உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன்

உயிர் இருக்கும் வரை சமஷ்டிக்கும், இணைப்புக்கும் இடம்கொடேன்

ரணில் பதவிக்கு மீண்டால் உடனே ஜனாதிபதிப் பதவியைத் துறப்பேன்!

மைத்திரி நேற்று ஆவேசம்

ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம். அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவரும் சதி முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அது சாத்தியப்பட்டால் ஜனாதிபதி பதவியை உடன் துறப்பேன் – என அவர் சபதம் செய்தார்.

புதிய அரசமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை. இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொல்ல வேண்டும் – என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் செய்த துரோகத்தின் காரணமாகவே மஹிந்த ராஜபக்rவை புதிய பிரதமராக நியமித்தேன் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய அரசை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் தெளிவு படுத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையை அன்று எடுத்திருந்தேன். இன்று நான் எடுத்துள்ள நடவடிக்கை அதனை விடவும் வலுவானது. நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுத்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அரசியல் சாசனத்தை காண்பித்து ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவி வழங்குமாறு கோரியிருந்தார். அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கும் வழங்குமாறும் கோரியிருந்தார்.

இது தொடர்பான ஆவணமொன்றில் கையொப்பம் இடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமரை நியமிக்க முடியும் என்ற போதிலும் எனது அதிகாரங்களைப் பிரதமரிடம் வழங்க முடியாது என நான் எழுத்து மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்றவுடன் அவர் ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் எனவும், தாம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றுவதாகவும் ஐ.தே.கவின் குறிப்பிட்ட உறுப்பினர் கூறினார். இந்தநிலைமையை நீடிக்க விடக்கூடாது என்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்rவை நான் புதிய பிரதமராக நியமித்தேன் – என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். (காலைக்கதிர் 01-11-2018)


 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply