கியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ!

கியூபா நாட்டு மக்களால் விரும்பப்பட்ட சர்வாதிகாரி கஸ்ரோ!

நக்கீரன்

cuba_pidal_castroகியூபா நாட்டின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் அதனை ஆண்ட தோழர் ஃபிடெல் கஸ்ரோ  தனது 90 ஆவது அகவையில் மறைந்து விட்டார். அவரது மறைவையொட்டி கியூபா அரசு 9 நாட்கள் துக்கம் அனுட்டிக்க உத்தரவு பிறப்பித்தது.  இதை எழுதும் போது  கியூபாவின் தேசியக் கொடியால் போர்க்கப்பட்ட அவரது சாம்பல் நிரப்பப்பட்ட  பேழை கியூபாவின் தலைநகரான ஹவானாவில் தொடங்கி  கிழக்கே உள்ள சன்ரியாக்கோ டி கியூபா என்ற  நகரைச் சென்றடைந்துள்ளது.  அதன் 500 மைல் ஊர்வலத்தில் வழிநெடுக கண்களில் நீர் வழிய பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் கியூபாவின் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவண்ணம் வரிசையாக நின்று   தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள்.

நான்கு நாட்கள் நீடித்த  இந்த  ஊர்வலம் 1959 இல் சர்வாதிகாரி புல்ஜென்சியோ பற்திஸ்ரா இன் ஆட்சியைக் கவிழ்த்த  பின்னர்   ஃபிடெல் கஸ்ரோ தலைமையில்  ஹவானா நோக்கி  இலட்சக் கணக்கான மக்கள் ஊர்வலம் சென்ற அதே பாதையில் ஆனால் எதிர்த் திசையில்  சென்றது குறிப்பிடத்தக்கது.  கடந்த  ஞாயிற்றுக் கிழமை கஸ்ரோவின் சாம்பல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.  அவரது கல்லறையில் வெறுமனே கஸ்ரோ என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

தென் ஆபிரிக்க நாட்டின் சனாதிபதி  டிலாமினி சூமா, பிரேசில் முன்னாள் சனாதிபதி லூலா ட சில்வா, அமெரிக்க நாட்டுத் தூதுவர் ஜெப்ரி டிலோறன்ரிஸ் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள்  கஸ்ரோவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.

கனடிய பிரதமர் ரூடொ, அமெரிக்க சனாதிபதி ஒபாமா,  உருசிய சனாதிபதி புட்டின், இந்தியப் பிரதமர் மோடி  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.

கனடா நாட்டின் பிரதமர் யஸ்ரின் ரூடோ கியூபா செல்வதைத் தவிர்த்து விட்டார். ரூடோ நொவெம்பர் 26 அன்று அனுப்பிய தனது இரங்கல் செய்தியில்  ஃபிடெல் கஸ்ரோவை  வானளாவப் புகழந்து தள்ளினார். “திரு கஸ்ரோ ஒரு புகழ்பெற்ற புரட்சியாளன். சிறந்த சொற்பொழிவாளர்.  கியூபாவின்  வரலாற்றில் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில்  காத்திரமான முன்னேற்றங்களைச் செய்தவர்” என்றார்.  ஆனால் கஸ்ரோ ஒரு   சர்வாதிகாரி, கியூபாவை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கொடுங்கோலர் என வசைபாடும் இடதுசாரிகளுக்கு  பிரதமர் ரூடோ சூட்டிய புகழ்மாலை பிடிக்கவில்லை.

cuba-art (4)குறிப்பாக பழமைவாதக் கட்சித் தலைவி றோனா அம்புறோஸ் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.  எழுத்து வடிவில் விடுத்த அறிக்கையில் “கஸ்ரோவின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வறுமையில் உழல்கின்றார்கள்,  சிறையில் அடைக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். கஸ்ரோவின் மறைவுக்குப் பின்னரும்  கியூபா மக்கள் ஒரு அடக்குமுறை ஆட்சிக்குள்  தொடர்ந்து வாழ வேண்டியுள்ளது. அந்த மக்களுக்கு எனது அனுதாபங்களையும்  பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். புதிய சனநாயகக கட்சித் தலைவர் ரொம் மல்கெயர் ருவிட்டரில் கஸ்ரோவுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தார்.

பிரதமர் ரூடோ கஸ்ரோ பற்றித் தெரிவித்த கருத்துக்குப் பரவலாக எழுந்த எதிப்பலைகளை அடுத்து ரூடோ தனது கருத்தை மாற்றிக் கொண்டார். “ரூடோ ஒரு சர்வாதிகாரிதான், ஆனால் அதன் காரணமாக அவரது வாழ்நாள் சாதனைகளை ஒத்துக்கொள்வது பொருத்தமற்றது எனச் சொல்ல மாட்டேன். நிச்சயமாக அவர் துருவமுனைப்படுத்தும் மனிதர்தான். குறிப்பாக கியூபாவின் மனித உரிமை பற்றிப் பலரிடம்  காத்திரமான அக்கறை  இருக்கிறது” என்றார்.

பிரதமர் யஸ்ரின் ரூடோவின் தந்தையார் பிரே ரூடோ  2000 இல் இறந்த போது ஃபிடெல் கஸ்ரோ கனடாவுக்கு நேரில் வந்து அவருக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.  அது அப்போது இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இருந்த குடும்ப நட்புறவை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. கண்டனக் கணைகளைக் கண்டு பயந்து போன யஸ்ரின் ரூடோ கஸ்ரோவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.

cuba-art (2)மொத்தத்தில் ஃபிடெல் கஸ்ரோ  கியூபா நாட்டின் காந்த சக்தி படைத்த புரட்சித் தந்தையா? அல்லது கொடுமையான சர்வாதிகாரியா? என்ற பட்டிமன்றம் உலகளாவிய  அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கஸ்ட்ரோ காலமானதைத் தொடர்ந்து, கியூபா புலம்பெயர் மக்கள் செறிந்து வாழும் அமெரிக்க மாநிலமான ஃபுளோரிடாவில் உள்ள  மயாமி நகரின் தெருக்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

கஸ்ரோ ஒரு சர்வாதிகாரி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரே நேரத்தில் அவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளராக இருந்தார், அரச சபையின் தலைவராக இருந்தார், அமைச்சரவையின் தலைவராகவும்  இருந்தார்.  ஆனால் அவர் பெயர், புகழ், சொத்து, சுகம்,  ஆடம்பரம் விரும்பாத ஒரு சர்வாதிகாரி. கியூபா தெருக்களில் அவரது சிலைகளைப் பார்க்க முடியாது. அவரது கட் அவுட்டை பார்க்க முடியாது. பொது இடங்களில் அவரது படத்தைப் பார்க்க முடியாது. தான் மரணித்த பின்னர் தனக்கு சிலை எழுப்பவோ, தனது பெயரை சூட்டவோ கஸ்ரோ தடை விதித்திருந்தார். மக்களுக்கு அரசு மீது  கோபம் இருந்தாலும் கஸ்ரோ என்ற மனிதர் மீது மக்கள் அன்பு வைத்திருந்தார்கள்.

இந்த விவாதத்தில் அமெரிக்க நாட்டின் அடுத்த சனாதிபதியாக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப்   சேர்ந்து கொண்டார். “கஸ்ரோ ஒரு  மிருகத்தனமான சர்வாதிகாரி” (brutal dictator) எனக் காட்டமாகச் சாடினார்.  அவர் விடுத்த அறிக்கையில் “கஸ்ரோவின் ஆட்சியில் துப்பாக்கிச் சூடு, களவு, நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்கள், வறுமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டன. கியூபா தொடர்ந்து ஒரு சர்வர்வாதிகாரத்   தீவாக இருக்கிறது. எனது நம்பிக்கை என்னவென்றால் இன்று தொடக்கம் கியூபா மக்கள் நீண்ட காலம் அனுபவித்த திகில் வாழ்க்கையில் இருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது எனது விருப்பம்.   சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் முற்றிலும் தகுதி படைத்தவர்கள்” எனக் குறிப்பிட்டார்.

cuba-art (3)1961 ஆம் ஆண்டு கியூபா நாட்டோடு இருந்த இராஜதந்திர உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டது. சென்ற ஆண்டுதான் அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக  54 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்போரின் போது துண்டிக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அமெரிக்காவும் கியூபாவும் ஓர் உடன்பாட்டை எழுதிக் கொண்டன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுக்கு முதல் முறையாக அரசமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது சனாதிபதி பராக் ஒபாமாவும் கியூபா ஜனாதிபதி இராவுல் காஸ்ட்ரோவும் வாஷிங்டன் மற்றும் ஹவானாவில் மீண்டும் தூதரகங்களைத்  திறப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் கடிதங்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.

ஃபிடெல் கஸ்ரோ ஒரு சர்வாதிகாரி என்று சிலர் சொல்லும் போது, இல்லை  அவர் ஒரு ஈடுஇணையற்ற புரட்சித் தலைவர் என புகழாரம் சூட்டுவோரும் இருக்கிறார்கள். அப்படியென்றால் கஸ்ரோ பற்றிய உண்மையான கணிப்பு என்ன? அது இந்த இரண்டுக்கும் இடையில்  இருக்கிறது.

தொடக்கத்தில் கஸ்ரோ ஒரு கம்யூனிஸ்டாக இருக்கவில்லை. கார்ல் மார்க்ஸ், ஏன்ஜல்ஸ், ஸ்டாலின் போன்ற தலைவர்களது எழுத்துக்களால் கவரப்பட்ட கஸ்ரோ புரட்சி எற்பட்டு 2 ஆண்டுகள் கழித்து கியூபா ஒரு சோசலிஸ்ட் அரசு என்று பிரகடனப்படுத்தினார். மே 1,1961 இல் தொலைக்காட்சியில் பேசிய கஸ்ரோ தான் ஒரு “மார்க்சிஸ்ட் – லெனிஸ்ட்” என்று அறிவித்தார். இந்தப் பிரகடனம் அமெரிக்காவுக்கு எரிச்சலையூட்டியது. அமெரிக்கா – சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான பனிப்போர் மேலும் மோசமாகியது.

டிசெம்பர் 31, 1959 இல் இடம்பெற்ற புரட்சியைத் தொடர்ந்து கஸ்ரோ ஒரு பில்லியன் பெறுமதியான அமெரிகாவின் சொத்துக்களை இழப்பீடின்றி கைப்பற்றிக் கொண்டார். அப்போது டிறைற் ஐசன்கோவர்தான் அமெரிக்காவின் சனாதிபதியாக இருந்தார். கியூபா கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்திற்கு சிஐஏ உளவு நிறுவனத்துக்கு 13.1 மில்லியன் டொலர்களை கொடுத்திருந்தார். ஏப்ரில் 17, 1961 இரவு அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ கியூபா மீது படை எடுத்தது. Bay of Pigs Invasion என்று அழைக்கப்பட்ட இந்தப் படையெடுப்பில் கியூபாவை விட்டு ஓடி அமெரிக்காவில் வாழ்ந்த கியூபர்கள் பெருமளவில் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்தப் படையெடுப்பு பாரிய தோல்வியில் முடிந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள்  கொல்லப்பட்டார்கள்.  பெருந்தொகையினர் சிறை பிடிக்கப்பட்டார்கள்.

கஸ்ரோவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் 11 சனாதிபதிகள் வந்து போனார்கள். ஆனால் கஸ்ரோவை அவர்களில் எவராலும்  அசைக்க முடியவில்லை. பதவியில் இருந்து அகற்ற முடியவில்லை. கஸ்ரோவைக் கொல்ல சிஐஏ 664 முறை முயற்சி செய்தாகச் சொல்லப்படுகிறது.

கஸ்ரோ தனது ஆட்சிக் காலத்தில் கியூபாவில் புரட்சிகரமான பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.  இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாரம் ஒரு முறை கொடுக்கப்படுகிறது. இலங்கையில் ஐம்பதுகளில்  கூட்டுறவு  அடிப்படையில் சங்கக் கடைகள் குறைந்த விலையில் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொடுத்தது போல இங்கும் சங்கக் கடைகள் மூலம்  கொடுக்கப்படுகின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

மருத்துவச் சேவை வழங்கப்படும் வழிமுறைகளில் ஃபிடெல் காஸ்ட்ரோ பல புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவந்தார். கட்டாயக் கல்வியைக் கொண்டு வந்ததன்  காரணமாக இன்று கியூபாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களது  எண்ணிக்கை  99.8% ஆக அதிகரித்துள்ளது. ஒரே பார்வையில் கியூபா பற்றிய  முக்கிய புள்ளி விபரங்கள்,

பெயர்                          –      கியூபா குடியரசு
தலைநகர்                     –     ல ஹவானா
நாணயம்                –      இரண்டு விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒன்று கியூபா  செல்பவர்கள்   “பெசொவிற்கு மாற்றீடன நாணயம்”  என்றழைக்கபடும் நாணயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இது கியூபாவின் தேசிய நாணயமான 25 பெசோவிற்கு சமமானது (25 peso = 1 peso convertible). மற்றது சாதாரண பெசோ.  மாற்று கியூபன் பெசோ அமெரிக்க  டொலரின் பெறுமதிக்கு இணையானது.
பரப்பளவு                    –     110,860 சதுர கிமீ (42,803 சதுர மைல்)
கடற்கரை                    –     3,735  கிமீ (2,316 மைல்)
காலநிலை                   –     சராசரி  குறைந்தது 21°c (70°f),   கூடியது 27°c (81°f)
மக்கள் தொகை         –     11.2 மில்லியன். 193 நாடுகளில் 72 ஆவது இடம். தலைநகர் ஹவானா – 2,189,000 மக்கள்.

இனங்கள்                 –       முலரோஸ் (Mulatos) வெள்ளை – கருப்பு கலப்பினம்,  51%,  வெள்ளையர் (எசுப்பானிய பரம்பரை) 37 %, கருப்பர் 11 %, சீனர் 1 %.

அகவைக்                  –      ஆண்கள் 77,  பெண்கள் 81 அகவை. குழந்தைகள் இறப்பு % 4.63 (1950 – 80.69 %)
மொழி                     –       எசுப்பானி தேசிய மொழி
சமயம்                     –      பெயரளவில் கத்தோலிக்கர் 95 %. அதில் 10 விழுக்காட்டினரே தேவாலாயம் போகிறார்கள்.

வரலாறு                –  1492 இல்  இசுப்பானிய தேடலாய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பு  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான Taíno, Amerindians   பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் ரைனோ இனமக்கள் விவசாயத்தையும்  அமெரிஇந்திய இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர். 1898 எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902 இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது. பொலம்பஸ் கியூபாவை கண்டு பிடிப்பதற்கு முன்னர் சுமார் 50,000 பூர்வ குடிகள்  வாழ்ந்தார்கள்.   ஆங்கிலேயர்  பிடியில் இருந்த கியூபா இசுப்பானிய நாட்டின் பிடியில் இருந்த புளரிடா 1763   இல் எழுதப்பட்ட உடன்பாட்டின் கீழ் பண்டமாற்று செய்யப்பட்டது. பூர்வ குடிகள் ஐரோப்பியராலும் நோயினாலும் கொல்லப்பட்டு முற்றாக இறந்து பட்டனர்.

cuba-art (1)பாகாப்புப் படை         –     இராணுவம் 38,000, கடற்படை 8,000, விமானப்படை 125 சண்டை விமானங்கள்.
பொருளாதாரம்         –     80 % அரசு, 20 % தனியார். வளர்ச்சி % 6.1 (2016 மதிப்பீடு).  மொத்த உள்ளூர் உற்பத்திப் பொருள் டொலர் 37.1 (2015) பில்லியன்.  தனிமனித வருமானம்  5,539 டொலர்கள். ஆனால் ஒரு ஊழியர்  மாதத்தில் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம் மாதம் 20 டொலர்கள் மட்டுமே.    வார வேலை நேரம்  44  மணித்தியாலங்கள்.

விளைபொருட்கள்   –     தோடம்பழம் தொன் 490,000, எலுமிச்சை 26,000,   நாரந்தம்பழம் 225,000,  அரிசி 610,000, வாழைப்பழம் 790,000, உருளைக் கிழங்கு 300,000, வத்தாளங்கிழங்கு 490,000  கோப்பி 12,900 ஆகும்.  மாம்பழம், அன்னாசி, இஞ்சி, பப்பாசி போன்றவையும் ஏற்றுமதியாகின்றன.

சுற்றுலாத்துறை         –      சராசரி வருகை  3.5 மில்லியன் (2015). ஹோட்டல் அறைகள் 43,696. படுக்கை 84,200.  தங்குவோர் 62 %. வருவாய் டொலர் 2 பில்லியன். ஒரு நாளைக்கு தங்கச்  செலவாகும் தொகை 167 டொலர்கள்.

கல்வி             –     தொடக்கப்பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை கல்வி  இலவசம்.  பல்கலைக் கழகங்கள் 5. மொத்தச் செலவில் 18.7 % கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.  எழுதப் படிக்கத் தெரிந்தோர் 99.8 % ஆகும்.

காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் மருத்துவத் துறை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் சேகுவேரா. அவர் ஒரு மருத்துவர்.  மருத்துவத்தின் மனிதாபிமான இலக்கையும் ஒரு நியாயமான மனித சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தையும் இணைக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.   நோயைக் குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன.   மருத்துவச் செலவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 % ஒதுக்கப்பட்டது.

2005 இல் கியூபாவில் 70,594 மருத்துவர்கள் இருந்தார்கள். புரட்சிக்கு (1959) முன்னர் 6,000 மருத்துவர்களே இருந்தார்கள். அதில் பாதிப்பேர் புரட்சிக்குப் பின்னர் நாட்டை விட்டு  வெளியேறி விட்டார்கள். மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து ஆண்டுதோறும் மருத்துவர், தாதிகள் என 29,712 பேர் வெளியேறுகிறார்கள். இதில் 5,029 பேர் பிறநாட்டு மருத்துவ மாணவர்கள். கியூபாவில் ஒவ்வொரு 151 பேருக்கு ஒரு மருத்துவர் (அமெரிக்காவில் 396 பேருக்கு ஒருவர்) என்ற விழுக்காட்டில் இருக்கின்றனர்.

1961 – 2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 185,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியது.  இதில் பெரும்பான்மை ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க,  கரீபிய நாடுகளாகும். எடுத்துக்காட்டாக, வெனிசூலா மட்டும் 2004 முதல் 2010 வரை 14,000 கியூபா மருத்துவர்களையும் 20,000 மருத்துவப் பணியாளர்களையும் (Paramedical staff) பயன்படுத்திக் கொண்டுள்ளது. அண்மையில் மருத்துவர்களது மாதச் சம்பளம் 34 டொலர்களில் இருந்து 68 டொலர்களாக   உயர்த்தப்பட்டுள்ளது. சராசரி தொழிலாளியின் ஊதியம் 20 டொலர்கள் மட்டுமே. மருத்துவத்துறையில் உலகில் கியூபா முதல் இடத்தில் உள்ளது.

வெளிநாடுகளில்  மருத்துவர்களாகவும், தாதிகளாகவும்,  ஆசிரியர்களாகவும்   பணியாற்றுவோர் மூலம் ஆண்டொன்றுக்கு  5 பில்லியன் டொலர்  வருவாய் கிடைக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சுற்றுலாத்துறையே அதிக வருவாயை ஈட்டுகிறது.

கியாபாவின் 400 கிமீ தூரம் விரிந்து கிடக்கும் நீளமான வெண்மணல் பரப்பிய அழகான கடற்கரை, உல்லாசப் போக்கிடங்கள் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கின்றன. மேலும் கியூபாவில் 10 ஐநா கலாச்சார தளங்கள், 257 தேசிய சின்னங்கள், 7 தேசிய பூங்காக்கள், 332 அருங்காட்சியங்கள் கியூபாவின் கலாச்சார, வரலாற்று அடையாளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன.

கியூபாவில் ஆண்டில் 330 நாட்கள் சூரியனைப் பார்க்கலாம்.  மிதமான வெட்ப தப்ப கால நிலை,  மலைகள், ஆறுகள், கடல்  போன்றவை  சுற்றலா பயணிகளுக்கு  கியூபா பூலோக சொர்க்கமாக  காட்சியளிப்பதில் வியப்பில்லை.    ஒர் ஆண்டில் 3.1 மில்லியன் சுற்றலாவிகள் வருகிறார்கள். அதில் 40 % கனடியர்கள். ஆனால் இதில் மாற்றம் எற்படலாம். அமெரிக்க – கியூபா இரண்டுக்கும் இடையில்  அண்மையில் ஏற்பட்ட இராஜதந்திர உறவுகள் காரணமாக ஏராளமான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்  கியூபாவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை விரைவில் 1.5 மில்லியனைத் தொடக் கூடும் என்கிறார்கள்.  இப்படி வருபவர்களில்  கியூபாவில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அமெரிக்காவுக்கு ஓடித்தப்பி இப்போது மியாமியில் வாழும் 13  இலட்சம் அமெரிக்க – கியூபர்களும் அடங்குவர்.  சுற்றுலாத்துறை மூலம் ஆண்டொன்றுக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்  வருவாய் வருகிறது.

சோவியத் ஒன்றியத்தின்  மறைவுக்குப் பின்னர் உலகில்  5 பொதுவுடமை நாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. (1) சீனக் குடியரசு, (2) வட கொரிய சனநாயக மக்கள் குடியரசு, (3) வியட்நாம்  சோசலீச குடியரசு, (4) லாவோ மக்கள் சனநாயக குடியரசு மற்றும் (5) கியூபா குடியரசு. இவற்றில் சீனா நடைமுறையில் முதலாளித்துவ  பொருளாதார முறைமைக்கு முற்றாக மாறிவிட்டது. அரசியலில் ஒரு கட்சி ஆட்சியே அதனை பொதுவுடமை நாடாகக் கருதச் செய்கிறது. வியட்நாம், லாவோ இரண்டும் சீனா போன்றவையே. வட கொரியாவும் கியூபா இரண்டும் மட்டுமே  உண்மையான பொதுவுடமை நாடு என்ற வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.

cuba-art (5)நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுக்கும் மந்தமான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. எடுத்துக் காட்டு வட கொரியா, கியூபா, வியட்நாம் மற்றும் லாவோ.  பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.   இந்த நாடுகளில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது.

சென்ற மார்ச் மாதம் வோஷிங்டன் போஸ்ட் கியூபா பற்றி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்  முடிவுகளை வெளியிட்டது. அதன்படி 79 % கியூபா மக்கள் அரசின் பொருளாதார முறைமை பற்றித் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.  சொந்தமாகத் தொழில் தொடங்க  70% விருப்பம் தெரிவித்தனர். கியூபா மக்களில் 64% அமெரிக்க நாட்டோடு இயல்பான உறவுகளை வைத்துக் கொண்டால் கியூபாவிலும்  பொருளாதார முறைமை மாற்றம் அடையும் என நம்புகிறார்கள். ஆனால் அரசியல் முறைமை மாறக் கூடும் என நினைப்பவர்கள் 37% மட்டுமே. இந்தக் கணிப்பு சரியாக இருக்கும் என்றே நானும் கருதுகிறேன். மக்கள் கியூபாவின் ஆட்சியாளர்களை  உள்ளூர  வெறுக்கிறார்கள். வெளியே காட்டிக் கொள்ளப் பயப்படுகிறார்கள்.  ஆனால் கஸ்ரோ  விதி விலக்கு.  கஸ்ரோ நாட்டின் மூத்த தலைவர் என்பதால் அவர்  மீது அன்பு பாராட்டுகிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக நான் கியூபா நாட்டுக்கு பலமுறை சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் போய் வந்தேன். ஹோட்டல் சாப்பாடு, நீச்சல் தடாகங்கள், கடற்கரைகள் போன்றவற்றை மட்டும் பார்த்தால் கியூபா பூலோக சொர்க்கம் போல் காட்சியளிக்கும்.  ஆனால் உண்மைநிலை அதுவல்ல. புறநகர் மற்றும் கிராமத்து மக்களில் பெரும்பான்மையினர் வறுமையில் வாடுகின்றனர். பாவித்த உடைகள், பென்சில், கொப்பிகள் கொடுத்தால் அடிபிடிப் பட்டு வாங்குகிறார்கள்.

பலர் புறாக்கூடுகள்  போன்ற அடுக்குமாடு வீடுகளில் வாழ்கிறார்கள். அவற்றின் உப்பரிகையில் வெய்யிலுக்குக் காயப் போட்டுக் கிடக்கும் உடைகள் அவர்களது வறுமையை காட்டிக் கொடுத்துவிடுகிறது.  துப்பரவு வேலை  செய்கிறவர்களுக்கு ஒரு டொலரை விட  ஒரு சட்டை கொடுத்தால் பத்துமுறை  நன்றிகள் சொல்வார்கள்.

ஹோட்டல்களில் வேலை பார்க்கும் சமயற்காரர்கள், உணவு பரிமாறுபவர்கள், அறைகளில் துணி மாற்றுபவர்கள் போன்றோர் மட்டும் நிறையச் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆளுக்கு சராசரி 25 டொலர்கள் அன்பளிப்பாக கிடைத்துவிடும்.  ஒரு நேர உணவும் இலவசம். ஆனால் அவர்கள் இரவு ஹோட்டலில் தங்க முடியாது. இதன் காரணமாக மாதம் 35 டொலர் (அண்மையில் 68 டொலராக) சம்பாதிக்கும் மருத்துவர்கள், தாதிகள் சிலர் ஹோட்டலில்  வேலை செய்கிறார்களாம். பல்கலைக் கழக பேராசிரியர்கள் வாடகை வண்டி ஓட்டிப் பிழைக்கிறார்கள்.

பூனை என்ன நிறமாக இருந்தாலும் எலி பிடிக்க வேண்டும்.  இல்லையேல்  பூனையை வீட்டில் வைத்திருப்பதால்  பலனில்லை. சோசலீசமும் அப்படித்தான். மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை நிறைவு செய்வதில் தோல்வி கண்டுள்ளது. கியூபா அரசு செல்வத்தை பெருக்கி அதனைப் பங்கிடுவதற்குப் பதில் வறுமையைப் பங்கிடுகிறது.  இதனால் 1965 ஆண்டு தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் 1.3 மில்லியன் கியூபா நாட்டினர் 198 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள  அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார்கள்.

ஆயுதப் போராளியாக இருந்த காலத்தில், திருமண உறவுக்கு வெளியே ஃபிடலுக்கு பிறந்த மகள் அலினா பெர்னாண்டஸ்,  அமெரிக்காவிலிருந்து கொண்டு  தனது அப்பாவை சர்வாதிகாரி என்று சொல்ல மாட்டேன் அவர் ஒரு  கொடுங்கோலன் என விமர்சித்துள்ளார்.  அமெரிக்கா மீண்டும் கியூபா நாட்டோடு  இராஜதந்திர உறவுகளை வைக்கத் தொடங்கியதை அடுத்து 2015  இல் முதல் 10 மாதத்துக்குள் 46,635 கியூபர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். இந்த எண்ணிக்கை 2015 இல் 43,159 ஆக இருந்தது.

தந்தையும் தாயும் பாட்டனும் பாட்டியும் குலாவியிருந்த நாட்டில் இருந்து வேறு நாடுகளைத் தேடி  மக்கள் ஓடுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் சில அடிப்படை கோளாறுகள் இருபதுவே காரணமாகும். சிறிலங்கா அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இராவுல் கஸ்ரோ பதவிக்கு வந்த காலம் (2008) தொட்டு சில பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  சுய தொழில் ஊக்குவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான உறவுகளை கியூபா வலுப்படுத்தியதை தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் அங்கு அதிகரித்துள்ளன. முடி அலங்காரம், சிறு உணவகம், வீடு,  கார் வாங்கி விற்றல்  ஆகியவற்றை அரசாங்கம்  அனுமதித்துள்ளது. கியூபா, தனது பொருளாதார முறைமையில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும் என்று சீனா ஆலோசனை கூறியுள்ளது!

1976  இல் சீனாவின் தலைவர் மாசே துங் இறந்த பின்னர் சீனாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றம் பெற்றது போல  ஃபிடெல் கஸ்ரோவின் மறைவுக்குப் பின்னர் கியூபா நாட்டிலும்  அத்தகைய மாற்றங்கள் துரிதகெதியில் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

http://ekuruvi.com/cuba-nakkeran-2016-dec/


 

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply