சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி
மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர், கடந்த 2013-ம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சாமியார், பின்னர் 2014-ம் ஆண்டு, குஜராத்தில் 2 சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில், சாமியாரின் மகனும் உடன்பட்டிருந்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் முஷார்பர் நகரில், தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சமையல்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும் ஆசாராம் பாபு மீது தொடரப்பட்டது.
இப்படி தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. எஸ்.சி / எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், இவரின் வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று இவர் மீதான வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்து, அதற்கான தீர்ப்பு இன்று (ஏப்ரல் 25-04-18 ) அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை ஆசாராம் பாபு மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேருக்கு தண்டனை வழங்க ஜோத்பூர் சிறைக்கே நீதிபதிகள் சென்றனர்.
அங்கு, 2013 -ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில், ஆசாராம் பாபு உள்பட மூன்று பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும், இருவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கபட்டுள்ளது .சாமியார் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1949 இல் வேலைக்காரி என்ற தமிழ்த் திரைப்படம் ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுதியிருந்தார். இசையை சி. ஆர். சுப்பராமன் மற்றும் எஸ். எம். சுப்பைய்யா நாயுடு இருவரும் அமைத்திருந்தார்கள். படப்பிடிப்பு சென்ரல் கலையரங்கம்.
வேலைக்காரியில் அண்ணாவின் உரையாடல் எதுகை மோனை நிறைந்த அழகுதமிழில் இருந்தது. உறையுள் இருந்த உருவிய வாள்போல் மின்னியது உரையாடல் மின்னியது என கல்கி பாராட்டி இருந்தார்.
வேலைக்காரித் திரைப்படம் பட்டி தொட்டிகளில் எல்லாம் கொடிகட்டி ஓடியது. அதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் திரைக் கதையும் உரையாடல்களுமாகும். அதுவரை பெரும்பாலும் புராணக் கதைகளே திரைப்படமாக வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கு நேர்மாறாக வேலைக்காரி சமூகம் சார்ந்த கதையாக இருந்தது. சாதி, மதம், மூட பக்தி போன்றவற்றைச் அந்தத் திரைப்படம் விளங்கியது. இதில்தான் கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு! சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு! ஏழையால் அந்தப் பிரகாசமான விளக்கைப் பெறமுடியாது! மாற்றான் வீட்டுத் தோட்ட மல்லிகையும் மணக்கும் என்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. .
திரைப்படத்தில் ஒரு போலி சாமியார் பாத்திரம் இருக்கும். பெயர் ஹரிஹ௧ரதாஸ். பகலில் சாமியாராகவும் இரவில் காம இச்சை கொண்ட யோகியாகவும் இருக்கும் போலிச் சாமியார்கள் பற்றி இந்நாடகம் வழி அம்பலப்படுத்துகிறார். பகலிலே இழித்தவாயர்களுக்கு உபதேசம். இரவிலே இன்பவல்லிகளுடன் சரச சல்லாபம் நடத்தும் ஹரிஹரதாஸைக் கண்ட மூர்த்தி,
‘ஹா கபட வேஷதாரியே! காமுகா… பகலிலே யோகியாகவும் பாதி ராத்திரியிலே போகியாகவும் காட்சியளிக்கும் பேடிப்பயலே ஆசிரமமா ‘இது” என்று கொதிக்கிறான். ஆனால் என்ன புண்ணியம் ஹரிஹரதாஸ் போன்ற போலிச் சாமிகள் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதில் பிந்திய ஆசாமி அசராம் பாபு. இதற்கு முன் தமிழ்நாட்டில் பிரேமானந்தா என்ற போலி சாமியார். ஆச்சிரமத்தில் தனது பாதுகாப்பில் வாழ்ந்த 13 பெண் பிள்ளைகளை ஏமாற்றி அவர்களது கற்பை சூறையாடிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவர் நோயினால் 2011 இல் காலமானார். இவரைப் போல் நாட்டில் இன்னும் பலர் இருந்தார்கள். அகில பாரதிய அக்காரா பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில பாபா ஓம், சச்சிதானந்த கிரி, இச்சதாரி பீமானந்த், நிர்மல்ஜித் சிங், ராதே மா, சுவாமி அசீமானந்த், நாராயண் சாய், ஓம் நமக சிவாபாபா, ஆச்சர்யா குஷ்முனி, ராம்பால், பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோரும் போலிச்சாமியார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.