ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  வழக்குத்தாக்கல்

ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  வழக்குத்தாக்கல்

கதிரவேலு நித்தியானந்தா தேவானந்தா என்னும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, என்னும் 45, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். முகவரியில. வசிப்பவரிடமிருந்து தமக்குச் சொந்தமான ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்றைய தினம் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24 ம் நாள் தாக்கல் செய்துள்ள குறித்த வழக்கில் வழக்காளிகள் தமது பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி கேசவன் சஜந்தன் மூலம் தோற்றி தமது பிராதில் பின்வருமாறு பகர்கின்றார்கள்.

1. இந்த வழக்கின் விடயப்பொருளான காணி மற்றும் வளாகம்; அமைந்துள்ளதும் இதனகத்துப் பின்னால் குறிப்பிடப்படும் வழக்கெழு காரணம் எழுந்ததுவும் இந்நீதி மன்றின் உள்ளுர் நியாயாதிக்க எல்லைக்குள் ஆகும்.

2. வழக்காளிகள் மேலே பெயர் குறித்த தமது அற்றோணி தத்துவகாரர் மூலம் தோற்றுகின்றார்கள்.

3. இவ் வழக்கானது 2016ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கால விதிப்பு சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட காலத்தின் உள்ளும் அதன் பிரகாரமும் கொண்டுவரப்படுகிறது.

4. 1965 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் நாள் மற்றும் 1957ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் நாள் ஆகிய தினங்களிலோ அல்லது அதற்கு அண்மித்த நாட்களிலோ பிரசித்த நொத்தாரிசு அருணாசலம் சுப்பிரமணியத்தினால் சான்றத்தாட்சிப்படுத்திய இலக்கங்கள் 8099 மற்றும் 8100 உடைய உறுதிகளினால் இதனோடுள்ள அட்டவணையில் நன்கு விபரிக்கப்படும் காணி மற்றும்; வளாகத்திலும் சொரியலாய் அரைப் பங்குகளை செல்லத்துரை நித்தியானந்தன், முறையே முதலாம் வழக்காளியின் கணவரான (தற்போது காலம் சென்றுள்ள) செல்லையா சபாரத்தினம் இரத்தினசபாபதிக்கும், முதலாம் வழக்காளிக்கும் அறுதியாகக் கைமாற்றினார்.Image result for சிறிதர் தியேட்டர் யாழ்ப்பாணம்

5. 1972ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திததி அன்றோ அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றிலோ முதலாம் வழக்காளியின் கணவன் சொல்லப்பட்ட செல்லையா சபாரத்தினம் இரத்தினசபாபதி இறுதி விருப்பாவணம் இன்றி இறந்தார்.

6. இந்த சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட செல்லையா சபாரத்தினம் இரத்தினசபாபதி இறக்கும் போது அவரது மனைவி என்ற முறையிலும் இப்பிராதின் அட்டவணையில் நன்கு விபரிக்கப்பட்ட காணி மற்றும் வளாகத்திலும்; சொரியலாய் அரைப் பங்கிற்கு சொந்தக்காரி என்ற முறையிலும் சொல்லப்பட்ட செல்லையா சபாரத்தினம் இரத்தினசபாபதியின் பிள்ளைகள் என்ற முறையில் 2ம், 3ம், 4ம், 5ம் மற்றும் 6ம் வழக்காளிகளோடு இணைந்து சொல்லப்பட்ட செல்லையா சபாரத்தினம் இரத்தினசபாபதியின் ஒரே சட்டபூர்வ வாரிசுகள் என்ற முறையில் இதனோடுள்ள அட்டவணையில் நன்கு விபரிக்கப்படும் காணி மற்றும் வளாகத்துக்கும் சட்டபூர்வ சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

7. அதன் பின்னர் வழக்காளிகள் 1978ஆம் ஆண்டு வரையில் வழக்கிடைப்பட்ட வளாகத்தில் ஒரே குடும்ப அலகாக உடமை கொண்டும் பயன்படுத்தியும் அத்தோடு இருப்பாட்சியிலும் இருந்தார்கள்.

8. சொல்லப்பட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறீதர் சினீமா, சொல்லப்பட்ட வழக்காளிகளின் குடும்பத்தினரால், 1974ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியிலோ கட்டப்பட்டது.

9. வடக்கில் நிலவிய போர் காரணமாக 1990ஆம் ஆண்டிலிருந்தோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியிலிருந்தோ சொல்லப்பட்ட சிறீதர் சினீமா மூடப்பட வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில் சொல்லப்பட்ட போர் காரணமாக வழக்காளிகள் குடும்பமாக யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீடடிலிருந்து வெளியேறி கடல்கடந்து குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

10. 1997ஆம் ஆண்டில் வடக்கில் சிவில் நிர்வாகம் மீளமைக்கப்பட்டிருந்ததோடு; வழக்காளிகள் சொல்லப்பட்ட சிறீதர் சினிமாவை மீளத்திறக்க விரும்பினார்கள். ஆயினும், 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இருந்தோ எதிராளி தனது அரசியல் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர்களுடன் சேர்ந்து வழக்காளிகளது அறிவோ, அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் சட்டவிரோதமாகவும் பலாத்காரமாகவும் சொல்லப்பட்ட வளவின் உடமையை தன் வசமாக்கிக்கினார் என்றும் சட்டவிரோதமானதும் சட்டபூர்வமற்றதுமான இருப்பாட்சியில் அத்தகைய காலத்திலிருந்து இருந்து வருகிறார் என்றும் அவர்களுக்கு அறிய வந்தது.

11. 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியிலோ இரண்டாவது வழக்காளியான இரத்தினசபாபதி மகேந்திரரவிராஜை தொடர்பு கொண்ட எதிராளி உண்மையில், தான் சொல்லப்பட்ட வளாகத்தில் சட்டவிரோத இருப்பாட்சியில் இருப்பதாக அவருக்கு உறுதிப்படுத்தினார். அந்த நேரத்திலேயே இரண்டாம் வழக்காளி அவரது சொல்லப்பட்ட வளவில் அவரது சட்டவிரோதமானதும் சட்டபூர்வமற்றதுமான இருப்பாட்சியை வன்மையாக ஆட்சேமிப்பதாக எதிராளிக்கு சுட்டிக்காட்டினார். ஆயினும் சொல்லப்பட்ட வளவில் எதிராளி தன்னுடைய அரசியல் கட்சியுடன் சேர்ந்து சட்டவிரோத இருப்பாட்சியை தொடர்ந்தார்.

12.எதிராளி, தனது அரசியல் கட்சியுடன் சேர்ந்து வழக்காளிகளுக்கு எந்தவிதமான இழப்பீட்டுச் செலுத்துகையும் இன்றி சொல்லப்பட்ட வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக சட்டவிரோத இருப்பாட்சியில் இருந்து வருகிறார்.

13. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நேரடியாகவும் அந்த நேரத்தில் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் ஊடாகவும் எதிராளிக்குப் பல்வேறு கடிதங்கள் அனுப்பியதோடு ஏனைய வடிவங்களிலான தொடர்பாடல்கள் மூலமும் சொல்லப்பட்ட வளாகத்திலிருந்து அவரும் அவரது அரசியல் கட்சியும் வெளியேறவும்; சொல்லப்பட்ட வளவின் வெற்று உடமையை தம்மிடம் ஒப்படைக்கவும் அவர்களது சொல்லப்பட்ட சட்டவிரோதமான மற்றும் சட்டபூர்வமற்ற இருப்பாட்சிக்காக இழப்பீட்டை செலுத்தவும் கோரிக்கைவிடுத்து வழக்காளிகளினாலும் அல்லது அவர்கள் சார்பிலும் செய்யப்பட்ட சொல்லப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராளி இணங்கி ஒழுகத் தவறிவிட்டார்.

14. மேலே விபரித்த எதிராளியின் சட்டவிரோத மற்றும் சட்டபூர்வமற்ற செயற்பாடுகளினால் வழக்காளிகள் மிகுந்த மன உழைச்சலாலும்; கணிசமான நிதிரீதியான நட்டம் மற்றும் இழப்பினாலும் பாதிக்கப்பட்டார்.Image result for சிறிதர் தியேட்டர் யாழ்ப்பாணம்

15. 1ம் வழக்காளி சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதங்கள் மூலம் ஏனையவற்றிற்கு இடையில், சொல்லப்பட்ட வளவில் இருப்பாட்சியை எதிராளி 1ம் வழக்காளியிடம் ஒப்படைக்குமாறும்; மேலும் அவரது சட்டவிரோத மற்றும் சட்டபூர்வமற்ற இருப்பாட்சிக் காலத்துக்கு மாதம் ஒன்றிற்கு ரூபா எழுபத்தையாயிரம் (ரூபா. 75,000.00) அதற்கான சட்ட வட்டியுடன் சேர்த்து இழப்பிட்டிற்காகச் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

16. இன்றைய திகதி வரையில் சொல்லப்பட்ட வளாகத்தில் தனது சட்டவிரோத இருப்பாட்சியை தொடர்கிறார் என்பதோடு அவ்விதமே வழக்காளிகளின் சட்டபூர்வ உரிமையான உடைமை, பயன்பாடு மற்றும் அனுபவிப்பில் இருந்து வழக்காளியைத் தடுத்தும் வருகிறார்.

17. அவ்விதத்திலும் வேறுவிதத்திலும் இதனகத்துப் பிரார்த்திக்கப்பட்ட நிவாரணங்களை கோரி எதிராளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வழக்காளிகளுக்கு வழக்கெழு காரணம் ஒன்று எழுந்துள்ளது.

18. வழக்காளிகள் இந்த வழக்கின் விடயப் பொருளின் பெறுமதி அல்லது முத்திரைத் தீர்வையில் நோக்கங்களுக்காக ரூபா நுறுமில்லியன் (ரூபா. 100,000,000.00) என்பதாக மதிப்பீடு செய்கின்றார்

எனவே வழக்காளிகள் பிரார்த்திப்பதாவது

. இதனோடுள்ள அட்டவணையில் நன்கு விபரிக்கப்பட்டுள்ள வழக்கிடைப்பட்ட வளாகத்திற்கு வழக்காளிகளே சட்டபூர்வமான இணைந்த சொந்தக்காரர் என்று விளம்புவதான ஒரு பிரகடனமும்.

எதிராளிகள் அவரது வாரிசுகள், நிர்வாக தத்துவகாரர்கள், வேலையாட்கள், முகவர்கள் மற்றும் அவர்களின் கீழுள்ளோர் இதனோடுள்ள அட்டவணையில் நன்கு விபரிக்கப்பட்டுள்ள சொல்லப்பட்ட வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவதானதும் வெற்று மற்றும் சமாதாhனமான உடமையை வழக்காளிகளிடம் வழங்குவதுமான ஒரு கட்டளை.

தீர்வை பதியப்படும் வரை 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் இழப்பீடாக மாதமொன்றுக்கு ரூபா எழுபத்தையாயிரம் (ரூபா. 75,000.00) அதற்கான சட்ட வட்டியுடன் சேர்த்து செலுத்துமாறும்; அதன்பின்னர் முழுமையாகச் செலுத்தப்படும் வரையான கூட்டுத் தொகைக்கும்; எதிராளிக்கு எதிராகத் தீர்ப்பும்.

வழக்குச் செலவும்  கௌரவ மன்று தகுந்ததெனக் காணும் இன்ன பிற நிவாரணங்களும். என குறித்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

 1. ஒருத்தரது சொத்தை அவரது அனுமதியின்றி கைப்பற்றி வைத்திருப்பது சட்டத்துக்க முரணானது. அதற்கு மேலாக அந்தச் சொத்துக்குரிய குடிக் கூலி கொடுக்கத் தவறுவது பெரிய குற்றம். 21 ஆண்டுகளாக மாதம் ரூபா 75,000 குடிக் கூலி அடிப்படையில் கட்டிட உரிமையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ரூபா18,900,000 கோடியாகும். இப்படி ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடும் ஒரு அரசியல்வாதி எப்படி அமைச்சர் பதவியை அலங்கரித்தார் என்பது புதிராக இருக்கிறது. எப்படி இவரால் வேட்டி உடுத்துக் கொண்டு தெருவில் நடமுடிகிறது என்பது அதைவிடப் புதிராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் மற்றவர்களுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
  1994 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை வி.புலிகள் புறக்கணித்ததால் இபிடிபி கட்சி 10,744 (0.14%) வாக்குகளை மட்டும் பெற்று 9 இடங்களைப் பிடித்தது.
  இபிடிபியின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த  ஊர்காவத்துறையில்தான்  ஆள்மாறாட்டம் செய்து 9944 வாக்குகள் கிடைத்தன. தேர்தலின் போது இபிடிபி ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரரையும் ஊர்காவற்துறை தொகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.  இபிடிபி ஊர்காவல்துறை நீங்கலா எஞ்சிய 10 தேர்தல் தொகுதிகளில் மொத்தமாக பெற்ற வாக்குகள் 244 மட்டுமே. மொத்த வாக்காளர் தொகை 596,366. வாக்களிதவர்களது விழுக்காடு 2.32 மட்டுமே. சாவகச்சேரியில் 13 வாக்குகள் மட்டும் கிடைத்தன.
  ஒரு விதத்தில் புலிகளே தேவானந்தாவின் அரசியல் நுழைவுக்கு பாதை போட்டுக்  கொடுத்தார்கள். இதன் பின்னர் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது காலைக் கழுவி, காலணிகளைத் துடைத்து காட்டிக் கொடுப்பு அரசியலை தேவானந்தா செய்து வந்தார். அதுமுதல் அந்தக் கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளோடு சேர்ந்து கொண்டு ஆட்சியில் பங்கு வகித்துவந்தது. டக்லஸ் தேவானந்தா 2015 வரை அமைச்சராக வீற்றிருந்தார். இந்தக் காலத்தில் இபிடிபி பல கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டது.
  கடந்த இரு தசாப்பங்களுக்கு மேலாக  தேவானந்தாவின் கொலைவெறிப் பட்டியல் நீண்டு கொண்டு போனது.
  1989 இல் கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா கொல்லப்பட்டார். இபிடிபி கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service – SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  திசெம்பர் 28, 1999 ஆம் நாள் பலரால் தொடர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயான 29 வயது சாரதாம்பாள் படுகொலை செய்யப்பட்டார்.  இவர் புங்குடுதீவைச் சேர்ந்த சரவணபவானந்தக் குருக்கள் அவர்களின் மனைவி ஆவார். சாரதாம்பாளின் இறந்த உடல் சருகுகளுக்கும் இலைகளுக்கும் கீழ் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிடந்ததை ஊர்மக்கள் கண்டுபிடித்தனர். இந்தக் கொலைக்குப் பின்னால் இபிடிபி இருந்ததாக நம்பப்படுகிறது. இபிடிபியின் கட்டுப்பாட்டுக்குள் நடந்த இந்தக் கொலையை அது மூடி மறைத்துவிட்டது.
  ஒக்தோபர் 19, 2000 அன்று பிபிசி நிருபர் நிமலராசனை பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த அவரது வீட்டில் வைத்து  இபிடிபி குண்டர்கள் சுட்டுக் கொன்றார்கள். நிமலாசனின் வீடு இராணுவ காவல் அரணில் இருந்து 100 யார் தூரத்தில் இருந்தது.
   நொவம்பர் 28, 2001 (புதன்கிழமை) நாரந்தனைக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழ்த் தேசிய முன்னணி வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சென்றபோது ஆயுதம்தாங்கிய இபிடிபி அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். அந்தத் தாக்குதலின் போது இருவர் கொலை செய்யப்பட்டார்கள். சந்தேக நபரான நெப்போலியன் நாட்டை விட்டு ஓடித் தப்பிவிட்டான்.
  சனவரி 01, 2008 இல் தியாகசாரா மகேஸ்வரனை கொழும்பு பொன்னம்பலவாண கோணேசுவரம் கோயிலில் வைத்து இபிடிபி யை சேர்ந்த தொமாஸ் கொலின் வலன்ரைன் அல்லது வசந்தன் என்பவன்தான் சுட்டுக் கொன்றான். மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 11 நாட்கள் முந்தி அவரது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட 18 காவலர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைக்கப்பட்டது.தனது கணவரைக் கொன்றது இபிடிபி தான் என நாடாளுமன்றத்தில் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேரடியாக டக்லஸ் தேவானந்தாவின் முகத்தைப் பார்த்துக் குற்றம் குற்றம்சாட்டினார்.
  நொவம்பர் 26, 2013 அன்று இபிடிபி கட்சியின் நீண்டகால உறுப்பினரும் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவருமான றெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் அவரது உதவியாளர் மற்றும் றெக்சியனின் மனைவி அனித்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி இபிடிபி தலைமை அலுவலகத்தில் (ஸ்ரீதர் திரைப்பட கட்டிடம்) இருந்து காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
  இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்ட இபிடிபி கட்சியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இரஞ்சன் தியாகராசா ஜீவன், நடராசா மதனராசா, நமசிவாயம் கருணாமூர்த்தி, செபஸ்தியான் இரமேஷ் அல்லது நெப்போலியன் ஆகியோர் நாட்டை விட்டு இராஜபக்சாவின் ஆதரவோடு தப்பித்து ஓடிவிட்டார்கள்.

Leave a Reply