தமிழில்  பிற மொழிச் சொற்கள்

தமிழில்  பிற மொழிச் சொற்கள்

வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் சோழர் காலத்திலும் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. எனவேதான் நன்னூல் ஆசிரியர் பதவியல் என்ற இயலில் வடமொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தமிழகத்தின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் ஆண்டனர். அப்போது அரபு, உருது, பார்சிச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய போது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டார் தொடர்பு ஏற்படவே போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்தன.

5.2.1 வடமொழி

தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுகிறார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளையும் குறிப்பதாயிருக்க வேண்டும் என்று தெ.பொ.மீ. குறிப்பிடுகிறார். செய்யுளில் இடம் பெறும் நால்வகைச் சொற்களைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

• இயற்சொல் – சாதாரண எளிய சொற்கள்
• திரிசொல் – இலக்கியச் சொற்கள். ஒரு பொருள் பல சொல்லும் பல பொருள் ஒரு சொல்லும் இதில் அடங்கும்.
• திசைச்சொல் – கிளைமொழிச் சொற்கள்
• வடசொல்

இந்நான்கு சொற்களுள் வடசொல் என்பதனையும் சேர்த்துக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

(தொல். சொல். 395)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்

(தொல். சொல். 396)

என்று விளக்குகிறார். தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

நன்னூல் ஆசிரியர் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்தால் ஆகியனவற்றைத் தற்சமம் என்றும் வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலானவற்றையும், திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வழங்குவனவற்றையும் தற்பவம் என்றும் கூறுகின்றார். வடிவம் மாறி அமைவது தற்பவம் ; வடிவம் மாறாதது தற்சமம் என்று இதனை சு. சக்திவேல் விளக்குகிறார்.

தமிழில் ர கரமும், ல கரமும், யகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வருவதில்லை. இவ்வாறு வரும் வட சொற்களைத் தமிழில் எழுதும் போது,

‘ர’ கர முதல் சொல்லுக்கு அ, இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ல’ கர முதல் சொல்லுக்கு இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ய’ கர முதல் சொல்லுக்கு ‘இ’ கர உயிரும் தமிழில் வடசொல் அமையும்போது வரவேண்டும் என ஒரு நன்னூல் நூற்பா (148) விளக்குகிறது.

சமண, பௌத்த சமயங்களின் தொடர்பால் வடமொழிச் சொற்கலப்பு அதிகமாயிற்று. சங்க இலக்கியங்களில் பல வடமொழிச் சொற்களைக் காண முடிகின்றது.

ஆதி
யாமம்
அரமியம்
நேமி
ஆரம்
காரணம்
கமலம்
போகம்
மிதுனம்
அவுணர்
அங்குசம்
உரோகிணி
சாலேகம்
பாக்கியம்
யவனம்
யூபம்
(குறுந்தொகை, 293 : 4), (திருக்குறள், 1)
(குறுந்தொகை, 6 : 1)
(அகநானூறு, 122 : 5)
(கலித்தொகை, 105 : 9)
(கலித்தொகை, 79 : 12)
(கலித்தொகை, 60 : 12)
(பரிபாடல், 2 : 14)
(பரிபாடல், 5 : 79)
(பரிபாடல், 11 : 6)
(திருமுருகாற்றுப்படை, 59)
(திருமுருகாற்றுப்படை, 110)
(நெடுநல்வாடை, 163)
(நெடுநல்வாடை, 125)
(திருக்குறள், 1141)
(புறநானூறு, 56 : 18)
(புறநானூறு, 15 : 21)

கலித்தொகையிலும் பரிபாடலிலும் வடமொழிச் சொற்கள் நிறைய உள்ளன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் சில வடசொற்கள் பின்வருவன.

சாவகர்
சாரணர்
தானம்
தருமம்
ஞானம்
விஞ்சை
இயக்கி
இந்திரன்
அந்தி
(சிலம்பு. 15 : 190)
(சிலம்பு. 15 : 192)
(சிலம்பு. 15 : 43)
(சிலம்பு. 10 : 163)
(சிலம்பு. 15 : 42)
(சிலம்பு. 15 : 36)
(சிலம்பு. 15 : 116)
(சிலம்பு. 5)
(சிலம்பு. 4)

மணிமேகலையில் காணப்படும் சமஸ்கிருதச் (வடமொழி) சொற்கள் பின்வருவன:

கருமம்
பாவனை
கந்தன்
நரகர்
அநித்தம்
துக்கம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்தே சமஸ்கிருதத்தின் உண்மையான செல்வாக்குக் காலம் தொடங்கியது; தமிழகம் சமஸ்கிருதக் கல்வியின் மையமாகத் திகழ்ந்தது. இரண்டாம் நரசிம்மனின் அவைக்களத்தில் தண்டி முனிவர் இடம் பெற்றிருந்தார். இக்காலக் கட்டத்தின் தொடக்கத்தில் செப்புப் பட்டயங்கள் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன.

• மணிப்பிரவாள நடை

பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடை தமிழகத்தில் தோன்றியது. மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுத்தாற்போல சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை ஆகும். ஏறக்குறைய 17ஆம் நூற்றாண்டு வரை இந்நடை வழக்கிலிருந்தது. ஆழ்வார்களின் தமிழ்ப் பாக்களில் உள்ள தொடர்களைக் கொண்டு வைணவர்கள் உபநிடதங்களிலும் புராணங்களிலும் உள்ள சமஸ்கிருதத் தொடர்களை விளக்குவர். சைவர்களும் இந்நடையை மிகவும் எளிமைப்படுத்திக் கையாண்டனர்.

• பிற்காலத்தில் வடசொல் கலப்பு

திருப்புகழிலும், வில்லிபுத்தூரார், தாயுமானவர் பாடல்களிலும் சமஸ்கிருதத் தொடர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சாதாரண மக்களின் பேச்சுத் தமிழிலும் சமஸ்கிருதச் சொற்கள் புகுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வடசொற் கலந்து எழுதப்பட்ட போக்கினைப் புலப்படுத்துகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியதமிழ்மொழித் தூய்மை இயக்கம் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாக அமைந்தது. ஆனால் பிற இந்திய மொழிகளை ஒப்பிடும் போது தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து குறைவாகவே கடன் பெற்றுள்ளது.

• வடசொற்களைத் தமிழில் எழுதும் போது எழும் சிக்கல்கள்

வடசொற்களைத் தமிழில் எடுத்து எழுதும் போது சில சிக்கல்கள் எழுகின்றன. அதனை நீக்கச் சில வழிமுறைகளும் கையாளப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவற்றை இங்குக் காண்போம்

(1) தமிழில் ஒலியன்கள் வருகை பெறும் முறைக்கேற்ப மாற்றி எழுதப்படுகிறது. ரகர மெய்யானது முன்னால் ‘இ’ சேர்த்து எழுதப்படுகிறது.

ரிஷி
ரிஷபம்

இருடி
இடபம்

ஈகாரம் இகரமாகவும் ஆகரம் ஐகாரமாகவும் மாற்றம் பெறுகிறது.

கௌரீ
சீதா(சீத)

கவுரி
சீதை

(2) வடமொழியில் உள்ள ஒலியன் தமிழ்மொழிக்கேற்பச் சமன்பாடு பெறுவது மற்றொரு முறை.

மாசம்
விஷம்
ஹர
பக்ஷிமாதம்
விடம்
அரன்
பட்சி – பச்சி

(3) சில குறிப்பிட்ட இடங்களில் இடையில் உகரம் சேர்த்துத் தமிழில் மாற்றப்படுகிறது.

ஸ்ரகரா – சருக்கரை

(4) மொழி முதலில் அ, இ, உ சேர்த்து எழுதும் முறை பின்பற்றப்படுகிறது.

ரத்ன

லட்சுமி
லேகியம்
லோக
அரத்தினம்
இரத்தினம்
இலட்சுமி
இலேகியம்
உலோகம்

(5) தமிழில் வருகை முறையில் இல்லாதபடி அமையும் வடமொழி ஒலிச் சேர்க்கைகள் இருவழிகளில் எழுதப்படுகின்றன.

1. சுரபத்தி
2. ஓரினமாதல்

ர், ல், ய் என்பனவற்றுடன் சேர்ந்து வரும் மெய்களைப் பிரிக்க இகரச் சுரபத்தி இடம் பெறுகிறது.

ப்ரஹ்மன்
ப்லவ
பாக்ய


பிரமன்
பிலவ
பாக்கியம்

ஒலிச் சேர்க்கையில் இரண்டாவது ஒலி வகர அல்லது மகர மெய்யாய் இருக்குமாயின் உகரச் சுரபத்தி இடம் பெறுகிறது.

பத்மம்
பக்வ
கர்மா


பதுமம்
பக்குவம்
கருமம்

ஓரினமாதல் முறையில் மூக்கொலி அல்லது தடையொலியாய் இருக்கும் முதல் மெய்யின் தன்மைக்கு ஏற்பவோ அல்லது இரண்டாம் மெய்யின் தன்மைக்கு ஏற்பவோ ஓரினமாகும் அமைப்பு பின்பற்றப்படுகிறது.

சிம்ஹம்
கன்யா
அக்ஷா
புஸ்தக்
கஷ்டம்
கர்மா

சிம்மம்
கன்னி
அக்கம்
புஸ்தகம்
கட்டம்
கம்மம்

(6) மெய்யொலி இழக்கப்படுதலும் சில இடங்களில் மெய்யொலி இரட்டித்தலும் என ஒருமுறை பின்பற்றப்படுகிறது.

ஸ்ரமண மாணிக்யம்
சமண மாணிக்கம்

5.2.2 முண்டா மொழி

திராவிடர்களின் தொடக்கக்கால அண்டை மொழிகள் முண்டா மொழிகளாகும். எனவே அவற்றின் செல்வாக்கைப் பழந்தமிழில் காண முடியும்.

tabeg, tapah ஆகிய சொற்களிலிருந்து தவக்காய், தவளைக்காய், தவளை ஆகிய சொற்கள் வந்தன. கத்தரிக்காய் என்ற பொருளில் பயன்படும் வழுதுணங்காய் என்ற சொல்லும் இம்மொழியிலிருந்து வந்ததாகும். ஆஸ்ட்ரிக் மொழிகளிலுள்ள niyor என்ற சொல்லிலிருந்து முதிராத தேங்காயிலுள்ள இனிய நீராகிய இளநீர் என்ற சொல் வந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. misei, bisai என்னும் ஆஸ்ட்ரிக் மொழிச் சொற்களிலிருந்து மீசை, வீசை என்னும் சொற்கள் இடம் பெற்றன.

மிகுதியும் வழக்கில் உள்ள எதிரொலிச் சொற்களையும் (echo words)முண்டா மொழிகளிலிருந்தே பெற்றோம்.

சாப்பாடு
பணம்
வீடு


கீப்பாடு
கிணம்
கீடு

என்பனவற்றில் எதிரொலிச் சொல்லான இரண்டாவது சொல் பொருள் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால்,

சம்பளம் – கிம்பளம்

என்ற எதிரொலிச் சொற்களில் இரண்டாம் சொல் இலஞ்சமாக முறையின்றிப் பெறும் பணமான கையூட்டைக் குறித்து நின்று பொருள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.

5.2.3 மராத்தி

மராட்டியர்கள் கி.பி. 1766 முதல் 1800 வரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். சரபோஜி என்ற மராட்டிய மன்னர் தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் என்ற நூலகத்தை ஏற்படுத்தி வடமொழி, மேலை நாட்டு மொழிகள், மராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளின் நூல்கள் பலவற்றைத் திரட்டி வைத்துப் பெருமை சேர்த்தார். தமிழில் 55 மராத்திச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இவற்றுள் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. தமிழில் வழங்கும் பல மராத்திச் சொற்கள் உணவு வகைகளைப் பற்றியவையாகும்.

சேமியா
கிச்சடி
கசாயம்
பட்டாணி
கோசும்பரி
வாங்கி
ஸொஜ்ஜி

முதலியன உணவு பற்றிய சொற்கள்

கங்காளம்
கிண்டி
ஜாடி
சாலிகை
குண்டான்

முதலியன சமையல் பாத்திரங்கள் பற்றியவை.

கண்டி
சாகி
லாவணி
அபங்கம்
டோக்ரா

முதலியன இசை தொடர்பான மராத்திச் சொற்களாகும்.

காமட்டி
கைலாகு
வில்லங்கம்
சாவடி
கோலி (சிறுவர் விளையாட்டு)
அபாண்டம்
கில்லாடி
இண்டி மாமா
கலிங்கம்
கொட்டு
சந்து
சலவை
ஜாஸ்தி
சுங்கு
சொண்டி
தடவை
தரகரி
திமிசு
நீச்சு
பீருடை

போன்ற சொற்களும் கலந்துள்ளன.

5.2.4 தெலுங்கு

திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்குடன் தமிழுக்கு நீண்ட காலமாகத் தொடர்பு உண்டு. சோழர்களது வெற்றியாலும் திருமண உறவாலும் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. விசய நகரப் பேரரசின் சிற்றரசர்களான நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி சிறப்புற்று விளங்கியது. தமிழ் நாட்டிற்கு ரெட்டியார்களும் நாயக்கர்களும் வந்து குடியேறியதால் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. தமிழ்ப் பேரகராதி 325 சொற்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததாய்க் குறிப்பிடுகிறது. இரளி, உப்பசம், சளிப்பு, கலிங்கம், சொண்டி, கத்தரி, கடப்பாரை, ராயசம், தரகரி, சேந்திரவர், கம்பத்தக்காரர், குப்பம், ரெட்டியார், பட்டர், கோமட்டிமுதலிய சொற்கள் சான்று. அக்கடா, அட்டி, அண்ணு, டாப்பு, துரை, பெத்த, தீவட்டி, ஜாடி, ஜதை, தண்டா, களுபு, கட்டடம், கலப்படம், உருண்டை, சொக்கா, திப்பி, தோத்தி, பட்டறை, பலப்பம், சந்து, ரவிக்கை, ராவடம், ரேக்கு, லாகிரி, உத்தி, உம்மச்சு, ஒட்டாரம், ஒயில், கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பத்தம், கம்பல், கரிசை, கவுளி, காட்டம், கும்பு, கெடுவு, கொப்பி, கொலுசு, சந்தடி, களிப்பு, சிட்டிகை, சிமிளி, தோபத்தி, பவிசு, வாணலி, ஜப்பை, அடாதுடி, அப்பட்டம், ரம்பம், காயம், கொடுக்கு, தெம்பு, நமுத்தல், ஜாஸ்தி, பத்தர், அட்டபணை, சாம்பார், சரவடி, பேட்டை, ரசவாங்கி, வில்லங்கம் போன்றவையும் தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பெறப்பட்ட சொற்களே ஆகும்.

5.2.5 கன்னடம்

தமிழகம் கன்னட மொழியுடன் பழங்காலத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளது. விசய நகர அரசாட்சியின் கீழ் சிலர் தெலுங்கு நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் சிலர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஹொய்சளர்கள் சோழ நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் கன்னடம் உச்சநிலை அடைந்து செல்வாக்குப் பெற்றிருந்தது. அட்டிகை, இதா, எகத்தாளம், சமாளித்தல், சொத்து, பட்டாக்கத்தி, ஒது, இட்டளம், குலுக்குதல், குட்டு, கெம்பு, தாண்டல், எட்டன் போன்றன சான்றுகள். தமிழ்ப் பேரகராதி 38 கன்னடச் சொற்கள் தமிழில் புகுந்தவை என்று குறிக்கிறது.

5.2.6 பிற மொழிச் சொற்கள்

மேற்குறிப்பிட்டவை தவிர, இந்தி, உருது போன்ற மொழிகளிலுள்ள சொற்களும் கலந்துள்ளன.

• இந்தி

குமரகுருபரர் காசியில் சில காலம் வாழ்ந்தார். எனவே அவரது பாடல்களில் இந்திச் சொற்கள் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கப் பொது மொழியாக இந்தி இருப்பதனால் வழக்குத் தமிழிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது.

• சான்று

நயாபைசா (புதுக்காசு)
காதி (கைத்தறித் துணி)

• உருது

நவாபுகள் ஆட்சிக் காலத்திலும், ஆங்கில ஆட்சியின் பொழுதும் நிர்வாகத் தொடர்பான பல உருதுச் சொற்கள் வழக்கில் இருந்தன. இன்றும் அவை வழக்கில் உள்ளன. தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உருதுச் சொற்கள் கலந்துள்ளன எனத் தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

நசர், சராய், கோரி, கெடுபிடி, கெழுவு அல்லது கெவு, கைதி, சப்பரம், சராசரி, செலாவணி, சாட்டி, சாமான், சாலேசுரம், சீனி, சுக்கான், சேடை, சீட்டு, தயார் போன்றவை அவற்றுள் சில ஆகும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் – I
1
கடன்வாங்கல் என்றால் என்ன?
விடை
2
ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
விடை
3
சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் ஐந்தினைக் குறிப்பிடுக.
விடை
4
மணிப்பிரவாள நடை என்பது யாது?
விடை
5
தெலுங்குச் சொற்கலப்பு தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை?
விடை

http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

 1. தமிழில் நான்கு வகையான சொற்கள் இருக்கின்றன.
  அவையாவன இயற்சொல், திரிசொல், திசைச் சொல் வடசொல்.
  இயற்சொல் – நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல்.
  திரிசொல் – இலக்கியச் சொற்கள். ஒரு பொருள் பல சொல்லும் பல பொருள் ஒரு சொல்லும் இதில் அடங்கும்.
  • திசைச்சொல் – கிளைமொழிச் சொற்கள்
  • வடசொல் – சமற்கிருதச் சொற்கள். சிலர் பிராக்கிரத சொற்களும் அடங்கும் என்பர்.
  இந்நான்கு சொற்களுள் வடசொல் என்பதனையும் சேர்த்துக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார்.
  வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (தொல் சொல் 395)
  சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல் சொல் 396)
  “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
  அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” என்பார் தொல்காப்பியர்.
  அதாவது … “இயற்சொல்” “திரிசொல்” “திசைச்சொல்” “வடசொல்” என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே … தமிழ்ச்செய்யுளை இயற்றப் பயன்படுத்தலாம்.
  தொல்காப்பியர் தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
  நன்னூல் ஆசிரியர் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்தால் ஆகியனவற்றைத் தற்சமம் என்றும் வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலானவற்றையும், திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வழங்குவனவற்றையும் தற்பவம் என்றும் கூறுகின்றார். வடிவம் மாறி அமைவது தற்பவம் வடிவம் மாறாதது தற்சமம்.
  தமிழில் ர கரமும், ல கரமும், யகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வருவதில்லை. இவ்வாறு வரும் வட சொற்களைத் தமிழில் எழுதும் போது,
  ‘ர’ கர முதல் சொல்லுக்கு அ, இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ல’ கர முதல் சொல்லுக்கு இ, உ என்பவற்றில் ஒன்றும்; ‘ய’ கர முதல் சொல்லுக்கு ‘இ’ கர உயிரும் தமிழில் வடசொல் அமையும்போது வரவேண்டும் என ஒரு நன்னூல் நூற்பா (148) விளக்குகிறது.
  “அவை, ‘உலகம், குங்குமம், நற்குணம்’ என்னும் தொற்கள் தமிழ் சமற்கிருதம் இரண்டுக்கும் பொதுவானவை. அவற்றை அப்படியே பயன்படுத்தலாம்.
  ஆனால் ரிஷி , ரிஷபம், கௌரீ, சீதா(சீத) மாசம், விஷம், ஹர, பஷி என்ற வட மொழிச் சொற்களை எழுதும் போது அவற்றை முறையே
  இருடி, இடபம், (ர, ட, ற தமிழ் சொற்களுககு முன் வரா) கவுரி, சீதை, மாதம், விடம், அரன், பட்சி என தமிழில் எழுத வேண்டும். ஈகாரம் இகரமாகவும் ஆகரம் ஐகாரமாகவும் மாற்றம் பெறுகிறது.
  தொல்காப்பியர் சொற்கள் சிதைந்து வரினும் அவற்றை நீக்காது தமிழ் ஒலிப்புக்கு ஏற்ற எழுத்தை மாற்ற வேண்டும் என்கிறார்.
  இன்று ஊடகத்துறையில் இருக்கும் பலருக்கு இலக்கியம் தெரியாது. இலக்கணமும் தெரியாது.
  ஐபிசி வானொலி செய்தி வாசிப்பாளர் சத்தியமூர்த்தி சபேசன் தனது பெயரை சபேஷன் என்று ஒலிக்கிறார். கட்சியை கஷ்ஷி என்றும் பூசையை பூஜை என்றும்
  விசேடத்தை விஷேடம் என்றும் ஒலிக்கிறார். இப்படியே போனால் ஆட்டுக் குட்டியை ஆஷ்டுக் குஷ்டி என்றும் வேட்டியை வேஷ்டி என்றும் ஒலிக்கக் கூடும்.
  தமிழ்மொழிக்கு வெளிப் பகைவர்களை விட உட பகைவர்கள்தான் அதிகம்.
  வைவமும் தமிழும் இரண்டும் ஒன்றே, ஒன்றில்லாவிட்டால் மற்றது இல்லை என சைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கோயிலை ஆலயம் என்றும் அறிவித்தலை விஞ்ஞாபனம் என்றும், விழாவை உற்சவம் என்றும், குடமுழுக்கை கும்பாவிஷேஷம் என்றும் சொல்கிறார்கள/ எழுதுகிறார்கள்.

Leave a Reply