்கும் உள்ளன என்று கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலன்றி வேறில்லை.
யுத்தக் குற்றங்கள் இழைத்த தரப்புகளில் ஒன்று – அல்லது பிரதான தரப்பு – இலங்கை அரசின் அங்கமான முப்படைகளும் பொலிஸாரும்தான். அத்தகைய தரப்பே, இன ரீதியில் நடந்த யுத்தக் குற்றத்தை விசாரிப்பது என்பது குற்றமிழைத்த தரப்பை நீதிபதியாக்கும் வேலைதான். (காலைக்கதிர் – ஆசிரிய தலையங்கம் 12-01-2019)
போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! – சபையில் வலியுறுத்தினார் சுமந்திரன் எம்.பி
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.”
– இவ்வாறு சபையில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
“சர்வதேச விசாரணையால் நாட்டின் இறைமை ஒருபோதும் பாதிக்கப்படாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே பல சந்தர்ப்பங்களில் தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். அவருக்கு அந்தத் தைரியம் உள்ளதென்றால் அரசு ஏன் அஞ்சுகின்றது” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் ஏன் இன்னமும் உண்மைகளைக் கண்டறியவில்லை? கொலை செய்தவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை? சட்டத்தின் முன் ஏன் நிறுத்தப்படவில்லை?
இந்த அரசு குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மையாகும்.
தமிழர்கள் என்ற காரணத்தால் அல்லது சிறுபான்மை என்ற காரணத்தால் சட்டம் சுயாதீனமாகச் செயற்படாது உள்ளமையே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
பிரதான இரண்டு கட்சிகளும் அரசியல் நெருக்கடியில் ஈடுபட்டபோது நீதிமன்றத்தை நாடிய வேளையில் சட்ட சுயாதீனம் பற்றிப் பேசினீர்கள். உங்களின் பிரச்சினையில் சுயாதீனம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தமிழர் விடயத்தில் அதே சுயாதீனம் குறித்துப் பேச மறுக்கின்றீர்கள்? இதுவே நாமும் சர்வதேசத்தை நாடக் காரணமாகவும் அமைந்துள்ளது.
இலங்கையில் அரச தரப்புக்கும் ஆயுதப் படைக்கும் இடையில் நடைபெற்ற போரில் இரண்டு தரப்பும் குற்றம் செய்துள்ளன என்று சர்வதேச நாடுகள் கூறியுள்ளன.
எனவே, குற்றத்தில் ஈடுபட்ட தரப்பு விசாரணை நடத்த முடியாது. அது சுயாதீனம் அல்ல. ஆகவே, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்த வேண்டும்.
உண்மைகளைக் கண்டறிய வேண்டும். குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால் அது குறித்த உண்மைகளைத் தெரிவிக்க வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை, உண்மைகளை மூடிமறைக்கவே வெட்கப்பட வேண்டும்.
இந்த அரசு சட்டத்தையும் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றது என்றால் – சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தாம் நியாயமான ஆட்சியாளர்கள் என வெளிப்படுத்த வேண்டும் என்றால் போர்க்குற்ற உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்திக்காட்ட வேண்டும்” என்றார்.
Speech in parliament on January 11, 2019

Leave a Reply
You must be logged in to post a comment.