பலாலி – சென்னை நேரடி விமான சேவையை இரணில் அரசு விரைந்து தொடங்க வேண்டும்!
ந.லோகதயாளன்
பலாலியில் இருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க எடுத்த முயற்சிக்கு தற்போது முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பதே வடக்கு மாகாண மக்களின் மனங்களில் உள்ள அபிவிருத்தி சார்ந்த கேள்விகளில் முக்கிய கேள்வியாக உள்ளது.
ஏனெனில் பலாலி விமான தளத்தினை சிவில் போக்கு வரத்து விமான நிலையமாக மாற்றி அதனை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகப் பலராலும் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு திட்டமாகும். இருப்பினும் இதற்குச் சிலரின் எதிர்ப்பு முன்னர் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டு குறித்த திட்டத்தினை இந்திய அரசு கையில் எடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்த இராசபக்சா அரசு சீனசார்பு கொள்கையோடு இருந்ததால் அதனை எதிர்த்தது. இருப்பினும் அம் முயற்சி தொடர்ந்தது.
இதன் பின்பு இரணில் – மைத்திரி கூட்டாட்சி ஏற்பட்ட நிலையில் குறித்த பணி சற்று வேகம் கொண்டது. இதன்விளைவாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையிலான 7 பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் குழு பலாலி விமான நிலையத்தை நேரில் வந்து பார்வையிட்டு பலாலி – சென்னை விமான சேவையை தொடக்கக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பில் ஒரு நாள் ஆய்வில் ஈடுபட்டது. இதன்போது ஓடு பாதை போதுமானதா தொடர்பில் ஆராய்ந்ததோடு மேலதிக நிலம் தேவைப்படுமா? எனவும் அதிக கவனத்துடன் ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ஆய்வின்போது விமான ஓடுதளம், கட்டுப்பாட்டு அறை , பயணிகள் தங்குமிடம், சோதனைக் கூடம், சுங்க அதிகாரிகள் பிரிவு, களஞ்சிய வசதி, சிவில் பாதுகாப்பு பிரிவு, அவசர உதவிப் பிரிவு, என்பன தொடர்பில் தனித்தனியே கவனம் செலுத்தியிருந்தனர். இதன்போது குழுவுக்குத் தலமை தாங்கிய அதிகாரி இத்துனையில் நீண்ட அனுபவத்தினைக் கொண்டவராகக் காணப்பட்டார். அவரின் இறுதி அறிக்கையின் பிரகாரம் தற்போதைய விமான நிலையத்தை முழுமையான சிவில் போக்குவரத்து விமான சேவைக்குரிய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய அத்தனை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தப் போதிய இடவசதி பலாலி விமான நிலையத்தின் உட் பகுதியில் தற்போதுள்ள நிலமே போதுமானது எனவும் விமான சேவைக்கான ஓடு பாதையும் நீட்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்திருந்தார்.
இதன் அடுத்த கட்டமாக இந்தியா திரும்பிய குழுவினர் தாம் திரட்டிய தரவுகள் மற்றும் விபரங்கள் அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஒரு மாதிரி விமான நிலையத்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது வரைபடமும் செலவும் மதிப்பீடும் செய்யப்பட்டன. ஏனெனில் குறித்த பணிக்கான செலவை இந்திய அரசே பொறுத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருந்தது. கட்டிடம் மற்றும் மாதிரி உருவத் தயாரிப்பதற்கான செலவு மட்டும் இந்திய ரூபாவில் ஒரு கோடி வேண்டும் என மதிப்பிடப்பட்டது.
போர்க் காலத்தில் வலிகாமம் வடக்கில் படையினர் மக்களின் வாழ் விடங்களில் 6,381.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து வைத்திருந்தனர். போர் முடிந்த பின்னர் இவ்வாறு அபகரித்து வைத்திருக்கும் மக்களின் நிலம் முழுவதையும் இந்த விமான நிலைய அபிவிருத்திக்காகக் கையகப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் மக்கிளடம் இருந்தது. வடக்கு மாகாண முதலமைச்சரும் பலாலி சென்னை விமான சேவை விடயம் தொடர்பில் ஒரு தளம்பல் நிலையில் இருந்தார். இதனால் குறித்த பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது வலிகாமம் வடக்கில் இருந்து மேலும் 2,500 ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் விடுவிக்கம்பட்டு விட்டது. தற்போது 3,881.5 ஏக்கர் நிலமே படைவசம் உள்ளது எனக் கண்டறியப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசிடம் இது தொடர்பாக ஒருமனதான கோரிக்கை ஒன்றை வைக்க முடியும் என்ற நிலைமை காணப்படுகின்றது.
விமான நிலையத்திற்கு மேலதிக நிலம் தேவையில்லை பணச் செலவையும் இந்தியா பொறுத்துக் கொள்ளத் தயார் என்ற நிலையில் குறித்த விமான நிலையத்தைச் செப்பனிடுவதற்கு வேண்டிய அனுமதியை வழங்க இலங்கை அரசு மறுக்கின்றது. பலாலி – சென்னை விமான சேவையைத் தொடங்கினாலும் அது வருவாய் தரும் சேவையாக இருக்குமா என்ற ஐயத்தை இலங்கை அரசு எழுப்புகிறது.
இரணில் அரசின் ஐயம் தவறானது எனப் புள்ளி விபரத் தகவல்கள் எண்பிக்கின்றன. அதாவது தற்போது வடக்கில் இருந்து பல ஆயிரம் ரூபாய்களையும் 10 மணித்தியாலங்களையும் செலவு செய்து சென்றை செல்வதற்கு 2016 ஆம் ஆண்டில் 38,000 பேரும் 2017 ஆம் ஆண்டில் 40,000 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திடம் விசா அனுமதியினைப் பெற்றுள்ளனர்.
பணவிரயம், நேரவிரயம் இரண்டையும் செலவழித்து ஆயிரக்கணக்கானோர் வடக்கு மாகாணத்தில் இருந்து சென்னை செல்லும் நிலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு இரு மணித்தியாலயத்தில் தமிழ் நாட்டில் இருக்க முடியும் என்றால் நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் இந்தியாவிற்குச் சென்று வருவர் என்பது திண்ணம். அதே போல் சென்னையில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வரவும் செய்வர்.
சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தெரிவித்தவாறு விமானம் இறங்குவதற்கு ஓடுபாதை போதுமானது என்பதனை நிரூபிப்பதற்கு உதாரணங்கள் உண்டு. குறிப்பாக இந்தியப் பிரதமர் மோடி பயணித்த 140 பயணிகள் பயணிக்கத்தக்க விமானமும் அமெரிக்க மருத்துவக் குழுவினரும் வடக்கு மாகாண முதலமைச்சர், அமெரிக்கத் தூதுவர், அமைச்சர் மனோ கணேசண் ஆகியோர் பயணித்த பாரிய விமானமும் தற்போதுள்ள பலாலி ஓடுபாதையில்தான் தரையிறங்கின. இதில் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது அருகில் இருந்து கண்ணால் கண்டேன்.
இவ்வாறான சூழலில் 28 ஆண்டுகள் இராணுவப் பிடியில் இருந்து மீண்ட வலிகாமம் வடக்கு மக்கள் மட்டுமின்றி வடக்கு மாகாண மக்கள் அனைவரினதும் நன்மை கருதி இந்தத் திட்டத்தினை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒரு காலமத்தில் காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சென்னையில் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு மாலை 4.00 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் தற்போதும் உள்ளனர். சென்னைக்கு மட்டும் அல்ல திருச்சிக்கும் அந்தக் காலத்தில் விமான சேவை இருந்தது. அத்துடன் விமானச் சீட்டின் பெறுமதியும் ரூபா 350 ஆக இருந்தது.
வட பகுதி மக்களின் நீண்டகால ஆவலை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.