“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” – ரங்கமலை ரகசியம்

 துரை.வேம்பையன்
 RAJAMURUGAN N

‘‘ரங்கமலையில் எக்கச்சக்கமான சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. முன்னாடி, அவங்க மலையைவிட்டு அதிகம் இறங்கிக் கீழே வர மாட்டாங்க. இப்போ அடிக்கடி வர்றாங்க. அவங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமான்னு ஊர்ப்பட்ட கூட்டம் இப்போ ரங்கமலையை ரங்கராட்டினம் மாதிரி சுற்ற ஆரம்பிச்சிருக்கு’’ என அமானுஷ்யத்தை அள்ளித் தெளித்துப் பேசுகிறார்கள் அடிவாரத்தில் குடியிருக்கும் மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஆண்டிபட்டிக்கோட்டை அருகே சுமார் 3,500 மீட்டர் உயரத்துக்குக் கூம்பு வடிவில் வான் முட்டி நிற்கிறது ரங்கமலை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மலையைச் சுற்றி இப்போது ஏகப்பட்ட மர்ம விஷயங்கள் கச்சைக் கட்டத் தொடங்க, பேருந்தில் ரங்கமலைக்கு டிக்கெட் போட்டோம்.

மலை அடிவாரத்தில் மருந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவருடன் மருதாம்பிகை, முருகன் உள்ளிட்ட கடவுள்களும் கொலுவிருக்கி றார்கள். பூஜை கனஜோராக நடக்க, அந்த அந்தி நேரத்துக்கே அங்கே நல்ல கூட்டம். அவர்களில் அநேகம் பேர் ‘சித்தர்கள் காட்சியைக் கண்டு தெய்வீக கடாட்சம் பெற வந்தவர்கள்’ என்று சொல்லப்பட்டது. கோயிலை ஒட்டி மலைக்குச் செல்வதற்கு ஏனோதானோவென செதுக்கப்பட்ட படிகள் தொடங்குகின்றன. ஆனால், அந்தப் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் கேட் போட்டுப் பூட்டி, ‘உத்தரவின்றி மலை ஏற அனுமதியில்லை’ என்று எச்சரிக்கை வாசகம் அடங்கிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. மலைக்கு மேலே 2,500 மீட்டர் உயரத்தில் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

பூஜைகள் முடித்துச் சற்று ஓய்வெடுத்த பூசாரி வேலுச்சாமியிடம் பேசினோம். ‘‘கரூர் மாவட்டம் பக்கம் இறக்கமாக இருக்கும் ரங்கமலையின் அந்தப் பக்கம் நட்டக்குத்தலா இருக்கு. மலைக்கு அந்தப் பக்கம் திண்டுக்கல் மாவட்டம். இந்த மலையில நூற்றுக்கணக்கான சித்தர்கள் காலம் காலமா இருக்காங்க. கூடுவிட்டுக் கூடு பாயும் அவர்கள், பெரும்பாலும் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாங்க. ஆனா, சமீபகாலமா அவங்க அடிவாரத்துக்கு வர்றாங்க. காரணம், தப்பானவர்கள், தீய சக்திகள் அதிகம் மலைக்கு வருவதுதான். அவர்கள் வருவதை சில அறிகுறிகளை வெச்சுக் கண்டுபிடிக்கலாம். மருந்தீஸ்வரர் சன்னிதிக்கு அருகில் அரசு மற்றும் வேம்பு மரங்கள் இருக்கு. பகல் 12 மணிக்கும் இரவு 12 மணிக்கும் ரங்கமலையில் எந்த மரத்திலயும் ஒரு சிறு இலைகூட அசையாது. ஆனா, இந்த அரசு மற்றும் வேம்பு மரங்கள் மட்டும் பெரும் புயல் வந்ததுபோல் அசையும். அந்த நேரத்தில திருநீறு, ஜவ்வாது, சந்தனம், மல்லிகைப்பூ மணம் கடுமையா வீசும். கஞ்சா வாடை கடுமையா அடிக்கும். அதை வெச்சே சித்தர்கள் தரையிறங்கிட்டாங்கன்னு கண்டு பிடிச்சுடலாம்’’ என்று கிலியை ஏற்படுத்தினார்.

அடுத்துப் பேசிய அந்தக் கோயிலை நிர்வகிக்கும் மொட்டைப் பிள்ளையார் தெய்வீக அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகர் ராமநாதன், ‘‘மலைக்கு மேலே மல்லீஸ்வரர் கோயில்கிட்ட மலங்கிலுவைன்னு ஒரு மரம் இருக்கு. அந்த மரத்துல உன்னிப்பா கவனிச்சா, சின்ன சைஸ்ல சில உருவங்கள் தெரியும். அதுதான் அறிகுறி. அவர்களைப் பார்த்தால் மோட்சம் கிட்டும்னு பக்தர்கள் பலரும் இங்கே வர்றாங்க. ஆனா, ஒரு சிலருக்கு மட்டும் அவர்களோட கை, முகம், கால்னு ஏதோ ஒரு பாகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிட்டியிருக்கு. இவ்வளவு சுத்தபத்தமா, தெய்வீக நெறியுடன் இருக்கிற என் கண்களுக்கே அவர்களோட காட்சி இன்னும் கிட்டலை. உண்மையான துறவிகள், சந்நியாசிகளுக்குச் சித்தர்கள் முழு உருவத்துடன் காட்சி தருவாங்க. சித்தர்களைப் பார்க்கறதுக்கு இப்போ நிறைய சந்நியாசிகளும் துறவிகளும்  வர்றாங்க. அவர்கள்ல பலர் தவறான பேர்வழிங்க. அவங்களை அடிச்சுத் துரத்தவே மலை அடிவாரத்துக்குச் சித்தர்ங்க இப்போ படையெடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

எங்கும் கிடைக்காத அரிய வகை மூலிகை செடிங்க இங்க இருக்குது. அதனாலேயே, சித்தர்கள் இங்க தங்கியிருக்காங்க. கொல்லிமலை சித்தர்களைவிட, பவரான சித்தர்களாகவும் இவங்க இருக்காங்க. தங்கபஸ்பம் செய்யத் தேவைப்படும் மூலிகை இங்கே இருக்கு. அந்த மூலிகையைப் பறித்து, மண்பானையில் போட்டு, அதே மண்ணால் செய்த கரண்டியால் கைபடாமல் கிளறி, இன்னும் சில மூலிகைகளைக் கலந்து, சிறிதளவு தங்கத்தையும் கலந்து, வரட்டியை மட்டும் விறகாகப் பயன்படுத்தி, ஒரு மாதம் பதப்படுத்தினால், தங்கபஸ்பம் கிடைக்கும்னு சொல்றாங்க. எந்தக் கொடிய விஷத்தையும் முறிக்கும் விஷ முறிவு மூலிகை, உடைந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகைன்னு அதிசய மூலிகைகள் இந்த மலையில் இருப்பதா சொல்றாங்க. இரும்பைத் தங்கமாக மாற்றும் அபூர்வ மூலிகையும் இங்கே உண்டு. மலையின் கீழ்ப் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதாக சொல்றாங்க. அதனாலேயே, இந்த மலைக்கு தங்கமலைனு பேரு. இங்கே வைரம் இருப்பதா சொல்வாங்க. அதை எடுக்கவும் ஒரு கூட்டம் சுத்தித் திரியுது. இந்த மலையில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சிறப்புப் பூஜைகள் நடக்கும். ஆடிப்பெருக்கு விழா இங்கு சிறப்பா நடக்கும். அப்போ, காதல் ஜோடிகள் இங்கே வந்து கொட்டம் போடுவாங்க. அந்தக் கடுப்பிலும் இப்போது சித்தர்கள் அடிவாரத்துக்கு வர்றதா சொல்றாங்க. ‘இந்த அநியாயத்தை நீ தட்டிக் கேள்’ என்று மருந்தீஸ்வரருக்கு உணர்த்தவே, வேம்பு, அரசு மரங்களை உச்சிப் பொழுதுல பிடிச்சு உலுக்குறாங்க. எது எப்படியோ, சித்தர்களால உண்மையான பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல’’ என்றார்.

ரங்கமலைக்கு வந்த கூத்தாங்கல்பட்டியைச் சேர்ந்த பாலு என்ற பக்தரிடம் பேசினோம். ‘‘எங்க குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்னை. என்ன பண்ணியும் பிரச்னை தீரலை. இந்த மலைக்கு வந்து சித்தர்களோட தரிசனத்தைப் பெற்றால், சகல பிரச்னைகளும் தீரும்னு சொன்னாங்க. வாரா வாரம் இங்கே நடையா நடக்குறேன். ஒரு சித்தர்கூட என் கண்ணில் படலை. எப்படியும் சித்தர்களைப் பார்த்தே தீருவதுன்னு விடாமல் வந்துக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

அன்று இரவு 12 மணிக்கு சித்தர்கள் நடமாட் டத்தைப் பார்த்தே விடுவது என்று முடிவு செய்து, அங்கேயே இருந்தோம். நள்ளிரவு 12 மணிக்கு, பூசாரி சொன்னதுபோலவே வேம்பு, அரசு என அந்த இரு மரங்கள் மட்டும் பலமாக அசைந்தன. உள்ளுக்குள் உதறலெடுத்தது. முகர்ந்து பார்த்தோம். மரத்தடியில் கொட்டிக்கிடந்த திருநீறு மணத்தைத் தவிர வேறு எந்த மணமும் வரவில்லை. மரங்கள் அசைவதை ஆராய்ந்தோம். மலை அடிவாரத்தில் மரங்கள் இல்லை. இந்த இரு மரங்கள்தான் முதலில் உள்ளன. மலையை நோக்கி வரும் காற்று, இந்த இரு மரங்கள்மீதும்தான் முதலில் மோதி அசைய வைக்கிறது. சரியாக 12 மணி என்ற கணக்கெல்லாம் இல்லை. இரவில் பலமாகக் காற்று வீசுகிறது. அதனால் மரங்கள் அசைகின்றன.

நம்மிடம் மறுநாள் பேசிய அந்தப் பகுதி இளைஞர் ஒருவர், ‘‘இந்த மலை அடிவாரத்தில் மீத்தேன் இருப்பதாகவும், அதை எடுக்கத் தனியார் நிறுவனங்கள் அடிபோடுவதாகவும் சொல்கிறார்கள். அதேபோல், இந்த மலையில் உள்ள கோயில்களுக்குப் போதுமான அளவு கூட்டம் வரவில்லை. மீத்தேன் பார்ட்டி களிடமிருந்து மலையைக் காக்கவும், கோயிலுக்குக் கூட்டத்தை வர வைக்கவும் சிலர் செய்த அலப்பறைதான், இந்த சித்து விளையாட்டு’’ என்று போட்டு உடைத்தார்.

மீத்தேன் எடுப்பதைத் தடுக்க என்றால், இன்னும் பல ஆயிரம் சித்தர்கள் மலையை விட்டுக் கீழிறங்கட்டும்.

– துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply