தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்!


  1. தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும்  இகுருவி குடும்பம்!

நக்கீரன்

கடந்த ஆண்டு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்  போன்றோருக்கு ஊர் ஊராகச் சென்று உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  தமிழ்நாட்டில் இருந்து சென்ற முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில்  ஐந்து பேர் கொண்ட பேராசிரியர்கள் குழு ஆற்றுப்படுத்தல், கல்விகற்கும் முறைமை பற்றிய உளவள கருத்தரங்கங்களை வடக்கிலும் கிழக்கிலும் எந்தக் கைமாறும் கருதாது செவ்வனே செய்து முடித்தது.

முனைவர் ஜெயந்தஸ்ரீ சென்ற ஆண்டு நடந்த  இகுருவி இரவு ஐந்தாம் ஆண்டு இரவு விழாவில்  கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.  தமிழ்நாட்டில் உள்ள சில தன்னுக்குவிப்பு பேச்சாளர்களில் இவரும் ஒருவர். ஆங்கிலத்தில் அல்லது தமிழில் முனைவர் பட்டம் பெறுவது கடினம். இவர் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நீங்கள் நினைப்பதை விட நீங்கள் பலசாலிகள், தடைகள் உங்களைத் தடுத்து நிறுத்தாது, உங்களால் மட்டுமே உங்களை நிறுத்த முடியும, தடைக் கற்களே உங்கள் வாழ்வின் படிக் கற்கள்,  இந்த உலகில் எதுவும் நிரந்தமில்லை, தோல்விக்கும் வலிகளுக்குப் பின்னரே வெற்றிகள் பிறக்கின்றன. இது போன்ற கருத்துக்களைத் தங்கள் பேச்சுமூலம் ஊக்கிவிக்கிறார்கள்.

வேறு யாரும் செய்ய நினைக்காததை இகுருவி நவஜீவன் செய்கிறார்! மிகச் சிலரே போரினால் அழிந்த எமது தாயக பூமியை மீள் கட்டியெழுப்ப வேண்டும் அங்கு வாழும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்க் காலில் எழுந்து நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்தச் சிலரில் நவஜீவன் முதன்மையானவர்.  இவர் போன்ற சமூக அக்கறையுடையவர்களைப் பார்க்கும் போது வருங்காலம் ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

வெறுங்கை என்பது மூடத்தனம்  உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்  உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை  நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை  இனி தொடுவா னம்தான் உன்எல்லை!
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி! எழுஎழு தோழா!

உன்எழுச்சி  இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!
விரக்தி யென்னும் சிலந்தி வலைக்குள் வேங்கைப் புலிநீ தூங்குவதா? நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று எங்கே கிழக்கெனத் தேடுவதா?
மூலையில் கிடக்கும் வாலிபனே  தினம் முதுகில் வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனம்தான் வாழ்க்கையென  வெறும் பல்லவி எதற்குப் பாடுகிறாய்?

உளவள பணியைத் தொடர்ந்து நவஜீவன் இந்த ஆண்டு இயற்கை வேளாண்மை (விவசாயம்) பற்றிக் கவனம் செலுத்துகிறார்.  புதுமை என்ற பெயரில் எமது கமக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேதியல் உரத்தை (chemeical fertilizer)  வேளாண்மைக்குப் பயன்படுத்தினார்கள் இதனை அரசே கமக்காரர்களுக்கு  மானிய விலையில் விற்று அதன் பயன்பாட்டை  ஊக்குவிக்கிறது.  ஆனால் இந்த வேதியல் உரத்தைப் பயன்படுத்துவதால் மண்வளம் குறுகிய காலத்தில் இறந்துவிடுகிறது.

மண் என்பது மூன்றுவகை உறுப்புகளினால் ஆனது.   ஒன்று மண்ணுக்குள் காணப்படும் கற்பாறையில் இருந்து கிடைக்கும் கனிமங்கள் (minerals ). இரண்டு இலைகுழைகள் உக்கும் போது கிடைக்கும் கனிமங்கள். மூன்று மண்ணில் வாழும் உயிரினங்கள் ஒரு பிடி மண்ணில் ஆயிரக்கணக்கான இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான உயிரினங்களின் பங்களிப்பு.

மேலும் மனித செயற்பாடுகள், பருவங்கள், தாவரங்கள் மண்ணின் வளத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன. மண்ணை உழுவதை விட எருப்போடுவது நல்லது என்கிறார் வள்ளுவர்

இயற்கை வேளாண்மை பற்றிக் கமக்காரர்கள், தோட்டக்காரர்கள் மட்டுமின்றி  மற்றவர்களும் அறிந்து கொள்வது நல்லது. இயற்கை வேளாண்மை  மழை பொய்த்துவிடும் சூழலுக்கு மாற்று வழியாக அமைந்துள்ளது.

வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும் அதாவது இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும்.

இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பூதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.  மக்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது. விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் வருவாயும் கிடைக்கின்றது.

முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு குற்றமற்ற  வேளாண்முறையைத் தருவதோடு உடல் நலத்துக்கு ஏற்ற உணவுக்கும் வழிவகை செய்யலாம். மேற்கு நாடுகளில் கூட இய்ற்கை உணவுவகைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட வழிமுறை மூலம் 50  ஆண்டுகள்  செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை 6 மாதங்களில் மீட்டெடுக்கலாம் என வட இந்திய கணித மேதை ஸ்ரீபாத தபோல்கார் கூறியுள்ளதாக நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

20 வகையான பயிர்களை (நான்கு தானியங்கள், நான்கு எண்ணெய் வித்துக்கள், நான்கு மணப்பொருட்கள், நான்கு உரச்செடிகள்) கலந்து விதைத்து 20 நாட்களில் உழுது நிலத்தில் மடக்க உழவு செய்ய வேண்டும். பின்பு மீண்டும் 20 வகைப் பயிர்களை விதைத்து வளர்த்து 60 நாட்களில் உழுது நிலத்தில் மடக்கி உழ வேண்டும். அதனை அடுத்து மீண்டும் 20 வகை பயிர்களை விதைத்து வளர்த்து 90 நாட்களில் (பயிர்களின் விதைகள் முற்றிய பிறகு) உழுது நிலத்தில் மடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையின் தந்தை எனப் போற்றப்படுபவர் நம்மாழ்வார் ஆவார். இவர்  தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்ற சிற்றூரில்  பிறந்தவர்.   அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பைக் கற்றவர்.  பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர்.  தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்.  மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு  திசம்பர்  30,  2013  அன்று  காலமானார்மற்றவர்களையும் ஊக்கிவிக்கிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் தொழில் துறையில், மருத்துவத்தில் சாதனை படைத்த சாதனையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்  இவர்களில் பலர் இலைமறை காயாக இருக்கிறவர்கள்.  இவர்களை

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் ஊடகக் குடும்பத்தைச் சேர்ந்த பசுமை விகடன் இயற்கை வேளாண்மை செய்து வெற்றி கண்டவர்களை நேர்காணல் கண்டு அவர்கள் மூலம்  எல்லாதம் தேடிப் பிடித்து நவஜீவன் அவர்களது வாழ்நாளிலேயே புதிய வெளிச்சம்  சார்பாக மதிப்பளிக்கிறார். இதனை வேண்டுமட்டும் பாராட்டலாம்.

(1) மருத்துவர் சிதம்பரநாதன் முகுந்தன் யாழ்ப்பாணம் போதனா  மருத்துவமனையில் இதய அறுவை மருத்துவப் பிரிவின் தலைவராகப் பணியாற்றுபவர். இவர் முதல்முறையாக  திறந்த இதய அறுவை மருத்துவத்தைக்  கடந்த ஆண்டு  டிசெம்பர் மாதம் 20,  21 இல்  வெற்றிகரமாகச்  செய்து சாதனை படைத்துள்ளார்.  இவரது செயல்திறனைப் பாராட்டி  சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் 93 ஆவது பிறந்த நினைவு  நாளன்று  தெல்லிப்பழை துர்க்காதேவி  கோயிலில் முனைவர் ஆறு திருமுருகன் தலைமையில்  பாராட்டு விழா நடத்தப்பட்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.

இதய நோயினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் இனிக் கொழும்பு, கண்டி என்று அலைய வேண்டியதில்லை. யாழ்ப்பாணத்திலேயே தகுந்த இதய அறுவை மருத்துவத்தை பெற்றுக் கொள்ளலாம். இவருக்கான புதிய வெளிச்சம் விருதை நவா மற்றும் வில்சன் சட்ட நிறுவனம் (Nava Wilson LLP)  அனுசரணை வழங்கியிருந்தது.

(2) முனைவர் கந்தசாமி சிதம்பரநாதன். போர்க் காலத்திலும் அதன் பின்னரும்  உளவியல் அடிப்படையில்  பாதிக்கப்பட்ட மக்களின் மனக்கவலை, மனவழுத்தம் ஆகியவற்றை கலைமூலம் ஆற்றுப்படுத்தி வருகிறார். அவரும் அவரின் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடமும்  பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று  சந்தித்து  அவர்களது கதைகளைக் கேட்டு பதும் அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமானத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இவருக்கான  புதிய வெளிச்சம் விருதை புதிய வெளிச்சமே வழங்கியிருந்தது. அவர் நேரில் வர முடியாது போனதால் விருதை அவரது மகள் பெற்றுக் கொண்டார்.

(3) திரு ஹெலனிக் வின்சன்ட் டி போல்.  தனது 3 ஆவது அகவையில் கனடாவுக்கு குடிபெயர்ந்த  இவர் வேகன் (Vegan)  என்ற பெயரில் பல உணவகங்களை நடத்தி வருகிறார். விருது வழங்கும்  விழாவுக்கு மிக எளிமையான உடையோடு வந்திருந்தார். இவரை யாரென்று தெரியாதவர்கள் அவரது உருவத்தை வைத்து அவர் ஒரு  தொழில் அதிபர் என்பதை கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். இதையே வள்ளுவர் உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்றார். இவருக்கான புதிய வெளிச்சம் Innovative and Marketing Excellence Award விருதை  Re/Max Community Realty inc நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

(4) திரு இராஜீவகரன் முத்துராமன்.  அதிநவீன அச்சுயந்திரங்களை கொண்டுள்ளது RJ Multi-Litho  என்ற அச்சுக் கூடத்தின் நிறுவனர்.  பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான  . இரண்டு பெரிய கட்டிடத் தொகுதிகள் உண்டு. படித்தது பத்தாம் வகுப்பு மட்டுமே. அந்தக் குறையை ஈடுசெய்யத் தன்னைச் சுற்றிப்  படித்தவர்களை, துறைசார் விற்பன்னர்களை தன்னோடு வைத்திருப்பதாகச் சொல்கிறார். தனக்கு குளியல் அறையைத் தூய்மைப் படுத்தும் தொழிலிருந்து எல்லா வேலையும் அத்துப்படி என்கிறார். “குப்பையில் இருந்து கோபுரத்துக்கு..” என்ற மறுசுழற்சி முறையை வெறும் பேச்சாக இல்லாமல் உண்மையாகவே எண்பித்துக் காட்டியுள்ளார். தொடக்கம் ஒரு சிறிய வாடகை அறை. தனது 41 அகவையில் இந்தத் தொழிலைத் தொடங்கியதாக சொன்னார்.  இவருக்குரிய புதிய வெளிச்சம் Best Leadership Award விருதை HomeLife/Future Reality Inc. Brokerage நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

(5) திரு ஜெகநாதன் மயில்வாகனம்.  Scarborough Convention Centre  விருந்து மண்டபத்தின் சொந்தக்காரர்.  இவரும் குப்பையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தவர். இவரை எனக்குப் பல ஆண்டுகளாக அறிமுகம். வெறுமனே புன்னகையோடு நின்றுவிடாமல் அவரது தொழில் வளர்ச்சி பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போது பேசிக் கொள்வேன். 42,000 சதுர அடியில் ஒரே நேரத்தில் 1,500 விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்யக் கூடிய மண்டபம் இவருடையது.   இதில் சிறப்பு என்னவென்றால் இது ஒரு தனிமனித சாதனை.  இவ்வளவு காலமும் நான் அறிந்தளவில் இப்படி அவரை மதித்து யாரும் விருது வழங்கவில்லை. நவஜீவன் அவர்களுக்கு அந்த எண்ணம் வந்திருக்கிறது.  திரு ஜெகநாதனின் சாதனை பற்றி கனடிய தமிழ்ச் சமூகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இவருக்கான புதிய வெளிச்சம்  Pioneer in Hospitaliity Industry Award  விருதை The Law Office of Meleni  சட்ட நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

எம்மவர்கள் யூதர்கள் போல  கல்வி, வணிகம், அறிவியல், பொருளியல் துறைகளில் முன்னேற வேண்டும். ஆங்கிலத்தில் Knowledge is Power    என்று சொல்வார்கள். கல்வியில் சிறந்து விளங்கும் இனமே உலகில் தலை நிமிர்ந்து நிற்கும்.

இன ஒதுக்கல்  காரணமாகவும்  போர் காரணமாகவும் இரண்டு மூன்று  தலைமுறை கல்வியை (தமிழ் இளைஞர்கள்)  இழந்துவிட்டது. ஒரு காலத்தில் இலங்கையில் தலை சிறந்த மருத்துவர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள்,  சிவில் சேவை நிருவாகிகள் நிறைய இருந்தார்கள். அந்த நிலை இன்று தலைகீழாக மாறிவிட்டது. கல்வியில் முதலிடத்தில் இருந்த யாழ்ப்பாணம் இன்று பின்தள்ளப்பட்டுவிட்டது. இதனால் மனிதவளம் போதியளவு இல்லாது போய்விட்டது.

இலங்கை நாட்டின் ஜனாதிபதி 25 மாவட்டங்களிலும் யாழ்ப்பாண மாவட்டமே மது பாவனையில் முதலிடம் பெற்றிருப்பதாகவும் அதன் மூலம் திறைசேரிக்கு அதிக வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மது பாவனை அதிகரித்து வரும் அதேவேளை மக்கள் தொகை குறைந்து வருகிறது.  மது விற்பனையில் யாழ்ப்பாணத்தை அடுத்து வவுனியா இடம் பிடித்துள்ளது. முன்னர் இருந்ததை விட இளைஞர்கள் மத்தியில் மது பாவனை அதிகரித்துள்ளது.

விருது பெற்றவர்கள் விருதுக்கு அனுசரணை வழங்கியவர்கள் பற்றிக்  குறும் ஆவணப்படங்கள் அகண்ட திரையில் போட்டுக்  காட்டப்பட்டன. அதனைப் பாராட்ட வேண்டும். பல நாள் உழைப்பும் நேரமும் அந்தக் குறும் ஆவணப் படங்களை எடுத்து அவற்றைத் தொகுப்பதில்  செலவழிந்திருக்க வேண்டும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் இரமணன் சந்திரசேகரமூர்த்தி சிறப்பாக, கையில் எந்தக் குறிப்பும் இன்றி தொகுத்து வழங்கினார். Re/Max Community Realty inc நிறுவனத்தில்  ஒரு வீடுவிற்பனை முகவர் ஆகவும் இவர் இருக்கிறார்.  இகுருவி மாத ஏட்டில் எழுதிவருகிறார். தமிழ் இவருக்கு நல்ல வாலாயம். அதனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேடையில் பேசியவர்கள் தாயகத்தையும் தாயக மக்களையும் மறவாமல் குறிப்பிட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்கள். பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் நவஜீவன் போல் செயலில் காட்ட வேண்டும். சிலர் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய்விட்ட எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றப் பாடுபட்டு வருகிறார்கள். மருத்துவர் இலம்போதரன் உடல் நோய்க்கு மருத்துவம் செய்வதோடு நின்றுவிடாமல் அடிக்கடி தாயகம் சென்று சமூகத்துக்கும் மருத்துவம் செய்கிறார். ஆனால் தான் செய்வதை மற்றவர்களுக்குச் சொல்லமாட்டார். நேரில் கேட்டாலும் சொல்ல மாட்டார். அவர் செய்யும் தொண்டைச் சொன்னால் அது மற்றவர்களுக்கு ஒரு உந்துசக்கியாக அமையக் கூடும்.

எல்லாம் சரி. நவஜீவன் தனியொருவராய் ஆண்டில் இரண்டு மூன்று முறையாவது தாயகம் சென்று வாரக் கணக்கில் நிற்கிறார். வீட்டில் ஒரு சின்னக் குடும்பம் வாழ்கிறது என்ற நினைப்பே அவருக்கு இல்லை.நல்லகாலமாக அவரது துணைவியாரின் ஒத்துழைப்பு இவருக்குத் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் இதெற்கெல்லாம் நிதியெங்கே இருந்து வருகிறது?

கடந்த ஆண்டு வீட்டு முகவர் தீபன்ராஜ் டொலர் 20,000 கொடுத்து உதவினார். இது மிகப் பெரிய தொகை. இப்படிக் கொடுப்பதற்கு வங்கியில் பணம் இருந்தால் மட்டும் போதாது. கொடுத்துதவ வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும்.  நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் என்கிறார் ஔவையார்.  அதாவது நட்பு, தயை (கருணை அல்லது பரிவு காட்டுகின்ற பண்பு), கொடை (பிறருக்குக் கொடுக்கின்ற குணம்) ஆகிய குணங்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக வருகின்றவையாம்.

ekuruvi night 2018

தீபன்ராஜ் அவர்களோடு பேசினேன். ஒவ்வொரு ஆண்டும் இப்படிக் கொடுத்து உதவப் போவதாக என்னிடம்  சொன்னார். அறம் செய்ய விரும்பு என்று ஔவையார் சொன்னாலும் அவர் சொன்னபடி நடப்பவர்கள் மெத்தக் குறைவு.

ஒரு மனிதன் பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை, இறக்கும் போதும் எதுவும் கொண்டு போவதில்லை. அவன் கூட வருவது எல்லாம் அவன் செய்த நல்வினை தீவினை எமட்டுமே.  இதனையே வள்ளுவர் வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது என்கிறார்.

வழக்கம் போல் நேரகாலம் பாராது நிகழ்ச்சிகள் வந்து போயின. இரண்டு புதிய வெளிச்சத்துக்குப் போதுமான  நிகழ்ச்சிகள் ஒரே நாளில் மேடையேறின. இதனால் உணவு பரிமாற நேரம் சென்று விட்டது. சிலர் நேரகாலத்தோடு வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். நிகழ்சியை 6.30 மணிக்குத் தொடங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இகுருவி குடும்பத்துக்கு பாராட்டுக்கள். உங்கள் தொண்டு வாழ்க! வளர்க!

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply