மறத்தமிழர்

மறத்தமிழர்

பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா

அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது!
ஆங்கிலத்திலும் தமிழிலும்!
அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்!
நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும்
நமது மொழியை மறக்கவில்லை!
பண்பாட்டைத் துறக்கவில்லை!!
உடல் புல்லரித்தது!Image result for பரதம்
ஒவ்வொரு மயிரும் நிலைகுத்தி நின்றது.
தமிழனா கொக்கா? மண்ணாங்கட்டி!
காதல் மனைவி காஞ்சிபுரம் பட்டுடுத்தாள்
பேதம் சொல்லாமல் என் பிள்ளை தாவணியில்
நானும் பச்சைக் கரைவேட்டி பகட்டாய் உடுத்தி
இச்சைக்குகந்த எழிலான சால்வையினை
எட்டாய் மடித்து இருதோளில் ஊசிகுத்தி..
ஆகா! என்னே அழகு!
காரில் ஏறினோம், கலகலப்பாய்ப் பயணித்தோம்
மாலை ஐந்தரைக்கே மண்டபத்தில் நின்றிட்டோம்!
குத்து விளக்கென்ன, கும்பமென்ன
குங்குமம் சந்தனக் கிண்ணமென்ன
பத்து மங்கையர்கள் மண்டப வாயிலில் இருபுறமும்
பாவாடை தாவணியில் பவ்வியமாய் நின்றார்கள்
பன்னீர் தெளித்தார்கள், திருநீறு சந்தனம் சீராகத் தந்தார்கள்
புன்னகைத்த முகத்தோடு கற்கண்டு பகிர்ந்தார்கள்
அத்தனையும் தமிழ் பண்பாட்டை அழகாகக் காட்டினவே!
ஆகா இவர்கள் தமிழர்கள்! இவர்கள்தான் தமிழர்கள்!
அன்னிய மண்ணிலும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்யும் மறத்தமிழர்கள்! எண்ணியபோதே இதயம் இறும்பூதடைந்தது!
திண்ணிய நெஞ்சும் ஒருகணம் திரண்டு நிமிர்ந்தது!
அரங்கேற்றம் தொடங்கிற்று.
ஐயர் வந்தார்! பையப் பையவே பூசைகளை பக்குவமாய்ச் செய்தார்.
வந்திருந்த எல்லோரும் எழுந்து நிற்க
மந்திரம் சொன்னார் ஐயர் வடமொழியில்!
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
தமிழ் ஆண்டவனுக்கு விளங்காது!
தமிழில் சொல்வதற்குத் தர்ப்பை வழிவிடாது
மெய்யாவே வடமொழி அவருக்கும் தெரியாது
விளங்காது கும்பிட்டோம்
பாடியவர் தமிழர், பாட்டுக்களும் தமிழ்தான்
ஆடிய பிள்ளை அசல் தமிழிச்சி!
அவளின் பெற்றோரும் அசல் பச்சைத் தமிழர்
பயிற்றுவித்த ஆசிரியையின் பரம்பரையே தமிழ்தான்
பக்கத்தில் இசைகொடுத்த எல்லா விற்பன்னரும் தமிழர்தான்.
ஆயிரம்பேர் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தார்
அனைவரும் தமிழர்கள்,
ஆங்கிலத்தில் தூசு துப்பரவாய் பேசத் தெரியாதோர்
அவர்களிலே அறுபது வீதம் இருப்பார்
ஆடியவர், பாடியவர், அரங்கிலே கூடியவர்
அழகாய் உடுத்தி வந்த அறிவிப்பாளர் அத்தனையும் தமிழர்!
ஆனால் அறிவிப்புமட்டும் ஆங்கிலத்தில்!
தமிழர் பெயரையெல்லாம் தாறுமாறாய்க் கடித்து தடக்கி முடக்கி
தாள, ராக வகை சொன்னாலும்
ஆங்கில உச்சரிப்பு அழகிலே அவையே சொக்கியது
அறவே விளங்காதோரும் அடுத்தவரைப் பார்த்து
அடிக்கடி சிரித்தே ஆகாவென்று கைதட்டுகிறார்.
அவ்வைக்குச் சுட்டபழம் அழகான அபிநயத்தில்
ஆனால் விபரிப்போ ஆங்கிலத்தில்!
கண்ணன் தயிரைக் களவாடித் தின்றதெல்லாம்
வண்ணத் தமிழில் வடித்தெடுத்த பாடலுக்கு
மின்னும் அரங்கில் மிகவடிவாய் அபிநயித்தால்
என்ன இழவுக்கு இங்கிலீசு வியாக்கியானம்?
வாழ்க தமிழ்!
எவரும் தமிழனை அடிமையென்று சொல்லவில்லை
எவருக்கும் அடிமையாகாமல் தமிழனால்
இருக்கவே முடியவில்லை!

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply