முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ?
June 2, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் நடந்து முடிந்த நிகழ்வு பற்றியும் அதனை நடத்தியவர்களின் நடத்தைகள் பற்றியும் பாரதூரமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே நடத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்ட போது இறுதிக்கட்ட போரில் உறவுகளை இழந்தவர்களும், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் ஒதுங்கிக்கொண்டனர்.
மோதிக்கொண்ட விக்னேஸ்வரன் தரப்பும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தரப்பும் இறுதி நேரத்தில் இணக்கத்திற்கு வந்திருந்தன. யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இயக்கி கொண்டிருக்கும் ஒஸ்ரேலியா மற்றும் நோர்வேயில் இருக்கும் சக்திகள் இரு தரப்பையும் சமரசத்திற்கு கொண்டு வந்ததாகவும் ஒரு தகவல்.
வெளிநாட்டில் இருக்கும் தலைமைச்செயலகம் என தம்மை அழைத்துக்கொள்ளும் தரப்பே யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணத்தை கொடுத்து இயக்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஒரு தரப்பு பணத்தை வழங்குகிறது. பணத்தை வழங்குபவர்களின் ஆட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆடுகிறது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்களை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுவரை மறுக்கவில்லை. எனவே அவர்கள் மறுக்காத வரை அச்செய்தி உண்மை என எடுத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூலிக்கு மாரடிக்கும் குழுவாக மாறிவிட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.
இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது முள்ளிவாய்க்கால் நிகழ்வு முடிந்த பின் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுக்களையும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுவரை மறுக்கவில்லை.
இதில் முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது கிழக்கு மாகாணத்திலிருந்து சென்ற முன்னாள் போராளிகள் மற்றும் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்கள் முள்ளிவாய்க்காலில் நினைவாஞ்சலி செலுத்த முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி அனுப்பிய சம்பவமாகும்.
இந்த சம்பவத்தை சாதாரண ஒரு சம்பவமாக கடந்து செல்ல முடியாது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும்.
மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த முன்னாள் போராளிகள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுமாக சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நான்கு பஸ்களில் அஞ்சலி செலுத்துவதற்காக 17ஆம் திகதி புறப்பட்டு 18ஆம் திகதி காலையில் முள்ளிவாய்க்காலை சென்றடைந்தனர்.
இவர்கள் இம்முறைதான் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு மே 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு ஒரு இடத்தில் அந்த மண்ணில் மடிந்த தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடந்த 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று தாம் வழமையாக அஞ்சலி செலுத்தும் இடத்தை துப்பரவாக்கி தீபங்களை வைத்து அஞ்சலி செலுத்த முற்பட்ட போது கறுப்பு சட்டை அணிந்திருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மை அழைத்துக்கொண்ட ஒரு குழு அங்கு வந்து அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். தீபங்களை காலால் எட்டி உதைத்து மட்டக்களப்பான் இங்கு அஞ்சலி செலுத்த முடியாது என உத்தரவிட்டனர் என அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பான், திருகோணமலையான், அம்பாறையான் யாரும் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த கூடாது, வீடியோ எடுக்க கூடாது, என கூறி வைக்கப்பட்ட தீபங்களை தூக்கி எறிந்தனர் என காரைதீவில் இருந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி காணொளி செய்தி ஒன்றையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தனர்.
இப்பிரதேசத்திலிருந்து விடுதலைப்போராட்டத்திற்கு சென்று மாவீரர்களானவர்களையும் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவமதிக்கும் வகையிலேயே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த கறுப்பு சட்டைகாரர்கள் நடந்து கொண்டனர் என அந்த முள்ளாள் போராளி தெரிவித்திருந்தார்.
இந்த பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுவரை பதிலளிக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த கிழக்கு மாகாண போராளிகளும் பொதுமக்களும் இம்முறை அஞ்சலி செலுத்த விடாது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்தார்கள் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்க மாட்டார்கள்.
தமது நேரத்தையும் பணத்தையும் செலவழித்து நான்கு பஸ்களில் 300 கிலோ மீற்றர் பயணம் செய்து முள்ளிவாய்க்காலுக்கு வந்த மக்களுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமே ஒழிய அவர்களை புறந்தள்ளி அவமதிக்க வைத்து துரத்தி அடித்திருக்க கூடாது.
கிழக்கு மக்களை புறக்கணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் நடத்துகிறார்களோ அவர்களுக்கு தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ இழப்புக்கள் பற்றியோ பேச அருகதை கிடையாது.
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுப்பதற்கு எந்த உரிமையோ யோக்கியதையோ யாருக்கும் கிடையாது. முள்ளாவாக்கால் நினைவேந்தலை யாரும் குத்தகை எடுக்க முடியாது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தும் குத்தகையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ அல்லது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனோ எடுக்க முடியாது.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக அமைய முடியும். இந்நிலையில் கிழக்கு மக்களை அந்நியப்படுத்தும் அவமானப்படுத்தி புறந்தள்ளி வைக்கும் சம்பவங்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
கிழக்கு தமிழ் மக்களை புறந்தள்ளும் தீய செயல்களைத்தான் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்திருக்கிறது. இதனை அவர்கள் தெரிந்து செய்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. தவறு நடந்தால் அதனை திருத்திக் கொண்டு அவர்கள் மன்னிப்புக்கோரி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை மன்னிப்பு கோரியதாக தகவல் இல்லை.
வடக்குடன் கிழக்கு இணையக்கூடாது என கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் மக்களில் ஒரு சாராரும் வடக்கில் உள்ள தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்கள் மீது சந்தேகம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கும் கிழக்கும் இணைந்தால் யாழ்ப்பாணத்தமிழர்களின் ஆதிக்கமே அங்கு மேலோங்கி இருக்கும். நாம் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப்படுவோம் என்ற அச்சம் கிழக்கில் உள்ள தமிழர்களில் ஒரு சாராரிடம் உண்டு.
கிழக்கு மக்களை முள்ளிவாய்க்காலில் தீபம் ஏற்ற அனுமதிக்காத சம்பவங்கள் வடக்குடன் இணைந்தால் நாம் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சம் கொண்டவர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது என வாதிக்க இடமுண்டு.
முள்ளிவாய்க்காலில் கிழக்கு மக்கள் அவமதிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டார்கள் என்ற செய்தி மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருக்கிறது.
இத்தகைய அவமானங்களை இவர்கள் தருவார்கள் என்பதால் தான் நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மட்டக்களப்பில் நடத்தினோம் என ஒருவர் சொன்னதை கேட்க கூடியதாக இருந்தது.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் கிழக்கு பிரதேச மக்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வடக்கில் நடந்த பெரும் சமர்களில் மட்டக்களப்பு அம்பாறை படை அணியான ஜயந்தன் படை அணியே முக்கிய பங்காற்றியது. ஜயசிக்குறு தொடக்கம் ஓயாத அலைகள் வரை மட்டக்களப்பு அம்பாறை போராளிகளின் பங்கு அளப்பரியது.
2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்ற போது அதனை முறியடித்து கிழக்கை மீண்டும் விடுதலைப்புலிகள் மீட்டெடுப்பதற்கு உதவியவர்கள் கிழக்கு மாகாண போராளிகளும் மக்களும் ஆகும்.
இவ்வாறு வடக்கை சேர்ந்தவர்கள் தம்மை புறக்கணிப்பதால் தான் கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றார் என விவாதிப்பவர்களும் உண்டு. அப்படி விவாதிப்பவர்களுக்கு சாதகமான செயலைத்தான் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் செய்திருக்கின்றனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்போராட்டம் நடந்த காலத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் அல்ல. இறுதி யுத்தம் நடந்த காலத்தில் 10 அல்லது 11 வயது சிறுவர்களாக இருந்தவர்கள் தான். இந்த மாணவர்களில் எத்தனை பேர் இறுதி யுத்தகாலத்தில் அதில் சிக்கியிருந்தார்கள் என்பதும் தெரியாது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகளும் அவமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சென்ற முன்னாள் போராளிகள் சிலரை முன்வரிசையில் நிற்க விடாது பின்னுக்கு தள்ளி விட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் 10வயது சிறுவர்களாக இருந்தவர்கள், விடுதலைப்போராட்டத்தோடு எந்த சம்பந்தமும் இல்லது இருந்தவர்கள் முள்ளிவாய்க்காலில் களமாடிய போராளிகளை அஞ்சலி செலுத்த அனுமதிக்காது பின்னுக்கு தள்ளிவிடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பல்கலைக்கழக மாணவர்களின் உணர்ச்சி என்பது பல்கலைக்கழகத்தில் இருக்கும் வரைதான். கடந்த காலத்தில் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொங்கு தமிழை நடத்தியிருந்தார்கள். பல்கலைக்கழக சமூத்தை கொண்டு பொங்கு தமிழ் நடத்தப்பட்டது. பொங்கு தமிழை முன்னின்று நடத்திய எத்தனை மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின் விடுதலைப்போராட்டத்திற்கு மும்முரமாக உந்து சக்தியாக செயற்பட்டார்கள்?
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின் அரச உத்தியோகம் ஒன்றை பெற்றுக்கொண்டு விடுதலைப்போராட்டமா அது அபத்தம் என வாழ்பவர்கள் தான் அதிகம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குத்தகை எடுத்து நடத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு முள்ளிவாய்க்கால் பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
நினைவேந்தலை ஏற்பாடு செய்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று இரு தினங்களுக்கு முதலே அங்கு சென்றிருந்தது. அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து பெருந்தொகையான வெற்றுசாராய போத்தல்களும் பியர் போத்தல்களும் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்களையும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மறுக்கவில்லை. இதிலிருந்து அவர்களுக்கு பெருந்தொகையான வெளிநாட்டு பணம் கிடைக்கிறது என்பது உறுதியாகிறது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை குத்தகை எடுத்து நடத்தியதன் மூலம் யாழ்;;ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு இலாபம் கிடைத்திருக்கலாம். ஆனால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மதிப்பிழந்து விட்டது என்ற சொல்ல வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை குத்தகை எடுப்பதில் போட்டி போட்டு இறுதிக்கட்டத்தில் சமரசத்திற்கு வந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் முள்ளிவாய்க்காலில் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி தனது பொறுப்பு கூறலை வெளிப்படுத்தவில்லை.
மட்டக்களப்பு அம்பாறையான் முள்ளிவாய்க்காலில் விளக்கேற்ற கூடாது என்ற யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தரவை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
(இரா.துரைரத்தினம் )
முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ?
Leave a Reply
You must be logged in to post a comment.