குடியேற்றங்கள் ஒருவழிப் பாதையல்ல

குடியேற்றங்கள் ஒருவழிப் பாதையல்ல

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன விகிதாசாரத்தினை மாற்றியமைத்து தமிழ்த் தேசத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கடந்த வியாழக்கிழமை 04.11.2010 அன்று தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கிழக்கில் இன விகிதாசாரத்தினை மாற்றும் வகையிலான அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் ஆபத்தானவை எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.அதற்குப் பதிலளித்த அமைச்சர் “…கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு காணி இருக்கின்றதோ அங்குதான் காணி வழங்க முடியும்.

ஒரு பிரதேசத்தை ஒரு இனம் சொந்தம் கொண்டாட முடியாது. அதேபோல ஒரு பிரதேசத்தை ஒரு இனத்துக்கு வழங்கி விடவும் முடியாது.நாடு இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எவரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்படும்போது இன விகிதாசாரம் மாற்றியமைக்கப்பட்டுவிடும் என்ற பிரச்சினை எழுந்தது. பெருந்தோட்ட மக்களின் இன விகிதாசாரம் குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மின் திட்டத்தைச் செயற்படுத்தும்போது இன விகிதாசாரம் பற்றிச் சிந்திக்க முடியாது. இதே அடிப்படையில் கிழக்கில் டி.எஸ்.சேனாநாயக்க நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து மக்களைக் குடியேற்றினார். எவரும் எங்கும் வாழலாம். இதுவே அரசின் கொள்கை…’ என்று அவர் தெரிவித்துள்ளதாக 05.11.2010 திகதிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அமைச்சரின் இக்கூற்றைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத் தீவில் தனக்கெனத் தனியானதோர் தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. இந்நிலையில்,1505 இல் போர்த்துக்கேயராலும் 1658 இல் ஒல்லாந்தராலும் 1796 இல் ஆங்கிலேயராலும் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ்த்தேசம் தனது இறைமையையும் ஆட்சியதிகாரத்தினையும் பிரயோகிக்க முடியாதவாறு நசுக்கப்பட்டது.எனினும் இலங்கைத்தீவில் வடகிழக்குப் பிராந்தியங்களில் காணப்பட்ட தமிழ் இராச்சியங்களையும் தெற்கில் காணப்பட்ட சிங்கள இராச்சியங்களையும் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 15051658 வரையான 153 ஆண்டுகளும் தொடர்ந்து ஒல்லாந்தர் 16581796 வரையான 138 வருடங்களும் பின்னர் ஆங்கிலேயர் 17961833 வரையான 37 ஆண்டுகளும் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தாமல் தனித்தனியாகவே ஆட்சி செய்தனர்.

எனினும் 1833 இல் ஆங்கிலேயர்களால் முழு இலங்கைத் தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது.இவ்வாறு நிர்வாக வசதி கருதி தமிழ் இராச்சியத்தினையும் சிங்கள இராச்சியத்தினையும் ஒன்றுபடுத்திய ஆங்கிலேயர்கள் இலங்கைத்தீவை விட்டு வெளியேறும்போது தமிழ்த் தேசத்தின் இறைமையை தமிழர்கள் பிரயோகிக்க முடியாதவாறு சிங்களவர்களிடம் ஆட்சியதிகாரத்தை கையளித்துச் சென்றுவிட்டனர். இதனால் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

தமிழ்த் தேசம் தனது இறைமையைப் பிரயோகிக்க முடியாதவாறு சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டதுடன், தமிழ்த்தேசம் தனது இறைமையைப் பிரயோகிப்பதற்கான அங்கீகாரம் அரசியல்ரீதியாகத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு இறைமையைப் பிரயோகிக்க முடியாதவாறு அடக்கி வைத்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தமிழ்த்தேசம் என்பது வட, கிழக்கில் தனக்கென ஓர் தாயகத்தைக் கொண்டு தனித்துவமான மொழி பண்பாட்டு அடையாளங்களோடு இருக்கக்கூடாதெனக் கருதியது. அவ்வாறு இருப்பது ஒரு இனம் (சிங்களவர்),ஒரு மொழி (சிங்களம்),ஒரு மதம் (பௌத்தம்),ஒரு அரசு (சிங்கள) இவற்றை மட்டும் உள்ளடக்கிய சிங்கள தேசம் என்ற பௌத்த சிங்களக் கோட்பாட்டின் இருப்பிற்கான அச்சுறுத்தலாகவே நோக்கியது.

இந்த அச்சம் காரணமாக ஆங்கிலேயர்களது தயவினால் கைப்பற்றிக்கொண்ட ஆட்சியதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் திட்டங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்,நிலப்பறிப்பு,குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, மொழியுரிமைப் பறிப்பு மற்றும் கல்வி,தொழில்,பண்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட இன ரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பற்ற தமிழ் மக்கள் மீது 1956,1958 ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட அரச வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. இவ்வாறான வழிகளில் தமிழ் இனத்தின் தனித்துவத்திற்கும் வாழ்விற்கும் தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அழிப்பைத் தடுப்பதற்காக 1957 ஆம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அனைத்து அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டதுடன், அகிம்சை வழிப் போராட்டங்களும் சிங்கள அரசுகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டன.

1972 இல் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனம் மூலம் தமிழினத்தின் உரிமைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழினம் தனது இருப்பை பாதுகாப்பதற்காக 1976 மே 14 ஆம் நாள் தமிழரின் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ அரசை நிறுவுவதெனத் தீர்மானித்தன.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் 1977 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திர தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டது. தமிழினத்தின் வாழ்வையும் தனித்துவத்தையும் பாதுகாக்கவும் அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டவும் ஆயுதப்போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைக்குத் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு ஆயுதப்போராட்டம் விரிவடைந்தது. ஆயுதப்போராட்டத்தின் பலத்தின் விளைவாக தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகள் கடந்த 35 ஆண்டுகளாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், அளப்பரிய உயிர்த்தியாகங்கள் ஊடாக 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டது.

ஆனாலும் 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசுத் தலைமையானது சமாதானக் கதவுகளை முற்றாக மூடி யுத்தத்தை தீவிரப்படுத்தியது. அந்த யுத்தம் மூலம் தமிழ்த் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த்தேசத்தின் இருப்பை அழிக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கையை முற்று முழுதாக நியாயப்படுத்தும் வகையில் அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.

இலங்கைத் தீவின் அனைத்துப் பிரதேசங்களும் அனைவருக்கும் சொந்தம் என்று கூறுவதன் மூலம் அரசு பெருந்தன்மையாக நடந்து கொள்வதாகவே வெளியிலிருந்து மேலெழுந்தவாரியாக அவதானிப்பவர்களுக்குத் தென்படும்.இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்படும்போது தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசத்தின் தமிழ்பேசும் மக்களும் சிங்கள தேசத்து மக்களும் சமனான அந்தஸ்த்துடையவர்களாகவே இருப்பர். இலங்கை என்ற நாட்டிற்குள் தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசத்தில் அதிக பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.

ஆனால், தமிழ்த் தேசத்தின் இறைமையை மறுத்து சிங்கள தேசத்தின் இறைமையை மட்டும் கருத்திற்கொண்டபடி இலங்கைத்தீவிலுள்ள எண்ணிக்கையில் அதிகமான சிங்கள மக்களோடு தமிழ் மக்களை ஒன்று கலக்கும்போது மொத்த சனத்தொகையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக ஆக்கப்பட தமிழ் மக்கள் தமது தனித்துவமான தேசம் என்ற தகுதியை இழந்து சிறுபான்மையினராகவும் ஆக்கப்படுகின்றனர்.அத்துடன், தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக தமிழ்த் தேசத்திற்குள்ளேயே தமிழ் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படும் பேராபத்தும் உண்டு.

இவ்வாறான சூழலில் ஜனநாயக நடைமுறைகளின்படி பெரும்பான்மை விரும்பும் விடயமே தீர்மானமாக நிறைவேற முடியும். அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற நிலைப்பாட்டை இழந்தால் அவர்கள் சிறுபான்மையாக மட்டுமே இருக்க முடியும். அத்துடன், அவர்கள் விரும்பும் எந்தவொரு தீர்மானத்தையும் ஜனநாயக முறைப்படி நிறைவேற்ற முடியாது.அதேவேளை, இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களும் அனைவருக்கும் சொந்தம் என்ற கோஷத்துடன் சிங்கள மக்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டுக் குடியேற்றப்படுவார்களாயின் அப்பகுதியில் பூர்வீகமாக வாழும் தமிழ்பேசும் மக்களை விட எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகிக் கொள்ள முடியும். அத்துடன், ஜனநாயக முறைப்படி தாம் விரும்பும் எந்தத் தீர்மானத்தினையும் நிறைவேற்றிக்கொள்ளவும் முடியும்.

அந்த யதார்த்தம் சிங்கள தேசத்திற்கு நன்கு புரிந்திருக்கின்றமையினாலேயே 1940 களில் இருந்து காணி எங்கு இருக்கின்றதோ அங்கு தான் காணிகளை வழங்க முடியும் என்று கோஷமிட்டவாறு தீவிரமான சிங்கள மயப்படுத்தலை வறண்ட பிரதேசக் குடியேற்றங்கள் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளத் தொடங்கியது.

வறண்ட பிரதேசங்கள் என்பது தமிழர் தாயகப் பிரதேசங்கள் மட்டுமல்ல, மாறாக தென்மாகாணம், வட மத்திய மாகாணம் என்பனவும் கூட வறண்ட பிரதேசங்களேயாகும். இங்கும் ஏராளமான காணிகள் உள்ளன. இங்கும் பல குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வட மத்திய மாகாணத்தில் பராக்கிரம சமுத்திரம்,மின்னேரியாக்குளம்,கிரியத்தல குளம் என்பவற்றை மையமாகக் கொண்டு (1940 களில்) குடியேற்றத் திட்டங்களையும் தென் மாகாணத்தில் 1965 களில் உடவளவைக் குடியேற்றத் திட்டத்தையும் 1980 களில் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான குடியேற்றத் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியது. இவ்வாறு சிங்கள தேசத்தில் மேற்கொள்ளபட்ட எந்தவொரு குடியேற்றத் திட்டத்திலும் தமிழ்த் தேசத்திலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்படவில்லை. இதன் மூலம் அரசா ங்கம் சிங்கள தேசத்தின் இன விகிதாசாரம் மாற்றமடையாமல் பார்த்துக் கொண்டது.

ஆனால், அதே காலப்பகுதியில் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்லோயா,அல்லை,கந்தளாய் போன்ற அனைத்துக் குடியேற்றத் திட்டங்களிலும் சிங்கள தேசத்திலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்தி தமிழ்த் தேசத்தின் இன விகிதாசாரத்தைக் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரத்தைப் பெரிதும் மாற்றியமைத்தது. இது கடந்த காலங்களில் நடந்தது. இன்று வட மாகாணத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குடியேற்றங்கள் என்பது ஒரு வழிப் பாதையல்ல. சிங்கள தேசத்து மக்கள் அரச ஆதரவுடன் தமிழ்த் தேசத்தில் குடியேற்றப்படுவார்கள். ஆனால், தமிழ்த் தேசத்து மக்கள் சிங் கள தேசத்தில் குடியேற்றப்படமாட்டார்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் தமிழ்த் தேசத்தின் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றி மீண்டும் குடியேறவிடாமல் அவர்களை அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் முடக்கி வைத்துக்கொண்டு சிங்கள தேசத்து மக்கள் தமிழ்த் தேசத்தில் எங்கும் சென்று குடியேறலாம் என்று அவர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுவதன் நோக்கம் இன விகிதாசாரத்தை மாற்றியமைப்பதேயாகும்.

வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்துள்ள இலங்கைத் தீவின் வடகிழக்குப் பிராந்தியம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய தாயகப் பிரதேசமாகும். அது அவர்களின் பிறப்புரிமை. இதனை மறுக்க அரசுக்கு எந்த உரிமையோ, அதிகாரமோ இல்லை. தமிழ்த் தேசத்தில் ஏனைய இனத்தவர்கள் குடியேற்றப்படலாமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் உரிமை தமிழ்த் தேசத்திற்கு மட்டுமே உண்டு. இது தமிழ்த் தேசத்திற்குள்ள தனித்துவமான இறைமையின் வழி வந்த அதிகாரமாகும்.

தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிக்க சிங்கள தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து உறுதியுடன் மேற்கொள்ளும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வென்னும்போது தமிழ்த் தேசத்திற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்ற யதார்த்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்த்துடையவர்கள் என்ற நிலையில் இருந்து பேச்சுக்களில் ஈடுபட்டு இறைமையுள்ள இரண்டு தேசங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டுக்குள் வாழ்வது என்பது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வர வேண்டும்.

Copyright © 2010 Thinakkural – Beta 1.0. All Rights

 


சிங்களபவுத்த மயப்படுத்தல் மூலம் பறிபோகும்  எமது தாய் மண!

நக்கீரன்

பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்னரும்  400,000    தமிழ்மக்கள் முகாம்களிலும் குடிசைகளிலும் சொல்லொணா அல்லல்களையும் அவலங்களையும் அனுபவித்து வருகிறார்கள். குடிக்கக் கஞ்சி இல்லை,  உடுக்க மாற்றுடை இல்லை, தாகத்துக்குத் தண்ணீர் இல்லை, மருந்தில்லை, பிள்ளைகள் கல்வி கற்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இல்லை என் இந்த மக்கள் வாடி, வதங்கி கண்ணீரில் மிதக்கிறார்கள்.

சிங்களப் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 10,000 முன்னாள் போராளிகளைத் தேடி “எனது மகன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?”  எனத் தாய் தந்தையர்  கண்ணீருடன் கேட்கிறார்கள்.  அரசு பதில் சொல்ல மறுக்கிறது.

தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு நிதி இல்லை என  உலக நாடுகளிடம் பிச்சை கேட்கும்  இராசபக்சே அரசு,  அரச சார்பற்ற பன்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் வடக்கிலும் கிழக்கிலும் செயல்படத்  தடை போட்டுள்ளது.

போர் முடிந்த பின்னரும் பாதுகாப்புக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 20,100 கோடியை ஒதுக்கியுள்ளது. மறுபுறம்  மீள்வாழ்வு மீள்குடியேற்றத்துக்கு வெறுமனே ரூபா 200 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது பாதுகாப்போடு ஒப்பிடும் பொழுது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு ஒதுக்கிய தொகை 1 விழுக்காட்டுக்கும் குறைவாகும்! இதன் மூலம் இராசபக்சே அரசு தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்பில் காட்டும் அக்கறையை மாண்புமிகு முதல்வர் புரிந்து கொள்ளலாம்.

தமிழர்கள் வாழும் வட – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நாற்பதுகளில் இருந்து நடைபெற்று வருகிறது.   இதனால் 1946 இல் கிழக்கு மாகாணத்தில் 8.40  விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை 1981  இல் 33.41   விழுக்காடாக  உயர்ந்துவிட்டது.  சிங்களவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தொகுதிகள் (திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, அம்பாரை மாவட்டத்தில் திகாமடுல்ல) உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது சிங்கள அரசு வடக்கையும் சிங்கள – பவுத்த மயப்படுத்த அசுர வேகத்தில் செயல்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் சிங்களமொழி தெரியாவிட்டால் நடமாட முடியாத பரிதாப நிலை எழுந்துள்ளது.  குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சேலை உடுத்து வீதியில் செல்லத் தமிழ்ப்  பெண்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழ்மக்களது  உயிருக்கும் உடைமைக்கும் உரிய அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்களது சமூக வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அவர்களது அடிப்படை மனிதவுரிமைகள்,   நடமாடும் சுதந்திரங்கள், பேச்சுச் சுதந்திரங்கள், கருத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன. அவர்களது காணிகளும் சொத்துக்களும் கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கையில் அறிவித்தல் செய்யாத இனவொதுக்கல் (Apartheid) வெறிபிடித்த சிங்கள – பவுத்த அரசினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதியை அண்மையைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் “தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது, இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தடுக்க  தமிழக அரசாலும் இந்திய  அரசாலும்  மட்டுமே முடியும்  இந்த இரண்டு அரசுகளை மட்டுமே நம்பியுள்ளோம்” என அவரிடம் தெரிவித்துள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டம் 2,727 ச. கிமீ பரப்பளவைக் கொண்டது. 1827ஆம் ஆண்டில் இந்த மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் (1.3 விழுக்காடு) மட்டுமே வாழ்ந்தார்கள்.  அப்போது தமிழர்கள் 15, 663 பேராகவும்  முஸ்லிம்கள் 3 ,245 பேராகவும் காணப்பட்டனர். அதாவது இந்த மாவட்டத்தின் மொத்த  குடித் தொகையில் தமிழர்கள் 81.76 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 16.94 விழுக்காடாகவும் சிங்கள வர்கள் 1.30  விழுக்காடாகவும் காணப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடித்தொகை முடிவுகள் சிங்களக் குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களின் குடித் தொகை அதிகரிப்பு என்பனவற்றைத்  துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3 விழுக்காடாக  மட்டும் இருந்த சிங்களவர்கள் 1981 இல் 33.41 விழுக்காடாகவும், 1827 இல் 16.94 விழுக்காடாக  இருந்த முஸ்லிம்கள் 1981 இல் 29.32 விழுக்காடாக  அதிகரித்துள்ளார்கள். அதே சமயம் 1827  இல் 81.76 விழுக்காடாக  இருந்த தமிழர்கள் 1981 இல்  36.39 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  இன்று போரினாலும் புலப்பெயர்வாலும் தமிழர்களது விழுக்காடு மேலும் குறைந்திருப்பதை 2006, 2007 குடித்தொகை மதிப்பீடு எடுத்துக் காட்டுகிறது.  திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 10 துணை அரச  அதிபர்கள் பிரிவுகளில் (AGA’s Divisions) 5 இல்  சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஒரேயொரு பிரிவில் மட்டும் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

கீழ்க்கண்ட அட்டவணை 1,   1827 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்டக்  குடிப்பரம்பலில் ஏற்பட்ட  தலைகீழ் மாற்றத்தைக் காட்டுகின்றது.

அட்டவணை 1

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்ட   குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007                             

ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிம் ஏனையோர் மொத்தம்
எண் % எண் % எண் % எண் %  எண் %
1827 250 1.30 15,663 81.76 3,245 16.94 0 0.00 19,158 100
1881 935 4.21 14,304 64.44 5,746 25.89 1,212 5.46 22,197 100
1891 1,105 4.29 17,117 66.49 6,426 24.96 1,097 4.26 25,745 100
1901 1,203 4.23 17,060 59.98 8,258 29.04 1,920 6.75 28,441 100
1911 1,138 3.82 17,233 57.92 9,700 32.60 1,684 5.66 29,755 100
1921 1,501 4.40 18,580 54.47 12,846 37.66 1,185 3.47 34,112 100
1946 11,606 15.29 33,795 44.51 23,219 30.58 7,306 9.62 75,926 100
1953 15,296 18.23 37,517 44.71 28,616 34.10 2,488 2.96 83,917 100
1963 39,925 28.82 54,452 39.30 40,775 29.43 3,401 2.45 138,553 100
1971 54,744 29.08 71,749 38.11 59,924 31.83 1,828 0.97 188,245 100
1981 85,503 33.41 93,132 36.39 75,039 29.32 2,274 0.89 255,948 100
2001*
2006 மதிப்பீடு 100,454 24.85 143,282 34.73 168,696 40.89 115 0.03 412,547 100
2007 மதிப்பீடு 84,766 25.35 96,142 28.75 152,019 45.47 1,436 0.43 334,363 100
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம்

* 2001 ஆம் ஆண்டு வட – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில் போர்ச் சூழல் காரணமாக குடித்  தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.

சிங்களக் குடியேற்றத்தின் பெருக்கால் 1961 ஆம் ஆண்டு அம்பாரை  மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இந்த மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.  அதன்  நிலப்பரப்பு 4,431 ச.கிமீ ஆகும். 1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 46.11 விழுக்காடாகவும் சிங்களவர் 29.28 விழுக்காடாகவும் தமிழர் 23.85 விழுக்காடாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.49 விழுக்காடாக உயர்வடைந்திருக்கின்றனர். அதேவேளை, தமிழர் 18.3 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 44 விழுக்காடாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர். கீழ்க்கண்ட அட்டவணை 2,   1963 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தினால் அம்பாரை  மாவட்ட  குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.

அட்டவணை 2

அம்பாரை மாவட்டம் குடிப்பரம்பல் 1963 – 2007

ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிம் ஏனையோர் மொத்தம்
No. % No. % No. % No. % No. %
1963 61,996 29.28 49,185 23.85 97,621 46.11 1,618 0.76 211,732 100
1971 82,280 30.18 60,519 22.85 126,365 46.35 1,670 0.61 272,605 100
1981 146,943 37.78 77,826 20.37 161,568 41.54 1,222 0.31 388,970 100
2001 236,583 39.90 109,188 18.53 244,620 41.25 1,891 0.32 592,997 100
2006மதிப்பீடு 251,166 39.89 115,912 18.41 259.798 41.26 2768 0.44 629,644 100
2007 மதிப்பீடு 228,938 37.49 111,948 18.34% 268,630 43.99% 1,145 0.19% 610,719 100
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம்

கிழக்கு மாகாணம் (திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு) முழுவதையும் எடுத்துக் கொண்டால் 1827  இல் 1.30 விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை (250)  திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக 1981 இல் 24.99  (243, 701) விழுக்காடாக  உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழர் எண்ணிக்கை   75.65 (34,758) விழுக்காட்டில்  இருந்து 42.06 (410,156)   விழுக்காடாகக் குறைந்துள்ளது.  முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.56 (11,533) விழுக்காட்டில் இருந்து 32.34 (315,436) விழுக்காடாக உயர்ந்துள்ளது! கீழ்க்கண்ட அட்டவணை 3,   1827 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தின்   குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.

அட்டவணை 3

                   திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007

ஆண்டு தமிழர் முஸ்லிம் சிங்களவர் ஏனையோர் மொத்தம்
எண் % எண் % எண் % எண் %  எண் %
1827 34,758 75.65 11,533 23.56 250 1.30
1881 75,318 58.96 43,001 33.66 5,947 4.66 3,489 2.73 127,755 100
1891 86,701 58.41 51,206 34.50 7,508 5.06 3,029 2.04 148,444 100
1901 96,917 55.83 62,448 35.97 8,778 5.06 5,459 3.14 173,602 100
1911 101,181 55.08 70,395 38.32 6,909 3.76 5,213 2.84 183,698 100
1921 103,245 53.54 75,992 39.41 8,744 4.53 4,840 2.51 192,821 100
1946 136,059 48.75 109,024 39.06 23,456 8.40 10,573 3.79 279,112 100
1953 167,898 47.37 135,322 38.18 46,470 13.11 4,720 1.33 354,410 100
1963 246,059 45.03 184,434 33.75 108,636 19.88 7,345 1.34 546,474 100
1971 315,566 43.98 247,178 34.45 148,572 20.70 6,255 0.87 717,571 100
1981 410,156 42.06 315,436 32.34 243,701 24.99 5,988 0.61 975,251 100
2001*
2007 மதிப்பீடு 590,132 40.39 549,857 37.64 316,101 21.64 4,849 0.33 1,460,939 100
மூலம்: சிறிலங்கா புள்ளிவிபரத் திணைக்களம்

* 2001 ஆம் ஆண்டு வட – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த எனைய 7 மாவட்டங்களில் போர் காரணமாக குடித்  தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.

அடுத்து மட்டக்களப்பு மாவட்டம். இதன் நிலப்பரப்பு 2,633 ச.கிமீ ஆகும்.  வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், 1961 ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தாவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனறாகலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம் (அம்பாரை) உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தை மேலும்  சிங்கள மயப்படுத்தும் திட்டத்துடனேயே அம்பாரை  மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின்  வடக்குப் பக்கமாக உள்ள மன்னம்பிட்டி உட்பட பல தமிழ் ஊர்கள் மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பகுதிகளிலும் அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய ஊர்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது அய்யமாகவே உள்ளது.  (http://www.eelanationnews.com/eelam/108-eelam/1685-arasiyal-kaddurai.html)

இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்  முதல்வர் கருணாநிதி அவர்களிடம் சொல்லியவற்றையும் சொல்லத் தவறியதையும் கீழே பட்டியல் இட்டுள்ளோம்.

* போரின் போது இடம்பெயர்ந்த  320,000 தமிழ்மக்களில் 50,000 மக்கள் தொடர்ந்து முட்கம்பி முகாம்களுக்குள் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாது சட்டத்துக்கு முரணாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

* இடம்பெயர்ந்து முகாம்களில் வதைபட்டு பின்னர் வெளியே விடப்பட்ட 270,000 மக்களில் பெரும்பாலோர் சிங்கள இராணுவத்தால் இடைத்தங்க முகாம்களில் விடப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு 6 தகரம், 3 பொதி சிமெந்து, 5,000 பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில், கல்வி வாய்ப்பு பெருமளவு மறுக்கப்பட்டுள்ளது.

*போரின் போது சரணடைந்த 10,000 போராளிகள் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.  நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.  சிங்கள இராணுவத்தினர் இவர்களை நாய்கள் எனத்  திட்டுகிறார்கள். இவர்கள் போர்க் கைதிகளாகக் கணிக்கப்படாமல் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகிறார்கள்.  இவர்களைப் பார்ப்பதற்கு செஞ்சிலுவைச் சங்க சார்பாளர்கள்,  ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* போர் முடிந்த  பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறிக் கைதுசெய்யப்பட்டவர்கள்  எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்ப உறவுகள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்.

* பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் இரண்டின் கீழும் கைது செய்யப்பட்ட   நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆண்டுக்கணக்காக  சிறைச்சாலைகளில் நீதி விசாரணை எதுவுமின்றி அடைத்து வைக்கபட்டுள்ளனர்.  கொடுமை என்னவென்றால் கணவனைத் தேடிக்  கைக் குழந்தைகளோடு வந்த தாய்மாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளளனர். (http://www.tamilwin.com/view.php?2a2IPBe0dbjog0ecQG174b4D988cd3g2F3dc2Dpi3b436QV3e23ZLu20)

தமிழர் பூமி சிங்கள இராணுவ மயப்படுத்தல்

* தமிழர்களின் பாரம்பரிய தொன்மைகளையும் விழுமியங்களையும் அழித்து வட- கிழக்கை இராணுவ மயப்படுத்தி அதனை  முழுமையாகவும் நிரந்தரமாகவும் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பது தான் சிங்கள அரசின் சதித் திட்டம் ஆகும்.  இதன் மூலம் வடக்கும் கிழக்கும் தமிழர்களது பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டை உடைத்து எறிய  சிங்கள – பவுத்த பேரினவாத அரசு முற்படுகிறது.   அதற்கு இசைவாக வடக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ  தளபதி ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இது போலவே கிழக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி மொஹான்  விஜவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதன்மைச் செயலாளராக முன்னாள் திருகோணமலை அரச அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரச  அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்ட அரச அதிபராக (Collector) மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி சில்வாவும் கிழக்கு மாகாணம் கல்விச் செயலாளராக கேணல் கோகன பணியாற்றுகிறார்கள்.  மாகாண சபை அமைப்பில் ஆளுநரே சகல நிறைவேற்று அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார். அண்மையில் நூறுவிழுக்காடு தமிழ்மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அடங்கிய பாரிய இராணுவ தளங்கள் (Cantonments) நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக ஏறக்குறைய 4 இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக  4,500 ஏக்கர் அரச காணி மட்டுமின்றி இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குச் சொந்தமான  காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

* இராணுவத் தேவைக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்  தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிருவாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப் பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் ஊர்களில்  இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற விடாது சிங்கள இராணுவம் தடைசெய்துள்ளது.  மீள்குடியேற்றத்திற்காக மனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச் செல்ல்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த   மக்களும் அடங்குவர்.   கடந்த வியாழக்கிழமை (ஆடி 29) அவர்களைச் சந்தித்த  தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் “”எங்களை எங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் அல்லது எங்களைக் கொன்றுவிடுமாறு அரசிடம் கூறுங்கள்’ என  ஆற்றாது அழுது குளறி கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லி அரற்றியிருக்கிறார்கள். (http://www.tamilwin.org/view.php?2a0g89DFe2ed1DpiG30ecb6ojV43cd4PZLu02cd3cuIPZd4b42vVQ6ocb40i0G1Ded0e4ZF2g8a0)

*கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் மரமுந்திரிகை வாரியத்துக்குரிய 1400 ஏக்கர் காணியில் 1050 ஏக்கர் காணி சிறிலங்கா கடற்படையினர் தளம் அமைக்க கையகப்படுத்தப் பட்டுள்ளது.

* வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு 110 மில்லியன் டொலர் செலவில் 60,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் ஏறக்குறைய  4 இலட்சம் சிங்களவர்கள் அரச செலவில்  வடக்குப் பகுதியில் குடியமர்த்தப்படுவர். இதனால் நான்கு சிங்களவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.(http://groups.yahoo.com/group/thamilvaddam/pending?view=1&msg=12506)

* வலிகாமம் வடக்கில் தொண்ணூறுகளில் கைப்பற்றப்பட்ட தமிழர்களது வீடு வாசல் மற்றும் காணிகள் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு  அங்கு வாழ்ந்த 17,000 தமிழ்மக்கள் இற்றைவரை மீள் குடியமர்த்தப்படாது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்றம் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப் போய்ப் பார்க்க  அனுமதித்தும் சிங்கள இராணுவம் அவர்களைத் தடுக்கிறது. 

* வட – கிழக்கு கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு  என்றும் சிங்கள இராணுவம் உயிர்களைப் பலிகொடுத்தே அதனைக் கைப்பற்றி இருப்பதால் சிங்கள இராணுவம் இடும் கட்டளைகளைத் தமிழ் உயர் அதிகாரிகள் கேட்டுக் கேள்வியின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள்.

* ஆனையிறவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள அரசு போர் நினைவுப் பூங்காக்கள், தூபிகள் போன்றவற்றை நிறுவியுள்ளது. அதே நேரம் தமிழர்களின் தேசிய அடையாளங்களான  மாவீரர் துயிலும் இல்லங்கள், கோயில்கள், சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை முற்றாக அழித்துவிட்டு சிறைச்சாலை கட்டப்படுகிறது.

* ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளது. 1803 ஆம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு அதில் முக்கிய வாசகங்கள் வெட்டப்பட்டிருந்தது.

சிங்கள மயப் படுத்தல்

*தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி “கிரநிக்கா ” முல்லைத்தீவு “மூலதூவ” என சிங்களத்தில் எழுதிவைக்கப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்கள், குளங்கள் சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.  மணல் ஆறு வெலி ஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

* வடமாகாணப் பள்ளிக்கூடங்களில் சிங்களம் படிப்பிக்க வலுக்கட்டாயமாக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. அய்ந்தாம் வகுப்பு புலமைப் பரிசுத் தேர்வுக்குத் தோன்றும் மாணவர்களிடம் கேட்கப்படும் 25 கேள்விகளில் 5 கேள்விகள் சிங்களத்தில் கேட்கப்படுகிறது.

* எல்லா அறிவித்தல்கள், பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் சிங்களத்தில் மட்டும் எழுதிவைக்கப்படுகிறது. நிருவாகம் பெரும்பாலும் சிங்களத்திலேயே நடக்கிறது. தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எள்முனை அளவு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

* யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பவுத்தமயப் படுத்தல்

* வடக்கிலும் கிழக்கிலும் பவுத்த விகாரைகளும் பவுத்த தூபிகளும்  நிறுவப்பட்டு வருகின்றன.  யாழ்ப்பாணம் –  வவுனியா செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒன்பது விகாரைகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சந்திகள் தோறும் புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. புத்தரை வழிபடுமாறும் பவுத்த தேரர்களுக்கு தானம் வளங்குமாறும்  தமிழ்மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

* மட்டக்களப்பு, கண்ணகிபுரம் தமிழ் ஊரில் சிறப்பு அதிரடிப்  படையினரால் பவுத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.  அந்தப் பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.(http://www.tamilwin.com/?page=7)

மன்னாரில் மகாதித்த என்ற விகாரை சிங்கள இராணுவத்தினால் கட்டப்பட்டு அதில் இரண்டு பவுத்த தேரர்கள் குடி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இடம் திருக்கோணேஸ்வர கோயிலுக்குச் சொந்தமானது. கேட்டால் அந்த இடத்தில் முன்னர் ஒரு விகாரை இருந்ததாக சிங்கள தொல்லியலாளர்கள்  சொல்கிறார்கள்.

போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு  முந்தியும் இனச் சிக்கலுக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது அரசியல் தீர்வே சரியான வழி என இந்திய அரசு ஓயாது சொல்லிவந்தது.  போரை நடத்த இந்திய அரசு ஒல்லும் வகையெல்லாம் சிறிலங்கா அரசுக்கு உதவி செய்தது. இன்றும் தமிழ்மக்களது அரசியல் வேட்கைகளை நிறைவு செய்யும் தீர்வொன்றை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று  தொடர்ந்து கிளிப்பிள்ளை போல் சொல்கிறது. ஆனால் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே இந்தியாவை எள்முனை அளவிலும் பொருட்படுத்துவதாக இல்லை.  அரசியல் தீர்வு பற்றிய பேச்சே இல்லாது போய்விட்டது.

இந்தியா,  சிறிலங்கா அரசு சீனா பக்கம் சாயாது தடுக்க அதனோடு ஒட்டி உறவாடும் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.  ஆனால்  மகிந்த இராசபக்சே தொடர்ந்து சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஒரு நாள் ஏமாறப் போகிறது.

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் அதன் பூர்வீகக் குடிகள் ஆவர். சங்கப் புலவர் பூதந்தேவனார் ஈழத்தில் வாழ்ந்த காரணத்தால்தான் அவர் ஈழத்துப் பூதந்தேவனார் எனச் சுட்டப் பெற்றார். அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்டம் திசமகாரமா என்ற ஊரில் 2,200 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. (http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32303)

சிறிலங்கா அரசு சிங்கள – பவுத்த வெறிபிடித்த அரசு ஆகும்.  பெரும்பான்மை சிங்கள – பவுத்த மக்கள் தனக்குக் கொடுத்த ஆணையின் கீழேயே தன்னால் ஆட்சி செய்ய முடியும் என மகிந்த இராசபக்சே  பச்சையாகக் கூறுகிறார்.

இராசபக்சே ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை. அண்மையில்  ஒரு ஊடக நிறுவனம் காடையர்களால் தாக்கப்பட்டுச் சேதப் படுத்தப்பட்ட்டுள்ளது.  2005 இல் இருந்து 2009 ஆண்டுவரை 34 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 30 பேர் தமிழர்கள்.  லங்காஇநியூஸ் என்ற இணையதளத்தில்  அரசியல் பந்தி எழுத்தி வந்த பிரகீத் எக்னிலிகொட என்ற சிங்களவர் காணாமமல் போய் 220  நாளாகிறது.   இந்த ஆண்டு சனவரி 24 ஆம் நாள் இவர் வீடு திரும்பும் போது காணாமல் போனார.

நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.  அரசுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புக்களை அரச அலட்சியம் செய்கிறது.  சிறிலங்கா அரசு மக்களாட்சிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழ் ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.          தமிழ்மக்கள் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

எனவே மகிந்த இராசபக்சே தமிழர்களின் தாயகத்தை  அழிப்பதற்கு மூர்க்கத்தோடு மேற்கொண்டுள்ள சிங்கள – பவுத்த – இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நாம் ஆவன செய்ய வேண்டும். சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலைகளையும் இனச் சுத்திகரிப்பையும பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்கு நாம் கொண்டு வர வேண்டும். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.   ஒடாத மானும் போராடாத  மக்கள் இனமும் வென்றதாக வரலாறு இல்லை.  தொடர்ந்து போராடுவோம்.


 

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply