சத்தியலிங்கம் நிரபராதி! விக்கியின் குழந்தைத்தனம்!

 சத்தியலிங்கம் நிரபராதி! விக்கியின் குழந்தைத்தனம்!

 

வடக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வேலைவாய்ப்புக்கள் வழங்கியதில் முறைகேடாகச் செயற்பட்டார் என்று முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன், அவர் நியமித்த குழு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் சுயாதீனமாகத் தனது அமைச்சுக் கடமைகளைத் தொடரலாம் என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தும், தன்னிச்சையாக – தான்தோன்றித் தனமாக – தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விசாரணைகள் பூரணப்படவில்லை, அந்த விசாரணைகள் முடியும்வரை தற்காலிகமாக விடுப்பில் செல்லுமாறு அறிவித்து பதவியில் இருந்து நீக்கினார். அமைச்சர் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோரின் இடத்துக்கு தனது அல்லக்கைகள் இருவரை நியமித்தார்.

மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் 3 மாதங்கள் இருக்கின்ற நிலையில், நேற்றைய சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் உள்ளனவா? என வாய்மூலம் எழுப்பப்பட்ட வினாவுக்கு, முதல்வர் வி;க்கி, குழந்தைப்பிள்ளைத் தனமாக – மழுப்பலாக – ”முதலில் வேலைவாய்ப்பு தொடர்பான 750 ஆவணங்கள் காணாமற்போயின, தற்போது அவை இருக்கின்றன” என அலுவலர் தெரிவித்தார் என்று பதிலளித்தார்.

முதல்வர் விக்கி ஒரு கல்விமான். ஒரு நீதியரசர். எல்லாவற்றுக்கும் மேலாக ”நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரர் பரம்பரையில் வந்த தர்மவான் எனத் தன்னை உலகுக்குக் காட்டுபவர். ஆனால், அதன்படி ஒழுகுபவர் அவர் அல்லர்.

வடக்கு மாகாணசபையில் இதுவரை முதல்வர் நியமித்த 8 அமைச்சர்களுள் சத்தியலிங்கம் ஆளுமை, தலைமைத்துவம், நிர்வாக அறிவு மிக்கவர். நான் அவர் அமைச்சராக இருக்கின்ற காலங்களில் இப்பத்தியில் பலமுறை அவரைப்பற்றி விமர்சித்து எழுதியிருக்கின்றேன். அது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் என்ற அடிப்படையில் – வைத்தியசாலையின் பார்வையில் இருந்து – வைத்தியசாலையை வளம்படுத்துவதற்காக சில தேவைகளை இடித்துரைப்பதற்காகவும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் இடமாற்றம் தொடர்பிலும் அவர்களின் நியாயமான கோரிக்கைக்காகவும் சில விமர்சனக் கருத்துக்களை முன்வைத்துள்ளேன். மற்றும்படி, அவர் எமது தமிழரசுக் கட்சி தொடர்பிலோ அல்லது அவரது அமைச்சுச் செயற்பாடு தொடர்பிலோ எந்தத் தவறும் இழைத்தவர் அல்லர். ஆயுதக்குழுக்களின் அடிமையில் இருந்த வவுனியா மாவட்டத்தை மீட்டு, ஜனநாயகக் கட்சியான தமிழரசு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பெருமை அமைச்சர் சத்தியலிங்கத்தையே சாரும்.

இது இவ்வாறிருக்க, ஒரு கல்விமான் – நீதியரசர் – குழந்தைப்பிள்ளைத் தனமாக யாரோ அலுவலர் சொன்னார் என்று இல்லாத ஒரு பழியை தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் சத்தியலிங்கத்தின்மீது சுமத்தியமை படுமுட்டாள்தனம். அதுவும் ஒரு ஆன்மீகவாதியாக – தர்மவானாக – நீதியுரைஞனாக – தன்னை சமூகத்துக்குக் காட்டுபவர் இவ்வாறு குற்றமில்லாத ஒருவரை ஆறுமாதங்களாக விடுப்பில் அனுப்பியமை மகா தவறு! அதுவும் சாதாரண ஒருவர் இவ்வாறு செயற்பட்டாராயின் பறவாயில்லை. நீதி வழங்குவதில் ‘கோன்’ எனப்போற்றப்படும் நீதியரசர் இவ்வாறு செயற்பட்டால் அதை யாரொடு நோவது?

”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’
தர்மம் மறுபடிவெல்லும்” என்பது இயற்கை என்றுரைத்த பாரதியின் பாஞ்சாலி சபதக்கூற்றுப்படி, தர்மம் மறுபடி வென்று சத்தியலிங்கம் தர்மவானாக உயர்ந்துள்ளார். அவர்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வால் அவதூறை – அபகீர்த்தியை – கழங்கத்தை – ஏற்படுத்திய முதல்வர் விக்கி ஐயா தன்னை தர்மவானாக – நீதிமானாக – நீதி அரசராக – மக்கள் மத்தியில் உள்ள அவர்பற்றிய உயரிய நினைப்பைத் தக்கவைக்க குற்றமற்ற சத்தியலிங்கத்துக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்குவாரா? அவ்வாறு அவர் நிரூபிப்பாராயின் மாற்றுத் தலைமையாக மக்கள் மத்தியில் இடம்பிடித்து தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். செய்வாரா முதல்வர்?

தெல்லியூர் சி.ஹரிகரன்


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply