தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?
கடந்த 28 வருடங்களுக்கு மேலாக, வலி. வடக்கில் இராணுவத்தினர் வசப்படுத்தியிருந்த பொதுமக்களின் 683ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வாரம் பொதுமக்களிடமே மீளவும் கையளிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் உரையாற்றும்போது ஒரு விடயத்தை அழுத்திக் கூறியிருந்தார்.
‘‘காணிகள் விடுவிக்கப்படுவது அல்ல முக்கிய விடயம். விடுவிக்கப்பட்ட காணிகளில் காணியின் சொந்தக்காரர்கள் உடனடியாகக் குடியேறினால்தான் ஏனைய காணிகளையும் விடுவிக்க வாய்ப்பாக அமையும்’’. இது அவர் மக்களை வினயமாகக் கேட்டுக்கொண்டதாகக் கருதிக்கொள்ளவேண்டும். அத்துடன் இந்த விடயத்தில் நாம் மிகவும் மேம்பட வேண்டியுமிருக்கிறது…! இந்த நிலை தமிழர்களை எங்கு கொண்டுபோய் விடும்…?
ஈழப்போராட்டம் காரணமாக நிலங்களைப் பறிகொடுத்த நாம் அவற்றை மீட்டெடுப்பதற்கான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறோம். இன்னும் நீள்கின்ற போராட்டங்களும் இருக்கின்றன. எமக்குரிய காணிகளை, பரம்பரை முதுசங்களை உரிமைப்படுத்திக் கொள்ளும் எமது போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
அதேநேரம் எமது நிலம் சார்ந்த இறுக்கமும் பிணைப்பும்கூட அத்தியவசியமானதே. வலி. வடக்கில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழைப் பகுதிகளில் இன்றுவரைகூட பலர் குடியேறாத நிலை காணப்படுகிறது. சில இடங்களில் பற்றை மண்டிக் கிடப்பதையும் கவனிக்கலாம். இப்படியாக எமது காணியில் குடியேறப் பின்நிற்கும் எம்மால் புதிதாக ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்த முடியும்?
தற்போது முல்லைத்தீவு மாவட்டம் சிங்களக் குடியேற்றங்களால் பறிபோய்க்கொண்டிருக்கிறது. வடமாகாண சபையினர் கிளர்ந்தெழுந்து முல்லைத்தீவுக்கு எந்த வாகனத்தில் எப்படிச் செல்வது? எவ்வளவு நேரம் அங்கு நின்று பார்வையிடுவது? எனப் பல மணிநேரம் ஆராய்வார்கள்! அந்த இடத்துக்கு ஒரு தடவைபோய் எட்டிப்பார்த்துவிட்டு விரைவில் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் வேலையாக இருக்கிறது!
மாறாகத் தமிழர்களுக்குரிய நிலங்களில் அவர்கள், வாழ்வதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி, அதில் அவர்களைக் குடியமர்த்து வது பற்றிச் சிந்திப்பதான அறிகுறிகள் தென்படவில்லை. அப்படியான செயற்பாடுகள் நிகழ்வது உண்மையானால், சிங்களவர்கள் குடியேறு வதற்கு நிலமில்லாது இருக்குமே தவிர, அத்துமீறுகின்ற பிரச்சினைகள் எழா.
வசதிவாய்ப்புக்களுடன் குடியேறும்
பெரும்பான்மையினர்
2008ஆம் ஆண்டு நடுப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் ‘‘புலிகளின் பலம் காடும், கடலும் தான். அவை இரண்டும் படிப்படியாக பறிபோய்க்கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் முழுமையாக இலங்கை இராணுவத்தினதும், கடற்படையினதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால், போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்றார்.
அவர் குறிப்பிட்ட அதேவிடயம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்குள் நடந்து முடிந்தது. ஆழ ஊடுருவும் படைப்பிரிவினர் புலிகள் ஒளித்திருக்கக்கூடிய காடுகளுக்குள் நிலை எடுத்திருந்தார்கள். கடற்படையினர் வன்னியிலிருந்து வெளியேறுபவர்களைத் தடுப்பதிலும் பன்னாட்டுக் கடல் எல்லைக்குள் இருந்து வன்னியை நோக்கி வருகின்ற கப்பல்களைத் தடுப்பதிலும் பல வரிசை கடற் கண்காணிப்புக்களை ஏற்படுத்தி, அவற்றைக் கட்டுப்படுத்தினர்.
இந்தப் பின்னணி யுடன் பார்த்தால் மட்டுமே முல்லைத்தீவில் தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியும். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் இதற்கான முனைப்புக்களில் இலங்கையின் அரச பொறிமுறையை வழிநடத்தும் குழு மற்றும் இராணுவம், கடற்படை என்பன தீவிரமாக இறங்கிவிட்டன. சமநேரத்தில் எமது அரசியல் தலைவர்களுக்கு அந்த விடயம் புரிந்திருக்கவில்லை.
நெடுங்கேணி ஒதியமலைக்கு அப்பால் கைவிடப்பட்டிருந்த கென்பாம், டொலர்பாம் பகுதிகள் இதன் முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த வரிசையில் வரும் பட்டிக்குடியிருப்புக்கு அடுத்ததாக சம்பத்நுவர பிரதேச செயலகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இங்கு பாடசாலைகள், வைத்தியசாலை, தபாற் கந்தோர் போன்ற முக்கிய தேவைகள் நிறைவுசெய்யப்பட்டன.
இந்தப் பிரதேச செயலகத்தில் 7சிங்கள கிராமசேவை யாளர்கள் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. முல்லைத்தீவிலி ருந்து சம்பத்நுவர பிரதேசம் அண்ணளவாக 50 கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கிறது.
ஆனால், நெடுங்கேணி நகருக்கு 26கிலோமீற்றர்களே. எனவே சம்பத்நுவர – நெடுங்கேணி வீதி காப்பெட் போடப்பட்டு சம்பத்நுவர பகுதியிலிருந்து சிங்கள மக்கள் தமக்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு நெடுங்கேணி நோக்கிச் செல்கின்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இது வழமையாக்கப்பட்டுப் பல வருடங்கள் கழிந்துவிட்டன. நெடுங்கேணியிலிருந்து சம்பத்நுவர வரை பார்த்தால் நெடுங்கேணி, 2ஆம் கட்டை, பெரியபுரம், ஒதியமலை, தனிக்கல்லு, கல்யாணபுர, சம்பத்நுவர என விரிந்து செல்லும். இதில் சிங்களக் கிராமங்களுக்கு எல்லைப்பகுதியில் அமைந்திருந்த தமிழ்க் கிராமம் தனிக்கல்லு என்பதாகும். இந்தக் கிராமத்தில் காரைநகரைச் சேர்ந்த 5 குடும்பங்கள் குடியேறி இருந்தன. தற்போது அந்தக் குடும்பங்கள் அங்கில்லை.
இராணுவத்தினர் வசமாகிவிட்ட
கவனிக்கப்படாத பகுதி!
சம்பத்நுவர பகுதிக்கு மகாவலி நீரைக்கொண்டுவருகிற திட்டமும் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் முஸ்லிம்களோ, தமிழர்களோ குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது தெளிவாகிறது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது புலிகள் நிலைகொண்டிருந்த மணலாறு, அளம்பில், நித்திகைக்குளம் காட்டுப்பகுதிகள் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகளாகும்.
இந்தப் பகுதியில் உள்ள ‘உடங்கா’ எனும் காட்டுப்பகுதி அதிலும் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இந்தக் காட்டுக்குள் சூரிய ஒளிபடாத அளவுக்கு இறுக்கமானதும், உயரமானதுமான மரங்கள் இருந்தன. ஒட்டுசுட்டானை அண்மித்த காடுகளில் கூட 100அடிக்கு மேற்பட்ட உயரமான வீர மரங்கள் காணப்பட்டன. இந்த இயற்கைக் காடுகளில் களவாக மரம் தறிப்பவர்களுக்குப் புலிகள் கடும் தண்டனை வழங்கினர்.
களவாக மரம் வெட்டி ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கொழுத்தும் உத்தரவைக்கூடப் பிரபாகரன் பிறப்பித்திருந்ததை அறியமுடிகிறது. மணலாற்றை அண்மித்த காட்டுப் பகுதியுடன் கிழக்கு மாகாணக் காடுகள் தொடர்புற்று இருந்தன. இவ்விரு காடுகளுக்கும் இடையிலான பாதையை ‘‘பேய்றூட்’’ (பேய்ப்பாதை) எனப் புலிகள் அழைத்தனர்.
விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் வன்னிக் காடுகள் பற்றிய முழுமையான அனுபவம் மாத்தையா, தளபதி பால்ராஜ் ஆகியோருக்கு இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் வன்னிக் காடுகள் தொடக்கம் கதிர்காமம் காடுகள் வரை முழுமையாகத் தெரிந்த ஒரேயொரு தளபதியாக ராம் மட்டுமே இருந்தார் என்பது பலருக்குத் தெரியாது. 1990 ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறி வந்தபோது, அந்த மக்களை ‘பேய்றூட்’ ஊடாக முல்லைத்தீவு வரை அழைத்து வந்தது பலருக்கும் தெரிந்த செய்தி.
அதேவேளை, புலிகள் வசமிருந்த ‘உடங்கா’ பகுதியையும் நித்தைகைக்குளம் காட்டுப் பகுதியையும் இணைக்கும் பகுதி ‘சிங்கப்பூர் வெட்டை’ என அழைக்கப்பட்டது. ‘உடங்க’ காட்டுப்பகுதி முதலிப்பழம் (முரளிப்பழம்)பெயர் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அளம்பில் கடற்கரையூடாகத் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்ளக்கூடிய கடற்தொடர்புண்டு. இத்தகைய பெரும் காட்டுப்பகுதி தற்போது இராணுவத்தால் இரகசியமாக அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் மகாவலி நீரின் உதவியுடன் பொரிய பண்ணையொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த இடங்களுக்கு வடமாகாண சபையினரோ தமிழ் அரசியல் வாதிகளோ செல்லமுடியாது.
இது முற்றுமுழுதாக இராணுவ நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓர் எச்சரிக்கை ஏற்பாடாகும். இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் புலிகள் போன்றதொரு போராட்ட அமைப்பு காட்டுக்குள் பின்தள மொன்றை வைத்திருக்காதவாறு தடுப்பதே இதன் நோக்கமாகும். அத்துடன் நிலமும் இராணுவ உடமையாகிவிடும்.
தமிழர்களின் புறக்கணிப்பு நிலை
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கடற்கரை ஓரங்களான அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், புல்மோட்டை, திரியாய், புடவைக்கட்டு, குச்சவெளி, கும்புறுப்பிட்டி, இறக்கக் கண்டி, நிலா வெளி, உப்புவெளி ஆகிய கரையோரப் பகுதிகளை கடற்படையின் கண்காணிப்பில் வைத்திருக்க முனைவதைப் போருக்குப் பின்பான காலங்களில் அவதானிக்கலாம்.
இதன் ஒரு கட்டமாகவே கொக்கிளாய்ப் பகுதியில் 300 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் காடும் கடலும் இலங்கை அரசின் கண்காணிப்புக்குள் உட்பட்டு விட்டது என்றே கொள்ளமுடியும்.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கை எடுத்துக்கொண்டால், 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து வடக்கில் காங்கேசன்துறையிலிருந்தும் மேற்காக இரணைதீவிலிருந்தும் தென்கிழக்கில் கஞ்சிகுடிச்சாறு பகுதியிலிருந்தும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஒதுங்கிக்கொண்டே வந்தனர். அவ்விடங்களில் இராணுவம் நிலைகொண்டது. அதன் இறுதிப் புள்ளியாக அல்லது இறுதித் தமிழ்க் கிராமமாக முள்ளிவாய்க்கால் 2009 மே 19இல் இலங்கை இராணுவத்தின் வசமானது.
போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தான் வனவளத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் போன்றன தமது 30வருட கால நித்திரையைக் கலைத்துத் துரித பணியில் இறங்கின.
நிலமை இப்படியிருக்க, தமது இனப்பெருக்கத்தை மிக மோசமாகக் குறுக்கிக் கொண்டுள்ள உள்நாட்டுத் தமிழர்கள், நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் தமிழர்கள் ஆகிய இரண்டு தரப்பினராலும் புதிதாக ஒரு குடியி ருப்பை உருவாக்கும் நிலை ஏற்படப்போவதில்லை.
தவிர, தமது நிலங்களில் இருப்பது கூடக் கேள்விக்குள்ளாகின்றது. இந்தவிடத்தில்தான் யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மேற் கூறிய கூற்றைச் செயலூக்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
குறைந்த பட்சம் தமக்கெனப் பதிவிலுள்ள நிலத்திலாவது தமிழர்கள் குடியமர வேண்டும். வெளிநாடுகளில் இருந்து நிலங்களை ஆட்சிசெய்வதற்கும், பரம்பரை நிலங்களைத் தரிசாகத் திறந்து கவனிப்பாரற்றுக் கிடக்கச் செய்வதற்கும் முற்றுப்புள்ளி தேவை.
இத்தகைய நிலங்கள் எதிர்காலத்தில் தமிழரின் கைகளில் இருப்பது சந்தேகமே. மக்களும் மக்கள் பிரதிநிதி களும் தமது நிலத்தில் நிலைகொள்வதைப் பற்றியும் நிலை கொள்வதற்கு ஏற்ப வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதை, பெற்றுக்கொடுப்பதைப் பற்றியும் இனியும் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. செயற்படுத்துவதற்கு விரைதல் வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.