முதல்வர் விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் காட்டமான பதிலடி! 

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் காட்டமான பதிலடி!

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் காட்டமான பதிலடி! – செயலணியில் பங்கேற்பதால் தீர்வு முயற்சி, போர்க்குற்ற விசாரணை எதுவும் பாதிக்காது எனத் தெரிவிப்பு.
“வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் பங்கேற்பதால், அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எங்களின் ஒற்றுமைக்கு எந்தக் களங்கமும் வராது. இந்தச் செயலணியின் கூட்டத்தில் நாம் பங்கேற்பதை விரும்பாதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளடக்கப்பட்டுள்ளார். இருப்பினும் செயலணியின் முதலாவது அமர்வில் அவர் பங்கேற்கவில்லை. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வடக்கு முதலமைச்சர் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் தானே தயாரித்து அனுப்பும் கேள்வி – பதில் அறிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முடிவைச் சாடியிருந்தார். அரசியல் தீர்வுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும், செயலணியில் முப்படையினரும் இருப்பதால் போர்க்குற்ற விசாரணை நலிவடையச் செய்யப்படும் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-
“வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்பது என்ற கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் முடிவை மாற்ற முடியாது. வடக்கு – கிழக்கு மக்களின் நன்மை கருதியும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியைக் கருதியுமே இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக இந்தக் கூட்டத்துக்கு எமக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாம் அதனை உதாசீனம் செய்ய முடியாது. அடியோடு நிராகரிக்கவும் முடியாது.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் ஏகபிரதிநிதிகளாக எங்களைத் தெரிவு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது எங்களின் கடமை. அதனடிப்படையில், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளோம். கூட்டத்தில் கலந்துகொண்டாலும், அரசியல் தீர்வு உள்ளிட்ட ஏனைய விடயங்களை நாங்கள் ஒவ்வொன்றாக முன்னெடுப்போம்.
இந்தச் செயலணியில் பங்கேற்பதால் அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எங்களின் ஒற்றுமைக்கு எந்தக் களங்கமும் வராது. இந்தச் செயலணியின் கூட்டத்தில் நாம் பங்கேற்பதை விரும்பாதவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அபிவிருத்திப் பணி தொடரும் அதேநேரத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் தொடரும். கூட்டமைப்பை விமர்சிக்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இதனைத் தெரியப்படுத்துகின்றேன்” – என்றார்.
About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply