ஈழம் என்ற இறுதி அஸ்திரம்!
இலங்கையின் அக்கால தமிழிலக்கியங்களில் எமது நாட்டின் வளங்களை சிறப்பித்துக் கூறும் போது ‘ஈழம்’ என்ற பதத்தையே பலரும் பயன்படுத்தியிருக்கின்றனர். நான்கு தசாப்த காலத்துக்கு முன்னர் ‘ஈழம்’ என்ற சொல் எவருக்குமே அச்சம் தரவில்லை.
காலப் போக்கில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ‘தமிழீழம்’ என்ற இலட்சியம் முன்வைக்கப்பட்டதையடுத்தே ‘ஈழம்’ என்பது சிக்கலுக்கும் அச்சத்துக்கும் உரியதாகியது.
‘தமிழ் ஈழம்’ என்ற பதத்தையே சுருக்கமாக பலரும் ‘ஈழம்’ என்று குறிப்பிடுகின்றனர். ஈழம் என்ற இப்பதமே முப்பது வருட காலமாக பலரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
உண்மையில் ஈழம் என்பதும் தமிழீழம் என்பதும் ஒத்தபொருள் சொற்கள் அல்ல. ஈழம் என்பது முழு இலங்கையையுமே குறிக்கின்ற சொல் ஆகும்.
தமிழீழத்தையும் ஈழத்தையும் சமபொருள் கொண்ட சொற்களென பலரும் எடுத்துக் கொண்டதன் விளைவாக, இலங்கையின் பெயர்களில் ஒன்றாக விளங்கிய ‘ஈழம்’ ஏறக்குறைய மறைந்தே போனது.
விடுதலைப் புலிகளின் நீண்ட கால ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ‘ஈழம்’ என்ற சொல் எவருக்குமே அச்சம் தருவதில்லை; அதற்கான அவசியமும் இருக்கவில்லை.
‘இலங்கை’ என்ற பதத்துக்குப் பதிலாக ‘ஈழம்’ என்ற சொல்லை எவருமே தாராளமாகப் பயன்படுத்த முடியும். பாடநூல்களிலும் அச்சொல்லைக் காண முடிகின்றது. தமிழ் ஊடகங்களும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றன.
இவ்வாறிருக்கையில், இலங்கையின் அரசியலில் ஒரேயொரு தரப்பினர் மாத்திரம் ‘ஈழம்’ என்ற சொல்லை இன்னமும் மக்களுக்கு அச்சத்தை ஊட்டுவதற்காகவே பயன்படுத்தி வருவதைக் காண முடிகின்றது.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அன்றைய ஆட்சியாளர்கள் என்பது தெரிந்த விடயம். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அவர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்களே தவிர, புலிகள் என்ற பதத்தையும் ஈழ வார்த்தையையும் கைவிட்டு விடுவதற்குத் தயாரில்லை. இன்னும் கூட தங்களது அரசியலுக்காக இவ்வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.
முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தீவிரவாத இயக்கமொன்றின் பெயரையும், அவர்களது இலட்சியமான தமிழீழத்தையும் அன்றைய ஆட்சியாளர்கள் இன்னுமே கைவிடாமல் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் அரசியல் ஆதாயம்!
சிங்கள மக்களுக்கு வீணான அச்சத்தை ஊட்டுவதன் மூலம், தங்களை மீட்பர்களாகச் சித்தரித்து மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதைத் தவிர வேறு நோக்கமெதுவும் இதில் கிடையாது. எனவேதான் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதாகவும், தமிழீழத்தை உருவாக்கிக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்புகள் முயற்சிப்பதாகவும், இன்றைய அரசாங்கம் அதற்கெல்லாம் உடந்தையாகச் செயற்படுவதாகவும் மஹிந்த தரப்பினர் அடிக்கடி சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் காட்டி வருகின்றனர்.
இவ்விதம் காண்பிக்கப்பட்ட அச்சமே கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. நாடு பிளவுபடுமென்ற அச்சம், புலிகள் மீண்டெழக் கூடுமென்ற பீதி போன்ற பிரசாரங்களெல்லாம் இனவாதமாக உருவெடுத்து பொதுஜன பெரமுனவுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தன. பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வசீகரிக்க வேண்டுமென்றால் இவ்வாறான இனவாத எழுச்சியே இலகுவான வழியென்பது இலங்கையின் அரசியலில் மாற்ற முடியாத நியதி என்றாகி விட்டது.
இதேசமயம், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்தின் போது எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக ‘ஈழம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
‘ஈழம் என்பதைத் தவிர சம்பந்தனிடம் வேறு வார்த்தைகள் இல்லை’ என்றவாறாக கருத்து வெளியிட்டுள்ளார் மஹிந்த. எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தீவிரமாக வலியுறுத்தி வருகின்ற மஹிந்தவிடமிருந்து, சம்பந்தனுக்கு எதிராக ’ஈழம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மஹிந்த பயன்படுத்துகின்ற ‘ ஈழம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மஹிந்த பயன்படுத்துகின்ற ‘ஈழம்’ என்ற அச்சமானது சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் விடப் போவதில்ல. அதேசமயம் பிரிவினைக் கோரிக்கை தங்களிடம் அடியோடு கிடையாதெனவும், தமிழர்களின் நீண்ட கால அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும்படியான அரசியல் தீர்வே தங்களது விருப்பமென்றும் சம்பந்தன் வெளிப்படையாக உறுதிபடத் தெரிவித்ததன் பின்பும், மஹிந்தவிடமிருந்து ‘ஈழ அச்சம்’ வெளிப்படுத்தப்படுகின்றதென்றால் அதற்கான காரணம்தான் என்ன?
இராமாயணத்தில் இராமபிரான் பயன்படுத்தக் கூடிய அதிகூடிய சக்திமிக்க இறுதி ஆயுதமாக இராமபாணமும், பாரதத்தில் கர்ணன் பயன்படுத்தக் கூடிய வலிமை கொண்ட இறுதி ஆயுதமாக நாகாஸ்திரமும் குறிப்பிடப்படுகின்றன.
அதுபோன்றே அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ‘ஈழம்’ என்ற அஸ்திரம் அரசியல்களத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதை தாராளமாகவே காண முடிகின்றது.
நன்றி :தினகரன்
Leave a Reply
You must be logged in to post a comment.