சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்!

சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் அது அவரது சுபாவம்!

நக்கீரன்

மரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிரைக் காப்பாற்ற அந்தத் தேள் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆமையொன்று அதன் உதவிக்கு வந்தது. அந்த ஆமை தேளைப் பார்த்துக் கூறியது “நணபரே! எனது முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை கரையில் கொண்டு சேர்த்து விடுகிறேன்” என்றது.  சரி என்று சொல்லி தேள் ஆமையின் முதுகில் ஏறிக் கொண்டது. ஆமை கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவுடன்  முதுகில் ஏதோ டொக் டொக் என்று சத்தம் கேட்டது. “என்ன நண்பரே? முதுகில் ஏதோ சத்தம் கேட்கிறதே” என்று ஆமை கேட்டது. அதற்குத் தேள் சொன்னது “ஒன்றுமில்லை நண்பரே உங்கள் முதுகை கொட்டிப் பார்க்கிறேன்” என்று சொல்லியது.

. “உங்களது உயிரைக் காப்பாற்றி உங்களை கரைசேர்க்க முயற்சி செய்கிறேன். நீங்களோ எனது முதுகைக் கொட்டிப் பார்க்கிறீர்கள்? இது நியாயமா” என ஆமை கேட்டது.Image result for president sirisena cashew

“அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள்! இது என்னுடைய சுபாவம்” என்று தேள் சொல்லியது.

இது நடைமுறை வாழ்க்கையிலும் காணப்படுகிறது. ஒருவருடைய நற்குணத்தால் பயன் பெற்ற ஒருவர் அதனை உதாசீனப்படுத்தலாம். அல்லது  எங்களுக்கு எதிராகவும் திரும்பலாம். அது அவர்களது இயல்பாக இருக்கிறது.  ஆனால் உதவி செய்பவரின் இயல்பு என்றுமோ மாறிவிடக் கூடாது. இதனை நாம் மறந்துவிடக் கூடாது. தீயவர்களின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு நல்லவர்கள் தங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளக் கூடாது.

இந்தக் குட்டிக் கதை இலங்கையில் வெடித்திருக்கும்  அரசியல் குழப்பத்திற்கும் அதிகாரப் போட்டிக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்  (ஐமசுமு) இருந்து அணிமாறிய அமைச்சர்  சிறிசேனாவை ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக)  தலைவர் இரணில் விக்கிரமசிங்கிதான் இரவு பகல் பாடுபட்டு சிறிசேனாவை சனாதிபதி நாற்காலியில்  உட்கார  வைத்தார்.

“நான் தேர்தலில் தோற்றிருந்தால் என்னையும் எனது குடும்பத்தையும் மண்ணில்  ஆறடி தோண்டப்  புதைத்திருப்பார்கள்” என சனவரி 08, 2015 அன்று தனது மறைவிடத்தில் இருந்து வெளிவந்த சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஒரு சர்வாதிகார ஆட்சி ஒழிந்தது”என்று சொல்லிப் பெருமிதப்பட்டுக் கொண்டார்.

இரணில் விக்கிரமசிங்கியை பிரதமர் என்று விளிக்காமல் ஐயா (Sir) என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது என்று கூறி தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

காலம் மாறியது, காட்சிகள் மாறின இந்த மாதம் 26 ஆம் நாள் இரவு 8.30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் காதோடு காதாக யார் தன்னைக் கொல்ல இருந்தார் என்று சிறிசேனா குற்றம் சாட்டினாரோ அவரைப்  பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார்!  இந்த இரண்டகத்தைப் பார்த்து உலகமே மிரண்டு போயிற்று.

ஆனால் சிறிசேனாவின் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இது வியப்பாக இருக்க முடியாது.

2014 ஆம் ஆண்டு நொவெம்பர் 21 ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நல்வாழ்வு அமைச்சருமாகயிருந்த மைத்திரிபால சிறிசேனா கட்சி மாறினார். காலையில் அலரி மாள்கையில் சனாதிபதி மகிந்த இராசபக்சாவுடன் அப்பம் சாப்பிட்ட சிறிசேனா அன்று பகல் அணி மாறினார். மகிந்த இராசபச்சாவின் ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி என்று சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இப்போது நாலு ஆண்டுகள் கழித்து  சிறிசேனா தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்கிரமசிங்கி மீது ஊழல் உட்பட பலகடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார்.

என்ன காரணம்? கதையில் வரும் தேள் போல அணி மாறுவது  சிறிசேனாவின்  சுபாவம்!  வாலையில் ஆடிய நர்த்தகி வயது வந்தாலும் காலைக் காலை ஆட்டுவாளாம். அது போல என எடுத்துக் கொள்ளலாம்.

சிறிசேனா ஒரு நாட்டுக்கட்டை. அவரது தகப்பன் போல விதானையாக இருந்தவர்.  மகிந்த இராசபக்சா போலவே சிங்கள – பவுத்த மேலாண்மைச் சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 25 ஆண்டுகள் இருந்தவர். அதன் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றியவர்.

மகிந்தா இராசபக்சாவை பிரதமராக  நியமனம் செய்தது  இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணானது எனச் சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். பிரதமர்  விக்கிரமசிங்கியை யாப்பு விதி 42 (4) இன் கீழ் பதவி நீக்கம் செய்வதாக சனாதிபதி எழுத்து மூலம் அறிவித்தார். ஆனால் அது யாப்பு விதிகளுக்கு முரணானது எனக் கூறி விக்கிரமசிங்கி ஏற்க மறுத்து  வருகிறார்.

இலங்கை  யாப்பின்  உறுப்புரை   42(4)  என்ன சொல்கிறது?

42 (4) – சனாதிபதி அவரது கருத்தின்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரைப் பிரதம அமைச்சராக நியமிக்க வேண்டும்.

சனாதிபதி மேற்கோள் காட்டிய இந்த விதி ஒரு பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர்  யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையைச்  சொல்கிறது. அது ஏற்கனவே பிரதமராக இருக்கும் (sitting prime minister) இரணிலுக்குப் பொருந்தாது. எனவே ஒரு பிரதமரைப்  பதவி நீக்கம் செய்ய 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சனாதிபதிக்கு அதிகாரம்  இல்லை.  இரணிலை பதவி நீக்கம் செய்ய  வேண்டும் என்றால்  விதி  46(2)  யை பின்பற்ற வேண்டும். அது என்ன சொல்கிறது?

46 (2)  பிரதம அமைச்சர்

(அ) சனாதிபதிக்கு முகவரியிட்டு அனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியைத் துறந்தாலொழிய, அல்லது

(ஆ) பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிந்தாலொழிய,

அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளின் கீழ்  அமைச்சரவை தொடர்ந்தும்  பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும்.

The Prime Minister shall continue to hold office throughout the period during which the Cabinet of Ministers continues to function under the provisions of the Constitution unless he –

(a) resigns his office by a writing under his hand addressed to the President; or

(b) ceases to be a Member of Parliament.

48 (2) பாராளுமன்றம், அரசாங்கக் கொள்கைக் கூற்றை அல்லது ஒதுக்கீடு சட்ட மூலத்தை  நிராகரித்தால் அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால்  அமைச்சரவை கலைக்கப்பட்டாதல் வேண்டுமென்பதுடன், சனாதிபதி 70 ஆம் உறுப்புரையின் கீழ் தமது தத்துவங்களை பிரயோகிக்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்தாலொழிய, 42,43,44 மற்றும் 45 ஆம் உறுப்புரைகளின்  நியதிகளின்படி  பிரதம அமைச்சர் ஒருவரையும், அமைச்சரவையின் உறுப்பினர்களல்லாத  அமைச்சர்களையும்  பிரதி அமைச்சர்களையும் நியமித்தல் வேண்டும்.

However, the PM can be removed if  the Cabinet of Ministers is dissolved in terms of Article 48(2) pursuant to the Statement of Government Policy or the Appropriation Bill Being defeated in Parliament  or on the passing of  a No confidence motion against the government.

எனவே மகிந்த இராசபக்சா அவர்களைப்  பிரதம அமைச்சராக நியமித்தது இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது. இதனை மேற்கு நாட்டுத் தூதுவர்கள், அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகள், மற்றும் இந்தியா, யப்பான்,  அவுஸ்ரேலியா துாதுவர்கள் விடுத்த அறிக்கையில் இலங்கை யாப்புக்கு  அமைய   இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இதில் பிரித்தானிய ஒரு படி மேலே சென்று தொடர்ந்தும் இரணில் விக்ரமசிங்காவையே பிரதமராகக் கருதுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மகிந்த இராசபக்ச  நேற்று அரசமுறைப்படி  பதவி ஏற்றுள்ள நிலையில் இன்று இரணிலை தான் பிரதமராக கருதுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பழமைலாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வாயார் நாடாளுமன்றத்தில்  இலங்கை நிலைமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துலக  சமூகம் தொடர்ந்தும் இரணில் விக்ரமசிங்கவையே பிரதமராகக் கருதுகின்றது. துரித கதியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் ஜெர்மனி ஹன்ட், “பிரதமர் இரணிலின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவைத் தவிர வேறெந்த நாடும் பிரதமராக பதவியேற்ற மகிந்த இராசபக்சாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சனாதிபதி சிறிசேனா ஆப்பிழுத்த குரங்கு போல் காட்சி அளிக்கிறார்.

இன்றைய பூகோள அரசியலில்  எந்தவொரு நாடும் தனித் தீவாக இருக்க முடியாது. அனைத்துலக நெறிமுறைகள், சம்பிரதாயங்களை அனுசரித்தே ஒரு நாட்டின்  ஆட்சி இருக்க  வேண்டும்.

இன்றைய அரசியல் சிக்கலுக்கு சனாதிபதி சிறிசேனாவே முழுக் காரணமாகும். ஐதேக, ததேகூ, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல்  சிறிசேனா சனாதிபதியாக வந்திருக்க முடியாது. இரணில் விக்கிரமசிங்கியை பதவி நீக்கியதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் அவர் ஒரு ஊழல்வாதி என்பதாகும். அப்படியென்றால் மகிந்த இராசபக்சா கறை படியாத கைகளின்  சொந்தக்காரரா? சனாதிபதி சிறிசேனா அவர்களே மகிந்தாவின் ஆட்சி ஊழல் ஆட்சி என்று பல மேடைகளில் அண்மைக் காலம் வரை வசைபாடி வந்தவர்!

சிறிசேனா சரி, மகிந்தா சரி பதவியைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். நாட்டைப் பற்றிச் சிந்தித்தால் இந்த அரசியல் கோமாளித்தனத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள்.

நாடாளுமன்றத்தை சிறிசேனா நொவெம்பர் 16 வரை ஒத்திப் போட்டதே ஆளும் கட்சியில் இருந்து உறுப்பினர்களை வளைத்துப் போடத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஐதேக இல் இருந்து  வடிவேலு சுரேஷ் (இராசாங்க அமைச்சர் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு)   விசயதாச இராசபக்சா (கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு) டினேஷ் கன்கொன்டா வேலி பாய்ந்துள்ளார்கள். மேலும் இரண்டொருவர் பாயக்கூடும்.

இதுவரை மொத்தம் 12 அமைச்சர்கள் 2 இராசாங்க அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். மொத்த அமைச்சர் தொகை கூடியது  30  ஆகும். ஏனைய பிரதி அமைச்சர்கள், இராசாங்க அமைச்சர்கள் தொகை கூடியது 40 ஆகும்.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியில் தொடர 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்றைய நிலையில் மகிந்த இராசபக்சா தரப்புக்கு 100 பேரும் ஐதேக க்கு 102 பேரும் ஆதரவாக இருக்கிறார்கள். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் ததேகூ (15 உறுப்பினர்கள்) இருக்கிறது.

2015 க்கு முந்திய ஆட்சியில்  20 ஐதேக உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுத்து எடுத்த  ‘பெருமை’ மகிந்தா இராசபக்சா அவர்களுக்கு உண்டு.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அமெரிக்கா சிறிசேனா தரப்பை வற்புறுத்துகிறது. நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியரும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சனாதிபதி சிறிசேனாவிடம்  கேட்டுள்ளார்.

ஒரு உண்மை விளங்குகிறது. சனாதிபதி சிறிசேனா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.  அது அவரது சுபாவம்! மாற்றமுடியாது!

இலங்கை அரசியல் நிலைமைபற்றி சம்பந்தனிடம் கேட்டறிந்த இந்தியா!

 


About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply