சூரிய கிரகணம்
கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.

நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்…வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
சீனாவில் கிரகணம் பார்த்தல்

அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம். பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.

நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.
30 .. நாட்களில்…. 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!
இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!
Leave a Reply
You must be logged in to post a comment.