பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்! – மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா

 கலிலுல்லா.ச
 

கொச்சி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினராயி விஜயன்

பிராமணரல்லாதோர் அர்ச்சகராக முடியாது என்ற விதியைத் தளர்த்தி கேரளாவில் தற்போது, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் சூழல் நிலவி வருகிறது. அண்மையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் சார்பில் பட்டிலினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட பிரமாணரல்லாத 36 மேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், பிரமாணர் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க கேரளா தேர்வாணையம் சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக  நடத்தபட்டது. இதில் தேர்ச்சி அடைந்த 54 பேருக்கு அர்ச்சகர் பணி கிடைத்துள்ளது. இவர்களைக் கொச்சி தேவஸ்தானம், அரச்சகர்களாக நியமித்துள்ளது. கொச்சி தேவஸ்தான வரலாற்றில் பிராமணர் அல்லாதோர், அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

https://www.vikatan.com/news/india/140904-cochin-devaswom-board-would-appoint-54-nonbrahmin-priests.html


தமிழில் அர்ச்சனை

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்

6

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? 
தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

ன்பார்ந்த நண்பர்களே,

கேரள மாநிலம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆறு தலித்துகள் உட்பட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமனம் செய்திருப்பது அர்ச்சகர் பிரச்சனையில் மீண்டும் ஓர் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“சாதிப்பாகுபாடின்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கை முதன்முதலில் தந்தை பெரியாரால் எழுப்பப்பட்டு, அதன் தொடர்ச்சியாக திமுக அரசு, “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக்” கொண்டு வந்தது. மதுரை சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972 உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் (சேசம்மாள் தீர்ப்பு) இச்சட்டம் முடக்கப்பட்டது.” உச்ச நீதிமன்றம் நமது சாதி இழிவை பூதக்கண்ணாடி வைத்து பெருக்கிக் காட்டியிருக்கிறது” என்பது 1972 தீர்ப்பு குறித்த பெரியாரின் கருத்து.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் போராட்டம் ! (கோப்புப் படம்)

“சேசம்மாள் தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை கோரமுடியாது என்று கூறிவிட்டதால், இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழக அரசு பார்ப்பனரல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க இயலும்” என்றவொரு மாற்றுக் கருத்தும் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின் வந்த எந்த அரசும் சேசம்மாள் தீர்ப்பின் அடிப்படையில் பார்ப்பனரல்லாதோரை நியமனம் செய்யவில்லை. மாறாக கடந்த 40 ஆண்டுகளில் பார்ப்பன அர்ச்சகர்களின் வாரிசுகள்தான் நூற்றுக்கணக்கில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

2006 ஆ-ம் ஆண்டில் திமுக அரசு ஒரு அரசாணை மூலம், ஆகமப்பயிற்சிப் பள்ளி தொடங்கி, அதில் பயின்ற தகுதி வாய்ந்த எல்லா சாதிகளையும் சேர்ந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதாக அறிவித்தது. இந்த அரசாணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிய, மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்கள், பயிற்சி முடித்து சைவ, வைணவ தீட்சை பெற்ற 206 மாணவர்களை தெருவில் நிறுத்தினர். பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களை சங்கமாகத் திரட்டி, அவர்களை உச்சநீதிமன்ற வழக்கில் இணைத்து வாதாடினோம். 2015 -இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது.

“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்கள் கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது” என்று  தீண்டாமையை நியாயப்படுத்தியது இந்தத் தீர்ப்பு. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை என்பதையும் இத்தீர்ப்பு நிராகரித்துவிட்டது. “அரசியல் சட்ட சட்டப்பிரிவு 16 (5) இன் படி, குறிப்பிட்ட வகையறாவினர் பெற்றிருக்கும் மத உரிமையில், மற்றவர்கள் சம உரிமை கோர முடியாது” என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது.  தமிழக அரசு தீட்சை பெற்ற மாணவர்களில் ஒருவரை, ஒரு குறிப்பிட்ட கோயிலில் அர்ச்சகராக நியமனம் செய்யும் பட்சத்தில், அது “மரபுக்கு எதிரானது” என்று பார்ப்பன அர்ச்சகர்கள் கருதினால், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.

மேற்கூறிய காரணங்களினால் இத்தீர்ப்பு 1972 தீர்ப்பைக் காட்டிலும் பிற்போக்கானது என்பது எமது மதிப்பீடு. இத்தீர்ப்பு அர்ச்சக மாணவர்களுக்கு சாதகமானது என்று விளக்கப்படுத்துவோரும் இருக்கிறார்கள்.

“அர்ச்சக மாணவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது” என்று இத்தீர்ப்பு வெளிப்படையாகத் தடை விதிக்கவில்லை. “நியமனத்தில் மரபு மீறல் கூடாது” என்று கூறுகிறது. எனவே இத்தீர்ப்பை விளக்கப்படுத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், “206 மாணவர்களையும் பணி நியமனம் செய்” என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்து நாம் அனைவரும் போராடவேண்டும்.

அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக மீண்டும் அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்வார்கள். “தமிழ் மக்களுக்கு சொந்தமான கோயில்களில் தமிழையும் தமிழனையும் தீண்டத்தகாவர்கள் என்று கூறும் சாதித்திமிர் பிடித்த இந்தக் கூட்டமும், அதற்குத் துணை நிற்கும் சட்டமும் நமது எதிரிகள்” என்று தமிழ்ச்சமூகத்தைத் தட்டி எழுப்பும் வண்ணம், நாமும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

கேரளத்தில் தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள யதுகிருஷ்ணா

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதற்கான போராட்டம், ஒரு சுயமரியாதைப் போராட்டம். பெரும்பான்மையான மக்கட் பிரிவினர் பிறப்பாலேயே இழிவானவர்கள் என்று கூறும் பார்ப்பனிய சநாதன தருமத்தை ஒழித்துக்கட்டி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று நிலைநாட்டுவதற்கான போராட்டம்.

கேரளத்தில் தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள யதுகிருஷ்ணா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு, பயிற்சியளித்த ஆசிரியரான அநிருத்தன் தந்திரி, “பண்பாடு, நடத்தை, உணவு ஆகிய அனைத்தின்படியும் இனிமேல் யதுகிருஷ்ணா ஒரு பிராமணன். பிறப்பால் யாரும் பிராமணன் ஆவதில்லை. தனது செயல்களாலும், அறிவினாலும்தான் ஒருவன் பிராமணன் ஆகிறான்” (Outlook, 7 oct, 2017) என்று கூறியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா அர்ச்சகராகியிருக்கிறார் என்பதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். “அவர் பிராமணன் ஆக்கப்பட்டிருக்கிறார்” என்பதுதான் இதன் பொருள் என்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும். இந்தக் கூற்று, யது கிருஷ்ணா போன்றவர்களின் பிறவி இழிவினை மறைமுகமாக ஒப்புக்கொள்வதே ஆகும்.

“பிறப்பால் யாரும் பிராமணன் ஆவதில்லை” என்ற சாமர்த்தியமான வாதம், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துவதற்காக, காலம் காலமாக துக்ளக் சோ முதலானவர்கள் அவிழ்த்து விடுகின்ற புளுகுமூட்டையாகும். பிறப்பினால்தான் சாதி தீர்மானிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமது பிறப்பின் காரணமாகத்தான் 206 மாணவர்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறார்களேயன்றி, கருமவினை காரணமாக அல்ல. மரபு என்ற பெயரில் இந்தப் பார்ப்பனிய அநீதியை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. இதுதான் உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டுத்தான் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தினார்.

கருவறைத் தீண்டாமைக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பெழுதுவோம் !

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என்ற கோரிக்கை, மற்ற அரசுப்பணிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை கேட்கும் கோரிக்கையைப் போன்றதல்ல. அரசியல் சட்டப்பிரிவுகள் 25, 26  ஆகியவையும், அவற்றுக்கு விளக்கமளிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், சாதி – தீண்டாமை முதல் பாலின ஒடுக்குமுறை வரையிலான பலவிதமான சமூக ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்தக் கோரிக்கையின் முதன்மையான நோக்கம்.

கருவறைக்குள்ளே நுழைய முடியாமல் நிற்கிறார்கள் நமது மாணவர்கள். “கருவறை மட்டுமல்ல, கோயிலும் எங்களுக்குச் சொந்தம்” என்ற தங்களது அடுத்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறது சங்க பரிவாரம். “இந்து அறநிலையத்துறையையே அகற்ற வேண்டும்” என்ற சுப்பிரமணியசாமியின் மனு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அறநிலையத்துறையிடமிருந்து தமிழக கோயில்களை மீட்கும் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்யவும் தொடங்கியிருக்கிறது சங்க பரிவாரம்.

பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறிகொடுக்கும் நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தையே தங்களுக்கு எழுதிக் கொடுக்கத் தயாராக இருக்கும் எட்டப்பர்கள் கையில் ஆட்சி இருப்பதால், காவிக் கும்பினி களிப்பில் மிதக்கிறது.

கதவைத் தட்டுகிறது காட்டு மிராண்டிக் கூட்டம்.  தமிழகமே, விழித்துக்கொள்!

 

 


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply