தமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு!

தமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு!

ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கில்லையடி கண்ணே! – பிறேமச்சந்திரன்

நக்கீரன்

முதலில்  கடந்த 2018 மார்ச் 10 இல் நடந்த வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருந்தது  என்பதைப் பார்ப்போம். தமிழரசுக் கட்சி ஆகக் கூடுதலாக 8 இடங்களில்  வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக இருந்தது.

                                         வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகள்

கட்சி வாக்குகள் %  உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி 5,259 39.07 8
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2,103 15.62 3
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,887 14.02 3
ஐக்கிய தேசியக் கட்சி 1,869 13.88 3
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 844 6.27 1
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 445 3.31 1
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 0 0 0
மக்கள் விடுதலை முன்னணி 0 0 0
அகில் இலங்கை தமிழ் மகா சபா 0 0 0
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 0 0 0

கண்ணே கண்ணே என்று மூன்று இடங்களை மட்டும் பிடித்த தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்துள்ளது. எப்படி?

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது பல உள்ளாட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்பட்டது. அதன் காரணமாக ததேகூ இன் பேச்சாளர்  சுமந்திரன், நா.உ “உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள தொங்குநிலையை சீர்செய்ய யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு தமிழ்க் கட்சிகளும் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.டி.பி.) ஒத்துழைப்புகளை வழங்குவதாகக் கூறியுள்ளன. அந்தக் கட்சிகள் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதன்படி நாமும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவை வழங்குவோம்.

யாழ்ப்பாண மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பெற்றுள்ளனர். அதன்படி நாம் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தெரிவுசெய்துள்ளோம். இந்த முடிவை நாம் தனித்து எடுக்கவில்லை” என்றார். இது ஒரு நீதியான, நியாயமான, பொருத்தமான முடிவு என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இதே கருத்தை ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்தா அவர்களும் வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ள சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகரசபை இரண்டிலும் அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ததேகூ ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதன் பொருள் சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அதிக இருக்கைகளைப் பெற்ற தமிழ்த் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க ததேகூ ஆதரவு நல்கும் என்பதாகும்.

ஆனால் கஜேந்திரகுமார் வழக்கம் போல தமிழ்த் தேசிய முன்னணி பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகளில் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபைகளிலும் போட்டியிடும் என வீராப்போடு அறிவித்தார். அதன்பின் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

சில சபைகளுக்கு நடந்த தேர்தலில் ததேகூ ஆதரித்து ஐதேக, இபிடிபி வாக்களித்தன என்பது சரியே. இதை வைத்துக் கொண்டு  ததேகூ தென்னிலங்கை இனவாதக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு சில சபைகளைப் பிடித்துள்ளது. இது வெட்கக் கேடானது என்று கொள்கைக் கோமான், பத்தரைமாற்றுத் தேசியவாதி, சத்தியவான், உத்தமர் பிறேமச்சந்திரன் திருவாய் மலர்ந்தார்!

ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குதாம் ஈரும் பேனும் என்ற பழமொழிக்கு ஒப்ப வவுனியா நகரசபைத் தலைவர் தேர்தலில் மூன்று  இருக்கைகளை வைத்துக் கொண்டு  பிறேமச்சந்திரனது  கட்சி வேட்பாளர் வென்றிருக்கிறார்! அதுவும் எந்தக் கட்சிகளை தென்னிலங்கை இனவாதக் கட்சி என்று அர்ச்சனை செய்தாரோ அதே கட்சிகளின் ஆதரவோடு தமிழர் தேசிய விடுதலை முன்னணி தலைவர் பதவியைப் பிடித்துள்ளது.

இது ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கில்லையடி கண்ணே! என்று  போதகர் சொன்ன கதையை நினைவு படுத்துகிறது!

இதில் இன்னொரு வேடிக்கை என்வென்றால்  சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசன பெரமுனக் கட்சி உறுப்பினரும்  ததேவிமு இன் வேட்பாளருக்கு  ஆதரவாக வாக்களித்துள்ளார்.  இந்தக் கட்சியின் தலைவர் மகிந்த இராசபக்சா. இந்த வெட்கக் கேடான வெற்றியையிட்டு பிறேமச்சந்திரன் வெட்கமோ துக்கமோ அடையவில்லை.

ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் இந்த காட்சியைப் நேரில் பார்த்துவிட்டு”நடந்தேறிய சதியை நேரே பார்த்தேன்” என்று சொன்னார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சனநாயக தமிழ் அரசுக் கட்சி,  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து- தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி (ததேவிகூ) என்ற அமைப்பை உருவாக்கி – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளால் அதிருப்தியடைந்து, அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகள் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று தம்மைப் பிரகடனம் செய்திருந்தன.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும் ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்ஆர்எவ் ஆட்சியைப் பிடித்ததால் வெறுப்படைந்து போன  சனநாயக தமிழ் அரசுக் கட்சி ததேவிகூ இல் இருந்து வெளியேறியுள்ளது. இந்த வெட்கக் கேட்டை  அதன் பொதுச் செயலாளர்  வி.எஸ். சிவகரன்  ததேமமு யைத்  தாக்கு தாக்கென்று தாக்கி ‘தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம்’ என ஒரு காட்டமான அறிக்கையை கடந்த செவ்வாய்க் கிழமை (17-04-2018)  அன்று வெளியிட்டுள்ளார்,

“கொள்கை கொள்ளையடிக்கப்பட்டதால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம்” என  சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பா அவர் கடந்த  செவ்வாய்க்கிழமை(17) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை சனநாயகத் தன்மை இல்லை சர்வாதிகாரம் காணப்படுகின்றது,  எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் நடாத்துகிறார்கள்,  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என  அடுக்கடுக்கான பல்வேறு விதமான குற்றச்சாட்டுடன் ததேகூ இல் இருந்து வெளியேறி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக வவுனியாவில் ஈபிஆர்எல்எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம்.

கொள்கையில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? பதவி பெறுவது தான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கை கோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.  தமிழ்த் தேசியத்திற்கு மாறானவர்களுடன் இணைந்து பதவி இலாபம் தேடியதால் இந்தக் கொள்ளையற்ற கூட்டில் தொடர முடியாது என நாம் தீர்மானித்து அக் கூட்டணியில் இருந்து இன்று முதல் உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றோம்.”  (http://globaltamilnews.net/2018/75407/)

முட்டாள்   நெருப்புச் சுடும் என்ற உண்மையை கையை வைத்துப் பார்த்துத்தான் உணர்ந்து கொள்கிறான். புத்திசாலி மற்றவர்களது பட்டறிவை வைத்து நெருப்புச் சுடும் என அறிந்து கொள்கிறான். சிவகரனைப் பொறுத்தளவில் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பொன்மொழியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர்  இந்த அணியில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி வெளியேறி இருந்தது. அந்தக் கட்சி விட்ட அறிக்கையில் ஈபிஆர்எல்எவ் தன்னிச்சையாக முடிவெடுத்து மேலதிக ஆசனங்களை தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் பங்கீடு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றமை எங்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது என . தமக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றும் ஈபிஆர்எல்எவ் சர்வாதிகாரத்தனத்துடன் நடப்பதாகவும் தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்களை பிறேமச்சந்திரன் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதாகவும்  அதனை ஆனந்தசங்கரி கண்டு கொள்ளவில்லை என்றும் அந்தக் கட்சி சரமாரியாகக் குற்றம்சாட்டியிருந்தது.

“தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒற்றுமையை வலுப்படுத்தி ஆறு கட்சிகள் இணைந்து தேர்தலைச்  சந்தித்தோம். இதற்கு அமைய கூட்டுக்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தோம். ஆனாலும் தேர்தல் நிறைவடைந்த மறுநாளே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஈபிஆர்எல்எவ் கட்சி மீறியதன் தொடராக, ஈபிஆர்எல்எவ் கட்சி தற்போது வரையில் தவறான முடிவுகளை சர்வாதிகாரப் போக்கில் முன்னெடுத்து வருகிறது.

கூடுதல் வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் மேலதிக ஆசனங்களை புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினராகிய நாங்களே பெறுவதற்கான தகுதியினைப் பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தன்னிச்சையாக முடிவெடுத்து மேலதிக ஆசனங்களை தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் பங்கீடு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றமை எங்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

இதனைக் கண்டும் காணாமல் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கையும் எங்களை விசனம் அடைய வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.” .(http://seithy.com/breifNews.php?newsID=201461&category=TamilNews&language=tamil)

திருவாளர் வீ. ஆனந்தசங்கரிதான் பாவம். அவரே பிறேமச்சந்திரன் தன்னைக் “காய்வெட்டி” ஓடுவதாக அழுது புலம்புகிறார். ஆனந்தசங்கரி தன்னை ஒரு பழுத்த அரசியல்வாதி, அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்டவன்,  சம்பந்தன் இருக்கிற கதிரை தன்னுடைய கதிரை என்று  சொல்கிறவர் கேவலம் மண்டையன் குழுவின் தலைவர் பிறேமச்சந்திரன் தன்னை ஏமாற்றிப் போட்டார் எனச் சொல்வதைக் கேட்க பரிதாபமாக இருக்கிறது.

மிக விரைவில் இந்தத்  தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் சந்தர்ப்பவாத, ஒழுக்கமற்ற, படு கேவலமான அரசியலை நடத்தும் இந்தக் கட்சியின் ஆயுள் மிக விரைவில் முடிவுக்கு வந்து விடும் என நம்பலாம்.

தமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு!


 

 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply