நாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது! நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள்!
நக்கீரன்
ரொறன்ரோ மாநகரில் எந்தவொரு நாளிலும் பத்துப் பன்னிரண்டு சோதிடர்கள் கூடாரம் அடித்து இருக்கிறார்கள். எந்தச் செய்தி ஏட்டைப் புரட்டினாலும் அதில் நான்கு, ஐந்து சோதிடர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டிருப்பார்கள். அவர்களது பெயர்கள் கூட மிகக் கவர்ச்சியாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற இந்திய சோதிடர் ஸ்ரீ மாரியம்மா சோதிடம், உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ ஓம் பார்வதி சோதிடர் மற்றும் மாந்திரிகர் (இவை ஒரே வார ஏட்டில் வெளிவந்த ஆங்கில மொழி விளம்பரங்கள்), ஓம் ஸ்ரீ சந்தோஷ மாதா சோதிடர் (கேரளா) பண்டிற் லம்போதரா, அகஸ்தியர் சோதிட நிலையம், சிவசக்தி சோதிட மையம் பண்டிற் சஞ்சீவ் பாபா, உலகப் புகழ்பெற்ற பண்டிற் நாகராசா எளத் தங்களைத் தாங்களே புகழ்ந்து விளம்பரம் செய்கிறார்கள்.
கல்வி, உத்தியோகம், தொழில், வியாபாரம், இலட்சுமி வசீகரம், வதிவிடப் பிரச்சனைகள், வெளிநாட்டுப் பயணங்கள், நீதிமன்ற வழக்குகள், திருமண யோகம், குழந்தைப் பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமையின்மை, எதிரிகள் கண்ணூறு (நாவூறு) சர்ப்ப தோஷம், கர்ப்ப தோஷம், வாகனப் பொருத்தம்…………………………… என எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்து கொள்ள ஒருமுறை என்னைச் சந்தியுங்கள் என அட்டகாசமாக அறிவிக்கிறார்கள்.
பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா? பணக்காரன் – ஏழை, படித்தவன் – படியாதவன் என எல்லோருக்கும் பிரச்சனைகள் ஒன்றல்ல பல உண்டு. இப்படியான விளம்பரங்களை வாசிப்பவர்கள் தங்களுக்கும் இரண்டொரு பிரச்சனைகள் இருப்பதாக உளவியல் அடிப்படையில் நம்பத் தொடங்குகிறார்கள். எடுத்துக்காட்டாக கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைக்காரர் விளம்பரத்தைப் படித்துவிட்டு சோதிடம் என்ற உருவில் தனக்கொரு தெப்பம் கிடைத்துவிட்டதாக நம்புகிறார்.
சாதாரணமாக தங்களை நாடி வருகிறபவர்களுக்கு பலன் சொல்ல சோதிடர்கள் இருபது டொலர்தான் கேட்பார்கள். அது ஒரு தூண்டில். அதைத் சோதிடம் பார்க்க வந்தவர் கவ்வியவுடன் அடுத்த கட்டத்துக்கு சோதிடர் போவார். சோதிடம் கேட்க வந்தவருக்கு செவ்வாய் தோஷம் (செவ்வாய், சனி, வியாழன் என பல தோஷங்கள்) இருக்கின்றது (வசதிக்கு ஏற்ப தோஷங்களை மாற்றி மாற்றிச் சொல்லாலாம்) இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு வாழ்க்கையில் பல தொல்லைகள் இருப்பதாகவும் சோதிடர் சொல்வார். தோஷபரிகாரம் செய்ய வேண்டும் செய்துவிட்டால் பின்னர் எந்தப் பிரச்சனைகளும் இருக்காது என்பார். அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதை சோதிடம் பார்க்க வந்தவரின் தோற்றம், முகபாவனை போன்றவற்றை வைத்து சோதிடர் கண்டு பிடித்துச் சொல்லுவார்!
கனடாவுக்கு படையெடுக்கும் கேரள, தெலுங்கு, கன்னட, தமிழ் சோதிடர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அவர்கள் காட்டில் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டுவது தெரிகிறது. சிலர் ஆண்டுக் கணக்கில் இங்கே கூடாரம் அடித்து இருந்து விடுகிறார்கள். இங்குள்ள பெரிய கடைகளில் ஒரு அறையில் தங்கியிருப்பார்கள்.
இந்த மூடநம்பிக்கை ஏன் விளம்பரபரம் செய்கிறீர்கள் என ஊடக நண்பர்களைக் கேட்டால் “அவர்கள்தான் விளம்பரப் பணத்தை நாளை வா அடுத்த நாள் வா என்று கடத்தாமல் ஒழுங்காகத் தந்துவிடுகிறார்கள்” என்கிறார்கள். இதற்கு விதி விலக்கும் உண்டு. தமிழ்த் தொலைக் காட்சி, சிஎம்ஆர், சிரிஆர் போன்ற இரண்டொரு ஊடகங்கள் சோதிட விளம்பரங்களை ஒளி, ஒலி பரப்புச் செய்வதில்லை. அவர்களுக்கு எனது பாராட்டுதல்கள்.
திருமணம் என்று வரும்போது பெண்வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் கட்டாயம் பொருத்தம் பார்ப்பார்கள். மெத்தப் படித்தவர்கள் கூட, பத்தாம் வகுப்பு சித்தி பெறாத சோதிடர்களிடம் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பை விட்டுவிடுகிறார்கள். பெண் – ஆண் இருவர்களது அகவை, தோற்றப் பொலிவு, கல்வி, வேலை, குடும்பப் பின்னணி இவற்றைப் பெற்றோர்கள் கருத்தில் எடுப்பதில்லை. மாறாக தினப் பொருத்தம் (இது முக்கியம்), கணப்பொருத்தம், மாகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கம், (மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும) யோனிப் பொருத்தம் (இது முக்கியம்) என 10-12 பொருத்தங்கள் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள். இதிலும் குளறுபடி உண்டு. ஒரு சோதிடர் பொருத்தம் இல்லை என்று தள்ளிவிட்டால் இன்னொரு சோதிடர் பொருத்தம் இருப்பதாகச் சொல்வார். அல்லது சின்னப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்பார்.
உண்மையில் ஆண் – பெண் இருவருக்கும் இடையில் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குருதி நான்கு முக்கிய வகுப்பாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. A, B, AB மற்றும் O. Rhesus என்ற காரணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது (Rh +ve) அல்லது (Rh -ve) வகுப்புகள். கீழ்க் கண்டவாறு குருதி வகுப்பு இருந்தால் மணப் பொருத்தம் இல்லை.
ஆண் A = பெண் O&B
ஆண் B = பெண் O&A
ஆண் AB = பெண் O,A& B
ஆண் Rh+ve = பெண் Rh-ve
எங்களது கல்வி என்பது பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கான படிப்புத்தான். அது பகுத்தறிவையோ, அறிவியல் மனப்பான்மையையோ வளர்க்கக் கூடியது அல்ல. மேற்குலக நாடுகளிலும் இதுதான் நிலைமை.
சாதகப் பொருத்தம் பார்த்து நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோர் நலமாக வாழ்கிறார்கள், ஆயுள் கெட்டியாக வாழுகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான சான்றும் கிடையாது. இராமனது முடி சூட்டுவிழாவுக்கு வசிட்டர் குறித்துக் கொடுத்த முகூர்த்த நாள் பிழைத்துவிட்டது.
மணமுறிவு கேட்டு குடும்ப நீதிமன்றங்களில் மனு போடுபவர்கள் எல்லாம் சாதகப் பொருத்தம் பார்க்காது திருணம் செய்தவர்கள் என்று சொல்ல முடியாது. அதே போல் சாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்வோர் வாழ்க்கையில் தோல்வி கண்டுவிட்டார்கள் என்றோ, அற்ப ஆயுளில் மாண்டு விட்டார்கள் என்றோ சொல்ல முடியாது.
சாதகம் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள அண்டவெளி 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவி தன்னைத்தானே ஒருமுறை சுற்றும் காலத்தை ஒரு நாள் என்கிறோம். ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் (24 மணித்தியாலங்கள்) எல்லா இராசிகளையும் கடந்து செல்கின்றது. பூமிக்குச் சார்பாகப் பார்க்கும்போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி இருக்கும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக்குறிப்பிட்ட இடத்திற்கு அந்த நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப் புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் சூரியன் எந்த இராசியில் நிற்கிறதோ அதுதான் குழந்தையின் இலக்கினம் என்றால் அந்தக் குழந்தை பிறந்த சரியான நேரம் எது? குழந்தை தலையை நீட்டிய நேரமா? பன்னீர் குடம் உடைந்த சநேரமா? அல்லது பூமியில் விழுந்த நேரமா? செவிலி தனது கடிகாரத்தைப் பார்த்த நேரமா? அல்லது வெளியில் வந்து உறவினர்களிடம் சொல்லும் நேரமா?
இப்போதெல்லாம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பிறப்பை செயற்கையாக தள்ளிப் போடுகிறார்கள். இப்படிச் செய்தால் அந்தக் குழந்தையின் தோற்றம், நிறம், அறிவு, ஆயுள், உடல் நலம் மாறிவிடுமா? அது சாத்தியமா?
இந்தியாவில் 60 ஆண்டுகளுக்குமுன் மக்களது சராசரி அகவை 30 மட்டுமே! இப்பொழுது ஆண்களின் சராசரி வயது 63.3 ஆகவும், பெண்களின் சராசரி வயது 66.3 ஆகவும் உயர்ந்துள்ளது. மேற்கு நாடுகளில் ஒன்றான கனடாவில் அகவை ஆண் 80.2, பெண் 84.1 ஆகும். சோதிடர்கள் கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் இந்தியர்களை வஞ்சிப்பதாகச் சொல்கிறார்களா? மனிதர்களது நீண்ட ஆயுளுக்கு சத்தான உணவு, நல்ல குடிநீர், நல்ல காற்று, நல்ல மருத்துவம் போன்றவையே காரணமாகும்.
இந்தியாவில் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் 50 குழந்தைகள் இறந்து விடுகின்றன – உலகில் அதிக எண்ணிக்கை இதுவாகும். நாட்டின் 5 அகவைக்குக் குறைந்த குழந்தைகள் நாள்ப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் என அடையாளம் காணம்பட்டுள்ளனர். அகவை 15-49 இடையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களுக்கு ஊட்டச் சத்துணவு குறைவாகக் காணப்படுகிறது. அரசாங்க மருத்துவ மனைகள் “தேதிமுடிந்த, போதியளவு மருத்துவர்கள் இல்லாத அழுக்காக” (A 2011 Wall Street Journal investigation into India’s government-run healthcare system) காணப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன? கோள்களும் நட்சத்திரங்களுமா? மருத்துவ வளர்ச்சி அடிப்படையில் பதில் சொல்ல முடியுமே தவிர சோதிட அடிப்படையில் பதில் சொல்ல முடியாது.
சோதிடர்கள் பலன் சொல்ல ஒன்பது கோள்களை கணக்கில் எடுக்கிறார்கள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, வியாழன், சனி, இராகு, கேது என்பன. இதில் சூரியன் நட்சத்திரம், கோள் அல்ல. சந்திரன் துணைக் கோள். இராகு கேது நிழல் கோள்கள். மேலும் 1781 இல் யுரேனசும், 1846 இல் நெப்டியூனும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை சாதகக் கணிப்பில் எடுக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் வாழும் பூமி ஒரு கோள். அதனைச் சோதிடர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் சோதிடர்களுக்கு கோள்கள் பூமியிலிருந்து சராசரி எவ்வளவு கோடி தூரத்தில் இருக்கின்றன என்பதுபற்றிய அறிவில்லை.
பூமியின் ஈர்ப்பு விசை 350 கிமீ உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் மனிதர்கள் கீழே பூமியில் விழுந்து விடாமல் வான வெளியில் மிதக்கிறார்கள். பூமியைப் போலவே மற்றக் கோள்களுக்கும் ஈர்ப்பு விசை மட்டுமே உண்டு! அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கே! பூமியை எட்டுகிற அளவிற்கோ அல்லது பூமியை தாக்குகிற அளவிற்கோ எந்த சக்தியும் இல்லை.
கிரகங்களுக்கு வேறு ஆற்றல் இல்லை என்பதை அறிவியலாளர்கள் கூறிய பிறகும் கிரகங்களின் சக்தி மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் நிருணயிக்கின்றன என்று சோதிடர்கள் கூறுவதை நம்பலாமா? எந்த ஆய்வின்படி, எந்தச் சான்றின் அடிப்படையில் சோதிடர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்?
அறிவியல் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், வேத அய்தீகக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தவறான கணிப்பைக் கொண்ட பஞ்சாங்கத்தை வைத்துக் கூறப்படும் சோதிடத்தை இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு சிந்திக்கும் திறனே இல்லை என்றுதான் கூற வேண்டும்.!
பூமியிலிருந்து கிரகங்களின் சராசரி தூரம்,
புதன் கிரகம் 9 கோடி 20 இலட்சம் கிமீ
வெள்ளிக் கிரகம் 4 கோடி 20 இலட்சம் கிமீ
செவ்வாய்க் கிரகம் 7 கோடி 70 இலட்சம் கி.மீ
வியாழன் (குருகிரகம்) 62 கோடி 80 இலட்சம் கி.மீ
சனிக் கிரகம் 127 கோடி 70 இலட்சம் கி.மீ
யுரேனஸ் கிரகம் 272 கோடி 20 இலட்சம் கி.மீ
நெப்டியூன் கிரகம் 435 கோடி 30 இலட்சம் கி.மீ
பூமி நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் போது 15 கோடியே 21 இலட்சம் கிமீ தூரத்திலும், சூரியனை நெருங்கி வரும் போது 14 கோடியே 71 இலட்சம் கிமீ தூரத்திலும் இருக்கும். அது போன்றே மற்ற கிரகங்களும் சூரியனை நெருங்கி வரும் போதும், சூரியனிலிருந்து தூரத்தில் இருக் கும்போதும் கிரகங்களின் தூரம் சிறிது மாறுபடும்!
எந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது! வேறு சக்தி கிரகங்களுக்கு இருப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை! விஞ்ஞானத்தை நம்புங்கள்!
அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்பது இந்திய அரசியல் யாப்பில் எழுதப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியலாளர்கள் பலரும் அறிவியல் இயக்கங்களும் சமூக விழிப்புணர்வுக் குழுமங்களும் பகுத்தறிவு இயக்கங்களும் வானியல் ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் தத்துவ ஆசிரியர்களும் சோதிடம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த பின்பும் சோதிட பாடம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புக்கு ஒரு பாடமாக பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் கற்பித்துக் கொடுக்கப் படுகிறது. காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் போன்ற வற்றில் சோதிடப் பட்டப்படிப்பு இருக்கிறது.
தன்னம்பிக்கை, சுயசிந்தனை, சுயமுன்னேற்றம், நேர நிர்வாகம், வானியல் அறிவு தொடர்பான பாடங்களுக்குப் பதில் அறிவியல் அடிப்படை இல்லாத சோதிடத்தை பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுப்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பிறந்த நேரம், அப்போது வானில் காணப்பட்ட கோள்கள், நட்சத்திரங்கள் இவற்றின் அடிப்படையில் ஒரு மனிதனது உயர்வு, தாழ்வு, வெற்றி, தோல்வி, கல்வி கேள்வி, வேலை, உடல்நலம், நோய்நொடி போன்றவை அமையும் என்பது அப்பட்டமான ஏமாற்று வித்தையாகும். இது ஊழ்க்கோட்பாடு (விதி) என்ற பெயரில் சிந்திக்க மறுக்கிற சமூகத்தை உருவாக்கி விடும். மேலே குறிப்பிட்டவாறு ஒரு குழந்தையின் பிறப்புக் கூட தற்போது நல்லநேரம், காலம் பிறக்க வேண்டும் என நினைப்பதால் இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்கிறார்கள். இப்பேரண்டத்தின் இயக்கம், கோள் நிலை மாறுபாடுகள் இவற்றால் புவியில் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமே தவிர (சான்று: கொஸ்மிக் கதிர்கள்) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்பது உண்மையல்ல என உருசிய நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா உலகிலேயே அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை மார்ச் 03, 2018 இல் கேப் கனவரால் விமானப்படை ஏவுதளத்திலிருந்து அட்லஸ் வி ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளி சுழற்வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கடும் சூறாவளிகள், காட்டுத்தீ, காட்டு வெள்ளம், பயங்கர நிலச்சரிவு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகள் பற்றி வியத்தகு முன் தகவலை அளிப்பதோடு படுதுல்லியமான படங்களையும் அனுப்பி பேரழிவிலிருந்து காக்கும் செயலைச் செய்யும் என்று வானியலாளர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
பெரும்புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை இனி துல்லியமாகக் கணிக்க முடியும் என்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம். இந்த செயற்கைக் கோளின் மதிப்பு 11 பில்லியன் டொலர்கள்!
இந்த வாரம் மே 7, 2018 இல் செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற மனித இயந்திரத்தை (‘robot’) அனுப்பியுள்ளது.
நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? செவ்வாய் தோசம் இருக்கிறது என்று சோதிடர் பயமுறுத்த அதற்குப் பரிகாரம் செய்ய கோயில் குளங்களைத் தேடி ஓடுகிறார்கள்!
Leave a Reply
You must be logged in to post a comment.