சிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியது கண்டிக்கத்தக்கது!
நக்கீரன்
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் பக்கம் இருக்கிறது. சிரிய அரசைக் கவிழ்ப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். அங்கொரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே சொல்லி வருகிறது. மறுபுறம் 2015 ம் ஆண்டு தொடக்கம் ரஷியா சிரியாவின் இராணுவத்துக்குத் துணையாக இயங்கி வருகிறது.
சிரியாவில் இடம்பெற்றுற வந்த ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. சிரியாவுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வேறு இடங்களில் அவர்களது குடும்பங்களோடு குடியேற அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிரியா இராணுவம் கிளர்ச்சிக்காரர்களது பிடியில் இருந்த பகுதிகளை மீளக் கைப்பற்றி அவர்களை அப்புறப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. இதனை சிரியா இராணுவம் ரஷ்ய விமானப்படையின் உதவியோடு செய்து முடித்தது.
சிரிய நாட்டின் இராணுவத்துக்கு எதிரான சண்டையில் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தது. அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களையும் அமெரிக்காவே வழங்கி வந்தது. எனவே கிளர்ச்சிக்காரர்களின் தோல்வி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்லியாகக் கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரில் 7 ஆம் நாள் ஊடகங்கள் சிரியாப் படைகள், டூமா நகரில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது இரசாயன குண்டு வீச்சை நடத்தியதாக செய்தி வெளியிட்டன. இந்தத் தாக்குதலில் 70 பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இரசாயன குண்டு வீச்சினால் மூச்சுத் திணறும் சிறார்கள் சிலரை மேற்குலக தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அவர்களைத் தண்ணீரில் குளிப்பாட்டும் காட்சிகள் காட்டப்பட்டன. ஆனால் இறந்தவர்களது உடல்கள் காட்டப்படவில்லை. இடிபாட்டுக்குள் அகப்பட்ட பெண்கள், குழந்தைகளை பொதுமக்கள் காப்பாற்றி வெளியே கொண்டு வரும் காட்சிகள் மட்டும் காட்டப்பட்டன.
சும்மா வெறும் வாய் சப்பிக்கொண்டிருந்தவனுக்கு அவல் கிடைத்தமாதிரி அமெரிக்கா சிரியா நடத்திய குண்டு வீச்சு இரசாயனக் குண்டு வீச்சுத்தான் என அறிவித்தது. இரசாயனக் குண்டு வீச்சை நடத்திய சிரியா அரசுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க சனாதிபதி ட்ரம்பு தடாலடியாகத் தெரிவித்தார். பேரு நாட்டுக்குப் போகயிருந்த பயணத்தை ட்ரம்பு இரத்து செய்துவிட்டு வோஷிங்டனில் தங்கியிருந்தார்.
அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, ஆவுஸ்திரேலியா குரல் கொடுத்தன. இரசாயனக் குண்டு வீசியதற்கு தன்னிடம் சான்று இருப்பதாக பிரான்ஸ் நாட்டு சனாதிபதி இம்மானவேல் மேக்ரான் சொன்னார். ஐக்கிய இராச்சிய நாடடின் பிரதமர் எலிசபெத் மே அம்மையாரும் அமெரிக்காவுக்குப் பக்கப்பாட்டுப் பாடினார்.
ஆனால் ஏப்ரல் 7ஆம் தேதியன்று இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை சிரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன. இது தொடர்பாக பிபிசிக்கு நேர்காணல் கொடுத்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லவ்ரவ், “தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள ஆதாரங்களில் ரஷ்யா தலையிடவில்லை எனத் தாம் உத்தரவாதம் அளிப்பதாகக்” கூறினார்.
ஏப்ரல் 7ஆம் தேதியன்று இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீண்டும் மறுத்துள்ளது. “இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது என ஊடக செய்திகளை வைத்தும் சமூக ஊடகங்களின் அடிப்படையிலும்தான் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இதனை கூறுகின்றன” என்று லவ்ரவ் கூறினார்.
இரசாயனத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவது திட்டமிடப்பட்ட நாடகம் என்று கூறிய அவர், பன்னாட்டு நிபுணர்கள் டூமா நகரத்திற்கு சென்றடையும் ஒரு நாள் முன்பு அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
சொல்லி வைத்தால் போல் ஏப்ரில் 14 ஆம் நாள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் நாட்டு விமானப்படைகள் சிரியாவின் சில நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தின. இந்த ஏவுகணைத் தாக்குதல் துல்லியமாக இருந்ததாகவும் சிரியாவின் இரசாயன உற்பத்திச்சாலைகள் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டன என அமெரிக்க சனாதிபதி ட்ரம்பு சொன்னார்.
சிரியா மீது ஏவுகளைத் தாக்குதல் நடத்தினால் ருஷியா அந்த ஏவுகணைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிப்பதோடு நில்லாமல் அந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டதோ அந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று லெபெனன் நாட்டுக்கான ருஷ்ய தூதுவர் சொன்னார். ஆனால் உருஷியா அப்படிச் செய்யவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி ரஷ்யா பக்கம் கை நீட்டும் இந்த நாடுகள் இப்படியான இரசாயனக் குண்டுகளை எதிரி நாடுகள் மீது வீசி அழித்துள்ளன. வியட்நாமில் 1961-1971 காலப்பகுதியில் 73 மில்லியன் லிட்டர் களைக்கொல்லி அமிலத்தை (Agent Orange) அமெரிக்கா வீசியிருந்தது. அதன் மூலம் அமெரிக்க இராணுவம் நெல் வயல்களையும் தோட்டங்களையும் அழித்தது. மேலும் அமெரிக்க விமானப்படை 400,000 தொன் நேப்பாம் குண்டுகளை வியட்நாமில் வீசியிருந்தது. இதனால் 4.8 மில்லியன் மக்கள் இறந்தொழிந்தார்கள். 400,000 குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறந்தன.
சனவரி 2009 இல் இஸ்ரேல் சிரியாவின் காசா பகுதியில் 155 மிமீ எடையுள்ள இரசாயனம் கலந்த பீரங்கிக் குண்டுகளை வீசியது. சில குண்டுகளில் எரியம் (phosphorus ) .பூசப்பட்டிருந்தன.
1988 இல் இராக் – இரான் போர் (1980-1988) முடிவுக்கு வந்த நேரம், அன்றைய ஆட்சித் தலைவர் சதாம் குசேன் கலப்ஜா என்ற நகரத்தின் மீது இரசாயன குண்டு வீச்சை நடத்தினார். இதில் 5,000 சிறுபான்மை குர்திஷ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக மார்கரட் தட்சரும் அமெரிக்க சனாதிபதியாக டொனால்ட் றீகனும் பதவியில் இருந்தார்கள். இவர்கள் இருவரும் இராக் நாட்டுக்கு இராணுவ உதவிகளை நல்கிக் கொண்டிருந்தனர். குர்திஷ் மக்கள் மட்டுமல்ல சதாம் குசேனின் இரசாயன குண்டு வீச்சில் 20,000 இரானியர்களும் கொல்லப்பட்டார்கள். இரசாயன குண்டுத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணையில் இராக், இரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட இரசாயன தாக்குதல்களை உறுதிசெய்தது.
இராக்கில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் இராசயன குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி, நெதெலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இத்தாலி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்த நிறுவனங்களிடம் இருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்தது என்பதைக் காட்டியது.
இரண்டாவது உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் எல்லாம் இரசாயன குண்டுகளைப் பயன்படுத்தின. இதன் காரணமாகவே உலகப் போர் முடிந்ததும் ஐக்கிய நாடுகள் சபை இரசாயனக் குண்டுகள் உற்பத்தி செய்வதை தடைசெய்தது.
2011 இல் அரபு நாடுகளில் ஆட்சிசெய்த சர்வாதிகாரகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். பல நாடுகளின் நகரங்களில் மக்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதனை ‘அராப் வசந்தம்’ என ஊடகங்கள் வருணித்தன. இதற்கு சிரியாவும் விதிவிலக்கல்ல. சிரியாவிலும் கிளர்ச்சிகள் வெடித்தன. இதனை சனாதிபதி பஷார் அல் அசாத் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான சிரியாவின் வெளியுறவுக் கொள்கை தனது ஆட்சியைக் காப்பாற்றும் என நினைத்தார். அவரது நினைப்பு பிழைத்துப் போனது.
அசாத் 2000 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவை அடுத்து ஆட்சிக்கு வந்தவர். அவரது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இருந்த அடக்குமுறை, கண்காணிப்பு, வன்முறை மற்றும் ஊடகத் தணிக்கை சிறிது காலம் தளர்த்தப்பட்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அவை மீண்டும் நடைமுறைக்கு வந்தன. பொருளாதார சமத்துவமின்மை, சூழல், கடும் வரட்சி, குறிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் சலுகைகள் போன்றவற்றால் மக்கள் கொதிப்படைந்திருந்தனர். இலட்சக் கணக்கான விவசாயக் குடும்பங்கள் வறுமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு நகரத் தொடங்கினார்கள்.
சிரியாவின் கொடிய உள்நாட்டுப் போருக்கு மதமும் ஒரு காரணம். சுன்னி பிரிவினரே (இவர்கள் நபி மொகமது அவர்களின் நன்னடத்தையை மெச்சுபவர்கள்) பெரும்பான்மையினர் (68.4%) ஆவர். அடுத்து அலவா (11.3%), கிறித்தவர்கள் 11.26%), ஷியா இஸ்மாலி (2.1%) ஆவர்.
சுன்னி – ஷியா பிரிவினருக்கு இடையே உள்ள வேறுபாடு மொகமது நபியை அடுத்து அவரது இடத்துக்கு யார் வரவேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடாகும். ஷியா முஸ்லிம்கள் மொகமது நபிக்குப் பின்னர் அவரது மருமகன் அலி இபின் அபி தாலிப் (Ali ibn Abi Talib) இமாம் ஆக வர வேண்டும் என்றார்கள். பெரும்பாலோர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மொகமது நபியின் நண்பரான அபூபக்கர் இமாம் ஆக வரவேண்டும் என்றார்கள். இந்த முரண்பாடு இன்றுவரை நீடிக்கிறது. ஆளுக்கு ஆள் பயங்கரமாக மோதிக் கொள்கிறார்கள்.
சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டாறா என்ற நகரத்தில் மார்ச், 2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு வெடித்தது. இரண்டொரு கிழமைகளில் இந்த எதிர்ப்பு ஏனைய நகரங்களுக்கும் பரவின. அதற்கு நவீன தொலை தொடர்பு சாதனங்கள் காலாயிருந்தன. சனாதிபதி சதாத் கிளர்ச்சியை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியது. இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை கிளர்ச்சி மேலும் பரவவே பயன்பட்டது. அசாத் சிறுபான்மை ஷியா பிரிவைச் சேர்ந்த அலவா குழுவைச் சேர்ந்தவர். ஆட்சியில் இவர்களே பெரிய பதவியில் இருக்கிறார்கள். நாட்டில் வெறுமனே 11.3 % இருந்த இவர்கள் இராணுவத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதனால் சுன்னி மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான உணர்வுகள் எப்போதும் கனன்று கொண்டிருந்தன. அவர்களில் கடும் போக்காளர்கள் ஆட்சிக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளோடு சதிவேலைகளில் இறங்கினார்கள்.
சனாதிபதி சதாத் தனது உரைகளில் கிளர்ச்சிக்குக் காரணம் சுன்னி பெரும்பான்மை மதத்தினர் எனக் குற்றம் சாட்டுகிறார். அவர்கள் (சுன்னி) ஏனைய மதப்பிரிவினர் மீது பதில் தாக்குதல் தொடுக்கக் கூடும் எனப் பரப்புரை செய்யப்பட்டது.
2011 ஆம் ஆண்டு கோடை காலத்தில் சிரியா நாட்டின் பக்கத்திலுள்ள நாடுகளும் உலக நாடுகளும் சிரியாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அணி திரண்டன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அராபு லீக் நாடுகளும் சதாத்துக்கு எதிராகக் களம் இறங்கின. அராப் லீக் நாடுகளான கத்தார், துருக்கி, சவுதி அரேபியா சதாம் ஆட்சிக்கு எதிராக தடைகளைக் கொண்டு வந்தனர்.
அதே நேரம் ரஷ்யா இரான் நாடுகள் சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டன. ஐநா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ரஷ்யா தனது வீட்டோ வாக்கைப் பயன்படுத்தித் தடுத்து வந்தது.
அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா, சனாதிபதி சதாத் பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை சதாத் நிராகரித்துவிட்டார். இன்று சிரியா கிளர்ச்சிப் படைகளிடம் பறிகொடுத்த நிலப்பரப்பை மீளக் கைப்பற்றிவிட்டது. தனக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை சிரியா தோற்கடித்து விட்டது.
இனிமேலாவது சிரியாவில் அமைதி நிலவுமா? சதாத்தின் பலவீனம் அவர் ஒரு சர்வாதிகாரி என்பதுதான். அவரது கட்சியான பாத் கட்சிதான் சிரியாவை ஆளுகிறது. இதை வைத்துக் கொண்டுதான் மேற்குலக நாடுகள் சிரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றன. அதே நேரம் இந்த நாடுகள் மன்னர்கள் ஆளும் சவுதி அரேபியா, குவைத்து, பஃரேன் போன்ற நாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
போது இரசாயன ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) டூமாவில் சிரியா மேற்கொண்டதாகக் கூறப்படும் நிகழ்வை ஆராய டமஸ்கஸ் சென்றது. டூமாவில் எந்தவிதமான இரசாயன குண்டு வீச்சும் இடம்பெறவில்லை என அந்த ஊர் மக்களும் மருத்துவமனை மருத்துவர்களும் கொடுத்த நேர்காணலை ருஷ்ய தொலைக்காட்சி ஒளிபரப்புப் செய்தது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சிரியா மீது மேற்கொண்ட ஏவுகளைத் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. சிரியா இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியது என்பதற்கான வலுவான சான்றுகளைத் திரட்டிய பின்னரே சிரியா மீது தாக்குதல் மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எந்தவொரு சான்றுகளையும் கையில் வைத்திருக்காது அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் இராக் மீது தாக்குதல் நடத்தியது நினைவு கூரத்தக்கது ஆகும். இராக்கில் சதாம் குசேனை அப்புறப்படுத்த முடிவு எடுத்த பின்னர் அவரிடம் அழிவாயுதங்கள் இருப்பதாக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் ஆடிய நாடகங்கள் எளிதில் மறக்க முடியாதவை.
சீனா, 1950 இல் திபேத்தின் மீது படையெடுத்து அதனைத் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கிறது. வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட அந்த மக்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டுள்ளார்கள். சிலர் ஏதிலிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள். இதையிட்டு அமெரிக்கா உட்பட எந்த நாடும் கவலைப்படுவது இல்லை. காரணம் சீனாவும் அமெரிக்கா போல ஒரு தெருச் சண்டியன்தான்.
அமெரிக்கா, எப்போதும் சிறிய நாடுகள் மீதுதான் சண்டைக்குப் போகின்றன. கடந்த காலங்களில் பின்வரும் நாடுகள் மீது அமெரிக்கா படையெடுத்துச் சென்று தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.
(1) கவுத்தமாலா (1954, 1960, 1967 – 69),
(2) இந்தோனிசியா (1958),
(3) கியூபா (1959,1961),
(4) கொங்கோ (1964),
(5) லாவோஸ் (1964 – 1973),
(6) வியட்நாம் (1961 -1973),
(7) லெபெனன் (1983 – 1984),
(8) லிபியா (1986),
(9) கிரனேடா (1983),
(10) எல்சல்வடோர் (1980 களில்),
(11) நிக்கருகுவா (1980 இல்),
(12) இரான் (1987),
(13) பனாமா (1989),
(14) இராக் (1991-2003, 2015),
(15) குவைத்து (1991),
(16) .சோமாலியா (1993, 2007-8, 2011),
(17) பொஸ்னியா (1994, 1995),
(18) சுடான் (1998),
(19) ஆப்கனிஸ்தான் (2001 – 2018),
(20) சோமாலியா (2008-8, 2011),
(21) சிரியா (2014 – 2018).
எளியோரை வலியோர் வதைத்தால் வலியாரைத் தெய்வம் வாட்டும் என்பார்கள். அது அந்தக் காலம்! சிறிய நாடான சிரியா மீது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.