திரையரங்கை   நான் எப்போது கேட்டாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று டக்ளஸ்  தேவானந்தா கூறினார்!

 

திரையரங்கை   நான் எப்போது கேட்டாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று டக்ளஸ்  தேவானந்தா கூறினார்!

திருமகள்

ற்றவர்களுக்குச் சொந்தமான சொத்தை அடாத்தாக கைப்பற்றுவது அதனைத் தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும். சிவ ஆலயங்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தால்  குலநாசம் எனச் சொல்வார்கள். பொதுமகன் ஒருவரின் சொத்தைக் கொள்ளையடித்தால் அதுவும் குலநாசம்தான்.

ஈழ மக்கள் சனநாயக கட்சியின் வாழ்நாள்  செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா யாழ்ப்பாண நகரின் மத்தியில்  இல. 45 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள  ஸ்ரீதர்திரையரங்கக்  கட்டடத்தை கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வருகிறார். குறித்த கட்டடத்தை ஆக்கிரமித்த தேவானந்தா தனது கட்சியின் தலைமை அலுவலகம் ஆகவும் விடுதியாகவும் பயன்படுத்தி வருகிறார். அந்தக் கட்டடத்திற்கான  வாடகைப் பணமாக  அதன்   சொந்தக்காரருக்கு ஒரு சதமேனும் கொடுக்கப்படவில்லை. சாட்டுப்  போக்குச் சொல்லி அந்தக் கட்டடத்தின் சொந்தக்காரரை கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கிறார். இவ்வளவிற்கும் தேவானந்தா சாமானியமான ஆள் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்,  2014 ஆம் ஆண்டுவரை முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபச்சாவின் அமைச்சர் அவையில் ‘மாண்புமிகு’ அமைச்சர்!

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.   நேற்றுப் போல இன்று இல்லை.  இன்று போல் நாளை இருக்கப் போவதுமில்லை.  காலம் ஒரு நாள் மாறும்.

இப்போது 45  ஸ்ரான்லி வீதியில் உள்ள ஸ்ரீதர் திரையரங்குக்  கட்டடத்தை  மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில்   செல்லையா இரத்தினசபாபதி கைம்பெண் மகேஸ்வரி இரத்தினசபாபதி, இரத்தினசபாபதி மகேந்திரரவிரஜ், தயாளகுமார் பெண் மகேந்திரரவிரணி, ஜெகநாதன் பரசக்தி, இரத்தினசபாபதி தேவராஜ், இரத்தினசபாபதி ஸ்ரீதர் ஆகியோர் வெளிநாடுகளில் வசிப்பதால் தமது  சட்டத்தரணி  தத்துவக்காரரான செல்லத்துரை நித்தியானந்தன் ஊடாக இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இபிடிபி கட்சியின் செயலாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்மனுதாரரக  குறிப்பிடப் பட்டுள்ளார். மனுதாரர் சார்பில் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசுத்தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தோன்றுவார் எனத் தெரிகின்றது.

கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அவருக்கு எதிரக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எந்தவொரு சட்டத்தரணியும் உயிருக்குப் பயந்து முன்வரவில்லை என்கிறார் அந்தக் கட்டடத்தின் சொந்தக்காரர் திரு மகேந்திரரவிராஜ் அவர்கள். “யாழ்ப்பாணத்தில் உள்ள எனது சொத்துக்களை மீட்க சட்ட நிபுணரை அமர்த்துமாறு நண்பர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் அமைச்சருக்கு எதிரக நிற்கத் தயாரக இல்லை. ஏனெனில் அவரைப்பற்றி அங்கு அவ்வளவு பயம் இருக்கிறது. அவரிடமிருந்து தியேட்டரை மீட்பது கடினம். இந்த வழக்கு பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டே போகும் என்று நண்பர்கள் கூறினார்கள்” என்கிறார் மகேந்திரரவிராஜ். தேவானந்தாவின் அசுர ஆயுத பலம், அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்குக் காரணமாக அவரோடு மோதினால் தங்களது உயிருக்கு ஆபத்து எனச் சட்டத்தரணிகளே பயப்பட்டார்கள்.

அந்த மனுவில், சிறீதர் தியேட்டர் 1974 ஆம் ஆண்டை அண்மித்த காலப் பகுதியில் கட்டப்பட்டது. வடக்கில் நிலவிய போர் காரணமாக 1990ஆம் ஆண்டிலிருந்தோ அல்லது அதற்கு அண்மித்த காலப் பகுதியிலிருந்தோ சிறீதர் தியேட்டர் மூடப்பட வேண்டியதாயிற்று. போர் காரணமாக வழக்காளிகள் குடும்பமாக யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியேறி கடல் கடந்து குடிபெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள்.

1997ஆம் ஆண்டில் வடக்கில் சிவில் நிர்வாகம் மீளமைக்கப்பட்டிருந்ததோடு, வழக்காளிகள் சொல்லப்பட்ட சிறீதர் தியேட்டரை மீளத்திறக்க விரும்பினார்கள். 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இருந்தோ எதிராளி தனது அரசியல் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) உறுப்பினர்களுடன் சேர்ந்து வழக்காளிகளது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் சட்டவிரோதமாகவும் பலாத்காரமாகவும் சொல்லப்பட்ட வளவின் உடமையை தன் வசமாக்கிக்கினார் என்றும் சட்ட விரோதமானதும் சட்ட பூர்வமற்றதுமான இருப்பாட்சியில் அத்தகைய காலத்திலிருந்து இருந்து வருகிறார் என்றும் அவர்களுக்கு அறிய வந்தது.

1997ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியிலோ இரண்டாவது வழக்காளியான இரத்தினசபாபதி மகேந்திரரவிராஜை தொடர்பு கொண்ட எதிராளி உண்மையில், தான் சொல்லப்பட்ட வளாகத்தில் சட்டவிரோத இருப்பாட்சியில் இருப்பதாக அவருக்கு உறுதிப்படுத்தினார்.

அந்த நேரத்திலேயே இரண்டாம் வழக்காளி அவரது சொல்லப்பட்ட வளவில் அவரது சட்டவிரோதமானதும் சட்டபூர்வமற்றதுமான இருப்பாட்சியை வன்மையாக ஆட்சேபிப்பதாக எதிராளிக்கு சுட்டிக்காட்டினார். ஆயினும் சொல்லப்பட்ட வளவில் எதிராளி தன்னுடைய அரசியல் கட்சியுடன் சேர்ந்து சட்டவிரோத இருப்பாட்சியை தொடர்ந்தார்.

எதிராளி, தனது அரசியல் கட்சியுடன் சேர்ந்து வழக்காளிகளுக்கு எந்தவிதமான இழப்பீட்டுச் செலுத்துகையும் இன்றிச் சொல்லப்பட்ட வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோத இருப்பாட்சியில் இருந்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நேரடியாகவும் அந்த நேரத்தில் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் ஊடாகவும் எதிராளிக்குப் பல்வேறு கடிதங்கள் அனுப்பியதோடு ஏனைய வடிவங்களிலான தொடர்பாடல்கள் மூலமும் சொல்லப்பட்ட வளாகத்திலிருந்து அவரும் அவரது அரசியல் கட்சியும் வெளியேறவும் சொல்லப்பட்ட வளவின் வெற்று உடமையை தம்மிடம் ஒப்படைக்கவும் அவர்களது சொல்லப்பட்ட சட்டவிரோதமான மற்றும் சட்டபூர்வமற்ற இருப்பாட்சிக்காக இழப்பீட்டை செலுத்தவும் கோரிக்கைவிடுத்து வழக்காளிகளினாலும் அல்லது அவர்கள் சார்பிலும் செய்யப்பட்ட சொல்லப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராளி இணங்கி ஒழுகத் தவறிவிட்டார்.

வழக்காளிகள் இந்த வழக்கின் விடயப் பொருளின் பெறுமதி அல்லது முத்திரைத் தீர்வையில் நோக்கங்களுக்காக ரூபா நூறு மில்லியன் என்பதாக மதிப்பீடு செய்கின்றார். தீர்வைப் பதியப்படும் வரை 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் இழப்பீடாக மாதமொன்றுக்கு ரூபா 75 ஆயிரம், அதற்கான சட்ட வட்டியு, வழக்குச் செலவுடன் சேர்த்து செலுத்துமாறும் அதன்பின்னர் முழுமையாகச் செலுத்தப்படும் வரை எதிராளிக்கு எதிராகத் தீர்ப்பும், வழக்குச் செலவும், மன்று தகுந்ததெனக் காணும் இன்ன பிற உதவிகளையும், கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் யூன் 6 ஆம் திகதி அழைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.இராமகமலன் அனுமதியளித்துள்ளார்.

கென்யாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரத்னசபாபதி  ஸ்ரீதர்  திருமணம் முடிந்ததும் மனைவியை அங்கு  கூட்டிச் சென்றுவிட்டார். இல. 45 ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் திரையரங்கும்  அதனைச் சுற்றியுள்ள வளாகம் அவரது சொந்தக் கட்டடமாகும். ஒரு காலத்தில் ஸ்ரீதர் திரையரங்கு யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியில் ஒரு பெரிய திரையரங்காக  இருந்தது. 

இந்தத் திரையரங்கைக் கட்டியவர் திரு செல்லையா சபாரத்தினம் இரத்னசபாபதியும் அவரது மனைவி திருமதி மகேஸ்வரி இரத்தினசபாபதியும் ஆவர். 1974 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு யாழ்ப்பாணத்தில்  எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்றாகும்.

இரத்னசபாபதி 1974  இல் இறந்து போனார். அவர் விருப்பு உறுதி எதனையும் எழுதி வைக்கவில்லை. இருந்தும் தேசவழமைச் சட்டத்தின்  கீழ் அவரது ஆதனம்  மனைவி பிள்ளைகளுக்குப் போக வேண்டும். மனைவி திருமதி மகேஸ்வரி இரத்னசபாபதி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி இரத்தினசபாபதி மகேந்திரராணி,  ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் திருமதி மகேந்திராராணி தயாளகுமார், திருமதி பராசக்தி ஜெகநாதன்,  திரு இரத்னசபாபதி தேவராசா மற்றும் இராத்தினசபாபதி ஸ்ரீதர்  ஆகியோரே அந்த ஆதனத்தின் வாரிசுகள்  ஆவர்.  

1975 ஆம் ஆண்டு திரு மகேந்திரரவிராஜ் இலண்டனில் படிப்பதற்காக யாழ்ப்பாணத்தை விட்டு  வெளியேறினார். தொழாயிரம் இருக்கைகளைக் கொண்ட திரையரங்கத்தை 5 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இரண்டு முறை 1979, 1982 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். 1983 இல் மோதல் வெடித்த போது மகேந்திர ரவிராஜ் திரையரங்கத்தை மூட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

1991 ஆம் ஆண்டுவரை  திரு மகேந்திரரவிராஜ்  இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த  காலத்தில் ஒருசில பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமித்து இந்தக் கட்டடத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். 

இந்தக் கால கட்டத்தில்  வடக்கில் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடந்த  மோதல் காரணமாக  செல்லையா இரத்தினசபாபதி குடும்பம் வெளிநாட்டுக்குப் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். அந்த நேரம் பார்த்துத்தான் அந்தக் கட்டடத்தை அப்போது அமைச்சராக இருந்த டக்லஸ்  தேவானந்தா தனது இயக்கத்தில் இருந்த ஆயுததாரிகளைக் கொண்டு துப்பாக்கி முனையில் காவலில் இருந்தவர்களை விரட்டிவிட்டு கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார்.  கட்டடத்தைப் பாதுகாக்க அவரது கட்சிசயைச் சார்ந்த ஆயுததாரிகள் நிறுத்தப் பட்டார்கள்.

பிரித்தானிய கடவைச் சீட்டை வைத்திருந்த மகேந்திரரவிராஜ் 2005 ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். தனது திரையரங்கை மீள்கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவில் அவர் இருந்தார். அவருடைய தந்தையார் 1946 ஆம் ஆண்டு ஒரு திரையரங்கை யாழ்ப்பாணம், சுண்டிக்குளியில்  கட்டினார்.  அதற்கு   மகேந்திரா திரையரங்கு எனத்  தனது மகனின் பெயரைச் சூட்டினார். இந்தத் திரையரங்கு பரி யோவான் கல்லூரிக்கு எதிர்ப்புறமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யத்  தான் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீதர் திரையரங்கை தான் ஆண்டு இறுதிக்குள் காலி செய்துவிடுவதாகவும் சொன்னார்.  அதற்கு முன் மாற்று அலுவலகத்தை தேடிப் பிடித்துவிடப் போவதாகவும் சொன்னார்.  மேலும்  கட்டடத்தின் வாடகையை தான் ஒரு கூட்டு வணிக பங்காளிக்கு கொடுத்து வருவதாகவும் சொன்னார். ஆனால் திரு மகேந்திரரவிராஜ் அப்படியொரு வணிக பங்காளி  இருப்பதை நம்பவில்லை. “யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு நான்தான் பொறுப்பாக இருக்கிறேன். எனது குறிக்கோள் அபிவிருத்தி” என தேவானந்தா ஒருமுறை சொன்னதாக மகேந்திரரவிராஜ்  கூறுகிறார். 

“அண்மையில்   மகேந்திரரவிராஜ் தன்னோடு பேசியதாகவும்  அந்த கட்டடத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்த பின்னர் அது ஒப்படைக்கப்படும்” எனத்  தேவானந்தா சொல்கிறார். மேலும்  கட்டடத்தின் சொந்தக்காரர் யார் என்பது நிரூபிக்கப்பட்டால்  அதனை ஆண்டு முடிவதற்குள் கையளிக்கப்படும்” என்கிறார் தேவனந்தா.

ஆனால் யாழ்ப்பாணத்தில்  தான் விரும்பாத வாடகை குடியிருப்பாளர்  உட்பட  எல்லோருக்கும்   அந்தக் கட்டடத்தின் சொந்தக்காரர் மகேந்திரரவிராஜ் என்பது தெரியும் என்கிறார் மகேந்திரரவிராஜ். 1996 இல்  ஸ்ரீதர் கட்டடத்தை கைப்பற்றியபோது தன்னோடு தேவானந்தா தொடர்பு கொண்டதாக மகேந்திரரவிராஜ்  சொல்கிறார்.

“நான் அவருக்குச் சொன்னேன். திரையரங்கை மீண்டும் திறக்கப் போகிறேன். எனவே அந்தக் கட்டடத்தைவிட்டு வெளியேற முடியுமா”  எனக் கேட்டேன். அப்போது போர் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.  அதற்கு அவர் (தேவானந்தா) “எப்போது திரையரங்கை மீண்டும் திறக்கும் போது நாங்கள் அந்த இடத்தைக் காலி செய்து விடுவோம்” என்றார். உடனே நான் “நல்லது. நான்  எப்போது மீளத் திரையரங்கைத் திறக்கப் போகிறேன் என்பது பற்றி தெரிவிப்பேன்” எனச் சொன்னேன்.

இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பாக முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அதன் பிறகு சனாதிபதி மகிந்த இராசபக்சா இருவருக்கும் தேவானந்தா தனக்குச் சொந்தமான கட்டடத்தை அடாத்தாக பிடித்து வைத்திருப்பதாகவும் அதனை மீட்டுத் தருமாறு தான் பல கடிதங்கள் அனுப்பியதாகவும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் மகேந்திரரவிராஜ்.    சனாதிபதி சந்திரிகாவின் செயலாளரிடம்  இருந்து மட்டும் பதில் கடிதம் வந்ததாகவும் ஆனால் சனாதிபதி மகிந்த இராசபக்சாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்கிறார் மகேந்திரரவிராஜ்.  ” சனாதிபதி இராசபக்சா மற்றும் அவரது தம்பி பாதுகாப்புச் செயலாளர் ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. இந்தக் கட்டடத்தை திருப்பி என்னிடம்  ஒப்படைப்பதற்கு உதவ வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது. தேவானந்தா மகிந்த இராசபக்சாவின்  அமைச்ரவையில் ஒரு அமைச்சராக இருக்கிறார்” என்கிறார் மகேந்திரரவிராஜ்.

போர் முடிந்ததும் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த   செல்லையா இராத்தினசபாபதியின் மகன் மகேந்திரரவிராஜ் இலங்கை வந்து அந்தக் கட்டடத்தை கையேற்க முனைந்தார். ஆனால் தேவானந்தாவின் ஆட்கள் அவரை பயமுறுத்தி விரட்டித் துரத்திவிட்டனர்.

போர் முடிவுக்கு வந்ததைக் காரணம் காட்டி மகேந்திராரவிராஜ்,   டக்ளஸ் தேவானந்தாவிடம்    கட்டடத்தை விடுவிக்குமாறு  பல தடவைகள்  கேட்டபோதும் அவர் மறுத்து விட்டார்.  குறைந்த பட்சம்  வாடகைப் பணத்தையாவது தருமாறு கேட்டபோதும் தேவானந்தா  மறுத்து விட்டார்.  கட்டிடத்திற்கான   வாடையாக  மாதம்  ரூபா 5 ஆயிரம் அல்லது  6 ஆயிரம் தரலாம் என    தேவானந்தா சொன்னாலும்  எந்தக் கொடுப்பனவும இடம் பெறவில்லை.  அதன்பிறகு திரையரங்கு  திறப்பது பற்றி அவரிடம் பலநூறு தடவை பேசினேன். பல கடிதங்களை அனுப்பினேன். எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை. நான் எப்போது கேட்டாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று டக்ளஸ்  தேவானந்தா கூறினார்.

இந்தச் சொத்து அபகரிப்புத்  தொடர்பாக ஆங்கில, தமிழ் ஊடகங்களில் 2012 ஆம் ஆண்டே செய்திகள் பரவலாக வெளிவந்தன. ஆனால் தேவானந்தா அதனைப் பொருட்படுத்தவில்லை.

2011 ஆம் ஆண்டு நடந்த யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் இபிடிபி கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஸ்ரீதர்  கட்டடத்துக்கு மின்சாரக் கட்டணமும் கட்டப்படவில்லை. சோலைவரியும் கட்டப்படவிலலை. இதற்கு அப்போது மாநகர சபையின் மேயராக இருந்த திருமதி யோகேஸ்வரி பற்குணராசா பொறுப்புக் கூறவேண்டும். இபிடிபி நீக்கமற நிறைந்திருக்கும ஒரு ஊழல்  கட்சி என்பதற்கு இது இன்னொரு  சான்றுகளாகும்.

இதேவேளை  அமைச்சர்  தேவானந்தா கோயில்களுக்கும், பொது மையங்களுக்கும் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதியொதுக்கும்போது அதிலிருந்து குறிப்பிட்டளவு நிதி தமக்கு கிடைக்கவேண்டும் எனக் கேட்ட வங்கி கணக்கு இலக்கங்களை வழங்கி வந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தா மீது கடத்தல்-கொலை வழக்கு இந்தியாவில் உள்ளது. இந்த வழக்கில் இந்தியாவில் அவர் தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை அவுஸ்திரேலிய செய்தி ஏடு  தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. 

மொத்தத்தில் தேவானந்தா படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்றவாறு கட்சியின் பெயரில் சனநாயகம் என்ற பெயரை வைத்திருந்தாலும் டக்லஸ் தேவானந்தா சனநாயகத்துக்கு விரோதமாகவே முப்போதும்  நடந்து கொண்டார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஒரு யாழ்ப்பாண வாசி “நீண்ட காலத்துக்குப் பின்னர் சமாதானத்தின் பயனைக் காணக் கூடியதாக இருக்கிறது. எங்களது மக்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. உரிமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் அதன் பலனை அனுபவிபபார்கள்” என்றார். (http://www.thesundayleader.lk/2018/04/29/douglas-accused-of-illegally-occupying-property/)

 

Image

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply