சோதிடம் என்பதும் அறிவியலா?

சோதிடம் என்பது அறிவியலா?

நாம் எல்லோரும் தினமும் வானைப் பார்க்கின்றோம். வானைப் பார்க்காத மனிதர்கள் உண்டா? இரவு பகல் எந்த நேரத்திலும் வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வால்மீன்கள், மேகங்கள் என பார்க்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல் தான் சோதிடமும். அதன் தோற்றமும், உண்மை பொய் பற்றியும் தெரியாது. எந்த விஷயமாக இருந்தாலும் பத்துபேர் சேர்ந்து சொல்லி விட்டாலோ, எழுத்துக்களில் வந்துவிட்டாலோ நம்மில் பெரும்பாலோர் 100 சதவீதம் உண்மையென்றே நம்பி விடுகின்றனர். வானியலையும். சோதிடத்தையும் பாலையும், காப்பியையும் ஒன்றாகக் கலப்பது போல் கலந்து குழப்பி விடுகின்றனர். தன் கைக்கு எட்டாத கண்ணில் படுகின்ற, தொலைவில் உள்ள பொருட்களின் மேல் செலுத்தும் கற்பனையும் விருப்பக்கருத்தும் அரைகுறையாளர்களின் புருடாவும் தான் சோதிடம்.

வானியல் என்றால் என்ன?

வானவியல் என்பது வானில் காணப்படும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் தவிர வானில் காணப்படும் கணக்கு தெரியாத ஆழ்வானின் பொருட்களைத்தான் நாம் அறிவோம். நம் குழந்தைகட்கு பூமி பற்றி சொல்லும்போது கண்டம், கடல், நிலம், தாவரம், விலங்கு, பாறை போன்ற விசயங்களையும் சேர்த்துத்தானே சொல்லுகின்றோம். அதுபோல்தான் வானியலும், வான் பொருட்களும். பூமிக்கு வெளியே வளிமண்டலம் தாண்டி என்ன இருக்கிறது? காற்றில்லாத வெற்றிடம், அது தாண்டி கோள்கள், விண்மீன், அதனைச்சார்ந்த கோள்கள் எல்லாம் உள்ளன. அதுமட்டுமா, புவியின் துருவங்களில் உண்டாகும் துருவ ஒளி, வெகு தொலைவில் பிரபஞ்ச கதிர்வீச்சு என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. இவை இயற்பியல், வேதியியல், கணிதம் தொடர்பானவைதான்.

பழங்கால வான்நோக்கு இடங்கள்

 நாம் வானை நோக்குவது என்பது காலம்காலமாய் கடைப்பிடித்துவரும் பொழுது போக்குகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் தான் பார்த்துத் தெரிந்த தகவல்களை குகைகளிலும், களிமண் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் மிகப்பாதுகாப்பாக பதிவு செய்துள்ளான். முற்காலத்தில் சாதாரணமாய் கண்ணுக்குப் புலப்படும் வான்பொருட்களின் நகர்வு கண்டு காலம், நேரம் கணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் முன்பு வளைய வடிவில் அமைக்கப்பட்ட நீண்ட நெடும் கற்பாறைகள் வான்நோக்கு கற்கள் என அழைக்கப்பட்டன. இதன் இடைவெளி வழியே சூரியனைப் பார்த்து நேரம் காலம் அறியப்பட்டது.

சோதிடத்தின் பிறப்பு

நவீன வானவியல் என்பது சோதிடத்துடன் ஒன்றாக சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டு குழம்புவதோ குழப்புவதோ இல்லை. சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். இதன்பொருள் விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே. (Astro-Star : Logy – belief / study). சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. உலகில் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வான்பொருட்கள் நகர்வதே காரணம் என கற்பனை செய்துகொண்டான். வானவியல், சோதிடம் இரண்டும் வேறு வேறு துறைகள் தான். ஆனால் இரண்டும் வான் பொருட்களை ஆதாரமாகக்கொண்டே உருவானவை. இரண்டிற்கும் பொதுவான துவக்க அம்சங்கள் உண்டு. சோதிடம் சூரியன், சூரியனைச்சுற்றும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சூரியக்குடும்பத்தின் பிற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடுவதே இல்லை. அதுமட்டுமல்ல, சோதிடக்கட்டத்தில் நம் குடும்பத்தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கும் கோளின் பதவி தரப்படுகிறது. பாம்பு என்ற ஒன்றைப் புகுத்தி அதன் தலையை வெட்டி தனியாக்கி தலைக்கும், பாம்புக்கும் தனித்தனியாக ராகு, கேது என்று பட்டமும் கொடுக்கின்றனர். ராகு, கேது என்ற கோள்கள் வானவியலில் கிடையாது. இவை சோதிடரின் கற்பனையே

பழங்கால வானவியல்

 சோதிடமும், வானவியலும் பழங்கால நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன. நாகரிகம் வளர வளர பாபிலோனியா, பெர்சியா, எகிப்து பழங்கால கிரிஸ், இந்தியா, சீனா போன்ற நாகரிகங்களில் வான்நோக்கு கூடங்கள் கட்டப்பட்டன. எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமீடுகளின் வழியே வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சிரியஸ் விண்மீன்களைப் பார்க்கலாம். அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர். பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. கோள்களின் நகர்வு சூரியன், சந்திரன், பூமியின் தன்மை பற்றி அறியப்பட்டது. நாம் ஊர் ஊராக அழைந்து கொண்டு இருப்பவரை பரதேசி என்று குறிப்பிடுவோமே அதேபோல நிற்காமல் அலைந்து கொண்டிருக்கும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை கோள்கள் என்றே அழைத்தனர்.

ஒண்டவந்த பிடாரி

 அண்டம் போகட்டும். ஜோதிடம் எப்படி, காலம் காலமாக தனக்கு தெரிந்த விஷ‌யங்களை மனிதன் வானில் பார்க்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன. அக்காலகட்டத்தில் வாழ்ந்த அறிவு ஜீவிகள் இரண்டையும் தொடர்புபடுத்தி சாதாரண பாமர மக்களிடம் தெரிவிக்கின்றனர். மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் நிகழ்வுகளும், நகர்வுகளும் காரணம் என்பது சுவையாகமிருந்தது. ஆனால் வெளிச்சப்பொருட்களான சூரியன் சந்திரனுக்கான காரணங்கள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நம் ஊருக்கு யாராவது தெரியாதவர் வந்து நடமாடினால் அவரைப்பற்றி நமக்குத்தோன்றியதெல்லாம்.. சும்மா எடுத்துவிடுவதில்லையா, அதுபோல் தான் இதுவும். எனவே வானில் சூரியன், சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்க தொடங்கினர். பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் பின்னணி. சோதிடம் முக்கியமாக மன்னர்களின் வாழ்நாள், வழித்தோன்றல்களுக்கு காரண காரியம் மற்றும் குறிசொல்லத்தொடங்கி பாமர மக்களிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இவ்வாறு தான் இன்று அதுபோக வீடுகட்டுதல். சமையலறை, கழிப்பறை, நடந்துபோதல் போன்றவைகளுக்கும் கூட வாஸ்து, தாஸ்து என பார்க்க ஆரம்பித்துவிட்டனர். முயற்சியை ஒதுக்கும் போலிமையின் நிகழ்வுகள் இவை.

கதை சொல்லவா..

 சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிக குறைவாக உள்ளதால் இதனை போலி அறிவியல் என்றே அழைக்கிறோம். இந்த நம்பிக்கை பழங்கால நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்தது. நம் பிரச்சனைக்கு யாராவது வழி காட்டமாட்டார்களா, உதவிக்கரம் நீட்டமாட்டார்களா என்ற பரிதவிப்பிலும் நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை, யாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கை குறைவாலும், செழிப்புடன் வளர்ந்தது சோதிடம். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் இந்த இடத்தில் இருந்தபோது இந்த நிகழ்வு நடந்ததது என்ற தற்செயல் நிகழ்வாலும் உருவானதுதான் சோதிடம் ஆனதால் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாம் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்தனர். பலவகை நாகரிகங்களிலும் அவர்களின் கணிப்புப்படியே சோதிடம் உருவாக்கப்பட்டிருந்ததது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் அவற்றில் கணிப்பு ஒன்றையொன்று சார்ந்ததில்லை; தனித்தனியே உருவானவையே. வான்பொருட்கள் பற்றிய கணிப்பு மட்டும் எல்லா நாகரிகங்களிலும், எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. சீன சோதிட உருவாக்கமும் அதன் பரிணாமமும் வேறு விதமானவை.

இந்திய சோதிடம்

 இந்தியாவில் வானில் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும் பிரித்துள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டுள்ளது. தமிழ் சோதிடத்தில் உள்ள ஒரு விண்மீன் என்பது வானில் பல விண்மீன் தொகுதிகளைக்கூட குறிக்கிறது. (உதாரணம் உத்திராடம்) வானில் தெரியும் விண்மீன்களை கிழக்கில் இருந்து மேற்காகவே நாம் ராசிமண்டலத்தில் சேர்க்கிறோம். இது ராசி மண்டல வளையம் எனப்படுகிறது. இவை தெரிவதை சூரிய விதி என்றும் சொல்கிறோம். இது நிலநடுக்கோட்டிலிருந்து 23 ½ பாகை சரிந்துள்ளது. சூரிய வீதியும், நிலநடுக்கோடும் சந்திக்கும் இடத்தில் சமகால நாட்கள் அமைந்துள்ளன. வருடத்தில் அவை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 என 2 நாட்களில் நிகழும். தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்று கூறுகிறோம். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் கணிப்புப்படி வானின் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாக பிரித்துள்ளனர். இவற்றின் முக்கியமானவை வடதுருவ பெருங்கரடிக்கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச்சிலுவை ஆகியவை. இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தை சுற்றிவருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மேற்காக உள்ள விண்மீன்கள் பூமியின் சூழற்சியால் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல தோன்றுகிறது.

நீங்கள் முன்னிரவில் அடிவானில் தோன்றும் விண்மீன் ஒன்றின் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் கவனியுங்கள். அந்த விண்மீன் 4 நிமிடம் தாமதமாகவே வானில் தெரியும். காரணம் நம் பூமியின் சூழற்சியால்தான். மேலும் விண்மீன்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் என்றோ பார்த்த விண்மீன்களை கணக்கில் கொண்டு சோதிடர்கள் சோதிடம் கணிக்கின்றனர். அனைத்து விண்மீன்களும் தங்களின் இடத்திலிருந்து என்றோ இடம் பெயர்ந்துவிட்டன. சோதிடர்கள் கணிக்கும் விண்மீன்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. உதாரணமாக திருவாதிரை விண்மீன் 640 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நனவும், நினைப்பும் வேறு வேறாக உள்ளது நண்பா! தமிழ் சோதிடத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை 3ம் சேர்ந்தது மேஷ‌ராசி. ஆனால் 3 நட்சத்திரங்களும் தனித்தனி விண்மீன் தொகுதிகள். கார்த்திகை விண்மீன்தொகுதியில் ஆறு பெரிய விண்மீன்களும் அதற்குள் ஏராளமான விண்மீன் திரள்களும் உள்ளன.

பேரா.சோ.மோகனா


சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

கோள்கள் விண்மீன்கள் ஆகியவை பூவுலக வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிர்ணயிக்க முடியுமா?

stars, galaxies and planetsமுடியும் என சோதிடர்கள் கூறுகிறார்கள். முடியாது என பொதுவாக வானியல் விஞ்ஞானிகள் (astronomers) கருதுகிறார்கள். ஆழ்ந்த உளவியலாளர்கள் (deep psychologists) சில ஆழ்மன உண்மைகளை வெளிப்படுத்தும் ஒருவித கருவியாக சோதிடம் பயன்படுவதாக கருதுகிறார்கள். உண்மையில் சோதிடர்கள் சிறந்த ஆலோசனை வழங்கும் திறமை படைத்தவர்கள் மட்டுமே என்பதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.

ஆதிகால மனிதர்கள் இரவு வான்களில் நிலவும் விண்மீன் கூட்டங்களின் நகர்வுகளில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதை உணர்ந்தார்கள். அவற்றின் மூலம் இயற்கை மாறுதல்களை கணிக்க முடியும் என்பதையும் கண்டறிந்தார்கள். நம் பண்டைய ரிஷிகள் ஒரு ஆழமான ஒழுங்கு பிரபஞ்சமெங்கிலும் கூடவே நம் அக-பிரபஞ்சத்துள்ளும் வியாபித்திருப்பதை உணர்ந்தார்கள். இதனை அவர்கள் ரிதம் என அழைத்தனர்.

நம் அக-பிரபஞ்சத்தை புற பிரபஞ்சத்துடன் இணைத்து இயற்கை சுழலுடன் ஒன்றியதோர் வாழ்க்கை முறையையும் ஆன்மிக சாதனை முறையையும் அவர்கள் நமக்கு அமைத்து தந்தனர். நம் ஒழுக்கம், நம் நடவடிக்கைகள் இவற்றினை நம்மை சுற்றி உள்ள அனைத்துடனும் இணைக்கும் இணைப்புகளை தேடியவாறே இருந்தனர். வேதரிஷிகள் கண்ட இந்த தரிசனத்தை பல தளங்களில் செயல்படுத்த பாரத பண்பாடு முயன்றவாறே வருகிறது. ஜோதிடமும் அத்தகைய ஒரு முயற்சி என்றே கருதவேண்டும்.

தொடக்க காலங்களில் வானியலும் (asronomy) சோதிடமும் (astrology) ஒன்றையொன்று சார்ந்தே இருந்தன. நல்ல நேரம், நல்ல நாள் ஆகியவை ‘நாம் தனியானவர்கள் அல்ல இந்த பிரபஞ்சம் எனும் மாபெரும் இயக்கத்துடன் ஒருங்கிணைந்தவர்கள்’ எனும் உணர்வினை நம்மிடம் ஏற்படுத்த உதவுகின்றன.

இயற்பியலாளர் சுபாஷ் கக் கூறுகிறார் – “வேத தெய்வங்கள் பல நட்சத்திரக்கூட்டங்களின் தலைமை சக்தியாக கருதப்படுகின்றன. ..சோதிடம் எப்படி செயல்படுகிறது? கோள்களோ விண்மீன்களோ பௌதீக ரீதியாக மானுட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ பாதிக்கின்றன என கருதமுடியாது ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சில ஆழ்ந்த ஒழுங்குமுறைகளின் வெளிப்படு தன்மையே சோதிடம் மூலமாக வெளிப்படுகிறது என கருதலாம். அதாவது சோதிடம் என்பது இயற்கையின் நிர்ணய சக்தியினை நாம் நம்க்கு புரியும்படியான சில குறியீடுகள் மூலம் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்பதே ஆகும்.”

சங்க தமிழ் நூல்கள் நம்முடைய இந்த பழமையான பண்பாட்டு அம்சம் பண்டை தமிழர் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாக இருந்ததென்பதை காட்டுகின்றன. திருப்பரங்குன்றக் கோவில் சித்திர மண்டபத்தில் ராசி சக்கரம் ‘சுடர் நேமி’ சித்திரமாக தீட்டப்பட்டு அங்கு வழிபட வரும் மக்கள் கோள்நாட்கள் ஆகியவற்றின் நிலையை அறிய ஏதுவாக இருந்தது என பரிபாடல் தெரிவிக்கிறது.

‘என்றூள் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படு வோரும்’
 (பரிபாடல் 19:46-47)

கோள்களின் நிலையின் அடிப்படையில் மழை வருமா என உரைக்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. மழைக்கோளாக வெள்ளி கருதப்பட்டது.அது வடபக்கத்து தாழுமாயின் மழை உண்டாகும் என்றும் தெற்காக எழுந்தால் மழை இல்லை என்பதும் பண்டை தமிழர் நம்பிக்கை ஆகும்.

“வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயம்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
 (பதிற்றுப்பத்து 24:23-25)

திருமணம் செய்வதற்கு நல்ல நாளாக திங்களும் ரோகிணி நட்சத்திரமும் கூடியிருக்கும் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அகநானூறு சொல்கிறது

அம் கண் இருவிசும்பு விளங்க, திங்கட்
சக்டம் மருண்டிய துகள் தீர் கூட்டத்து
கடிநகர் புனைந்து கடவுட் பேணி
 (அகம் 136:4-6 )

[சகடம்-ரோகிணி]

panchangamஇவ்வாறு வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.

ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது. சுவாமி விவேகானந்தரும் சோதிடத்தின் மீதான அதீத நம்பிக்கையை கடுமையாகவே சாடுகிறார்: “பொதுவாகவே சோதிடம் இன்ன பிற மர்மமான விஷயங்கள் குறித்த நம்பிக்கைகள் எல்லாம் ஒரு பலவீனமான மனதின் அடையாளங்கள். எனவே இத்தகைய விஷயங்கள் உங்கள் மனதில் பிரதானமாக விளங்க ஆரம்பித்ததென்றால் உடனே நல்ல மருத்துவரை பார்த்து நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள்“.

குறிப்பாக செவ்வாய் தோஷம் இத்யாதிகளால் திருமணங்களை முறிப்பது அல்லது சில பெண்கள் இத்தகைய நம்பிக்கைகளால் திருமணம் ஆகாமல் இருப்பது போன்றவை சமுதாயத்தில் அதீத சோதிட நம்பிக்கைகளால் – குறிப்பாக தவறான நம்பிக்கைகளால் ஏற்பட்டுவிட்ட விகாரங்கள். குமுதம் சோதிடம் எனும் சோதிட இதழின் ஆசிரியர் ராஜகோபால் கூறுகிறார் – “சோதிடத்தின் பெயரால் வீணான மனக்குழப்பங்களுக்கு இந்துக்கள் இடம் தரலாகாது”.

திருஞான சம்பந்த பெருமான் இத்தகைய மன உளைச்சல்களுக்கு இடம் தராமல் இறைவன் மீதுள்ள நம்பிக்கையால் இவற்றினை கடக்கலாம் என ‘வேயுறு தோளி பங்கன்’ என தொடங்கும் ‘கோளறு திருப்பதிகம்’ எனும் பாடல்களை திருமறைக்காடு எனும் வேதாரண்ய திருத்தலத்தில் அருளியுள்ளார்.

navagrahaஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டொடு ஆறும்
உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

எனக்கூறும் ஞானசம்பந்த பெருமான்,

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

என இந்துக்களாகிய நமக்கு உறுதியாக ஆணையிட்டு கூறியுள்ளதையும் நினைக்கவேண்டும்.

எனவே சோதிடம் என்பது நம் பண்பாட்டின் ஒரு அம்சம். நல்ல நாள் நல்ல நேரம் பார்ப்பது ஒரு கலை. அதன் அறிவியல் பூர்வ தொடர்புகளை கண்டறிவது ஒரு தேவை. அதே நேரத்தில் அதன் பெயரால் மோசடிகள் மூடநம்பிக்கைகளுக்கு நம்மை நாமே பலியாகிவிடாமல் காத்துக்கொள்வது நமது கடமை.

இந்த வீடியோவில் மேற்கத்திய நாடுகளில் ‘வேத சோதிடம்’ (Vedic astrology) எனும் சோதிடக்கலையை அறிவியல் பூர்வமாக சோதிக்கும் நிகழ்ச்சியை காணலாம்.

இதனை நிகழ்த்துபவர் சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பகுத்தறிவு வாத (உண்மையான பகுத்தறிவுங்க) இதழான Skeptic இதழை நடத்துபவருமான மைக்கேல் ஷெர்மர் என்பவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்: 

(http://www.siruppiddy.net/?p=449 இல் இருந்து)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply