பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்!
1979 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் கட்டுரையில் சூரியனும், கிரகங்களும் பூமியை சுற்றுவதாக நம்புவது அய்தீகம். பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல! மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் (சோதிடம் பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்கப்படுகிறது) வித்தியாசம் இருக்கும்! தோராயமான பல உண்மைகள் நமக்குத் தெரிந்தேயிருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரு. ஏ.என்.சிவராமன் கருத்துப்படி அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கத் தகவலுக்கும் வித்தியாசம் இருக்குமென்றால் பஞ்சாங்கக் கணக்கு தவறு என்றுதானே பொருள்!
பஞ்சாங்கம் தோராயமானது என்றால் சோதிடமும் தோராயமானதுதானே.
பஞ்சாங்கம் அறிவியலுக்கு வித்தியாசப்பட்டது – தோராயமானது என்றால் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல் அடிப்படையானாதும் – துல்லியமான கணக்காகும்!
சோதிடம் இன்றைய அறிவியலுக்கு வித்தியாசமானது ஒத்து வரக்கூடியது அல்ல என்பதுதானே உண்மை. தனி மனிதன் வாழ்வை சோதிடத்தின் மூலம் துல்லியமாகக் கூறமுடியும் என்பது ஏமாற்றுத்தானே! அப்படிப்பட்ட சோதிடத்தை நம்பிக் கொண்டு அதிலே அறிவியல் இருப்பதாக சோதிடரைக் தேடிக் கொண்டு அலைந்ததால் தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காணமுடியுமா!
அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் பெருமளவு வித்தியாசம்
அறிவியல்படி – உண்மை நிலவரப்படி – சூரியன் மகர இராசியில் டிசம்பர் 22 இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14 இல் சூரியன் மகர இராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 நாள்கள் வித்தியாசம் இருக்கின்றன. இந்தச் சோதிடம் எப்படித் துல்லியமானதாகவும் அறிவியலின்படியும் ஆனதாகும்!
நிரூபிக்கப்படுவது அறிவியல்
அறிவியல் என்பது நிலைநாட்டப்பெற்ற உண்மைகள். சோதிடம் நிலைநாட்டப்பெற்ற அறிவியலா? உண்மையானதா? உலக விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனரா!
கணித மேதை ராமானுஜம் தனது கணிதம் பற்றிய ஆய்வுகளை உலகுக்கு அறிவித்தார். உலக விஞ்ஞானிகளிடம் ஆய்வுகளை அளித்தார். நிரூபித்துக் காட்டினார். அவரது கணிதம் பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டதுடன் அவருக்குச் சிறந்த பட்டமும் வழங்கிச் சிறப்பித்தனர்.
மூலிகைப் பொருளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் என்ற இராமர்பிள்ளையால் அதை விஞ்ஞானிகளின் மத்தியில் செய்து காட்டி நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானிகள் அவரின் ஆய்வை ஏற்றுக் கொள்ளவில்லை!
எனவே நிரூபிக்கப்பட்டதைத் தான் உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்கள். நிரூபிக்கப்படாததை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று இதுவரை நிரூபித்துக்காட்டியதில்லை. சோதிடர்களால் நிரூபிக்கவும் முடியாது. அவ்வளவு தவறுகள் சோதிடத்தில் இருக்கின்றன. சூரியனை ஒரு கிரகமென்றும், அது ஒரே இடத்தில் நிலையாக இருக்கிற பூமியைச் சுற்றி வருவதாகவும் சோதிடம் கூறுகிறது. இந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல் பூர்வமானது என்று கூறமுடியும்?
சூரியன் ஒரு கிரகமல்ல, அது அண்டத்தில் ஒரு நட்சத்திரம். நொடிக்கு 60 கோடி தொன் ஆற்றலை வெளியிடும் பேராற்றல் மிக்க சூரியனை, வறண்டு போன, கடும்பனி மூடிய கிரகங்களுடன் சேர்த்து சூரியனை ஒரு கிரகமென்று சோதிடம் குறிப்பிடுவது மிகப்பெரிய தவறு!
வானவெளியிலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கிரகங்களைத் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சோதிடம் எழுதப் பெற்ற அக்காலத்தில் யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த கிரகங்கள் 6 மட்டுமே!
ராகு, கேது என்பது கிரகமே அல்ல! அதையும் சோதிடத்தில் கிரகமென்று சேர்த்துக் கொண்டார்கள். கிரேக்க நாட்டு வானவியல் கருத்து அது.
சூரியனிலிருந்து கிரகங்களின் வரிசை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்று இருப்பது கூடத் தெரியாமல் சோதிடத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தியிருக்கின்றனர். கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது, அந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் தவறானதுதானே! அது அறிவியல் அடிப்படை ஆகுமா!
இராசி வட்டத்திலும் சோதிடம் தவறாக கணக்கிடப்படுவதாக வானவியல் விஞ்ஞானி. எஸ்.சுந்தரம் தான் எழுதிய நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். வானவியல் விஞ்ஞானத்திலிருந்து சோதிடம் விலகி விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அறிவியல்படி கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை கொஞ்ச தூரத்திற்கே உண்டு. ஈர்ப்பு விசையும் பூமியை எட்டுகிற அளவிற்கு கிடையாது! சில குறிப்பிட்ட தூரத்திற்கே ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்பு விசை 350 கிலோ மீட்டர் உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் விண்வெளி வீரர்கள் மிதந்தபடி இருக்கிறார்கள். ஆனால் சோதிடர்கள் கிரகங்களின் ஆற்றலால் (சக்தி) பூமியில் தனி மனிதனின் வாழ்வு நிருணயிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை நம்பாமல் சோதிடர்களின் கருத்தை நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
பூமியின் துணைக்கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் மற்றக் கிரகங்களிலுள்ள துணைக் கிரகங்களைச் சோதிடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை! அக்காலத்தில் தெரிந்திருப்பதைக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டதே தவிர, அறிவியல் தெரிந்து எழுதப்பட்டதல்ல!
சோதிடத்தில் கிரகங்கள் வரிசையில் முரண்பாடு, இராசி வட்டத்தில் தவறு, கிரகங்களுக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகக் கூறுவது தவறு, இத்தனை தவறுகளை சோதிடத்தில் வைத்துக் கொண்டு பஞ்சாங்கமும், சோதிடமும் அறிவியல் அடிப்படையானது என்று சொல்ல எப்படித் துணிந்தார்களோ?
சோசியம் முழு முட்டாள்தனம் – பண்டித நேரு
பாக் இந்தியா போர்ப் புரளிகளைப் பத்திரிகைகள் வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இக்கூட்டத்திற்கு வரும் ச மயத்தில் டில்லியில் பலமான வதந்தியொன்று கிளப்பிவிடப்பட்டிருப்பதை அறிந்தேன். அதாவது, இந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாக் இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று டில்லியில் பேச்சாகவுள்ளது. இது எந்த சோதிடர் கிளப்பிவிட்ட புரளி என்பது எனக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன், டில்லி செய்தித்தாளொன்றும் இதேமாதிரி வதந்தியைக் கொட்டை எழுத்துத் தலைப்புடன் தந்து வெளியிட்டிருந்தது. பத்திரிகையை அதிகம் விற்க இம்மாதிரிச் செய்திகளை வெளியிடுகிறார்கள் போலும்.
சில பஞ்சாப் பத்திரிகைகளும், சில பம்பாய் பத்திரிகைகளும் இந்த வதந்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆசிரியர்களின் மனம் மெய்மையில் பாய்வதில்லை போலும். இந்த வதந்திகளின் விளைவாக அமிர்தசரசில் அவதி ஏற்பட்டுள்ளது. இந்த முட்டாள் தனமெல்லாம் எதற்காக?
இந்த நாடு எதிர்கால நடவடிக்கைகளுக்காக சோதிடர்களை நம்பிக் கிடக்கப்போகிறதா? சோதிடர்களின் கருணையால் பிழைக்கப்போகிறதா? பின்னால் நடக்கப் போகும் நிகழ்சிகளைப்பற்றி நிமித்தம் கூறக்கூடிய சக்தி இந்த சோதிடர்களுக்கு இருந்திருக்குமேயாயின் அவர்கள் முதலில் தங்கள் சொந்த வாழ்க்கைக்கு வழியைக் கணித்தறிந்துகொண்டிருக்க வேண்டும், பிறரிடம் பிச்சைக் காசுக்குக் கையேந்திநிற்பதை விடுத்து, பிழைக்கும் வழியையறிந்து நடந்து கொண்டிருக்கவேண்டும். இந்த உண்மையை மக்கள் திட்டவட்டமாக அறிந்து ஆராய்ந்து பார்த்து நடந்துகொள்ள வேண்டும்.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு சோதிடர்களின் நிமித்தத்தை நம்பிக் கிடப்பது அறிவுகெட்ட முட்டாள்தனத்தின் உச்ச நிலையாகும். இந்நாடு நல்வாழ்வு மிக்க நல்ல நாடாகவிருக்கப்போகிறதா? அல்லது யாரோ ஒரு சோதிடன் ஆபத்து வரப் போகிறது என்று சொல்லிவைத்தது கேட்டு திகில் கொண்டு ஓட்டமெடுக்கப் போகிறதா?
செப்டம்பர் 9 ஆம் தேதி பாக்_இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று இந்த சோதிடர்கள் சொல்லி வைத்திருக்கிறார்களே பாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சண்டை தொடங்கப் போகிறதா என்று. அன்று சண்டை ஏற்படாவிட்டால், இனிமேல் இந்த சோதிடப் புளுகுகளை நம்பும் குருட்டு நம்பிக்கைப் போக்கைக் கைவிடுங்கள். இத்தகைய வதந்திகள் இனச்சச்சரவுகளைத்தான் மூட்டிவிடும். எனவே, மக்கள் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
(டில்லி ராஜ்ய காங்கிரசுக் கமிட்டி ஆதரவில் கரோல்பாகில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்டித நேரு பாகிஸ்தான் போர்பற்றிய வதந்திகளைக் கண்டித்துப் பேசியபோது குறிப்பிட்டது)
“விடுதலை” 08.09.1951
இராசியும் வானியலும்
மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.சோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் சோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் – சோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.
விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.
இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.
பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.
வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.
சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23.5 பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள் வட, தென் முனைகள் அமையாது, 23.5 பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே இராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக இராசி உள்ளது.
இந்த இராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 இராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ இராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலிருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ இராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் இராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.
ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.
ஆக உள்ளபடியே இராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் இராசிகள் உதவுகின்றன. இன்று கடக இராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக இராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் இராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக இராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (இராசிகளும்) திகழ்கின்றன.
உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ இராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக இராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் இராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர இராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் (equinox) எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.
மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23 பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.
அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் (வடசெலவு) எனவும் பின்னதைத் தட்சணாயனம் (தென் செலவு) என்றும் அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் கடகராசியை அடைவது தட்சணாயனம்.
இராசிகள் உருவானது எங்கே?
இந்திய சோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் இராசி எனும் கருத்தும், 12 இராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.
வராகமிகிரர் (கிபி 505 -587) தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க சோதிடர்களை குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் இராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல சோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் எனத் துணியலாம்.
2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ இராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.
சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 இராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு இராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த இராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த இராசியிலிருந்து விலகி அடுத்த இராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 2000 த்தில் மேஷ இராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப இராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன இராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் சோதிடம் கூறுகிறது. இதுதான் 71/2 நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)
சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு இராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?
பஞ்சாங்கத்தில், சோதிடத்தில் இடம் உண்டா?
தி. வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” 14-8-2010
சூரியன் அருகே வால் நட்சத்திர வடிவத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தனர். ஒசிரிஸ் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. பூமியிலிருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் இது உள்ளதாம்.
அதெல்லாம் சரி, இன்னும் பஞ்சாங்கத்திலும், சோதிடத்திலும் நவக் கிரகங்களுக்கு மட்டும் பலன் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே – இப்படிப் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு என்ன பலனோ!
இதில் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதை ஒன்று உண்டு. உண்மையான கிரகமான பூமிக்கு சோதிடத்தில் இடம் இல்லை. பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டாம். ஹி… ஹி…
அதைவிட ஒரு தமாஷ் என்ன தெரியுமா? சூரியன் ஒரு நட்சத்திரம்தான்; ஆனால், சோதிடத்தில் சூரியன் கிரகமாம்.
இன்னொரு சுவையான தகவலும் உண்டு.
யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் உண்டே பஞ்சாங்கக்காரர்களுக்கு இவையெல்லாம் தெரியாத காரணத்தால், இவற்றுக்கு சோதிடத்தில் பலன் சொல்லப்படவில்லை.
மேலும், ஒரு வயிறு வெடிக்கும் சிரிப்பு!
சோதிடத்தில் ராகு, கேது என்று இரண்டு கிரகங்களைச் சொல்லுகிறார்களே – அப்படி எந்தக் கிரகமும் கிடையவே கிடையாது என்று காது செவிடாகும் வகையில் விஞ்ஞானிகள் அடி கொடுக்கிறார்கள்.
இதற்கு மேலும் சோதிட நம்பிக்கையா? நம்புபவர்களை எதைக் கொண்டு சாற்ற?
பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு!
பஞ்சாங்கம் 40+
தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பது சட்டப்படியாகவும் வழக்கப்படியாகவும் வந்துவிட்ட நிலையிலும் கூடச் சில மண்டூகங்கள் சித்திரை மாதத்தில் வருஷம் பிறப்பதாகக் கூறிக் கொண்டு கோயிலுக்குப் போய்ப் பஞ்சாங்கம் படிப்பதைப் பழக்கமாக வைத்துள்ளார்கள். பஞ்சாங்கம் படிப்பதால் நிலத்தில் விளைச்சல் கூடுதல் ஆகுமாம். பிட்டத்தில் அடித்தான் பல் விழுந்து போச்சு என்று புகார் கொடுத்தவனைப் போல இதைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். கிணற்றுக்குள் மூழ்கிக் கிடக்கும் தவளைக்கு அதுவே மிகப் பெரிய கடல் என்ற எண்ணமாம். அதனால்தான் இவர்களை மண்டூகம் (தவளை) என்கிறோம்.
பஞ்சாங்கத்திற்கும் பயிர் செய்வதற்கும் என்ன தொடர்பு? யாரும் விளக்கவில்லை. அப்படித் தொடர்பு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், எந்தப் பஞ்சாங்கத்தைப் படித்தால் பயிர் வளரும்? சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று இரண்டு பஞ்சாங்கங்கள் தமிழ்நாட்டில் விற்கிறார்களே! இவற்றில் எதில் பயிர் வளர்க்கும் உரங்கள் கிடைக்கின்றன? ஒன்றில் இயற்கை உரமும் மற்றொன்றில் இரசாயன உரமும் கொட்டிக்கிடக்கின்றதா? விவரம் சொல்லலாமே!
40 வகையான பஞ்சாங்கங்கள்
தமிழ்நாட்டில் இப்படிக் குழப்பம் என்றால், பாரதநாடு முழுவதிலும் பெருங்குழப்பமே உள்ளது. ஏறத்தாழ 40 வகையான பஞ்சாங்கங்கள் இந்தப் புண்ணியப் பாரத பூமியில் புழங்கி வருகின்றன. மகாராட்டிரத்தில் மட்டும் எட்டுவிதப் பஞ்சாங்கங்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று உடன்பாடானவை அல்ல; எதிரும் புதிருமானவையாகவே உள்ளன.
சூரியனை மய்யமாக வைத்து இந்துமதப் பஞ்சாங்கங்கள் நாள், மாத, வருடக் கணக்குகளைச் செய்து வருகின்றன. இசுலாமிய மார்க்கத்தில் இருப்பது நிலவை மய்யமாக வைத்துக் கணக்கிடும் முறை. இந்து மதத்திலேயும் பகுதிக்குப் பகுதி மாறுபாடுகள் உண்டு. வடஇந்தியப் பகுதிகளில் முழு நிலவு (பவுர்ணமி) நாளை வைத்து மாதங்கள் பிறக்கின்றன. மத்திய இந்தியப் பகுதிகளில் இதுவே மறைநிலவு (அமாவாசை) நாளை வைத்துப் பிறப்பதாகச் சொல்கிறார்கள். தென் இந்தியாவிலோ சூரியன் நுழையும் இராசிகளுக்கு ஏற்ப மாதப் பிறப்பைக் கணக்கிடுகிறார்கள்.
இரவில் திருமணம்
வட இந்தியாவில் விக்ரம சகாப்தம் என்று கூறி, தீபாவளிப் பண்டிகை அன்று புத்தாண்டு பிறப்பதாகக் கூறுகிறார்கள். மற்றப் பகுதிகளில் சாலிவாகன சகாப்தம் எனக் கூறி வசந்த காலத்தில் வருடம் பிறப்பதாகக் கூறுகிறார்கள். குஜராத்தி, மார்வாடி-கள் போன்ற வணிக ஜாதிகள் நிறைந்துள்ள பகுதிகளில் திருமணங்கள் எல்லாமே இரவு நேரங்களிலேயே நடக்கின்றன.
இரவு நேரத் திருமணம் என்பதைத் தென் இந்தியாவிலோ மகாராட்டிரத்திலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பகல் முழுவதும் வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துப் பிறகு ஓய்வாகக் குடும்பச் சடங்குகளைச் செய்வது அங்கு வியாபாரிகளின் வாடிக்கை. அதில் குறைகாண முடியாதே!
ஒரே இந்து நாடாக இருந்த நேபாளத்தில் வாரத்தின் ஏழு நாள்களிலும் திருமணங்கள் நடக்கும். மாலை தொடங்கி இரவில் முடியும். யாருக்கும் சிரமம் இல்லாமல், அனைவரும் கலந்து கொள்ளும் காலமாக இருப்பதால் சிறந்த நடைமுறை. ஆனாலும், தென்னாட்டில் கடைப்பிடிப்பது கிடையாது. பின் என்ன பாரதம் ஒரு நாடு? பின் என்ன இந்து மதம்? ஒரே மாதிரியான நடைமுறை இல்லையே! பிறகு எப்படி, இந்து என்று பெருமைப்படுவது? பஞ்சாங்கத்தின்படி நாள் ஒன்றுக்கான 24 மணிநேரம், 60 நாழி-கைகளாகப் பிரிக்கப்படுகிறது. பகல் 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைகளுக்கு மட்டுமே, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, மேல்நோக்கு, கீழ்நோக்கு எல்லாம்? சூரியன் மறைந்த பிறகு உள்ள 12 மணி நேரத்திற்கான 30 நாழிகைக்கு எதுவுமே கிடையாது. ஆகவே இந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்வதற்குத் தடை ஏதும் கிடையாது. இது வட நாட்டாருக்கு வசதி என்றால், தென் நாட்டாருக்கு வசதி இல்லை என்றால் பின் எப்படி பாரதம் ஒரு நாடு நாம் அதன் புதல்வர் அந்த நினைப்பை நாம் அகற்றக் கூடாது என்றால், என்ன நியாயம்? கேட்க மாட்டோமா?
எல்லா மாதமும் திருமணம்
இந்த நிலையில் மாராட்டியத்தில் புதிய பிரச்சினை. திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்ட முகூர்த்த நாள்கள் பஞ்சாங்கப்படி மிகவும் குறைவு. அதிலும் மழைக்கால மாதங்களில் (சாதுர் மாதம்) அறவே முகூர்த்த நாள்கள் கிடையாது. வேலை செய்யாமல் பிச்சை எடுத்துச் சாப்பிடவேண்டிய சாமியார்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள் போன்ற ஆள்கள் மழைக்காலத்தில் ஊர், ஊராகப் போய்த் தெருத்தெருவாகத் திரிந்து பிச்சை எடுப்பது சிரமம் என்ற காரணத்தால் _ இந்தத் தெண்டச்-சோற்று மனிதர்களை ஓரிடத்தில் தங்கவைத்து வடித்துப் போடுவது என்ற பழக்கத்தினால் வந்தது இந்த ஏற்பாடு. மழைக்காலத்திற்கு எறும்பு தன் தீனியைச் சேகரித்து வைத்துச் சாப்பிடுவது போன்ற வகையிலான ஏற்பாடு. ஆகவே, இவை கெட்ட மாதங்களாம். சுப காரியங்கள் நடக்கக் கூடாதாம்.
பஞ்சாங்கத்தை மாற்று
இதை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை மாராட்டியத்தில் எழுந்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட கோல்காபூர் (சமஸ்தானம்) மாவட்டத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஊரில் உள்ள கர்வீர் பீட சங்கரமடத்தின் அதிபதி கிறீவித்யா நிருசிங் பாரதி என்ற பெயர் கொண்ட சங்கராச்சாரி இதற்கு முன் முயற்சி எடுத்துள்ளார். மாராட்டியத்தில் பஞ்சாங்கம் போடும் எட்டுப் பேரில் அய்ந்து பேரைக் கூட்டிப் பேசியிருக்கிறார். இவர்களின்முடிவு சில நாள்களில் அனைத்து சங்கராச்சாரிகளின் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்படுமாம்.
சாதுர்மாதகாலமாகிய நான்கு மாதங்களிலும் திருமணங்கள் நடக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்பது வெளிநாடுகளில் உள்ள மராட்டிய மக்களின் வேண்டுகோளாம். அதற்-கான முயற்சிகளை எடுப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நாளில் பெரும்பகுதியை வீணாக்குவது வாரத்தில் செவ்வாய், சனி இரண்டு நாள்களை ஒதுக்குவது, மாதத்தில் நான்கைந்து நாள்களை மட்டும் நல்ல நாள் என்பது, ஆண்டில் நான்கு மாதங்களைப் புறக்கணிப்பது என்று மதத்தைக் காரணங்காட்டிக் கூறுவது என்பது மா-றுமா? இந்து மக்களும் ஏனைய மக்களைப் போலவே மூளையைப் பயன்படுத்தும் மாற்றம் ஏற்படுமா? சட்டப்படி நாமும் இந்து என்பதால் இந்தக் கவலை நமக்கும் ஏற்படுவது சரிதானே!
இடிபாடும் தங்கத்தகடும் மிஞ்சிப்போன சந்தனத்தை எங்கெல்லாமோ பூசிக் கொள்வது என்று கொச்சையான சொலவடை ஒன்றுள்ளது. அதைப்போல, திருப்பதிக் கோயிலின் தங்கத்தை என்ன செய்வது என்று புரியாமல், சுவரில் அடிக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே கோபுரத்தில் அடித்திருக்-கிறார்கள். அமிர்தசரஸிலுள்ள சீக்கியர்களின் தங்கக் குருத்வாரா போலத் திருப்பதி பெயர் வாங்க வேண்டு-மாம்!
பக்கத்தில் உள்ள சிலந்தி பாம்பு யானைக் கோயில் (சீகாளத்தி) இடிந்து விழுந்துவிட்ட நிலையில் வைணவர்களுக்கு இது தேவையா? சிவன் கோயிலில் இருந்து சிறு சுண்ணாம்புக் கல் கீழே விழுந்ததற்குக் காரணமான காக்கையை வீர வைணவக்காக்கை ஆக்கிய நாமதாரிகள், மறைவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து போனார்கள் என்பது ஏடுகள் எழுதாத சேதி. திருப்பதியில் கோடி கோடியாகக் கொட்டப்படுவதற்கும், சீகாளத்தியில் ஈ ஓட்டும்நிலை உள்ளதற்கும் வாஸ்துவைக் காரணம் காட்டி வயிறு வளர்த்தவர்கள் காட்டில் கனமழை! இப்போது கோபுரமே இடிந்து விழுந்துவிட்டதில், வாஸ்து வியாபாரிகளுக்கும் வருமானம்!
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்பது பொய்யாகிவிட்டது. சர்வேஸ்வரன், பரமேசுவரன் என்பதெல்லாம் பொசுங்கிவிட்டது. கைலாசபதியின் குளிர்கால வாசஸ்தலம் இடிந்து நொறுங்கிப் போனதில் கடவுள் ஸ்தானம் கனவாகிப் போய்விட்டதில் வைணவர்களுக்கு வெகு சந்தோஷம்!
சிவன் கோயில் இடிந்ததற்குக் கொஞ்சங்கூட வருந்தாமல், சுவருக்குத் தங்கத் தகடாம். 10 ஆயிரம் சதுர அடிப் பரப்புள்ள கருவறைச் சுவர்களில் தங்கத் தகடாம். 200 கிலோ தங்கமாம். 100 கோடி ரூபாய் செலவாம். 125 கிலோ தங்கம் வசூலாகி விட்டதாம். முகேஷ் அம்பானி, அவர் தம்பி அனில் அம்-பானி, விஜய் மல்லய்யா போன்ற நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சம்பாதிக்கும் தொழில் முதலாளிகள் நன்கொடையாளர்களில் சிலர். முகேஷ் கொடுத்தது 5 கோடியாம், கருவறைக் கதவுகளுக்குத் தங்கம் பதிக்க 6 கோடி ரூபாய் தருகிறாராம் மல்லய்யா.
கொள்ளையோ கொள்ளை
இந்தக் கணக்கு வழக்குகளில் சுத்தம் இல்லை சுரண்டல் நிறைய கொள்ளை ஏராளம் என்னும் புகார் வந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி புகார்தாரார்.
10ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்பதால் இதனை எதிர்க்கிறார் பேராசிரியர் கிரண்காந்த் சவுத்ரி. வெங்கடேசுவரா பல்கலைக் கழகப்பேராசிரியர் இவர். சுவரிலிருந்து சில அங்குல இடைவெளியில் தங்கத் தகடுகள் பதிக்கப்படுவதால், ஒளி, காற்று இல்லாமல் சுவரே பாதிக்கப்படும் என்கிறார். இதே கருத்தைத் திருப்பதி தேவஸ்தானத் தலைமைப் பொறியாளர் ஆஞ்சனேயலு நாயுடுவும் தெரிவித்திருக்கிறார். தங்கத் தகடுகளைத் திருடிக் கொண்டு போகாமல் தடுப்பதற்காகத் தனியாக வேலி அமைக்கப்பட வேண்டும் (ஏன் என்றால் ஏழுமலையான் எதுவும் செய்திட இயலாத, கையாலாகாத கடவுள்தானே) அப்படி அமைத்தால் கருவறை அளவு வெறும் 5 அடியாகக் குறைந்துவிடும் என்கிறார்.
(அப்படியானால் பக்தர்கள் எங்கே நிற்பது? ஜருகண்டி, ஜருகண்டி என்று விரட்டும் ஆள் எங்கே நிற்பது? பெருமாள் எங்கே நிற்பது?)
திருப்பதி கோயிலுக்குள் 640 கல்வெட்டுகள் உள்ளன. பழைமையான இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறும் கல்வெட்டுக்கூட உண்டு. இவற்றைச் சேதப்படுத்துவது ஆயிரம் பார்ப்பனர்களைக் கொன்றதற்கும், ஆயிரம் பசுக்களைக் கொன்றதற்கும் சமம் எனக்கூறிப் பயமுறுத்தும் கல்வெட்டும் உண்டு. ஆயினும், இதை மறைத்து அழிக்கும் செயலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகரன் ஈடுபட்டார். (இவர் கிறித்துவர்)
பரமேஸ்வர சேவா சமிதி எனும் அமைப்பின் சார்பாக வழக்குப் போட்டுள்ள சிரேயஸ் ரெட்டி, ஆந்திர அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளைத் திருப்பதி கோயில் மீறி இருக்கிறது என்று வாதிடுகிறார். இந்தக்கோயிலை உலகப் புராதனச் சின்னமாக 1977 இல் அறிவித்துள்ள யுனெஸ்கோ அமைப்புடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி அரசு நடக்கவேண்டும் என்று வழக்குப் போட்டவர் கூறுகிறார்.
ஏழுமலையான் கையில் எதிர்காலம் என்கிறார்கள். ஏழுமலையானின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் என்றாகிவிட்டது. கொடுமைதான்!
சோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு
சோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு சோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி சோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் சோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.
சோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தியாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், இராமாயணம், உபநிஷத்துகள் போன்றவற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.
சோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், இராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.
சோதிடக் கலை என்பது புராதன கிரேக்க ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.
பெரும்பாலான சோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.
இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் சோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே சோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. சோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே சோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் சோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு சோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது
சோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் சோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த சோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி சோதிடத்திற்கு எதிராகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, சோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னட மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் சோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல சோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், சோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று சோதிடத்தை நிரூபிக்க முன்வரவில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.
எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:
சவாலை ஏற்று வரும் சோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.
சோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் சோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.
சோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.
இராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் சோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை சோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். சோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல சோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.
சோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலசோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். சோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந்தார்.
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.
மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது சோதிடம்.
மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.
சோதிடம் பற்றி கல்லூரி மாணவிகள்
முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் வாழ்க்கைத் துணையைப் பெண்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்னும் ஆய்வுதான் அது.
97 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு வாய்க்கவிருக்கும் துணைவரின் கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பப் பின்னணி இவற்றோடு ஜாதகப் பொருத்தம் தேவையில்லையென்றும், அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை இரு தரப்பிலும் தேவையென்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நம் நாட்டுக் கல்வி என்பது பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தான்; அது பகுத்தறிவையோ, அறிவியல் மனப்பான்மையையோ வளர்க்கக் கூடியது அல்லவென்றாலும், அதனையும் மீறிக் கல்லூரி மாணவிகள் பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. 2.4 விழுக்காடு பெண்களே ஜாதகப் பொருத்தம் தேவையென்று கூறியுள்ளனராம்.
ஜாதகப் பொருத்தம் பார்த்து, நல்ல நாள், நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோர்தான் சுகமாக வாழ்கிறார்கள்; ஆயுள் கெட்டியாக வாழுகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.
விவாகரத்துக் கோரி குடும்ப நீதிமன்றங்களில் மனு போடுவார்கள் எல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்க்காதவர்கள்தான் என்று சொல்ல முடியுமா?
ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்வோர் வாழ்க்கை தோல்வி கண்டுவிட்டது; அற்ப ஆயுளில் மாண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா?
ஜாதகம் என்பதே பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படுவதுதானே!
எது பிறந்த நேரம்? குழந்தை தலையை நீட்டிய நேரமா? அல்லது பூமியில் விழுந்த நேரமா? நர்சு தமது கடிகாரத்தைப் பார்த்த நேரமா? அல்லது வெளியில் வந்து உறவினர்களிடம் சொல்லும் நேரமா? எந்த நேரம் என்று தந்தை பெரியார் கேட்டாரே, இதுவரை பதில் உண்டா?
ஒரு குழந்தை பிறந்த அதே நேரத்தில் இன்னொரு நாய்க்குட்டி பிறந்திருந்தால் இரண்டும் ஒரே குணத்தோடு, ஆயுளோடு இருக்குமா?
நாய்க்குட்டி பிறந்த நேரத்தையும், மணமகன் பிறந்த நேரத்தையும் கொடுத்து சோதிடம் பார்க்கச் சொன்னால், எந்த சோதிடனாவது அது நாய்க்குட்டிக்குரியது என்று சோதிடம் சொல்லுவானா?
60 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே! இப்பொழுது ஆண்களின் சராசரி வயது 63.3 ஆகவும், பெண்களின் சராசரி வயது 66.3 ஆகவும் உயர்ந்துள்ளதே! இதற்குக் காரணம் என்ன?
மருத்துவ வளர்ச்சி ரீதியாகப் பதில் சொல்ல முடியுமே தவிர, சோதிட ரீதியாகப் பதில் சொல்ல முடியுமா?
இன்னும் நவக்கிரகங்களை (அதாவது ஒன்பது கிரகங்களை) ப்பற்றி தானே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?
1781 இல் யுரேனசும், 1846 இல் நெப்டியூனும் 1930 இல் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டனவே இவற்றிற்குச் சோதிடப் பலன் உண்டா?
இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியன் என்பது நட்சத்திரம். ஆனால், சோதிடத்தில் அதனைக் கிரகத்தின் பட்டியலில்தானே சேர்த்துள்ளனர்? நவக்கிரகத்தில் பூமிக்கு இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.
படித்தவர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.
கல்லூரி மாணவிகள் பெரும்பாலோர் சோதிடத்தைப் புறந்தள்ளிக் கருத்துக் கூறியது வரவேற்கத்தக்கது.
தேவையான ஓர் ஆய்வை நடத்திய மகளிர் ஆணையத்துக்கும் நமது பாராட்டுகள்.
சோதிடமும் அறிவியல் சார்ந்ததா?
அறிவியல் சிந்தனையை வளர்ப்போம்!
நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே.
இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது.
சோதிடம் என்பது சோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப்பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.
சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.
சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை (Longitude), அட்ச ரேகை (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம்.
செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.
சூரியன் வடபாகத்தில் மகர இராசியிலிருந்து மிதுன இராசி வரை (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திராயணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக இராசி முதல் தனுசு இராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணாயணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.
ஒரு இராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 இராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே இராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.
இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.
சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு (Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.
சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.
மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை)
சுனாமிக்குக் காரணம்சனிப் பெயர்ச்சியா? மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.
நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.
இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் சோதிடர் காழியூர் நாராயணன்.
இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!
ஆமாம்,இவர்தான் கரைகண்ட சோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?
இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன சோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.
இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!
நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த சோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.
சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?
கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?
கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?
இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.
இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ… குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?
இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.
இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?
சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.
தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!
ஆறு நிமிட காலத்திற்கு நீடித்த முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்ச்சி இந்தியாவில் பத்து நாள்களுக்கு முன் நடந்தது. சென்னையில் இந்த கிரகணம் ழுமையாகத் தெரியாமல் இருந்தபோதிலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கான ஒளிக்கதிரை வடிகட்டித் தரும் 50,000 கண்ணாடிகளை தமிழ்நாடு அறிவியல் அமைப்பு விரைவில் விற்றுத் தீர்த்தது. எங்கள் குடும்பத்தில் மட்டும் அய்ந்து கண்ணாடிகள் வாங்கினோம். நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்கும் வரை இது உங்களுக்குப் பெரியதாகத் தெரியலாம்; சென்னையின் மக்கள் தொகை 80 லட்சம் என்னும்போது இந்த 50,000 என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல.
இந்தப் புள்ளிவிவரத்தின் பாதிப்பு அன்று காலை கிரகணத்துக்குப் பின் எலியட்ஸ் கடற்கரைக்குச் சென்றபோது நன்றாகவே தெரிந்தது. காலை நேரங்களில் முதியோர்களும், காதல் இணையர்களும், இளநீர்-காய்கறி விற்பவர்களும், பிச்சைக்காரர்கள் அங்குமிங்கும் ஓடித் திரியும் நாய்கள் சிலவும் இந்தக் கடற்கரையில் நிரம்பி வழிவது வழக்கம். அன்று காலை நாங்கள் சென்றபோது நாய்கள் மட்டும்தான் இருந்தன. மனிதர்கள் எவருமே இல்லை. வழக்கத்தை விட அலைகள் மட்டும்தான் வேகமாக அடித்துக் கொண்டிருந்தன. சந்திரனால் மறைக்கப் பட்ட சூரியனைக் காண பயந்து மனிதர்கள் அனைவரும் ஒளிந்து கொண்டிருந்தனர்.சூரிய கிரகணம் சொல்லொணாத் துயரங் களைக் கொண்டு வரும் என்று கூறி வெட்கங்கெட்ட சோதிடர்கள் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்ததே இதன் காரணம்.
இந்த காலகட்டத்தில், சில இந்தியர்களும் விரும்பக்கூடிய பாகிஸ்தானுடனான கூட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அணு சோதனைகளைச் செய்யாமல் இருப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால், இந்தியாவுடன் அணு ஆற்றல் வர்த்தகத்தை மற்ற நாடுகள் மேற்கொள்வதற்கு எதிராக ஜி_8 நாடுகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்து சென்ற போதும், மனநிறைவளிக்கும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அணுஎரிசக்தியைப் பயன்படுத்து வதற்கான ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால் மட்டுமே, நமது அணு தொழிற்சாலைகளில் முன்னறிவிப்பின்றி ஆய்விற்காக அமெரிக்கர்கள் வந்து செல்கின்றனர் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் இவற்றில் எதுவும் உலக அளவிலோ, நமது நாட்டு அளவிலோ பெரிய அழிவு எதனையும் ஏற்படுத்தி விடவில்லை. எரிச்சலூட்டும் வகையில் பேசாமல் அனைத்து விஷயங்களை-யும் தன்னிடம் விட்டு விடுமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதனால் சூரிய கிரகணம் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இல்லாவிட்டால் கிரகணம் அச்சம் தரும் ஒரு நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். எப்படியிருந்தாலும், எனது தூங்கு மூஞ்சி மகனைத் தவிர மற்ற எனது குடும்பத்தினர் கிரகணத்தைக் கண்டு மகிழ்ந்தோம். அதனை நல்ல அறிகுறி என்று கூட நீங்கள் கூறலாம்.
ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் சோதிடப் பகுதி வந்து கொண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழு பக்கமே சோதிடத்திற்கு ஒதுக்கப்பட்டுக் கொண்டு வரும் நிலையில்,-பத்திரிகையாளனான நான் சோதிடத்தை சாடுவதால் என்னை வேடதாரி என்றுகூட சிலர் நினைக்கலாம். சோதிடப் பகுதி மட்டும் இல்லாவிட்டால் பத்திரிகையே விற்பனை ஆகாது என்று விற்பனைப் பிரிவில் உள்ள புத்திசாலிகள் கூறாமல் இருந்தால், அப்பகுதியை வெளியிடுவதை உடனே நாங்கள் நிறுத்திவிடுவோம். கலைஞரைப் போல பகுத்தறிவாளர் என்பதால் நான் சோதிடத் திற்கு எதிராக உரத்துப் பேசவில்லை. சோதிடத்திற்கும் கடவுள், மத நம்பிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட வாதிடலாம். சோதிடத்தை நம்பாவிட்டால், நீங்கள் ஒரு அய்.எஸ்.அய். ஏஜென்ட் என்று கூட சோதிடத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் கூறக்கூடும். மதம் என்பது நன்னெறிக் கோட்பாடுகள், வேதாந்தம், கடவுள் நம்பிக்கை ஆகியவை பற்றியது. ஆனால், சோதிடத்தைப் போல எதிர்-காலத்தைக் கூறுவது என்று மதம் நடிக்கவில்லை.
தங்கள் நாட்டு குழந்தைகளை இன்னும் அதிக அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், நம் குழந்தைகளில் பெரும்பாலோர் இன்னமும் இந்த போலி அறிவியலான சோதிடத்திற்கு அடிமைகளாக இருக்கின்றனர். இன்று அதிக அளவில் மக்கள் வந்து சூரிய கிரகணத்தைக் காண்கிறார்கள் என்றால், நமது அறிவியலாளர்களுக்கு அது பெருமை சேர்ப்பதுதான். ஆனால், தங்கள் குடும்பத் திருமணங்களை ஏற்பாடு செய்யும்போது பல அறிவியலாளர்களும் ஜாதகங்களை நம்பியிருக்கின்றனர் என்பதும் உண்மை. சோதிடம் என்பது நமது பாரம்பரியமோ கலாசாரமோ அல்ல. பல ஆயிரம் ஆண்டு காலமாக அது நமது சமூக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது என்றால், முன்னர் நம் நாட்டில் நிலவி வந்த சதி என்னும் கணவனுடன் உடன் கட்டையேறுதல், குழந்தைத் திருமணம், வரதட்சணை அளித்தல், ஜாதி வேற்றுமை பாராட்டுதல் போன்றவைகளைத் தூக்கி எறிந்தது போல் இந்த சோதி டம், ஜாதகத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
பிமன் பாசு எழுதிய சோதிடம் அர்த்த முள்ளதா? அர்த்தமற்றதா? என்ற நூலில் சோதிடம் எவ்வாறு மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் பயன்படுத்தி ஏமாற்றுகிறது என்-பதை நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். வானவியலுக்கு முன்பிருந்தே சோதிடவியல் இருக்கிறது என்றாலும், தோற்று விக்கப்பட்ட காலம் தொட்டு அதன் நடைமுறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாததாகவே அது இருந்து வருகிறது என்று சயின்ஸ் ரிபோர்ட்டர் இதழின் முன்னாள் ஆசி-ரியர் கூறுகிறார். வெறும் கண்களால் மட்டுமே கண்டு வானில் இருக்கும் கோள்களின் இயக்கத்தைக் கண்டு ஆய்வு செய்ததில் இருந்து பிறந்தது சோதிடம். ஆனால், இன்றோ தொழில்நுட்பம், அதிலும் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின், கோள்களின் இயக்கம் பற்றிய நமது அறிவையும், அளவுகளையும் மிகவும் துல்லியமானவையாக ஆக்கிவிட்டது.
இத்தகைய தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் கலீலியோ கலீலி என்பவர். நமது சூரிய மண்டலத்தின் மய்யமாக இருப்பது பூமி அல்ல என்றும், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும், முன்பு எண்ணியது போல சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றும் கூறி நிகோலஸ் கோபர்நிகசின் கொள்கைளை கலீலியோ மெய்ப்பித்தார். இவ்வாறு கூறுவது மததுவேஷணை எனப்பட்டதால், தான் இறக்கும் வரை கோபர்நிகஸ் தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. கலிலியோவைப் பொறுத்தவரை, கத்தோலிக்க தேவாலயம் அவரைக் கொடுமைப் படுத்தியது. என்றாலும், அது மேற்கத்திய சிந்தனை மீது ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அறிவியலையும் தத்துவத்தையும் அது நவீனப் படுத்தியது. அனுபவம் மற்றும் சோதனைகளின் வாயிலாக அறிவது, அறிவு பெறுவதில் முன்னின்றது. பிரபஞ்சத்தின் மய்யக் கருத்தாக மனிதன் இன்று இருக்கவில்லை. என்-றாலும், சோதிடம் ஒரு சிறிது அளவு கூடமாறாமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது. இதனால்தான் மேற்கத்திய நாடுகள் முன்னேற்றம் பெற்றுச் செல்லும்போது, நாம் பின் தங்கியிருந்து அந்நியருக்கு அடிமையானோம் போலும்.
சோதித்துப் பார்ப்பதையோ அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் தவறான மாற்றங்கள் செய்யாமல் இருப்பதையோ சோதிடம் சவுகரியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 20 ஆம் நூற்றாண்டு அறிவியல் தத்துவஞானி கார்ல் போப்பர் உண்மையான அறிவியலையும் போலி அறிவியலையும் பிரித்துக் காண்-பதற்கு இவைதான் அளவுகோல்கள் என்று கூறுகிறார். மெய்ப்பிக்கப்பட்டால், கொள்கையையே தவறானது எனக் கூறும் அறிக்கைகள் ஒரு அறிவியலுக்குத் தேவை என்பதுதான் அவரது கருத்து. சோதிடர் ஒருவரின் கணிப்பு தவறானது என்று உங்களால் காண-முடியாது என்பது சாதகமான ஒன்றல்ல. இயல்பாக பொதுவான கணிப்புகளையே, தெளிவின்றி சோதிடர்கள் கூறுகின்ற-னர். அவர்கள் கூறியது போல ஏதாவது நடந்துவிட்டால், தங்களின் விளம்பரத்-துக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பிட்ட தவறான ஒரு கணிப்பை ஒரு சோதிடர் கூறிவிட்டால், அவரைக் காப்பாற்ற மற்ற சோதிடர்கள் முன்-வரமாட்டார்கள். சோதிடத்தை சரியான முறையில் கையாளத் தெரியாத அறி-யாமை நிறைந்தவன் என்று அவனை அவனது சக தொழிலாளிகளே மட்டம் தட்டிவிடுவர்.
கருத்தளவில் மட்டும் அல்லாமல் சோதிடத்தின் மீது ஒரு கடுமையான தாக்குதலை மேற்கொள்ள பாசு விரும்புகிறார். இன்று பழைய கோட்பாடுகளைக் கொண்டுள்ள சோதிடத்தின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்ட குறிப்பிட்ட சோதிடச் சொற்களை அவர் தனது நூலில் பயன்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக பின்னோக்கிய இயக்கங்கள் என்பவை பூமியின் குறிப்-பிடத்தக்க ஒரு முனையில் ஏற்படுவதே அல்லாமல், கோளின் பின்னோக்கிய இயக்கம் என்பதற்கான எடுத்துக் காட்டு அல்ல. பூமியை விட ஒரு பெரிய அகண்ட வட்டப் பாதையில் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகிறது; அவ்வாறு சுற்றும் அதன் வேகமும் அதிகம். சூரி-யனுக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள பூமி சூரியனைச் சுற்றி வரும்-நிலையில் செவ்வாயைக் கடந்து செல்-லும்போது, மாறுபட்ட திசையில் அது இயங்குவதாக எப்போதாவது தோன்றும். இவ்வாறு பின்னோக்கிய இயக்கம் எனக் கூறுவது வெறும் சொல்லாட்சி மட்டுமல்ல; அறியாமையினால் கூறு வதுமாகும். அதுபோலவே கிரகநிலை மாற்றம் என்ற கருத்தும் தவறானதே-யாகும்.
நமது அறிவியலார்கள் அல்லது தொழில் நுட்ப வல்லுநர்கள் சிலர் சோதி-டத்தைக் கொண்டாடுவது வருந்தத்-தக்கது. சோதிடம் ஓர் உண்மையான அறிவியல் கல்வி என்று காட்டுவதற்கு இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தெரிவதெல்லாம் என்னவென்றால், அந்த தனிப்பட்டவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலை கொண்டுள்ளார்கள் என்பது மட்டும்-தான். ஜாதகங்களைத் தயாரிப்பதும், தசா, மகாதசா காலங்களைக் கணினியைப் பயன் படுத்தி குறிப்பிடுவதும், சோதிடத்தை அறிவியல் என்று மெய்ப்பிக்காது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு விதவையை மின் பிண எரியூட்டி அடுப்பில் தள்ளிவிட்டு, இதுதான் சதியின் நவீன நடைமுறை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
எங்கள் வீட்டைச் சுற்றியிருந்த வீடுகளின் மாடிகள் காலியாக இருந்ததே, இந்த மூடநம்பிக்கை எந்த அளவிற்கு வேர் கொண்டு பரவியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். இது மிகுந்த மனச் சோர்வை அளிப்பதாக இருந்தது. ஒரு மூடநம்பிக்கை யின் காரணமாக மக்கள் ஒரு வியக்கத்தக்க இயற்கை நிகழ்வு ஒன்றைக் காண்பதைத் தவறவிடுகின்றனர். சோதிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் செயல்பாடுகளினால் ஒரு போதும் நமது நாடு வல்லரசு நாடாக ஆகிவிட முடியாது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி-யது போல, அறிவார்ந்த ஒரு சமூ-கத்தை உருவாக்குவது என்ற உறுதிப்-பாட்டின் மூலம் மட்டும்தான் நமது நாடு வல்லரசு நாடாக ஆக முடியும். அறி-வார்ந்த சமூகம் என்பது அறி-வினை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். எந்த விதத்திலும் சோதிடத்தை அறிவார்ந்தது என்று கூறவே முடியாது.
சோதிடம் தனை இகழ்
அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பார்வை. அனைத்து அறிவியலாளர்களும் சோதிடத்தின் விஞ்ஞானப் பூர்வ நம்பகத் தன்மை குறித்து எம்மிடம் கேட்டால் அதைக் கண்டிப்பாக மறுப்போம் என்கின்றனர்.
உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியலாளர்கள் பலரும், அறிவியல் இயக்கங்களும், சமூக விழிப்புணர்வுக் குழுமங்களும், பகுத்தறிவு இயக்கமும், வானவியல் ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும், தத்துவ ஆசிரியர்கள் படைப்பாளிகள் சோதிடம் குறித்த கடுமையான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆகிய யாவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் சோதிடப் பாடம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புக்கு ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கல்வி நிறுவனங்கள் யாவும் அண்டத்தை அளக்குமளவிலான முற்போக்குப் பயணம் மேற்கொள்கிற இக்காலத்தில் நம் நாட்டில் மருத்துவம், குடிநீர், அடிப்படைக் கல்விக்கான அடைவுகள் நோக்கிய பயணம் வேகமாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்க, வேலையின்மை, திறனுக்கு மதிப்பின்மை ஆகிய விரக்திகளால் தன்னம்பிக்கை குறைந்து தற்கொலைச் சிந்தனையின் சின்னங்களாக உலவுகிற இன்றைய, பெரும்பாலான இளைஞர்களுக்கு தன் முயற்சி கூடும் தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சிகள் நலிந்து கொண்டிருக்க படித்தவர்கள் நிலையிதுவெனில் தன்உழைப்பு முழுவதையும் தன் பாமரத்தன்மையால், மூட நம்பிக்கைகளால் பழமை வாதங்களால் சூடமாய் சாம்பிராணியாய் பலர் எதிர்த்துக் கொண்டிருக்க இதற்கு மாற்றான அறிவியல் உணர்வு வளர்க்கப்பட வேண்டிய காலம் இது.
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றத்திற்கான, நேர நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் கால, தேச, பிரபஞ்ச வர்த்தமானங்கள் குறித்த நமது மரபு வழியிலான வானவியல் அறிவு, சுய சிந்தனையின் வழி தன்னை தன் ஆன்மச் சூழலை உணரவைக்கிற உளவியல் மெய்ப்பிப்புகள் நிறைந்த பாடல்கள் வரவேற்கத்தக்கது.
தந்தை பெரியார் நூற்றாண்டு கடந்த இச் சூழலில் இப்பகுத்தறிவு யுகத்தில், பிழைப்பு வாதத்திற்காக கணிப்பொறிகளும் ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டன. மக்களது சுய சிந்தனையை, திட்டமிடலை மழுங்க வைக்க காலையிலிருந்தே தொலைக்காட்சிகள் அவையவை ஆளுக்கொரு திசையையும் வாய்க்கு வந்த திசையையும் வாய்க்கு எந்த எண்களையும் இராசியோடு வாரி வழங்குகின்றன.
சோசியம் கணிக்கிற நபர் ஒருவர் நாளேடொன்றிற்கு ஒரு வாரம் இராசிபலன் எழுதி அனுப்ப மறந்தால் அந்த ஏட்டின் ஆசிரியர் பழைய வாரப் பத்திரிகைகளை எடுத்து அவசரத்திற்கு வெளியிட அதற்கும் பல வாழ்த்து மடல்கள் வந்ததாகச் சொன்ன வரலாறுகள் நாம் அறிந்ததே.
இப்படியாக சோதிடம் என்பதே, கற்பனை, பொய் என்பதற்கான அறிவியல் வழியிலான சான்றுகளைச் சோதிடர்களின் கூற்றுகளை நடை முறைகளைக் கொண்டே நிறுவ முடியும்.
(எ.கா.) சோதிட முறைப்படி கோள்கள் பன்னிரண்டு. ஆனால் உண்மையில் கோள்கள் ஒன்பது. பிறந்த நேரம் கோள்களின் அமைப்பு இவை யாவும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்க்கை மாறுபாடுகளை ஏற்படுத்தும் எனச் சொல்லி அப்பட்டமாக ஏமாற்றுவது ஊழ்க்கோட்பாடு (விதி) என்பதான பெயரில் சிந்திக்க மறுக்கிற சமூகத்தை உருவாக்கி விடும். அவலத்திற்குரிய செய்தி யாதெனில் குழந்தை பிறப்பு கூட தற்போது நல்லநேரம், காலம் என்பதாகக் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்வதை உலகம் காண்கிறது. இப்பேரண்டத்தின் இயக்கம், கோள் நிலை மாறுபாடுகள் இவற்றால் புவியல் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமே தவிர (சான்று: காஸ்மிக் கதிர்கள்) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்பது உண்மையல்ல என உருசிய நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
உலகத்தை உள்ளங்கையில் அடக்குகிற தகவல் தொழில் நுட்ப ஊழிக்காலத்தில் உன் உள்ளங்கை ரேகையில்தான் வாழ்க்கையே இருக்கிறது என்று சொல்லுகிற சோதிடத்தை அண்மையில் நேபாள மன்னர் குடும்பக் கொலைகள் பொய்யென்று காட்டின.
முன்புகிருஷ்ணதேவராயரின் வாழ்நாள் இவ்வளவு என்று (சோதிடம்) கூறிய ஆருடனுக்கு நிலமும் பொன்னும் கொடுக்க, சொன்னவனை அழைத்து, உன் ஆயுள் காலம் எவ்வளவு? எனக் கேட்டு அவனை அக்கணமே வெட்டிச் சாய்த்து அச்சோதிடம் பொய்யென உணர்த்திய தெனாலிராமன் கதை நிலவிய சமூகம் இது.
அண்ணனுக்கு அரசு தந்து, அன்றே துறவறம் பூண்டு சோதிடத்தைப் பொய்ப்பித்த ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்று சொல்லி ஊழுக்குப் புது விளக்கம் தந்த சிலம்பாசான் இளங்கோவடிகள்.
இப்படியான வரலாறு படித்த இளைஞர்களை எதிர் காலச் சோதிடர்களே வாருங்கள்! என கல்வி நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியிருப்பது கவலைக்குரியது. ஆன்மீக ரீதியாகப் பார்ப்பினும் சிறுதெய்வ வழிபாடாயினும் பெருந்தெய்வ வழிபாடாயினும் இறையுணர்வொன்றே தன்னம்பிக்கைக்கு ஊன்று கோலாகவும் உளவியல் ரீதியான பாதுகாப்பு உணர்வையும் நல்குமென்பதை, ஞாயிறு திங்கள் செவ்வாய் . சனி பாம்பிரண்டுடனே… ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியாரவர்க்கு மிகவே என்று திருமுறை சுட்டுமாப்போல அவரவர் இறை என்ற உயர் சக்தியோடு, சக்தியை நினைந்து இயங்கும்போது இடையில், அண்மைக் காலத்தில் மிகவும் அச்சமூட்டு வதாகவும், வணிகம் போலவும் பெருகிவிட்ட இந்த நவகிரக வழிபாடு அது குறித்த பரிகாரங்கள் என்பவை யாருடைய நலனுக்கானவை என்பது சிந்திக்கத் தக்கதாகின்றது.
இயல்பான அறிவுடைய ஒரு மனிதராய் அறிவியலாளியாய் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. ராஜு அவர்கள், ஒரு விஞ்ஞான ஆசிரியர் என்ற முறையில் எனது கவலை இதுதான்.
ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒரு குறிப்பிட்ட முறையில் சேர்ந்தால்தான் தண்ணீர் ஆகும் என்றால் அதைச் சோதித்துப் பார்க்கிற யாருக்கும் ஒரே மாதிரியான விடை கிடைக்கும். ஆனால் நூறு சோதிடர்கள் ஒரே ஜாதகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கணிக்கிற கூத்துதான் நடக்கிறது. இதில் யாருடைய கணிப்பைக் கொண்டு போய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு போதிக்கும்? நூறு கோடி மக்களுக்கும் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. இவையெல்லாம் பாடமாக வைப்பது அவசியம்தானா? என்று வினா எழுப்புகிறார்.
தங்களிடம் வருபவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்ப ஆறுதலும், அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியையும் மன நிறைவையும் சொல் ஜாலத்தால் ஏற்படுத்தி அவர்களது இயலாமையை முதலாக்கி பரிகாரம் ஏதாவது சொல்லி இயன்றவரை பணம் பறிப்பது எமது தொழில் ரகசியம் என்பது சோதிடர்களே ஒத்துக் கொள்கிற ஒன்று. ஒன்றுமற்ற இதனை பாடமாக்க, அதை மாணவர்கள் படிக்க, நாளைக்கு அவர்களும் கட்டாயம் அங்கீகாரம் பெற்ற நவீனப் புரோகிதர்களாகத் தான் அலையவேண்டி வரும். இசுலாமிய, கிறித்துவ இதர சமயத்தார் பெற்றிருக்காத ஜாதகம், இராசி, நட்சத்திரம் இவை பற்றிய இப்படிப்பினை எவ்வளவோ அடிப்படை அறிவியல் துறைகள் விரிவுபடுத்த வேண்டிய சூழலில் கொணர்வது தொழில் நுட்ப யுகத்திற்கான அடையாளமா? என அய்யுறவேண்டி இருக்கிறது. இதைப் படித்துவிட்டு நாளைக்கு ஓர் ஆசிரியராக வரக்கூடியவர், தன் மாணவனின் ஜாதகம் பார்த்து நீ தேருவாய், நீ தேரமாட்டாய் என்று கைராசி பார்க்கக் கூடும்.
மாவட்ட ஆட்சியாளராய் வரக்கூடியவர் இங்கே இருக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு வாஸ்து சாஸ்திரமே காரணம். எனவே யாகம் வளருங்கள் என்று சொல்லக் கூடும். மேலும் இது இன்று வளர்ந்து வரும் பெண்ணியத்திற்கு முரணானது. ஏற்கெனவே தோஷம், ஜாதகப் பொருத்தம் இப்படியானவற்றால் முதிர் கன்னிகள் பெருக, இதன் மூலம் மீண்டும் பெண்ணடிமைத்தனத்திற்கே இந்த ஆணாதிக்க சமூகம் வழிகோலும். அன்றே தன்னோர் செய்யும் புரோகிதம் என் தொழிலல்ல எமக்குத் தொழில் கவிதை என்று சொன்ன நம் தோழன் பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் அறிவுத் திறன் கொண்டு மடமையைக் கொளுத்துவோம்.
சோதிடம் பலித்தது ஒன்று, தோற்றது மூன்று, அது எப்படி?
சோதிடம் உண்மையா?
வரலாற்றில் தோன்றி மறைகின்ற மன்னர்களைப் பற்றி எப்பவுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஏனெனில் அதற்குரிய யோக்கியதை எந்த மன்னர்களிடமுமே கிடையாது. அந்தக் காலத்து மன்னர்களுக்கு இரண்டே வேலைகள் தான்:
1. இளைத்த மன்னனையடித்துக் கப்பம் வாங்குவது,
2. நினைத்த பெண்களைப் பிடித்து விளையாடுவது,
இத்தகையவர்களை எப்படி யோக்கியர்கள் என்பது? என்று உலக சரித்திரத்தில் நேரு எழுதுகிறார்.
உலகில் எந்த அரசனைத்தான் யோக்கியன் என்ற சொல்வது? எல்லாத் தரும நியாயங்களையும், கற்றுணர்ந்த தருமபுத்திரனே, பெண்சாதியை வைத்துச் சூதாடி விட்டானே! என்று கவி பாரதியார் கேட்கின்றார்.
அந்தக் காலத்து நாடகங்களில் மன்னன் கேட்பானாம். மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? என்று. ஆமாம், நம்ம ஊர்ல மழை பெய்ததா? என்பதையே மந்திரியிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதென்றால் மன்னர்களுக்குக் குடிமகக்கள்மீது எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?
அந்தக் காலத்து மன்னர்கள், மந்திரிகள், பிரதானிகள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், சோதிடர்கள் எனப் பலரைப் பக்கத்துணையாக வைத்துத்தான் ஆட்சி நடத்தினர் இப்போதும் அப்படித்தானே சம்பந்தப்பட்ட துறைக்கு செயலாளர்களை வைத்துத்தானே அரசை நடத்தி வருகின்றனர்.
பிரதமர்கள் – சோதிடர்கள்
இந்திரா காந்தி – பண்டிட் பார்சாய்
பி.வி. நரசிம்மராவ் – என்.கே. சர்மா
எச்.டி. தேவகவுடா – நா. மேட்டுப்பட்டி சங்கரய்யர்
தேவகவுடா தமது பதவி நிலைக்கவும், நீடிக்கவும் வேண்டி சோதிடரை வைத்து ஒரு யாகம் செய்தாராம் . அதில் 20 டன் பலாப்பட்டை, 2250 கிலோ நெய்,2250 கிலோ தேன், ஜரிகை பட்டுப்புடவை என ரூபாய் 1200 கோடி செலவிட்டராம்; நாட்டைப் பிடித்த கேடு காலத்தைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் எல்லாம் நாட்டுக்குத் தலைவர்களா? உருப்படுமா நாடு? கடைத் தேறவார்களா மக்கள்? சண்டாளக் கடவுளே, தயவு செய்து இருந்தால் காப்பாற்று! இப்போதுதமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக்கப் போராடும் தமிழக முதல்வரின் (ஜெயலலிதா) சோதிடர் உன்னி-கிருஷ்ணமேனன். இவரது தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவர் இத்தகைய சோதிடர்கள்தானாம்!
சோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி?
1. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனது அண்ணன் மன்மோகன்சிங், உயர்ந்த பதவியைப் பெற்று மேனிலை எய்துவார் என்று ஒரு சோதிடர் கூறினார். அது பலித்து விட்டது என்று பிரதமரின் தங்கை திருமதி அமர்சித் கவுர் என்பவர் கூறினார். (செய்தி 21.4.2004, கதிரவன்) இது பெருமைக்குரிய செய்திதான். டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையானவர், பல உயர் பதவிகளை வகித்தவர். அவரது தலைமையில் நாடு நலம் பெறும் என நம்பலாம். இது ஜெயித்த சோதிடம்.
2) அடுத்து மிதுன இராசிக்காரரான திருமதி சோனியா காந்தி எதைச் செய்தாலும் வெற்றி பெறுவார் என்று ஆரூடம் கூறியவர் அக்னி சர்மா என்பவர் (ஆதாரம்: 18.4.1999, கல்கி பக்.80).
அண்மைத் தேர்தலில் நாடெல்லாம் சுற்றி காங்கிரசின் வெற்றிக்காகப் பாடுபட்டவர் சோனியாகாந்தி. நாடும் அடுத்த பிரதமர் சோனியாதான் என எதிர்பார்த்தது. ஆனால் இராஜயோகம் திசைமாறிவிட்டது. ஆக சோதிடம் தோற்றது.
3) இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டுத் தலைநகரில் செங்குட்டுவனோடிருந்த இளங்கோவடிகள்தான் மன்னராகும் தகுதியுள்ளவர், தெய்வவாக்காகக் கூறினாள் தேவந்திகை என்னும் பணிப் பெண்ணொருத்தி. இதைக் கேட்ட இளங்கோவடிகள் தனது தமையனைத் திருப்திப்படுத்துவதற்காக, இளங்கோவடிகள் இளமைத் துறவியானார். செங்குட்டுவனே மன்னனானான். இங்கேயும் சோதிடம் தோற்றது.
4) இராமாயணத்தில் இராஜரிஷியாகிய வசிட்டன் இராமனுக்குத்தான் பட்டாபிஷேகம் என நாள் குறித்தான்; என்ன நடந்தது? இதுதான் நாடறிந்த கதையாயிற்றே! வசிட்டன் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்க இராமனுக்கோ நாடாள வேண்டிய யோகம் இருந்தது; மாவுரி தரித்துக் காடேகினான் இராமன்! என்னாயிற்று? சோதிடம் தோற்றது.
மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்று, மழை, இடி, மின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும், மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.
பயந்த மனிதன், பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி சொல்லும் வாக்கையும், சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும், கிளி சோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் சோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும், பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள், சமூக விரோதிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல, சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும், பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும், பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாத வர்களையும், அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, சோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறி, புரட்டுப் பேசி, நம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் சோதிடத்தை புகுத்தியும் பரப்பி யும் ஏமாந்த மக்களையும், அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு சோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது – வருகிறது.
தமிழ் மக்களின் வரலாற்றிலும், வாழ்க்கை முறையிலும் இல்லாத சோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் சோதிடம் மாத்திரமல்ல, வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேத, புராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.
1300 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி – கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை…..
கி.பி 2வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
சோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது. பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு சோதிடர். இந்த பார்ப்பன சோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பா, துலா, நிதத்நி, அப்யந்தி, மேகயந்தி,வர்ஷயந்தி, சுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். சோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் – விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.
ரிக் வேதத்தை சோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதை, சாராவளி, காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் சோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம், நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி சோதிடர்.
இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம், நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை சோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் சோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள், கோபர்னிக்கஸ், கெப்ளர், பிராகே, கலிலியோ, நியூட்டன், லேப்லேஸ், சேம் பர்லின், மவுல்டன், பிரின்சியா, ஜேம்ஸ், பிரெட் ஹாய்ஸ், வான்வெய் ஜக்கர், ஹாய்லி, ஹெயின்ரிச்வேபே, ஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் சோதிடத்தையும், தினமணி சோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லை என்பதாகும்.
பொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. அறிவியலுக்குப் பொருந்தாத சோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே.
Leave a Reply
You must be logged in to post a comment.