ஆன்மீகமும் ஆதீனங்களும்!
– சிவகாசி மணியம்
காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஒட, கண்கள் கதியற்று கன்னியரை நாட… 1950களில் அறிஞர் அண்ணா அவர்களின் பேனா முனையிலிருந்து துள்ளி விழுந்த வசனம் இது. படம் வேலைக்காரி அவர் யாரை அடையாளம் காட்ட இதை எழுதினாரோ அதே போன்ற ஆசாமிகளை இன்றும் நம் மக்கள் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். ஆன்மிகப் போர்வையில் உலவும் ஆசாடபூதிகள் பலர் இருந்தாலும் சட்டென நினைவுக்கு வருபவர் சி.டி.புகழ் நித்தியானந்தாதான். மதுரையின் அடுத்த ஆதீனம் அவர்தானாம்! வெட்கக் கேடு.
வௌக்க மாத்துக்கு பட்டுக் குஞ்சம் செருப்புக்கு வெள்ளி உறை போன்ற சொலவடை கள் நம் நினைவுக்கு வரும். நாம் இருக்கும் இடத்தை துப்புரவாகத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நம் பாதங்கள் பழுது படாமல் பாதுகாக் கவும் பயன்படும் கருவிகள் அவை. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன்னலமற்ற தியாகத்தை நமக்கு நினைவுப்படுத்தி அழிந்துபோகும் அவை நம் மரியாதைக்குரியவை. சுகபோக அரசவாழ்க்கையில் மூழ்கித் திளைக்கும் சாமியார்கள், ஆதீனங்கள் எந்தவகையில் இவற்றைவிட மேலானவர்கள்?
கெட்ட நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தால் அவர்களுக்குப் பெயர் போலிச் சாமியார்கள்! குட்டு வெளிப்படாமல் எச்சரிக்கையாய் நடமாடும் கபட சந்நிதானங்களுக்குப் பெயர் வணக்கத்திற்குரிய சாமிகள்.
அண்மையில் மதுரை ஆதீன இளவரசராக பெங்களூரு பிடதிக்காரருக்கு முடிசூட்டப்பட்ட அருவருப்புச் செய்தி ஆன்மிகவாதிகளிடையே அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது. பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி திருஞானசம்பந்தனை அழைத்துவந்து மதுரை ஆதீனத்தைத் தொடங்கி வைத்தாளாம். 1500 ஆண்டுகளுக்குமுன் என்கிறது ஒரு நாளிதழ்! 2500 ஆண்டுகளுக்கு முன் என்கிறது ஒரு வார இதழ்! இடைவெளி 1000 ஆண்டுகளா?
(பார்வதி தேவியாரிடம் பால்குடித்து வளர்ந்தவனாம் திருஞானசம்பந்தன். பிரசவ வேதனை, குழந்தைப் பேறு என்றால் என்னவென்றே தெரியாத உமையவளுக்கு பால் எங்கிருந்து வரும்? எப்படிச் சுரக்கும்? பொய்மைக்கு ஏது எல்லை?)
சிவபெருமானும் பார்வதி தேவியும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டி னார்கள். அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால் அவசர அவசரமாக அவருக்கே பட்டம் சூட்டிவிட் டோம் என்கிறார் மதுரை ஆதீனம்! சிவனும் பார்வதியும் கூட்டாகச் சேர்ந்து கையெழுத்திட்டு அனுப்பிய உத்தரவு இவருக்கு கூரியரில் வந்ததா? ஸ்பீடு போஸ்ட்டில் வந்ததா? கனவில் வந்து சொன்னதாக இன்னும் எத்தனை தலைமுறைக்கு கதைவிடப் போகி றீர்கள்? அறிவியல் மேலாண்மை விரிந்து வரும் இந்நாளில் கடவுள்கள் கனவில் தான் வரவேண்டுமா? எத்தனை டி.வி. சேனல்கள்? எத்தனை ஊடகங்கள்? கடவுள் புகழ் பரப்புவதற்கென்றே தொலைக் காட்சிகள்! 24 மணி நேரமும் செய்திகள்! இவற்றில் ஏதாவது ஒன்றில் திறீணீலீ ழிமீஷ் என்று போட்டால் கூடப் போதுமே? கடவுளே சொல்லிவிட்டார். எதற்கு பிரச்னை பண்ணுவானேன் என்று வாளாதிருந்திருப்பார்களே? நீதிமன்றம் போனாலும் கடவுள் உத்தரவு. எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நீதிபதிகள் கூறிவிட வாய்ப்பும் இருக்கிறதே?
கனவில் வந்து கடவுள் சொன்னதாகவே இருக்கட்டும். 2004ஆம் ஆண்டில் தனது அத்தை மகளின் மகன் சுவாமிநாதனை மதுரை ஆதீன இளவரசராக விழா ஒன்றை நடத்தி பட்டம் சூட்டி மகிழ்ந்ததும் இதே ஆதீனத்தரசர்தான்!
அது யார் போட்ட உத்தரவு? 10 ஆண்டுகள் இளவரசரின் பதவி பறிக்கப்பட்டதே அது யார் போட்ட உத்தரவு?
சர்ச்சைக்குப் பேர்போன நித்தியானந்தாவை மதுரை மடத்தின் 293வது குரு மகாசந்நிதானமாக பட்டம் சூட்டியது ஏன் என்று கேட்டதற்கு தந்தையும் மகனுமாக இருந்து ஒரு கம்பெனியை நிர்வகிப்பதுபோல் நடத்துவோம் என்கிறார். மடங்களெல்லாம் கம்பெனிகளா? அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் எத்தனை பேர்? கம்பெனிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டதுதானா? துறவிகளுக்குள் தந்தை மகன் உறவு எப்படி வந்தது? பொற்கிரீடங்கள், தங்க சிம்மாசனங்கள், வைர வைடூரிய ஆபரணங்கள் துறவிகளுக்குரியனவா? அவை வந்த வழி என்ன? கேள்விகள் முடியவில்லை. நாடு கேட்க இருப்பவை இன்னும் ஏராளம்!
இந்தியாவில் 3.50 லட்சம் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன! என்று கணக்கிட்டுச் சொல்பவர் வேறு யாருமல்ல. நித்யாவேதான். அவர் சம்பந்தப்பட்ட வழக்கை அவர் அறிந்து வைத்திருப்பதில் நமக்கு ஆச்சரியம் இல்லை! ஆண்டு ஒன்றுக்கு எத்தனை பேர் பட்டினியால் சாகிறார்கள் என்ற புள்ளி விபரம் இவரால் தரமுடியுமா?
மதுரை ஆதீனத்துக்கு உத்தரவு தந்த தகவல், தமிழகத்திலுள்ள மற்ற ஆதினங்களுக்கும் தெரிந்திருந்தால் பட்டாபிசேகம் களைகட்டியிருக்கும். எதிர்க்க எவரும் முன்வர மாட்டார்கள். தூங்கினால்தானே கடவுள் கனவில் வர வசதியாக இருக்கும்!
தாருகாவனத்து ரிசி பத்தினிகளைக் கெடுத்தவன் சிவன். வெகுண்டெழுந்த ரிசிகள் சிவனின் ஆண்குறியை அறுத்தெறிந்ததாக புராணம் கூறுகிறது. மோகினி வடிவில் வந்த விஷ்ணுவையும் சிவன் விட்டுவைக்கவில்லை. அதனால் அரிஹரபுத்திரன் அகிலத்திற்கு அறிமுகமானான். ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒருவனை உயரத்தில் நிறுத்தும் தகுதியும், யோக்கியதையும் சிவனுக்கு உண்டு. ஒப்புக்கொள்வோம்.
உறக்கத்தில், கனவில் சிவன் வந்து சொன்ன இன்னொரு கதையும் இருக்கிறது. தென்காசி கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு பராக்கிரம பாண்டியன் ஓய்வில் உறக்கத்தில் இருந்த சமயம். கனவில் சிவபெருமான் வந்தார்.
பக்தா பராக்கிரம பாண்டியா, வடக்கே காசி, தெற்கே தென்காசி. சரி. இடையில் ஒரு காசி எழுந்தால் ரொம்பவும் மகிழ்வேன் என்றானாம். சிவகாசி வந்த கதை இதுதான் என்கிறது ஸ்தல புராணம்! சிவன் கோயில் இங்கு எழுந்தபோது ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் கூட இங்கே இல்லை. அடிப்படை வசதிகளைப் பெற அநேக நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. நம் கடவுள்களுக்கு கோயில்தான் முக்கியம்.
உண்மையில், இங்குள்ள பழைமை வாய்ந்த உயர்நிலைப்பள்ளி ஒன்று விக்டோரியா மகாராணி காலத்தில் அதாவது வெள்ளைக்காரன் நாட்டை ஆண்டபோது உருவானது. சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல் நிலைப்பள்ளி என்பது அதன் பெயர். பல தொழில்களையும், தொழிலதிபர்களையும் தந்து இன்றும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயிலும் பள்ளியாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது! கதை அளப்பவர்களுக்கு கனவு கண்டதாக உளறுவது வசதியானதொரு வாய்ப்பு! பலரும் பார்க்கும் வண்ணம் நேரில காட்சிஅளித்து உத்தரவு போடும் வல்லமை எந்தக் கடவுளுக்கும் இல்லை என்பதை மூட நம்பிக்கையாளர்கள் அனைவரும் உணரும் நாளே இனிய நாள்.
இப்படியெல்லாம் கருத்துக்களை முன் வைக்கிறபோது பெரியார் கட்சிக்காரர்கள், நாத்திகர்கள் இவர்கள் இப்படித்தான் என அலட்டிக் கொள்பவர்கள் அடுத்து வருவதையும் படிக்கட்டும்.
உலக வாழ்க்கை யைத் துறந்து விட்டதாக நம்பப் படும் ஆன்மீகவாதிகள் கூட உண்மையில் உலக நியதியில்தான் இயங்குகின்றனர். சாதாரண மக்களிடம் காணப்படும் அதே குறிக்கோள், ஒன்றை அடைந்துவிட எடுத்துக்கொள்ளும் அதே தீவிர முயற்சி, ஆசைப்பட்டதாகவே மாறிவிடத் துடிக்கும் துடிப்பு என்பவை அவர்களிடமும் உள்ளன. அறிந்துகொண்டுவிடவும், அடைந்துவிடவும், பிடியில் கொண்டுவந்து விடவும், தன்னிடமே பத்திரமாக வைத்துக்கொள்ள நினைத்தலும் இவர் களிடமும் இருக்கிறது. ஆன்மீகவாதிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் நோக்கம் புனிதமானது போலவும் மற்றவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றிலும் மாறுபட்டது போலவும் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் துறந்து சென்றதாக எண்ணும் உலகத்துக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக உலகத்துக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. அதுவேதான் இது. இதுவேதான் அது. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஜே.கே.!
போலிச்சாமியார்கள் பட்டியல் வெளியீடு!
அலகாபாத்தில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வெளியிட்டுள்ள பட்டியலில் போலிச் சாமியர் குர்மீத்தின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டில் குர்மீத் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சாமியார்களின் பெயர்கள் இல்லை.
அகில பாரதிய அக்காரா பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், அசராம் பாபு, பாபா ஓம், சச்சிதானந்த கிரி, இச்சதாரி பீமானந்த், நிர்மல்ஜித் சிங், ராதே மா, சுவாமி அசீமானந்த், நாராயண் சாய், ஓம் நமக சிவாபாபா, ஆச்சர்யா குஷ்முனி, ராம்பால், பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோரும் போலிச்சாமியார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதனால் அவரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.