மாநகர குப்பையில் இயற்கை உரம்… – விவசாயிகளுக்கு இலவசம்!

மாநகர குப்பையில் இயற்கை உரம்… – விவசாயிகளுக்கு இலவசம்!

இ.கார்த்திகேயன்
 இ.கார்த்திகேயன்
 எல்.ராஜேந்திரன்

திட்டம்இ.கார்த்திகேயன் – படங்கள்: எல்.ராஜேந்திரன்

மிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்படிச் சேகரிக்கும் குப்பைகள், கழிவுகளைப் பெரும்பாலும் தீ வைத்து எரித்துத்தான் அப்புறப்படுத்துகிறார்கள். இந்நிலையில், குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அசத்தி வருகிறது திருநெல்வேலி மாநகராட்சி.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) முனைவர் நாராயணன் நாயரிடம் பேசினோம். “கடந்த 1994-ம் ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலி மாநகராட்சி. மொத்தம் 55 வார்டுகள், 17 சுகாதார யூனிட்டுகளை உள்ளடக்கித் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த 2016 டிசம்பர் 21-ம் தேதி முதல் மாநகர மக்களிடமிருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்துச் சேகரிக்கிறார்கள் பணியாளர்கள். இப்படி மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரித்துச் சேகரிப்பதில், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது திருநெல்வேலி மாநகராட்சி” என்ற நாராயணன் நாயர் தொடர்ந்தார்…

“ஒவ்வொரு புதன்கிழமையும் மட்காத குப்பைகள் பெறப்படுகின்றன. மற்ற வார நாள்களில் மட்கும் குப்பைகள் பெறப்படுகின்றன. மட்கும் குப்பையுடன் மட்காத குப்பைகளைக் கலந்து கொடுக்கும் வீடுகளுக்கு 10 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இப்படிச் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை ராமையன்பட்டியில் உள்ள உரக்கிடங்குக்குக் கொண்டுசென்று உரம் தயாரிக்கிறோம். மட்காத குப்பைகள் அந்தந்த மண்டலங்களுக் குட்பட்ட மட்காத குப்பை சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 55 வார்டுகளிலிருந்து ஒரு நாளுக்கு 150 டன் முதல் 170 டன் வரை மட்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

கடந்த 2016 டிசம்பர் 21-ம் தேதி முதல் தற்போது (14.2.18) வரை 648.66 மெட்ரிக் டன் மட்காத குப்பைகள் (பிளாஸ்டிக் பொருள்கள்) பெறப்பட்டுள்ளன. இதனால், மிகப்பெரும் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி, ‘ஒரு நாளைக்கு 100 கிலோ குப்பைகளை உருவாக்குபவர் களிடமிருந்தும் 5,000 சதுர அடி அளவு அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் நிறுவனம் நடத்துபவர்களிடமிருந்தும் மாநகராட்சி குப்பைகளைச் சேகரிக்காது. அவர்களுடைய குப்பையிலிருந்து அவர்களே உரம் தயாரிக்க வேண்டும். அல்லது வேறு நிறுவனங்களோடு இணைந்து உரம் தயாரிக்க வேண்டும். இரண்டுமே முடியாதவர்கள், தங்களுடைய குப்பைகளை மாநகராட்சிக்குட்பட்ட பயோமெட்ரிக் காஸ் பிளான்டில் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. இதன்படி செயல்பட வேண்டும் எனப் பள்ளி, கல்லூரி, ஹோட்டல்கள், பெரிய மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் 97 நிறுவனங்களுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அளித்துள்ளோம்” என்ற நாராயணன் நாயர் மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வனிடம் நம்மை அறிமுகப்படுத்தி வைத்தார்.

குப்பை மேலாண்மை குறித்துப் பேசிய பொற்செல்வன், “திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மட்கும் குப்பைகளை உரமாக்கி வருகிறோம். சோதனை அடிப்படையில், ஒரு மண்டலத்துக்கு ஒரு குழி என 4 குழிகள் தோண்டப்பட்டு, அக்குழிகளில் மட்கும் குப்பைகளைக் கொட்டி உரமாக்கினோம். அந்த உரத்தைத் தர ஆய்வுக்கு அனுப்பிப் பரிசோதனை செய்ததில், ‘விவசாய விளைநிலங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்’ என ஆய்வு முடிவில் சொல்லப்பட்டது. அதன்பிறகு உரமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்.

தற்போது 55 குழிகளை உருவாக்கி உரம் தயாரிக்கிறோம். ஒவ்வொரு குழியும் 30 அடி நீளம், 15 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்டவை. ஒவ்வொரு குழியிலும் 35 டன் குப்பைகள் கொட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் தண்ணீர், இ.எம் கரைசல், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து 40 நாள்கள் மட்க வைக்கிறோம். பிறகு, மட்கிய கழிவுகளை 5 நாள்கள் வெயிலில் காய வைத்து அவற்றில் கலந்துள்ள சின்னக் குச்சிகள், கழிவுகளைப் பிரித்துச் சலித்து மட்கிய உரமானது சேகரிக்கப்படுகிறது. பிறகு 25 கிலோ பைகளில் அடைத்துச் சேமித்து வைக்கிறோம். உரம் தேவைப்படும் விவசாயிகளுக்குப் பதிவு முன்னுரிமை மற்றும் உர இருப்பின் அடிப்படையில் இலவசமாகக் கொடுத்து வருகிறோம். இதுவரையில் 14 விவசாயிகளுக்கு 25,262 கிலோ உரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

குப்பைகளை மேலாண்மை செய்வதில் சிறப்பாகப் பணியாற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்குப் ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.


எப்படி உரம் பெறுவது? 

திருநெல்வேலி மாநகராட்சி தயாரிக்கும் மட்கிய உரத்தைப் பெற விரும்பும் விவசாயிகள், மாநகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பக் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்தோடு, மார்பளவு புகைப்படம், ஆதார் கார்டு நகல், பட்டா நகல், ரேசன் கார்டு நகல், விவசாயம் செய்து வருவதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்துக் கொடுக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பிறகு, உரம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் சொந்தச் செலவில் ராமையன்பட்டி உரக்கிடங்கிலிருந்து உரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஓர் ஆண்டில் ஒரு விவசாயிக்கு 3 முறை மட்டுமே உரம் வழங்கப்படும். ஒரு முறைக்கு அதிகபட்சமாக இரண்டரை டன் உரம் வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு:
சுகாதாரப் பிரிவு,
மாநகராட்சி மைய அலுவலகம்,
திருநெல்வேலி மாநகராட்சி,
திருநெல்வேலி.

தொடர்புக்கு,
தொலைபேசி: 0462 2329328 (அலுவலக வேலை நேரத்தில் மட்டும்)

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply