மக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது!
நக்கீரன்
திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா? ததேகூ மட்டம் தட்டுவதற்காகவே தமிழ்த் தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி இரண்டிலும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வடக்கில் அரங்கேறியுள்ள இயற்கை அனர்த்தம் வாய்க்கு நல்ல அவலாக இருந்துவிட்டது.
நேற்றைய (புதன்கிழமை) வீச்சு நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ததேகூ என்ன செய்தது? நாடாளுமன்ற உறுப்பினர்கள் போனார்களா? எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் போனாரா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். தொலைக்காட்சிக்கு ஒத்தூதக் கூடிய ஒரு நிருபரையும் ஒரு தொண்டரையும் வைத்துக் கொண்டு தொலைக் காட்சி நெறியாளர் தனக்கு விருப்பமான கேள்விகளைக் கேட்டு தனக்கு விருப்பமான பதில்களை வரவழைத்துக் கொண்டார். இது அவரிடம் காணப்படுகிற ஒரு வியாதி.
கடும் மழை பெய்த காரணத்தால் வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நா.உறுப்பினர்கள் சுமந்திரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, மருத்துவர் சிவமோகன், சி.சிறிதரன் போன்றோர் அடங்கிய குழு பார்வையிட்டது. திங்கட்கிழமை காலை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் திங்கட்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேரில் சென்று பார்வையிட்டது.
இந்தக் கூட்டத்தில் பொது முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் இரஞ்சித் மத்தும பண்டாரவும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனும் கலந்துகொண்டார்கள். இவர்களுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சஜித் பிரேமதாச அவர்கள் வீடுகள் பாதிக்கப்பட்டட மக்களுக்கு வீடுகளை புனரமைக்கத் தலா 2 இலட்சம் தருவதாகவும் இரஞ்சித் மத்தும பண்டார பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு தலா 10000 ரூபாவும் அகில விராஜ் காரியவசம் அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணியாக வழங்குவதாகவும் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் 5 மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்களை வழங்குவதாகவும் திகாம்பரம் அவர்கள் 2மில்லியன் செலவில் உலருணவுப்பொதிகள் வழங்குவதாகவும் தெரிவித்ததார்கள்.
இப்படியான ஒரு இயற்கை அனர்த்தம் நேரும் போது இந்தப் பொது முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சுத்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்கிறது. அதற்காகத்தான் அந்த அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உதயன் பிள்ளைக்கும் அவரது ஊது குழல்களுக்கும் இது பிடிக்கவில்லை. அமைச்சர் இரஞ்சித் மத்தும பண்டார வருகை தந்ததை ஏழனமாகப் பார்த்தார்கள். எள்ளல் செய்தார்கள். இந்த மூவருக்கும் வேறு யார் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? சனாதிபதியா? அவர் நாட்டில் இல்லை. பிரதமரா? பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்குப் போகிறார். மக்கள் பிரதிநிதிகளையும் அரச ஊழியர்களையும் சந்தித்து மக்களுக்கு வேண்டிய நிவாரணம் பற்றிக் கலந்துரையாடவுள்ளார். (https://www.msn.com/en-xl/asia/asia-top-stories/pm-to-visit-northern-flood-victims/ar-BBRuhI2?li=BBJGzsi)
இடர் முகாமைத்துவ அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நேரமும் சமைத்த உணவை வழங்கி வருகிறது.
வெள்ள அழிவுகளை மதிப்பீடு செய்த பின்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மேலதிக நிவாரணம் வழங்கப்படும். இந்த அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை சட்டமாக்கியுள்ளது. அதன் கீழும் இந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இலங்கையின் எந்தப் பகுதியில் இயற்கை அனர்த்தம் நடந்தாலும் இதுதான் நடைமுறை.
அது சரி. ததேகூ அரசின் பங்காளிக் கட்சி என்று மூன்று பேரும் மூச்சுக்கு முப்பது தரம் சொன்னார்கள். பங்காளி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று இவர்களுக்குத் தெரியுமா? தமிழ் தெரியாவிட்டால் தமிழைப் படிக்க வேண்டும்!
பங்காளிக் கட்சி என்றால் ஐதேமு இல் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியோடு இருப்பது.
சிறிலங்கா முஸ்லிம் கட்சி, இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜாதிக உருமய போன்ற கட்சிகள்தான் பங்காளிக் கட்சிகள்.
ததேகூ எதிர்க்கட்சி இருக்கைகளில் இருக்கிற கட்சி. ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கிறது. காரணம் விக்கிரமசிங்க ஒரு தேவதை இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் மகிந்த இராசபக்சாவை விட நல்லவர்.
விக்கிரமசிங்கவோடு பேசலாம். குறைகளைச் சொல்லலாம். ஆனால் அதுபோல மகிந்த இராசபக்சாவோடு பேசமுடியாது.இதுதான் அரசியல் யதார்த்தம்.
அது சரி. இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று விக்னேஸ்வரன் சூளுரைத்தாரே இப்போது இராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறதே அது பற்றி ஏன் மூச்சுப் பேச்சு இல்லை?
பூ! மொத்தம் ஒன்றரை இலட்சம் உள்ள இராணுவம் 300 பேரைத்தான் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்று நிருபர் இரத்தினம் தயாபரன் எள்ளி நகையாடினார். இராணுவம் செய்த மீட்புப் பணி பற்றி மூச்சில்லை.
மகிந்தாவின் 52 நாள் ஆட்சியில் வடக்கில் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட உரூபா 368 கோடியை திறைச்சேரி திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
வடக்கில் உள்ள மின்சாரசபைக்கு 42 சிங்கள இளைஞர்களை மின்சக்தி அமைச்சர் அனுப்பி வைத்தார்.
போருக்குப் பின்னர் தமிழர் தரப்பு பலம் இல்லாது இருக்கிறது. அதனால் எம்மை எதிர்த்து நிற்கும் இரு பகையில் ஒன்றைத் துணையாகக் கொள்ள வேண்டும். இந்த உத்திக்குப் பெயர் பகைத் திறன் அறிதல். திருக்குறள் படித்தால் தெரியும்.
நெறியாளர் உதயன் பிள்ளை போன்றோர் குளிரூட்டி அறையில் இருந்து கொண்டு தாயகத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் மக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது.
அவர்களை வில்லன்களாக சித்தரிக்க முயற்சி செய்வது அவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களை அவமானப்படுத்தியது போன்றது.
தொலைக்காட்சி சரி, வானொலி சரி இரண்டும் பொழுது போக்கு ஊடகங்கள். செட்ட செய்திகள் எதுவோ அதுதான் கருப்பு ஊடகங்களுக்கு ‘நல்ல’ செய்திகள்.
Leave a Reply
You must be logged in to post a comment.