நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர் நக்கீரன்

நவம் நிறைவாழ்வு வாழ்ந்து மனநிறைவோடு மறைந்தவர்

நக்கீரன்

இடம் யமலோகம்.நேரம் காலை. அப்போதுதான் யமதர்மராசா தனது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அவரது கணக்கப்பிள்ளை சித்திரபுத்திரனார். ஏற்கனவே வந்து விட்டார். அவருக்கு முன்னால் மலைபோல ஓலைகள். அன்று யார் யாரது உயிரைப் பிடித்து வரவேண்டும் என்ற உத்தரவுகளை அவரைச் சூழநின்ற யமதூதர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது முகத்தில் ஒரு சிறு புன்னகை. இதனை யமதர்மராசா கவனித்துவிட்டார். “என்ன சித்திரபுத்திரனாரே முகத்தில் புன்சிரிப்பு? புன்சிரிப்புக்குரிய காரணத்தை நான் அறியலாமா?” என்று  யமதர்மராசா வினாவினார்.

“வேறொன்றும் இல்லை பிரபு! இந்த மானிடர்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உயிரோடு இருப்பவர்கள் தங்களுக்கு மட்டும் சாவு வராது என்ற நினைப்பில் பணம், பண்டம், காணி, பூமி, வீடு வாசல் போன்றவற்றை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனை நினைத்தவுடன் எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்” என்றார் யமதர்மராசா.

இந்த உலகில் பிறந்தவர்கள் இறப்பதும் இறப்பவர் பிறப்பதும் காலம் காலமாக இந்த உலகம் தோன்றிய காலம் முதல் நடந்து வருகிறது. சீத்தலைச் சாத்தனார் படைத்த மணிமேகலைக் காப்பியத்தில் ஒரு காட்சி.

சோழ நாட்டு இளவரசன் உதயகுமாரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான்.  துறவியாக வேண்டும் என்ற  அவளது ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் காயசண்டிகையின் கணவன் கஞ்சனன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயார் மாதவியின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள்.

இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். 

தனது மகன் இறந்து போனதை நினைத்து  அரசமாதேவி அழுது புலம்புகிறாள். அவளுக்கு மணிமேகலை ஆறுதல் மொழிகள் சொல்கிறாள்.  முற்பிறப்பில் உன் மகன் உதயகுமாரன் நீலபதி என்னும் அரசியின் வயிற்றில் இராகுலன் ஆகப் பிறந்தான். இராகுலன் நாக பாம்பு தீண்டி இறந்து போனான். இப்போது நீ எதற்காக அழுகிறாய்? உடற்கு அழுதனையோ உயிருக்கு அழுதனையோ? இவற்றுள் எது பற்றி  நீ அழுதாலும் அது அறியாமையாகும். உடற்கு அழுதனையேல் உன் மகன் உடம்பை எடுத்துப் போய் சுடுகாட்டில் ஈமத்தீயிலேற்றி அழித்தது உங்களை யன்றி வேறு யார்?ஆகவே நீங்களே அழித்துவிட்டு நீங்களே அழுவது ஏன்? இவற்றால் நீ பொருந்தாதது செய்தனை நீ என்று மணிமேகலை அறிவுறுத்தினாள்.

சரி நீ உயிர் போனதற்கு  அழுதாயாயின் அதுவும் பொருத்தமற்றது. நீ உயிரை ஈந்ததும் இல்லை  கண்டதும் இல்லை. தன்னால் செய்யப்பட்ட பழவினைக் கேற்ப போன உயிர் உடல் புகும். அது எவ்விடத்தில் புகுந்தது என அறிவது நம்மனோர்க்கு அரியது. மேலும் உன் மகன்மீதான அன்பின் காரணமாக அழுகின்றேன் என்பாயாகின்  அதுவும் பொருத்தமற்றது. உயிர்களில் வேற்றுமை இல்லாததால் உடம்பைவிட்டுப் போகும் எல்லா உயிர்க்கும் இரங்கல் வேண்டும். இவ்வாறெல்லாம் மணிமேகலை அரசமாதேவிக்கு ஆறுதல் கூறினாள்.

எனது நீண்ட நாள் கெழுதகு நண்பன் நவம் அவர்கள் 2017-04-12 அன்று  அவரது சொந்த ஊரான  ஆரையம்பதி, மட்டக்களப்பில் காலமானார் என்ற செய்தியை தொபேசி வாயிலாகக் கேட்டபோது இந்த மணிமேகலைக் காட்சிதான் மனதில் தோன்றி மறைந்தது. மணிமேகலைக் காப்பியம்

இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.  மணிமேகலை மட்டுமல்ல திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் இந்தச் செய்தியையே கூறுகின்றன.

ஆண்டு சரியாக நினைவில்லை, 1954 ஆக இருக்கலாம். ஒரு நாள் நானும் நண்பர்களும் தங்கியிருந்த இல்லத்துக்கு ஒரு இரண்டு பேர் வந்தார்கள். அந்த இரண்டு பேரில் தெரிந்தவர் ஒருவர். தெரியாதவர் மற்றவர். “இவர்தான் புதிதாக  …………………………  பள்ளிக்கூடத்துக்கு தமிழாசிரியராக வந்திருப்பவர். பெயர் சீனித்தம்பி ஆறுமுகம் என்றார். சும்மா சொல்லக் கூடாது ஆள நல்ல உயரம். ஆனால் உயரத்துக் ஏற்ற பருமன் இல்லை. வெள்ளைநிறத் தேசிய உடை. அகவை 25 இருக்கும்.  அன்று தொடங்கிய நட்பு 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.

அந்தக் காலத்தில் பாரி இல்லத்தில் (அந்தப் பெயரைத்தான் வைத்திருந்தோம்)  ஐந்து ஆறு ஒண்டிக் கட்டைகள் இருந்தோம். சமையலுக்கு ஒரு  பையனை வைத்திருந்தோம். சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. நவம் வார இறுதியில் தவறாமல் வந்துவிடுவார்.

நவத்தின் புண்ணியத்தால் பாரி இல்லத்துக்கு பல பிரமுகர்கள் வந்து போனார்கள். சுதந்திரன் ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம்,  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, கல்கி துணை ஆசிரியர் பகீரதன் இப்படிப் பலர் வருவார்கள்.  இரத்தினபுரி தமிழ்ச் சங்கம் என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தோம். அதிலும் இவர்களைப பேச வைத்தோம். திரு இராசதுரை அவர்களது பேச்சைக் கேட்டு மூச்சை போடாத குறை.  அவர் நாவில் தமிழ் கொஞ்சிவிளையாடியது.  கணீரென்ற குரல். அப்படி ஒரு பேச்சு. அந்தப் பேச்சாற்றல்தான் அவருக்கு சொல்லின் செல்வர், மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என்ற பட்டப் பெயர்களை வாங்கிக் கொடுத்தது.

இந்தக் காலப் பகுதியில் கல்கி ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. முதற் பரிசு உரூபா ஆயிரம். அந்தக் காலத்தில் நாலு மாதச் சம்பளம். நந்தினி என்ற சிறுகதைக்கு முதற்பரிசு. அதனை எழுதியவர் நவம் என்று நான் சொல்லத் தேவையில்லை.  அதன் பின்னர் அவரைப்பற்றிய மதிப்ப அதிகரித்தது. கல்கி போன்ற புகழ்பெற்ற ஒரு வார ஏடு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெறுவது இலேசான காரியமல்ல. அதனைத் தொடர்ந்து சுதந்திரன், வீரகேசரி போன்ற இதழ்களில் சிறு கதை, நாவல் என எழுதினார்.

இந்தக் காலத்தில்தான் லீலா மீது அவருக்கு காதல் பிறந்தது. மட்டக்களப்பில் நடந்த தமிழ் அரசுக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள நான் போயிருந்தேன். லீலாவாயும் அவரது குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நவம் ஒரு நகைசுவை மன்னன்.  கவலை இல்லாத மனிதன். எப்போதும் ஏதாவதொரு பொருத்தமான பகிடியை சொல்வார். லீலா வீட்டில் ஏதோவொரு பொருளை தேடிக் கொண்டிருந்தார். “அடிப்பெட்டி எல்லாம் பார்த்துவிட்டேன். ஒரு இடத்திலும் காணவில்லை” என்றார். உடனே நவம் “அடிப்பெட்டியில் இல்லாவிட்டால் யார் பெட்டியில தேடிப்பார்” எனச் சிரிக்காமல் சொன்னார். எல்லோரும் சிரித்துவிட்டோம்.

லீலாவின் குடும்பம் கிறித்துவ மதம். நவம் குடும்பம் இந்து. இது சின்ன முரண்பாடு.  இருவரும் ஆசிரியர்கள். இது ஒருமைப்பாடு. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இந்த சோடி கடைசிவரை அன்றில் பறவைகள் போல் வாழ்ந்தார்கள்.  ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். எல்லோரையும் படிக்க வைத்தார்கள். ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடன்.  சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன். நன்னடை நல்கல் தாய் தந்தையர் கடன். இவற்றை நவம் – லீலா இருவரும் இனிது செய்திருந்தார்கள்.

1972 ஆம் ஆண்டு. எனக்கு சடுதியாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு இடமாற்றம். காரணம் அரசியல்தான். நான் கொஞ்சம் அப்படி இப்படி வளைந்து கொடுத்திருந்தால் யாழ்ப்பாணத்திலேயே இன்னும் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கலாம். ஆனால் தன்மானம் விடவில்லை.  பருவாயில்லை நவம் இருக்கப் பயம் ஏன் என நினைத்தேன். எனது வருகையை அவருக்குத்தான் முதலில் தெரிவித்தேன்.

மட்டக்களப்பில் தனி வாழ்க்கை. மறுபடியும் அரசியல் காரணத்துக்காக களுத்துறைக்கு இடமாற்றம்.  மட்டக்களப்பில் பணியாற்றிய போது பலர்  நண்பர்கள் ஆனார்கள். அவர்களது முகங்கள் மனக் கண்ணில் நிழலாடுகின்றன. வார இறுதியில் ஆரையம்பதிக்கு பேருந்தில் போய் இறங்கிவிடுவேன். அப்புறம் என்ன லீலாவின் குழம்பு, ஆணம் ஒரே  அமர்க்களம். இருவரும் வாவிக்கருகில் இருந்த கறிக்கடையில் மீன் வாங்கப் போவோம். உண்மையைச் சொல்லப் போனால் அப்படியான சம்பா அரிசிச் சோற்றோடு பின்னர் சாப்பிட்டதே கிடையாது. லீலாவின் கைவண்ணத்தோடு அந்த ஊரின் தண்ணீரும் சேர்ந்து கொண்டது. அப்போது இந்துமதி, முகுந்தன்(அமெரிக்கா) அரவிந்தன்  (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா) நளாயினி( கனடா) சின்னப் பிள்ளைகள்.

ஒரு முறை யாழ்ப்பாணம் போய் வரும்போது நான் இலண்டனில் இருந்து இறக்குமதி செய்த புத்தம் புதுக் காரில் முழுக்குடும்பமே  ஆரையம்பதிக்குப் போனோம். சில நாட்கள் அங்கேயே தங்கல். விருந்தோம்பல் பிரமாதம்.  கல்லடி சாந்தி திரையரங்கில் ஓசியில் போய் படம் பார்த்தது நினைவிருக்கிறது. படத்தின் பெயர் நினைவில் இல்லை.

நவம் தமிழ்நாட்டில் இருந்த போது பார்க்கக் கிடைக்கவில்லை. கனடாவரும் போது மறக்காமல் வீட்டுக்கு வருவார். அதே சிரிப்பு. அதே பகிடிக் கதைகள். அதே கவலை இல்லாத மனிதன்.

1974 ஆம் ஆண்டு சனவரி 3 இல் இருந்து 10 வரை யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு. நவம் மட்டக்களப்பில் இருந்து வந்துவிட்டார். சும்மா வரவில்லை ஒரு மூட்டை அரிசியோடும் தயிர் சட்டிகளோடும் வந்து இறங்கிவிட்டார்.

அவரது பிள்ளைகளைப் பார்க்க அமெரிக்கா,  கனடா வந்து சிலகாலம் இருந்து விட்டு  ஊர் திரும்பினார். கனடாவில் அவரது பேத்தியின் நடன அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். பட்டு வேட்டி சால்வை மாப்பிள்ளை போல் காட்சி அளித்தார்.  அதுவே அவரோடும் அவரது குடும்பத்தோடும் ஆன எனது கடைசிச் சந்திப்பு. இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  முப்பது  மணித்துளி  பேசினார். வழக்கம் போல பழைய நினைவுகளை இரை மீட்டுக் கொண்டோம். எப்போதும் போல  நகைச் சுவை கலந்த கல கல பேச்சு. விஜயகுமாரி நலமா? என்று கேட்டார். எனது துணைவியாரை எப்போதும் அப்படித்தான் அழைப்பார்.  நவத்துக்கு தொண்ணூறு அகவையை நெருங்குவதாக   லீலா சொன்னார். இப்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் தனது தொண்ணூறு அகவையை எட்ட முன்னர் காலன் கணக்கைத் தீர்த்துக் கொண்டான்.

சித்தர்களும் முக்தர்களும் மரணம் இயற்கை என்றார்கள். ஞானிகளும் யோகிகளும்  பிறப்பு எப்படி இயற்கையோ அதே போல் பிறந்தவை யாவும் இறப்பதும் இயற்கை என்றார்கள்.
உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். சித்தர், முக்தர், ஞானிகள், யோகிகள், முனிவர்கள் எல்லோரும் மரணத்தை வெல்ல எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மோனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முடியவில்லை.
“புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமநுசர் எல்லோருமே மாண்டு போனார்கள். நான் மட்டும் பார் மீது சாகாதிருப்பேன்”என்று பாரதி முழங்கினார்.

“காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! – என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்”

என்று காலனுடன் வீரம் பேசினார். ஆனால் ‘மரணத்தை வெல்வது எப்படி?’ என்று உபாயம் சொன்ன மகாகவி பாரதி கூட அந்த மரணத்தை வெல்ல முடியவில்லை! அவரது முப்பத்தொன்பதாவது அகவையில் அந்தக் காலன் என்ற பாபி கூட்டிச் சென்றான்.

நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்!                                 (பாரதியார் சுயசரிதை)

இந்தப் உலகில் காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் நாம் வாழக் கற்றுக்கொள்ள  வேண்டும். நாமாக கூற்றுவனுக்கு ஓலை அனுப்பக் கூடாது.  எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பது உண்மையல்ல. நவம் அதற்குச் சிறந்த  எடுத்துக்காட்டு. அவர் நிறைவாழ்வு வாழ்ந்து மன நிறைவோடு மறைந்தவர்.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply